கவிதையியல் குமரன் வளவன் போத்லெரும் கவிதையும்

போத்லெரும் கவிதையும்

குமரன் வளவன்

I

‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படும் ஷார்ல் போத்லெர் 1821ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். போத்லெருக்கு ஆறு வயது இருக்கும்போது ஓவியக் கலைஞரான தன் தந்தையை இழந்தார். குறுகிய காலம் விதவையாக இருந்த அவருடைய தாயார் ராணுவ அதிகாரி ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட்டைப் போலவே, தொடக்கத்திலிருந்தே போத்லெருக்குத் தன் சிற்றப்பா[1] மீது ஆக்ரோஷமான வெறுப்பும், அன்னையிடம் பொறாமை கலந்த மனவிரோதமும் இருந்தது. பதின்பருவத்தில் இருக்கும்போது அவர் மதகுருவாகவோ, ராணுவ வீரராகவோ, நடிகராகவோ ஆக விரும்பனார். பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் வயதுக்கு மீறிய திறமை அவரிடம் காணப்பட்டாலும், கிறுக்குத்தனமானவர் என்று கருதப்பட்டதால் ‘லூயி-லெ-கிரான்ட்’ என்ற பிரபல பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

சிறந்த துறை ஏதாவதொன்றில் பணிபுரியும் வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டுமென்று நினைத்த பெற்றோர்களின் மனத்தை வருத்தமடையச் செய்யும் வகையில், இலக்கியப் பத்திரிகைகளும் இலக்கியச் சங்கங்களும் செயல்பட்டுவந்த வட்டாரங்களில் சுற்றிவந்தபடி இருந்தார். அவர் வியந்து போற்றிய இந்த வட்டாரங்களின் சிற்றின்ப ஈடுபாடுகளில் நாட்டம் கொண்டு கட்டுப்பாடில்லாத வாழ்க்கையை மேற்கொண்டார். விலைமாதர்களை நாடுவதும், காமக் கேளிக்கைகளில் ஈடுபடுவதும், வீணாக ஊர்சுற்றுவதுமே அவருடைய அன்றாட நடவடிக்கைகளாக இருந்தன. தடைசெய்யப்பட்ட அவருடைய சில கவிதைகள் இவை போன்ற தருணங்களின் அனுபவத்தின் அடிப்படையில் அவருடைய மனத்தில் உதித்திருந்திருக்கலாம்.

வாக்குரிமை வயதை அவர் எட்டியபோது தந்தை வழிச் சொத்தில் ஒரு பங்கு

அவருக்குக் கிடைத்தவுடன் பாரிஸ் நகரத்தில் குடியேறினார். அதுவே அவருடைய சூழல், சிறை, தொடுவானமாக ஆகிவிட்டது. மூன்றே ஆண்டுகளில் சொத்தில் பெரும் பகுதியை அவர் கரைத்துவிட்டதால், அவருடைய பணத் தேவைக்காகச் சட்டத்துறை அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழ் அவர் இருக்கும்படி அவருடைய தாயார் ஏற்பாடு செய்துவிட்டார். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படாடோபமாக இருக்க விரும்பிய அந்தச் சுதந்திரப் பறவைக்கு எவ்வளவு பெரிய அவமதிப்பு? தன் பிழைப்பைக் கருதியும், மற்ற எழுத்தாளர்களின் ஆலோசனைப்படியும் ஓவியக் கலை விமர்சகராக அவர் மாறினார். சமகாலத்திய ஓவியர்களின், சிற்பிகளின் அழகுணர்வு பற்றிய அறிவு பூர்வமான கருத்துகள் அடங்கிய ‘1845இன் சித்திரக் கூடம்’ (La Salon de 1845)[2] என்ற புத்தகத்தை எழுதினார். அடுத்த சில ஆண்டுகளில் சொந்தமாக எழுதி[3], மொழிபெயர்த்து[4], தன் கலை விமர்சன வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

 

இந்தப் பின்னணியில் வீட்டில் உணவருந்தும் மேஜையின் ஒருபுறம் அவரும், மற்றொருபுறம் அவருடைய தாயாரும் சிற்றப்பாவும் அமர்ந்திருக்கும் காட்சி

