கவிதைகள் ராணிதிலக் கவிதைகள்

 

ராணிதிலக் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

திரும்பாத மலர்

 

மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும்

ஆற்றின் வேளையில்

யாரும்

இரண்டாம் முறை மூழ்கவேயில்லை

நான் மூழ்கினேன்

மிகத் தூரத்தில்

மிதந்து வரும் தாமரை மலரில்

சோபிதம் கொஞ்சம் குறைவு.

ஆற்றின் தேகத்திலிருந்து  பறித்த

அந்தத் தாமரையை

அந்தரத்தில் வீசினேன்.

அது

கிளைக்குத் திரும்பவே  இல்லை.

••

 

 

 

குப்பைகளின் அன்பு

 

எனக்கு அன்பு காட்டத்  தெரியவில்லை

மதியவேளையில்

யாருமற்ற சாலையின் மையத்தில்

சுட்டெரிக்கும்

வெய்யிலில்

வெப்பக் காற்றில் அலைந்தபடி

நிழல்தேடித் திரிகிறது

கசங்கிய ஒரு காகிதக் குப்பை

நான் அதைக் குனிந்து எடுத்து

சாலையோரத்தில் வாழும்

அதன்

வட்டவடிவ வீட்டில் சேர்த்தேன்

எல்லா குப்பைகளின்

முகத்திலும் ஒரே சந்தோசம்

அவை

அதைக் கட்டி அணைத்துக்கொள்கின்றன

எனக்கு அன்பு காட்ட  யாரும் இல்லை.

•••

 

 

 

 

 

காமம் மறைந்துவிடவில்லை

 

அந்தக் கிளையில்

மரத்தின் இலை மறைவில்

இரண்டு கிளிகள்

ஒன்றின் அலகை ஒன்றுடன்

உரசிக்கொண்ட

வேளை

என் காமம் பற்றிக் கொண்டது.

எவ்வளவு அசிங்கம்

ஒன்றின் அந்தரங்கத்தை

அந்தரங்கமாக ரசித்துக்கொண்டிருப்பது

நான் விலகி

அது முடியாமல் திரும்ப  பார்க்க

கிளிகள் அங்கில்லை

காமம் என்பது கிளைகளால்  ஆனது

காமம் என்பது இலைகளின் மறைவாலானது

காமம் என்பது அலகை உரசிக்கொள்வது

காமம் என்பது கிளிகள் பறந்துவிடுவது

அப்போது

தரையை நோக்கி விழுகிறது

ஒரு வேப்பம்பழம்

அது

பூமியால் மட்டுமே தாங்க  முடியாத

தித்

திப்பான வேப்பம்பழம்.

•••

 

வயோதிகர்களை நாம் கடக்க முடிவதில்லை

கிருஷ்ணன் கோயிலைப் பல தடவை கடந்திருக்கிறேன்

அதன் எதிரில் இருக்கும்  முதியோர் இல்லத்தைப் பார்த்தபடி.

கோயில் வாசல்படியில் தலைவைத்து

தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறாள் ஒருத்தி.

கடவுளிடம் மன்றாடும் தன்  தோழியைத் தேற்றமுடியாமல்

சாலையை வெறிக்கின்றனர் அவளின் தோழிகள்

நான் அவர்களைப் பார்க்கும்பொழுது

எனக்குள் ஒரு செடி அசைகிறது

அவர்களின் மரணத்தைக் கண்ணில்  பார்த்துவிடும்போது

எனக்குள் ஒரு மரம் வீழ்கிறது.

சட்டென்று

ஒரு மலர்

வாடி உதிரும் ஓசை கேட்கும்போது

அந்தக் கிழவி தன் கண்ணீரைத்  துடைக்கிறாள்.

அவர்களைப் பல தடவை கடக்கமுடிவதேயில்லை.

•••

Advertisements