பதிப்பக அலமாரி க்ரியா சார்ல் பாதலர் தீமையின் மலர்கள்

பதிப்பக அலமாரி க்ரியா  சார்ல் பாதலர் தீமையின் மலர்கள்

க்ரியா பதிப்பகம் கடந்த இரண்டு வாரங்களுக்குமுன் பாண்டிச்சேரியில் வெளியிட்ட சார்ல் பாதலரின் தீமையின் மலர்கள் கவிதை தொகுதியிலிருந்து சில கவிதைகளை மலைகள் வாசகர்களுக்காக கொடுப்பதற்கு உதவிய  மதிப்பிற்குரிய திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

இந்த உலக கவியான சார்ல் பாதலரின் கவிதை புத்தகம் வேண்டுவோர் க்ரியா பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.

இதை வாசிக்கப் போகிற வாசகர்களுக்கும் நன்றி

சிபிச்செல்வன்

ஆசிரியர்

•••

தமிழில்

குமரன் வளவன்

அல்பாத்ரோஸ்

 

அவ்வப்போது பொழுதைக் கழிக்க,

அச்சுறுத்தும் பாதாளங்கள் நடுவே நழுவிச்செல்லும் கப்பலைப்

பின்தொடரும், சோம்பிய பயணத் தோழர்களான,

விரிந்த கடல்பறவைகளான, அல்பாத்ரோஸ்களைப் பிடிப்பார்கள் மாலுமிகள்.

தளத்தின் மீது அவற்றை விட்டவுடன்,

ஆகாயத்தின் அந்த அரசர்கள், இதோ செய்வதறியாது, தலைகுனிந்து,

பார்க்கப் பரிதாபமாகத் தங்கள் அகன்ற வெண்ணிறச் சிறகுகளைத்

துடுப்புகளாக்கித் தரையில் இழுத்தபடி.

சிறகுடைய அந்தப் பயணி, இதோ செயலற்று, வீழ்ச்சியுற்று!

முன்பு அழகியதாய், இதோ அழகற்றுக் கோமாளியாய்!

ஒருவன் அதன் அலகைச் சுருட்டால் சுட்டுத் துன்புறுத்த,

இன்னொருவன், நொண்டிநொண்டிப் பழிக்கிறான், இதுவரை பறந்த முடத்தை!

புயல்களை ஆக்கிரமித்து, வில்லாளியைப் பார்த்துச் சிரிக்கும்

மேகங்களின் இளவரசன்போல்தான் கவிஞனும்,

கூச்சல்களுக்கிடையே தரையில் அகதி ஆகி

தன் ராட்சசச் சிறகுகளே தான் நடக்கத் தடை ஆக.

L’Albatros

காதலர்களின் மரணம்

இதமான மணங்கள் நிறைந்த கட்டில்கள்,

கல்லறைபோல் ஆழமான மெத்தைகள்,

அடுக்கடுக்காக, அழகிய விண்ணுலகின் கீழ்,

நமக்காக மலர்ந்த விசித்திரப் பூக்களும் இருக்கும்.

தம் இறுதிச் சூடுவரை இணைந்திருந்துவிட்டு,

நம் நெஞ்சங்கள் பரந்த இரட்டைத் தீப்பந்தங்களாகி,

தங்கள் இரட்டை ஒளிகளை, இணைபிரியாக் கண்ணாடிகளான

நம் இரு ஆத்மாக்களிலும் பிரதிபலிக்கும்.

மர்ம நீலம், இளஞ்சிவப்பு கலந்த ஒரு மாலை வேளை,

பிரிவின் துயரத்தால் புடைத்த நீண்டதொரு ஓலமென,

தனித்ததொரு மின்னலை நாம் பரிமாறிக்கொள்வோம்;

பின்னர், விசுவாசமான இன்முகம் கொண்ட தேவதையொன்று

கதவை மெல்லத் திறந்து வந்து,

மங்கிய கண்ணாடிகளுக்கும் அணைந்த தீச்சுடர்களுக்கும் உயிரூட்டும்.

La Mort des amants

பகலின் முடிவு

 

மங்கிய வெளிச்சத்தில் காரணமின்றி

ஓடி, ஆடி, வளைந்து நெளிகிறது

அலறும் தன்னடக்கமற்ற வாழ்க்கை.

தொடுவானத்திலிருந்து

அனைத்தையும் தணித்து, பசியைக்கூட,

அனைத்தையும் கலைத்து, வெட்கத்தைக்கூட,

பரவச நிலையில் இரவு எழ,

கவிஞன் சொல்கிறான்: ‘அப்பாடா!

