கவிதைகள் லட்சுமி சரவணக்குமார் கவிதைகள்

 லட்சுமி சரவணக்குமார் கவிதைகள்

 

 

 

 

நதியில் உறங்கும் மரணம்…

 

இருப்பு கொள்ள முடியா மீன்களாய்

நீந்திக் கொண்டிருக்கிறது மரணம்

ஜீவராசிகளின் தேகத்திற்கும் நீர்மைக்குமிடையே

அசையும் பச்சை நிறக் கண்கள்

சொற்களைக் கொத்தி தின்னும்

மீன் கொத்திப் பறவைகள்

நதியெங்கும் வழிந்தொடும் சொற்களையும்

கொத்திச் செல்கின்றன

மழைக்காலத்தின் விசுவாசமிக்க சேவகனாய்

ஆற்றுமீன்கள்

நீளுறக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் யுவதிகளென

நதியோர மரங்களில்

நிரம்பிக் கிடக்கும்  பச்சை

பொற்காசுகள் கொஞ்சத்தை வீசியெறியும் மிதப்பு

ஒவ்வொருமுறையும் நதிசேர்கையில்

குற்றவுணர்ச்சியின் நீளவுடல்கள்

எப்போதும் எரிந்துகொண்டிருக்கின்றன

நதியின் அகால இரவுகளில்…

 

 

 

 

 

 

 

மீ மிருக நடனமாடும் டாட்டூ சித்திரக்காரன்…

கோடையில் நாவல் பழ மை சேகரிக்கும்

டாட்டூ சித்திரக்காரனொருவன் ஊருக்குள் வந்திருந்தான்

வாசிமலயானின் காட்டுச் சாராயமருந்துமவன்

தன்னை ஜிப்ஸியென்றும்

டாட்டூ மை சேகரிக்க அலைந்து திரியும் வனவாசியென்றும்

சந்தோசத்துடன் சொல்லிக் கொள்வான்

ரோகம் கண்ட முதிய குறத்தியொருத்தி

டாட்டூ குத்திக்கொள்ள வேண்டியே இன்னும்

அவன் வருகைக்காக காத்திருந்தாள்

அவளிடமிருந்த பதினாறு கிளிகளுக்கும்

டாட்டூக்களைப் பற்றித் தெரிந்திருந்தது

குதிரைகளையும்

பேசும் மீன்களையும்

டாட்டூக்களாக தீட்டுகிறவன்

பெண்களுக்கான சித்திரங்களை மட்டுமே

கையிருப்பாக கொண்டிருக்கிறான்

வயதுக்கேற்பவும் உடலுக்கேற்பவும்

தன்னுடைய விருப்பத்தின்படி  டாட்டூ குத்திவிட்டான்

விருப்பத்தோடு குத்திக்கொண்ட சில பெண்கள்

கடற்கரையோரமாய் பித்துநிலை கொண்டு திரிகிறார்களென

வழிபோக்கர்கள் சொன்னதை

மற்றவர்களைப்போல் சித்திரக்காரனும் நம்பியிருக்கவில்லை

குறத்தி தன்னுடலில் கிளிகளைத் தீட்டச் சொன்னாள்

அவன் குதிரை அவளுக்குப் பொருத்தமாயிருக்குமென்றான்

மறுத்து

கிளிகள் கேட்டவளுக்கு

நீலநிறத்தில் கிளிகளைக் குத்திவிட்டான்

நீலநிறக் கிளிகள் அவள் உடல்முழுக்க அலைந்து பறந்தன

குறத்தி தன்னையும் நீலக்கிளியென்றாள்

இன்னொருமுறை அவனைச் சந்தித்து நன்றிசொல்லவும்

டாட்டூக்களைக் கையாளும் சூத்திரம் கற்கவும் விருப்பமிருந்தது

பாதி வெந்த ஒட்டக இறைச்சியும்

மூங்கில் கூம்புகள் நிறைய நாட்டுச்சாராயமும்  கையிருப்பாய்

அவன் அடுத்த நகரம் நோக்கி இடம்பெயர்ந்தான்

காட்டுப்பூக்கள் நிறைந்த வனவெளியெங்கும்

மதுவருந்திய அவன் குரல்

மரங்களைப் பற்றியும் சித்திரங்களைப் பற்றியும் பாடிக்கொண்டிருந்தது

 

 

 

 