யைக் கற்பனைசெய்து பார்ப்பதே கடினம். ஒருவேளை இதுபோன்று குடும்பத்

தில் மயான அமைதி நிலவிய ஒரு நாளில்தான் அவருடைய தாயார் தென்திசைக் கடலில் இந்தியாவை நோக்கிப் பயணம் செய்த கப்பல் ஒன்றில் போய் வரும்படி அவரை வற்புறுத்தியிருந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள்  சிலவற்றுக்கு ‘பயண அழைப்பு’, ‘தொடர்புகள் பல’ என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்த இந்த மனிதருக்கு இதுவே ஒரு லட்சியப் பயணமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் கவிஞனை எவராலும் கட்டுப்படுத்த முடியாதென்பதால், அவர் பாதி வழியிலேயே இன்று ரியூனியன் என்று அழைக்கப்படும் பூர்போன் தீவிலிருந்து திரும்பி வந்துவிட்டார்.

தன்னுடைய வாழ்நாளில் போத்லெர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மிகக் குறைவு. கவிதைப் பித்துப் பிடித்து, கவிதையில் மட்டுமே நாட்டம்கொண்டிருந்த அவரைக் குறித்துக் கவலைக்குள்ளான அவருடைய தாயார் வற்புறுத்தியதால் பெரிதும் விருப்பமில்லாமல்தான் முதல் பயணத்தை மேற்கொண்டார். கையில் பணமில்லாததாலும், தன் தேசத்தினரே தன்னைப் புரிந்து கொள்ளாததாலும் அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணமோ ஒருவிதப் புலம்பெயர்தலாக ஆகிவிட்டது. 1841இல், தன்னுடைய 20ஆவது வயதில் அவர் முதல்முறையாகப் பயணம் செய்ததைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், அவருடைய தாயார் சொன்னதைப் பார்ப்போம்: “ஷார்ல் போத்லெருக்கு நாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோமோ அவற்றை ஏற்க மறுத்து, தன் சிறகுகளை விரித்துப் பறந்து இலக்கியப் படைப்பாளியாக இருக்க அவன் ஆசைப்பட்டது எங்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இதுவரை ஆனந்த மயமாக இருந்த எங்களுடைய அக வாழ்வில் எவ்வளவு பெரிய ஏமாற்றம்! என்ன சோகம்! …”

இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்திருந்தால் போத்லெரின் வாழ்க்கையில் என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்று இக்கவிதைகளை மொழிபெயர்க்கும்போது  நினைத்துப் பார்த்து நான் அடிக்கடி வியந்ததுண்டு. குறிப்பாக, கொல்கொத்தாவில் ரத்தப் பசியுடன் இருக்கும் காளியின் பிரம்மாண்ட சிலை போத்லெரிடம் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கியிருக்கும்? மந்திரங்களை உச்சாடனம் செய்வதைக் கேட்டு அவர் எப்படி உணர்ந்திருப்பார்? “மொழியைத் திறம்படக் கையாள்வது என்பது அற்புதங்களை நிகழ்த்தும் ஒருவித மாயா ஜாலச் செயல்பாடு” என்று சொன்னவரல்லவா அவர்? அங்கு நிலவும் வண்ணங்களால், ஒலிகளால், வாசனைகளால் சூழப்பட்டிருப்பது எப்படி இருந் திருக்கும்!  சாவு என்பது வாழ்க்கைக்கு எதிரானதல்ல, ஆனால் ஒரு வாழ்க்கை முடிந்து இன்னொரு வாழ்க்கை தொடங்கப்போவதைக் குறிக்கும் நிகழ்வே என்று நம்பும் தேசத்தைத் தன் கவிதைகளில் எப்படிப் போற்றியிருந்திருப்பார்!

