கவிதை ப.தியாகு கவிதைகள்

 

ப.தியாகு

கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

1)

பைத்தியத்தின் வானம்:

 

தெற்குக்குச்சுவற்றின்

ஜன்னலோடு

சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டிருந்த

பைத்தியத்தின்

வானத்தின் பரப்பளவு

12 சதுர அடிகள்

 

ஒரு நாளும்

சூரியனோ நிலவோ

காட்சி தராத அவ்வானில்

தோன்றுவதுண்டு என்றைக்காவது

பகலில் சில பறவைகளும்

ஒன்றிரண்டு பட்டங்களும்

இரவுகளில்

விரல் விடுவித்தெண்ணிடலாம் போல

நட்சத்ரங்கள் சிலவும்

 

உசாவலின் முடிவில்

தெரிந்து கொண்டேன்,

வேளைக்கு

உணவுத்தட்டை

உள்ளே நீட்டுவது

திடும்மென வானில் தோன்றும்

ஒரு தேவதை என்றுதான்

நம்புகிறது பைத்தியம்.

 

 

2)

நிழல்:

 

வானம் பின்புலமாக
கிளையது முன்னிருந்து
பொருந்தியும் போக
ஓயாமல் அலகசைத்தவாறிருக்கிறது
படிந்திருக்கும் நிழல்.

 

நாம் தேட விழையாதவரை
எதிர்த்திசையில் எங்கேனும் வீற்றிருக்கலாம்
கரைந்தபடி,
வானவில்லின் ஏழு நிறங்களில்
ஏதேனுமொரு நிறம் கொண்ட காகம்.

 

 

3)

என் வரவேற்பறையில்

இருபது லிட்டர் கொள்ளளவில்

ஒரு கடல்:

 

கொஞ்சம் மணல்

கொஞ்சம் கூழாங்கற்கள்

கொஞ்சம் கிளிஞ்சல்கள்

சிறு சிறு மீன்கள் என

எல்லாவற்றையும்

உள்ளடக்கியதாய்த்திகழ்கிறது

என் வரவேற்பறையில்

இருபது லிட்டர் கொள்ளளவில்

ஒரு கடல்.

 

அடுக்கு மாடி குடியிருப்பில்

என் வீடு

முதல் தளத்திலென்பதால்

கடல் மட்டத்திலிருந்து

பூமியின் உயரம்

சுமார் -5.88 மீட்டர்.

 

 

4)

பறந்து அமர்ந்து

அலைக்கழிக்கும் பல்லி:

 

கவ்விப்பிடிபட்டதற்கும்

அடுத்த அரை நிமிடம் வரை

வெளியே விரித்த நிலையிலிருந்தன

பல்லியின் வாயிடுக்கில்

பூச்சியதன் சிறகுகள்.

 

அன்றைய இரவிலென் கனவில்

நீங்கள் நுழைந்திருக்க வேண்டும்,

 

பறந்து அமர்ந்து அலைக்கழிக்கும்

பல்லி மேல் கவனம் குவித்து

சுவற்றில் ஊர்ந்தபடியிருந்தது

வால் முளைத்ததொரு பூச்சி.

 

 

5)

பறக்கும் பூ:

 

விரிந்த இதழ்கள் மீதிவை

கவியும் இதழ்கள்

 

தேன் தரும் பையிலிருந்திது

தேனை பெறும் பை

 

தரை சேரும் பூவிலிருந்து

வெளியேறி

பறக்கும் பூவை,

 

வர்ணிக்கவேண்டாம்

வண்ணத்துப்பூச்சி என்று

 

 

6)

ஒன்றுமில்லாத்தன்மையில்

தொலைந்து போதல்:

 

கடந்த ஒரு வாகனத்தில்

பின்னால் வரும் வாகனங்களை

பார்க்கவென்றிருக்கும் கண்ணாடியில்

படிகிறேன் பிம்பமென.

 

எனக்கும்

கண்ணாடிக்குமான

இடைவெளியின் நீட்சியில்

புள்ளியாதலையும் சந்தித்து

பின்

ஒன்றுமில்லாத்தன்மையில்

தொலைந்து போகிறது

என் பிம்பம்.

***

 

Advertisements