இறகுப் பந்து  விளையாடும் சிறுமிகள்…

வெயிலற்ற மாலைநேர வீதியில்

மில்க்‌ஷேக் குடிக்கும் சிறுமிகள்  சிலர்

இறகுப்பந்து விளையாடுகிறார்கள்

குட்டையாய் கால்சட்டை அணிந்திருக்கும்

மகள்களின் வெளுத்த சதை

அவ் வீதியில்

இங்குமங்குமாய் இறகுப்பந்தென

அலைந்து கொண்டிருக்க

மத்திம வயதெய்திய அவர்களின்

வெளுத்த  அம்மாக்கள்

இறுக்கமான தங்களின் நைட்டிகள்

தளர்ந்துபோன கலக்கத்தில்  இருக்கிறார்கள்

வியர்த்து களைத்துப்போன குழந்தைகளோடு

சமயங்களில் அம்மாக்களும் விளையாடமலில்லை

அப்போதெல்லாம்

மொட்டை மாடிகளிலிருந்தோ

வீதிகளின் ஏதாவதொரு முனையிலிருந்தோ

தங்களை பெருங்காதலுடன் கவனிக்கும்

இளைஞர்களின் தகிப்பிற்கு

வசீகரமானதொரு புன்னகையை  வீசுகிறார்கள்

ஆக்டோபஸ் உடல் கொண்ட குழந்தைகள்

விடுமுறை முடிந்து பள்ளிசெல்வதும்

விளையாட்டை மறப்பதுமாய்  இருந்துவிடுகின்றனர்

ஷூ ஸ்டாண்ட் பக்கமாயிருக்கும்

இறகுப்பந்து மட்டையையும்  பாதி இறகுகள்

பிய்ந்துபோன கார்க்குகளையும்

ஏக்கத்துடன் கவனிக்கும் அம்மாக்கள்

பின்மதியநேர இளைஞனொருவனின்

வரவுக்கென

பின் ரகசியமாய்க்

காத்திருக்கத் துவங்குகிறார்கள்

வெளிச்சமறியா ரகசிய அறையுள்

நிபந்தனைகளற்று நிகழும்  விளையாட்டில்

சில நாட்கள் அவ்விளைஞர்களின்  வரவு நிகழும்

விளையாட்டின் சூட்சுமமறியா சிறுமிகள்

இன்னொருமுறை தொடை வீங்கிய

கால்சட்டைகளுடன் தெருவில் விளையாடுகிற பொழுது

அம்மாக்களின் பார்வை மட்டும்

தெருமுனை இளைஞனின் கண்களுக்கும்

தங்கள் குழந்தைகளின் உடலுக்குமாய்

அலைந்தபடியிருக்கும்…

 

 

ஆயிரம் மலர் தின்னும் குரல்…

எரியும் மூங்கிலாய்

நான் இசைந்து கொண்டிருக்கிறேன்

உருகி வழியும் நீரலையில் முகிழ்ந்த எனதுடல்

பெளதிகமாய் அலைவுறுகிற காமம்

”தோம்…தோம்…தோம் தன தன

தோம் தோம் தன தோம் தோம் தன தோம் தோம்

நந்தகுமாரா…. நவநீத கண்ணா…. மாயன் முகுந்தா…”

நான் வெண்ணை தேடும் சிறு கண்ணனாகிறேன்

பாதங்கள் சூடற்றுப்போய் நெகிழ்ந்தன

கண்களில் நடனமாடும் ஸாமுத்ரிகா சிலை

”குளிர் கூதல் வரும்போது அனல் தானவன்

தளிர் கைகள் தொடும் போது தணல் தானவன்…”

ஆயிரம் மலர் கரைந்து வாசனை எழுப்ப

கொங்கைகள் விழிகொண்டு அழைக்கின்றன

”இரு கொங்கை அணல் மேட்டில் புணல் தானவன்…”

காற்றில் வசப்படா பெண்ணொருத்தியின்

மேனியில் சிற்றோடையாகிறேன்

உடல் சிலிர்க்கிறது

ஏகாந்தத்தின் பெருமழையில் குருவிகளாய்

பறந்தலைகிறது காதலின் கட்டற்ற மனம்

இசைத்து இசைத்து நானுமொரு சப்தமாகிறேன்

வீணையின் நாணாகி மீட்டப்படும்

ஒலிதோறும் அவள் குரலின் சுதி சேர்க்கிறேன்

இன்னொருமுறை பார்த்தீரோ என்கையில்

கைகள் செயலிழக்க

கண்கள் பார்வையிழக்க

நான் உடலற்றவனாகிறேன்

மொழியில் அவள் குரல் மட்டும்

நான் நந்தகுமாரன்

பெருங்காதலன்

இன்னும் இன்னுமென உன் குரலின் எல்லா ஒலிகளாய்

அர்த்தங்களாய்

உடலற்றவனாய் உன் குரலாகியிருக்கிறேன்….

 

( காற்றின் பேரோசையாய் மனம் நிறைக்கும் சுபிக்‌ஷாவின் குரலுக்கு…)

 

 

 

Advertisements