ஆனால், இந்திய மண்ணில் கால் பதித்திருக்காத இக்கவிஞர் மேற்கூறிய  வற்றையெல்லாம் பற்றி வியக்கத் தக்க வகையில் தன் கவிதைகளில் எழுதியிருக்கிறார். போத்லெரும்,ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புரட்சிச் சிந்தனையாளர் நீட்ஷே போன்றோரும் ஐரோப்பாவில் மறுபிறவியெடுத்திருக்கும் கிழக்கத்திய மனங்கள் என்று சொல்லலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவர்களுடைய சிந்தனைகள் இந்திய ஆன்மீகக் கருத்துகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அதை எளிமையாக இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: அதாவது, பலவிதமான சித்திரவதைகள், நம்பிக்கை  இழப்புகள் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபஞ்ச இயைபு ஒன்றுள்ளது. நுண் ணுணர்வு மிக்கவர்கள் மட்டும்,அதுவும் குறிப்பாக உயிருடன் தோலுரிக்கப் பட்டவர்களான கவிஞர்கள் மட்டுமே உணரக்கூடிய ஒலி, மணம், தரிசனம் போன்ற பல வித விநோதமான உணர்ச்சிகளாக எதிரொலித்து,ஒழுக்கக் கோட்பாடுகளாகவோ அழகுணர்வு குறித்த கோட்பாடுகளோ வேறு எவ்விதக் கோட்பாடுகளும் இன்றி (ஏனென்றால் இவையெல்லாம் மானுட மனம் எழுப்பிக்கொண்டிருக்கும் தடுப்புச் சுவர்கள்) எல்லாவற்றிலும் இயற்கை (அதாவது போத்லெரின் அகராதியில் பிரபஞ்சம் முழுவதும்) பிரதிபலிப்பது இந்த இயைபைதான்.

இந்தியாவை நோக்கி அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் முடிவு பெறாத ஒரு பயணம்தான். இருந்தபோதிலும் இந்த அரைகுறைப் பயணமே நம் இளம் கவிஞரின் கற்பனையை (‘திறன்களின் அரசி கற்பனை’ என்று போத்லெரே சொல்லியிருக்கிறார்) பிரமைகளின் தீவிரத்தினால் சூலுறச் செய்யும் அளவுக்குச் செழிப்பாக்கியிருந்தது. பிரபஞ்சத்தின் மொழியைக் கற்று,அதன் இசையைக் கேட்டு, மக்கள் கூட்டத்தின் நிரந்தர சலனத்தையும் ஓயாத இரைச்சலையும் மீறி அந்த இசையின் உட்பொருளை உணர இந்தத் தீவிரப் பிரமைகள் உதவின.

ழான்-போல் சார்த்ர் சொல்கிறார்: “பெரிய ஒரு நகரில் (பாரிஸ்) தன்னுடைய சோகங்களுடன் வளைய வந்துகொண்டிருப்பதென்று முடிவு செய்ததன் மூலம் போத்லெர் தன் வாழ்க்கையின் புவியியல் எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கிக்கொண்டார்; உண்மையான அந்நிய நாட்டு அனுபவங்களை மறுத்து, கற்பனைப் பயணங்களைத் தன் அறையிலிருந்தபடியே இன்னும் நன்றாகவே மேற்கொண்டார்…”

பிறவியிலேயே சபிக்கப்பட்டவராக, அதிர்ஷ்டம் இல்லாதவராக போத்லெர் தன்னைக் கருதினார். (அவருடைய கவிதை ஒன்றின் தலைப்பு: ‘துரதிருஷ்டம்’.) அவர் பெரும்பாலும் போதுமான பொருளாதார வசதி இல்லாமலேயே வாழ்ந்தார். பலமுறை தற்கொலைசெய்துகொள்ளவும் முயன்றிருக்கிறார் நீண்ட காலம் விரக்தியுடனும் இடையிடையே அதீத மகிழ்ச்சியுடனும் மாறிமாறி இருப்பதிலேயே அவருடைய வாழ்க்கை முழுவதும் கழிந்தது. வாழ்க்கையின் இருமுகத் தன்மை கொண்ட அஸ்திவாரத்தின் மேல் கட்டமைக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது அவருடைய வாழ்க்கை: ஒன்று, எல்லோ ரையும்போல இருப்பது; மற்றது இருத்தலியல் போராட்டத்துடன் வாழ்வது. இந்தப் போராட்டத்தை அவரே விவரிக்கிறார்:“குழந்தைப் பருவத்திலேயே முரண்பாடான இரண்டு உணர்ச்சிகளை என் இதயத்தில் உணர்ந்தேன்: வாழ்வின் பயங்கரம், வாழ்வின் லகரி.” (‘என் நிர்வாண இதயம்: போத்லெர்). கவிஞனாகப் பிறந்ததாலும், கவித்துவப் பார்வையுடனும் மென்மையான உணர்ச்சிக் கூர்மையுடனும் தீர்க்கதரிசியாக இருந்ததாலும் இந்த இரண்டு முரண்பாடான உணர்ச்சிகளுக்கிடையே ஊசலாட விதிக்கப்பட்டுவிட்டதாக அவர் தன்னை உணர்ந்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதிவரை இந்தச் சாபம் அவரைத் தொடர்ந்தது; புகழ், செல்வம், காதல் எதுவுமே கிடைக் கப்பெறாமலே அவர் இறந்தார்.

