கவிதை பெருமாள் முருகன் கவிதைகள்

பெருமாள் முருகன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

எஜமானர்

 

அவரை

ஐந்து நாய்கள் பின்தொடர்கின்றன

திசை திரும்பாமல்  தொடரச்

சின்ன அதட்டல்

போதுமானதாயிருக்கிறது

ஐந்தும்

வெவ்வேறு இனம்

நிறம் பெயர்

 

அவர் பயன்படுத்துவது

ஒற்றைச் சொல்.

 மொழி

 

காக்கையின் மொழியில்

சில சொற்கள்தான்

எனக்குத் தெரியும்

கோவையாகப் பேச முடியாது

எனினும்

புரிய வைத்துவிடலாம்

 

என் மொழியில்

காக்கைக்கு

ஒரு சொல்லும் தெரியாது

என்முன் வந்து எப்போதும்

தன் மொழியிலேயே

கத்திக் கரைகிறது

 

காக்கை ஒருபோதும்

வருந்தியதாகத் தெரியவில்லை.

 

பார்வையாளர்கள்

 

பண்டிகை காலத்துத்  தெருக்களில்

நடக்க வாய்க்காத  வியாபாரிகள்

கடைக்குள்ளிருந்து

பார்க்கிறார்கள்.

தனக்குரியது

 

பிளாஸ்டிக் குழாயைப் பற்றி

மேலேறிச் செல்கிறது

சுவர்களின் மேல் ஓடுகிறது

சருகுகள் சரசரக்க

மொட்டை மாடியில் உலாத்துகிறது

தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று

கீழுலகைக் காண்கிறது

 

ஆளரவம் கேட்டதும்

சட்டெனத் தாவிவிடும்

அணிலுக்குத் தெரியும்

தனக்குரியது

மரம் தானென.

இப்போது

 

நெருங்கிய

மரவேலியின் இடையே

முளைவிட்டு

அண்டி ஒளிந்து வளர்ந்தது

சிறுசெடி

வேலிக்கு மேலே

கிளை பரப்பிக் குடை விரித்து

நிற்கிறது.

நாகரிகம்

 

என் உயிர்நிலையை அடைந்துவிட்ட

சிற்றெறும்பு சொற்களால் கடிக்கிறது

மென்சதையில் ஒவ்வொரு சொல்லும்

முள்போல் இறங்குகின்றது

விரல் குவித்துப் பிடித்து

நசுக்கித் தேய்த்துக் காற்றில் ஊதிவிடக்

கை பரபரக்கிறது

எனினும்

பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலவில்லை

தொடை இறுக்கி

வலி பொறுப்பதைத் தவிர.

•••

 

 

 

Advertisements