கவிதைகள் நாணற்காடன் கவிதைகள்

நாணற்காடன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

1.நான் எழுந்து வருவதற்குள்

போய்விட்டது நிலா

 

எழாமலே

இருந்திருக்கலாம்.

 

2.நாளை

என்னைப் பூட்டிவிட்டு

சாவியைத் தொலைத்துவிட

தீர்மானித்திருக்கிறேன்

திறப்பதற்கு

முயற்சி செய்யாதீர்கள்

 

3.ஏறுவதும் இறங்குவதும்

நான்தான்

வெறுமனே நகர்த்தலுக்குத்தான்

இந்தக் காய்கள்

யாரோ

பரமபதத்தை விரித்துவைத்து

விளையாடுகிறார்கள்

வெற்றி பற்றி பேச

எந்த உரிமையுமில்லை எனக்கு

4.அவ்வளவு அமைதியாக
இருக்கிறது வானம்
பறவைகள் கூட
கோடு கிழிக்க வரவில்லை
இன்னும் அண்ணாந்தே நிற்கிறேன்
கழுத்து வலிக்கும்வரை நிற்பேன்
பூமியில்தான்
எத்தனை சத்தங்கள்

5.முகவரி விசாரிப்பவனின்
இருள் நிறைந்த கண்களில்
பட்டுவிட்டேன் நான்

நல்லவேளையாக
என்னைத் தான்
விசாரித்தான் அவன்

தெரியாது எனச்சொல்லிவிட்டேன்
நானும்

 

Advertisements