அவருடைய புத்தகம் வெளியானவுடனேயே தடை செய்யப்பட்டுப் பின்னர் நீதிமன்றத்தால் சிதைக்கப்பட்ட சம்பவம் அவரிடம் கசப்புணர்வையும், அநீதி

இழைக்கப்பட்ட உணர்வையும் அதிகரித்தன. நீதிமன்றத்தின் இந்தத் தண்டனை அவருடைய கவிதைத் திட்டங்களைக் குலைத்தது. புதிதாக வசன கவிதைகள் எழுதவிருந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தடைசெய்யப்பட்ட கவிதைகளுக்குப் பதிலாக வேறு சில மரபுக் கவிதைகளை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். கொடிய கனவு போன்ற இந்த நிகழ்வு அவருடைய இன்னலை மேலும் அதிகரித்தது.

தன்னுடைய வாழ்வின் கடைசி நாட்களில் ஆர்வம் இழந்து, கடன்கள் பெருகி, உடல்நலம் குன்றி (பால்வினை நோயினால்)-, உடல் மெலிந்து, நம்பிக்கை இழந்தவராக அவர் இருந்தார்.1866இல், அதாவது இறப்பதற்கு முன்பு ஒரு வருடம் அவர் முடக்குவாதத்தால் அவதிப்பட்டார். வலி பொறுக்காமல் அவதிப்பட்டபடியே, சில நண்பர்களும் அவருடைய தாயாரும் அருகிலிருக்க, 1867 ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் இறந்தார். செப்டம்பர் 2ஆம் தேதி அவர் அடக்கம் செய்யப்பட்டபோது வந்திருந்தவர்கள் மிகச் சிலரே. அவருக்கு அஞ்சலி செய்யப்பட்டபோது, அவரைப் புகழ்ந்து சில வரிகள் சொல்லப்பட்டன:

“நவீன உலகின் மனிதனை அவனுடைய குறைபாடுகள், உடல்                                           பலவீனம், சக்தியற்ற ஆசைகள் இவற்றுடனேயே அவர் ஏற்றுக்                                           கொண்டார்.”

சபிக்கப்பட்ட கவிஞர்களின் நீண்ட பட்டியலையும், நல்லதொரு கவிஞனுக்கு மோசமான விதிதான் அமையும் என்கிற மரபையும் அவர்தான் தொடங்கி வைத்தார் என்றுகூடச் சொல்லலாம். அதே சமயம், 20ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் பல இலக்கிய இயக்கங்களின் பாதையை அவர் வகுத்தார்; குறிப்பாக, கவிதை உலகில் வெற்றிநடைபோட்ட சிம்பலிஸம், சர்ரியலிஸம் போன்ற இயக்கங்களுக்கு வழிகோலினார்.

“நவீனத்துவம் என்பது தற்காலிகமானது, விரைவில் தோன்றி மறைவது, தற்செயலானது, கலையின் ஒரு பாதி; அந்தக் கலையின் மற்றொரு பாதி  சாசுவதமானது, மாறாதது”

(நவீன வாழ்க்கையின் ஓவியன்: ஷார்ல் போத்லெர்)

II

ஷார்ல் போத்லெரின் முக்கியமான படைப்பாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’ (Les Fleurs du Mal), 1857ஆம் வருடம் ஜூன் 25ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 100 கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

வெளிவந்தவுடனேயே அன்றைய கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படைப்பு, பல்கலைக்கழகக் கல்வியாளர்களாலும் இதழாளர்களாலும் (ஒரு சிலரைத் தவிர) புறக்கணிக்கப்பட்டது. ஆயிரம் பிரதிகளே அச்சடிக்கப்பட்ட இந்தத் தொகுப்பு பிரெஞ்சு அறிவுஜீவி உலகில் எவரையுமே ஏதோ ஒரு விதத்திலாவது பாதிக்காமல் இருக்கவில்லை. இந்தப் புத்தகத்தை எதிர்த்துக் கிளம்பிய வன்மையான கண்டனத்திற்கு ஒரு உதாரணம்: “மனதின் எல்லாவிதமான நோய்களுக்கும், இதயத்தின் எல்லாவிதமான அழுகல்களுக்குமென்றே அமைந்த ஒரு மருத்துவமனை இந்தப் புத்தகம்; இவற்றைக் குணப்படுத்தலாம் என்று நினைத்தாலோ, குணப்படுத்த முடியாத வியாதிகள் இவை.”

