கவிதை மகுடேசுவரன் கவிதைகள்

மகுடேசுவரன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இரவில் காத்திருப்பவன்

 

காத்திருக்கிறான்

கையில் அடர்ந்து சிவந்த ரோஜா

கொண்டுவரவில்லை

 

பரிசளிக்க

ஏதாவது எடுத்தவரத்தான்

நினைத்திருந்தான்

இருவருக்குமிடையில் அந்தப் பரிசு

ஒரு பாவனையாக அமர்வதை

அவள் விரும்பவில்லை

 

இந்த இரவு

தன் முதல் பாதி முற்றி நீங்குகிறது

இரயில் நிலையத்தில்

சோம்பலின் கதிர்வீச்சு மெல்லப் பரவுகிறது

உருள் சக்கரச் சுமைவண்டிகள்

இதயத்தைக் கீறும் ஒலியுடன்

அவனைக் கடந்து போகின்றன.

 

மணித்துளிகள்

உயிரபாயத்தில் உள்ளவனின்

நரம்பில் இறங்கும் ரத்தத் துளிகளாகச்

சொட்டிக்கொண்டிருக்கின்றன.

 

அவளைத் தாங்கிவரும் அந்த வண்டி

இந்திரனின் தேராக இருக்கவேண்டும்.

 

அது அவன் நிற்கும் இடத்தில் நிற்பதுகூட

ஒரு பொருந்தாப் பிழையாக முடியக் கூடும்.

 

காத்திருப்பும்

அதன் பிறகு நேரும் சந்திப்பும்

உள்ள உலகம்

இன்னும் பெரிய நம்பிக்கைகளோடு வாழட்டும்.

 

ஏமாற்றத்தில் முடியாத காத்திருப்புகள் உள்ளவரை

எல்லாம் இனிமையாகத் தோற்றமளிக்கட்டும்.

 

இரவுக்கே உரிய

அத்தனை ரகசியங்களும்

அவனையும் அவளையும்

ஒரு பொருளாகக் கருதிச் சேர்த்துக்கொள்ளட்டும்.

 

 

 

 

 

 

***

இறக்கும் நகரம்

 

இந்த நகரம்

கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிக்கொண்டிருக்கிறது.

 

ஏற்கனவே குருவிகளும் கிளிகளும்

இடம்பெயர்ந்துவிட்ட நகரம்தான் இது.

 

மீதமிருந்தவை

பறவைகளற்ற பிராந்தியத்தில்

வாழப்பழகிய ஒரு கூட்டம்.

 

அந்தக் கூட்டம்

பறவைகளைப் பின் தொடர்ந்து பயணமாகிறது

 

எல்லாரும் அகன்று சென்றுவிட்ட பின்

இங்கே யார் இருப்பார்கள் ?

 

இந்த நிலத்தோடு வேர்பற்றியிருக்கும்

முதியவர் சிலர் இருக்கக்கூடும்.

அவர்களும்

விரைவில் இறக்கவிருப்பவர்கள்

 

செல்வந்தர்கள்

தம் பண்ணை வீட்டுக்குப் போகிறார்கள்

ஏழைகள்

தத்தம் பூர்வீக மண்ணைச் சென்றடைகிறார்கள்

 

இருக்கவும் முடியாத கிளம்பவும் தெரியாத

கூட்டம் ஒன்று இருக்கிறது எங்களைப் போல.

அதற்குதான் போக்கிடமில்லை.

 

போகுமிடம்

இதைவிட வளமான நிலமென்றில்லை.

ஆனாலும் ஏதோ தைரியத்தில்

கிளம்பிச் செல்கிறார்கள்.

 

அவர்கள் மனம்மாறித் திரும்பிவரும்போது

இந்நகரம் முகங்கொடுக்காது.

நகரத்தால் கைவிடப்படுவதைவிடக் கொடிது

வேறில்லை.

 

இந்நகரம் ஒரு பட்டமரம்போல்

செத்துக்கொண்டிருக்கிறது.

அதன் மரணவாயில் பால்துளிகளைச் சொரியவேனும்

நாங்கள் இருப்போம்.

***

Advertisements