‘என் ஆத்மா, என் உடலைப் போலவே

ஓய்வை ஆவலுடன் அழைக்கிறது;

மனம் முழுவதும் ஈமச் சிந்தனைகள் சூழ,

‘நான் தரையில் சாயப்போகிறேன்,

உன் திரைச்சீலைகளினுள் மூழ்கப்போகிறேன்,

புத்துணர்ச்சியூட்டும் இருளே!’

La Fin de la journée

அந்நிய தேச நறுமணம்

வெப்பமான இலையுதிர் கால காலை வேளையொன்று, இரு கண்கள் மூடி,

உன் இதமான முலையின் நறுமணத்தை நான் சுவாசிக்க,

ஒருபோதும் மாறாத சூரியனின் சுடர்கள் மூழ்கடிக்கும்

மகிழ்ச்சியான கடலோரக் காட்சிகள் என் முன் விரியக் காண்கிறேன்;

சோம்பலான தீவொன்று, அங்கு விசித்திரமான மரங்களையும்

சுவைமிக்க பழங்களையும் தரும் இயற்கை;

வலிமைமிக்க, மெலிந்த உடலுடன் ஆண்கள்;

ஆச்சரியமூட்டும் வகையில் கபடமற்ற கண்களுடன் பெண்கள்.

வசீகரமான தட்பவெப்பங்களை நோக்கி உன் மணம் வழிகாட்ட,

கடலலையால் இன்னமும் சோர்ந்திருக்கும் பாய்மரத்

திரைகளும் கம்பங்களும் நிறைந்த துறைமுகமொன்று தெரிகிறது,

அதே சமயம், காற்றில் சுழன்று,

என் சுவாசக் கோளங்களை நிரப்பும் பசும் புளியமர வாசம்,

படகோட்டிகளின் பாடலோடு என் ஆத்மாவினுள் இணைகிறது.

Parfum exotique

பயணிக்க அழைப்பு

என் குழந்தையே, என் சகோதரியே

அங்கு சென்று கூடி வாழ்தலின்

இன்பத்தை நினைத்துப்பார்!

விருப்பம்போல் நேசித்தல்,

நேசித்தல், சாதல்

உன் சாயல் கொண்ட தேசத்தில்!

என் மனதிற்கோ

அந்த மூட்டமான வானங்களின்

நனைந்த சூரியன்கள்,

கண்ணீர்களைக் கடந்து பிரகாசிக்கும்

உன் துரோக விழிகளின்,

மர்மமிக்க வசீகரங்களைக் கொண்டவை.

அனைத்தும் அங்கே நேர்த்தி, அழகு,

வளம், அமைதி, புலனின்பம்.

காலங்கள் மெருகேற்றிய,

பளிச்சிடும் அறைகலன்கள்

நம் அறையை அலங்கரித்திருக்கும்;

மிக அபூர்வமான பூக்கள் பல

அம்பரின் இனம்தெரியாத நறுமணத்தோடு

தங்கள் மணங்களைக் கலக்க,

உயர்ந்த உள்கூரைகள்,

களங்கமில்லாக் கண்ணாடிகள்,

கிழக்கத்திய மகிமை,

அனைத்தும் அங்கு ஆத்மாவிடம்

ரகசியமாகப் பேசும்

மென்மையான அதன் ஆதி மொழியில்.

அனைத்தும் அங்கே நேர்த்தி, அழகு,

வளம்,  அமைதி, புலனின்பம்.

நீரோட்டங்களில்

அலைபாயும் மனம் கொண்ட

படகுகள் உறங்குவதைப் பார்;

உன் சிறிய ஆசையைக்கூட

நிறைவேற்றத்தான் அவை

உலகத்தின் கோடியிலிருந்து வந்திருக்கின்றன.

அஸ்தமிக்கும் சூரியன்கள்

வயல்களுக்கு, ஓடைகளுக்கு, நகரத்திற்கே

பொன், செந்நிறக் கல்கொண்டு

உடையணிவிக்க,

வெதுவெதுப்பான ஒளியில்

உறக்கம் கொள்கிறது உலகம்.

அனைத்தும் அங்கே நேர்த்தி, அழகு,

வளம், அமைதி, புலனின்பம்.

                            L’invitation au voyage

••

தமிழில்

குமரன் வளவன்

Advertisements