இதில் உள்ள சில கவிதைகளில் காணப்படும் ஒழுக்கமின்மையைக் கண்டித்துப் பொதுநல அமைச்சகம் இதன் ஆசிரியர் மீதும், பதிப்பாளர் மீதும் வழக்குத் தொடர்ந்தது. பொதுமக்களின் ஒழுக்க நெறியைச் சீர்குலைத்ததாகக் குற்றம் சாட்டிய நீதிமன்றம் இவருக்கு 300 ஃப்ராங்குகள் அபராதம் விதித்துத் தீர்ப் பளித்தது. (இதே நீதிமன்றமும் இதே நீதிபதியும்தான் ஃப்லோபேரின் பிரபல ‘மாடம் பொவாரி’ நாவலை இதே காரணத்துக்காக விசாரித்தது என்பதும் ஆனால் எந்த விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.) இதில் ஆறு கவிதைகளை நீக்கிவிடச் சொல்லியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. (இந்த ஆறில் மூன்று கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவை: லெத்தே, மிதமிஞ்சி ஆனந்தமடைந்தவளிடம், ரத்தக் காட்டேரியின் உருமாற்றங்கள்.) அந்தக் காலகட்டத்தின் மிகப் பிரபலமான பல எழுத்தாளர்களின் (விக்டர் ஹ்யூகோ, ஃப்லோபேர், சேந்த்-பெவ்…) ஆதரவு இவருக்கு இருந்தபோதிலும், போத்லெர் கசப்புணர்வுடன் மன முடைந்துபோனார். தடைசெய்யப்பட்ட கவிதைகளுக்குப் பதிலாகப் புதிதாகச் சிலவற்றை எழுதினார். சில மாற்றங்களுடன்1861இல் மீண்டும் வெளிவந்த பதிப்பில் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 126 கவிதைகள் இருந்தன: சோக மூட்டமும் லட்சியமும், பாரிஸ் நகரக் காட்சிகள், மது, தீமையின் மலர்கள்,புரட்சி, மரணம்.

1867 ஆகஸ்ட் 31ஆம் தேதி தன்னுடைய 46ஆவது வயதில் போத்லெர் இறந்த பின் ‘தீமையின் மலர்கள்’ என்ற தலைப்புடன் மூன்றாவது பதிப்பு ஒன்று வெளி வந்தது. இதில் அவர் தனியாக எழுதி வைத்திருந்த வேறு சில கவிதைகளும் சேர்க்கப்பட்டு மொத்தம் 155 கவிதைகள் இருந்தன.

செவ்விலக்கிய மரபுக் கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் முதல்முறையாக வெளிவந்த 1957ஆம் ஆண்டில்தான் போத்லெர் தன்னுடைய      முதல் வசன கவிதையையும் எழுதத் தொடங்கினார். ‘பாரிஸ் நகரத்தின் சோக மூட்டம்: சிறு வசன கவிதைகள்’ என்ற அவருடைய மற்றொரு முக்கியப் பதிப்பு ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பாக 1869இல், அவருடைய மறைவுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, வெளிவந்தது. 1857இல், மரபுக் கவிதைகளை எழுதுவதில் 15 ஆண்டுகளைக் கழித்த பின்னர் அழகின் வேறு சில களங்களை ஆராய்ந்து அறியவும், அதன் மூலமாக எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ளவற்றைக் குறித்த தேடலில் ஈடுபடவும் அவருக்கிருந்தது பத்து ஆண்டுகளே. இந்தத் தேடலைப் பற்றி அவரே சொன்னார்: “கவிதையினாலும் அதன் ஊடா கவும், இசையினாலும் அதன் ஊடாகவும்தான் கல்லறைக்கும் அப்பால் உள்ள அற்புதங்களை ஆத்மாவினால் கண்டறிய முடியும்.” அவருடைய மொத்தக் கவிதைப் படைப்பும், குறிப்பாக ‘தீமையின் மலர்கள்’ தொகுப்பு அவருடைய இந்த வேட்கையையே எதிரொலிக்கின்றன: மூச்சுமுட்ட வைக்கும்படி எங்கும் வியாபித்திருக்கும் சாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காகக் கவிதையில் போதைகொள்வது, அதன் உள்ளொளியின் வெளிச்சத்தினூடே ஆதி அந்தமின்மையையும்‘அப்பாலை’யையும் காண்பது, அவற்றின் நுழைவாயிலில் துறைமுகம் ஒன்றின் வாயிலில் இருப்பதைப்போல நின்றுகொண்டிருப்பது…

