கவிதைகள் – ஈழக்கவி காகம் சுட்ட தேர்தல் பணியாரம்

காகம் சுட்ட தேர்தல் பணியாரம்

– ஈழக்கவி

 

 

 

 

 

தேர்தல் பணியாரம் சுடுவதற்காக

காகங்கள் ஊருக்குள் நுழைந்தபோது

ஊத்தைகள் பூமாலை போட்டன

துர்நாற்றம் பட்டாசு கொளுத்தியது

அழுக்கில் ஜனித்த புழுக்கள்

ஊர்வலமாய் அழைத்து வந்தன

தின்னிமாடன் போல

அரசின் அழுக்கை தின்று தின்று தின்றதால்

காகங்களின் வயிறுகள்

கஜானாக்கள் ஆகி இருந்தன

கஜானா வயிறுகளில் தான்

தேர்தல் பணியாரங்கள் சுடப்பட்டன

பணியாரங்களின் அபூர்வ வாசனையை

காகத்தின் எச்சத்தில் குளிக்கும் காற்று

ஊரெல்லாம் எடுத்துப்போனது

ஒளியையும் ஒலியையும்

காகபகவான் சாத்தான் போல விழுங்கியிருந்ததால்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்ற அடிக்குறிப்புடன்

கண்ணிமைப் பொழுதெல்லாம்

இச்செய்தி மேகத்திரையில் காண்பிக்கப்பட்டது

முதல்நாள் சுடப்பட்ட பணியாரங்களில்

முத்துமாலைகள் பிரகாசித்தன

பெண்கள் கறுப்பு நிறத்துக்கு துதி பாடினர்

இரண்டாம் நாள் சுடப்பட்ட பணியாரங்களில்

தொழிற்சாலைகள் இருந்தன

தொழிலற்ற இளைஞர்கள்

காகங்களுக்கு கொடிபிடித்தனர்

மூன்றாம் நாள் சுடப்பட்ட பணியாரங்களில்

உழவர் குடிகளுக்கான பொன்னான மொழிதல்கள்

மார்கழி மழையாகி பொழிந்தன

உழவர்கள் நனைந்தனர்

நாலாவது நாள் சுடப்பட்ட பணியாரங்களில்

வானத்தை முட்டிய சம்பள உயர்வுகள்

வெள்ளிப்பூக்களை உதிரச்செய்தன

நாலே நாலுநாளில்

ஊரே காகங்களின் காலடியில்

நாய்குட்டியாய் விழுந்துக்கிடந்தது

வாயை சும்மா பொத்தியிருக்க முடியாத

வெண்புறா காகங்களைப்பார்த்துக் கேட்டது

‘போனமுறை சுட்ட தேர்தல் வடை

பொய்காற்றில் போனது போலவா இதுவும்?”

காக்கையார் ஏளனமாகச் சிரித்தார்

அவருடைய கபடமூளை சொன்னது

‘போனமுறை நாங்கள் வடை சுடவில்லை

பாட்டிசுட்ட வடையைத்தானே தூக்கி வந்தோம்

அதையும் நரியார் பிடுங்கிவிட்டாரே”

வெண்புறாவைப் பார்த்து

ஊரே கைகொட்டிச் சிரித்தது

விடியற்காலை காகங்கள் கரைந்தன

 வெண்புறா வீதியில் செத்துக்கிடந்தது

கண்ணீரில் வெடிக்கும் வாக்குறுதிகள்

கிழிந்துப்போன இதயத்தோடு

கத்திக் கொண்டிருந்தாள் கிழவி

சிறுவா;கள் கற்களை எறிந்தனா;

தூஷணவாh;த்தைகள் கிழவியின்

பொக்கைவாய்க் கடலில் சுனாமியாயின

மாடிவீட்டு வேலைக்காரி வீசிய

சுடுநீர் அவளுடலில் பட்டுத்தெறிக்க

ஓடிவிழுந்து எழுந்தோடி விழுந்து

கதறிக் கதறி அழுதாள் கிழவி

அவளழுத கண்ணீரில்

இருபதிலிருந்து அறுபது வரை

அவளிடம் ‘ஓட்டு’ வாங்கிய

அத்தனை அரசியல் வாதிகளதும்

வாக்குறுதிகள் வெடித்துச் சிதறின…

ஊரே பொய்யால் நாறத்தொடங்கியது

மலர்ந்த முகத்தோடு

வீதி ஓரத்தில்

கிழவி செத்துப்போனாள்.

***

Advertisements