கவிதைகள் தமிழ்நதி கவிதைகள்

 தமிழ்நதி கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

நாற்றம்

இருபத்தைந்து செல்சியஸ் காலநிலையில்
ஃபர் கோட்டு அணிந்த பெண்ணைக் குறித்து
எனக்கொரு முறைப்பாடுமில்லை
அவள் பாலைவனத்தின் ஒட்டகமாகவோ
துருவத்தின் பென்குவினாகவோ இருக்கட்டும்
பாதாம் பருப்பினளவு
கண்களின் மேலிரண்டு கண்கள் வரைந்திருப்பதும்
உதடுகளின் ஓரங்களை செந்நிறப் பென்சிலால்
கோடு கிழித்துக் காட்டியிருப்பதும்
அவளுடைய முகத்தில்தான்.

குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் மினுங்கும்
பொய் நகங்கள் பொருத்தப்பட்ட விரல்களால்
பொத்தப்பட்டிருக்கும்
மூக்கும் அவளுடையதே!

அவளருகில் தற்செயலாய் அமர்ந்துவிட்ட
கறுப்பின மூதாட்டியின் விழிகளில் படிந்திருக்கிறது
இறந்தகாலத்தின் துயரநிழல்.
நுகத்தடியோடு ‘வெள்ளை’நிலங்களில்
புதைக்கப்பட்ட மூதாதையரின்
புதைகுழிகளைக் கிளறுகின்றன
மூக்கின் மேலிருக்கும் பொய்நக விரல்கள்.

நாசி வதைமுகாமின்
விஷவாயுக் கிடங்கில்
மூச்சுத்திணறி இறந்தவர்களின் பேத்தி
சந்தேகத்தோடு
தன் காலணிகளைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்

ஃபர் கோட்டுப் பெண்
இறங்கிய நிறுத்தத்தில்
பேருந்தினுள் தாவியேறிய புன்னகையொன்று
ஒவ்வொரு முகமாய் பயணித்துக்கொண்டிருக்கிறது.

—–

டாஃலியாஅறை

அந்த அறையின் பல்கனி கதவுகள் வழியாக
உள்நுழைவதே பொருத்தமானது
காலையில் பனி ஊடு பாவும்
மதியத்தில் வெயில் தந்தி இழையும்
ஊசியிலை மரக்காட்டிலிருந்தும் நுழையலாம்
பெருமரமொன்றின் உடல் இறுக்கிப்
பிழைத்திருக்கும் பாம்புக்கொடியில்
ஆடும் மஞ்சள் டாஃலியாக்களை
அவன் முகத்தினும் பெரிதென்றேன்
உன் முலையிலும் அகலம் என்றவன்
விடுதியின் வெள்ளை விரிப்பில்
நீள்கண்மலர்கள் மூடிப் படுத்திருந்தான்

காலத்தில் சருகாகி
உக்கியழிந்துபோம் மலர்கள்.
நினைவுகளோ
மழை மறந்த கரிசல்காடுகள்
பத்திரப்படுத்த முடிவதில்லை எதையும்.

மென்னுணர்வு மிகுந்திருந்த தருணத்தில்
பழைய பத்திரிகைத்தாள்களுக்கு நடுவில்
பாடம் செய்யப்பட்டு
நிறம் குன்றிய மலரிலிருந்து
விரிந்துகொண்டேயிருக்கிறது
மஞ்சள் நிறத்திலொரு காலம்.