“மரணமே, முதிய தலைவனே, நேரமாகிவிட்டது! கிளம்பலாம்!

இந்த நாடு அலுப்பூட்டுகிறது, மரணமே! தயாராவோம்!

வானமும் கடலும் மையைப் போலக் கருப்பாக இருந்தாலும்

நீயறிந்த நம் நெஞ்சங்களில் எத்தனை ஒளிக்கற்றைகள்!”

ரொமான்டிசிஸம், ஃபார்மலிஸம் போன்ற பல இலக்கியப் போக்குகளை ஒன்றிணைத்த இந்தக் கவிதைகளின் முக்கியத்துவத்தை எவருமே-ஒரு சிலரின் பாராட்டுக் கட்டுரைகளைத் தவிர உணரவில்லை. பல்வேறு யதார்த்தங்களின் இயல்பற்ற சந்திப்பில் பொதிந்திருக்கும் ‘புதிரான அழகை’ (போத்லெரின் சொற்கள்) வடிகட்டி எடுத்து, கவித்துவ ஒருமை என்ற அம்சத்தில் அதைப் பதித்து, ‘அநித்தியத்திலிருந்து சாசுவதத்தை’ பிழிந்தெடுக்கும் புதிய பாதையைத் திறந்துவிட்டது இவருடைய கவிதை.

அதாவது, தீமையிலிருந்து, நமக்கு அருவருப்பூட்டும் விஷயங்களிலிருந்து, நாம் வெறுத்து ஒதுக்குபவற்றிலிருந்து அழகை (மலர்களை) பிரித்தெடுப்பதென்ற அவருடைய கடினமான முயற்சி வெறும் கவிதை நடையைச் சார்ந்த செயல் மட்டுமல்ல. புதியதொரு கவிதைப் போக்கும்கூட. ஒரு ஜீவனுக்குள், ஒரு தீய ஜீவனுக்குள் உறைந்திருக்கும் தீமையை ஆராய்ந்து பார்க்க விழையும் போக்கு. ஆத்மாவுக்கு உள்ளே சென்று பார்க்கக் கவிஞர் மேற்கொள்ளும் இந்தப் பயணம் கற்பனையின் உதவியாலும் நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையான அல்லது நகர்ப்புற விகாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாலும் நிகழ்கிறது. போத்லெரைப் பொறுத்தவரை மனித இதயம் எதிர்மறையான அம்சங்கள் சந்தித்துக்கொள்ளும் போர்க்களம்: உடல்-மனம்,நரகம்-சொர்க்கம், தீமை-நன்மை.

தீமையைக் குறிப்படும்போது அழகைப் பற்றிப் பேசுவதே ஒரு முரண்பாடு; இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில் மலர்பவை அல்ல. மாறாக, நச்சுத் தாவரம் ஒன்றிலிருந்து பயனுள்ள மருந்தைச் சாறாகப் பிழிந்தெடுப்பதைப் போல, சொற்களின் உதவியுடன் தீமையைப் பேயோட்டுவதைப் போலக் கவிஞன் செயல்படுவதால் கிடைக்கும் மலர்கள். இந்த முயற்சி, ‘கலை கலைக் காகவே’ என்ற கோட்பாட்டின்படி விகாரத்தைக் கவிதை நயத்துடன் வர்ணிக்கும் வெற்றுக் கலை முயற்சி அல்ல. விகாரத்தின் இருளுக்குள் மேற்கொள்ளப்படும், தலைசுற்ற வைக்கும் சவாலான ஒரு பயணம் இது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் கண்ணியமற்ற, ஆரோக்கியமற்ற, அருவருப்பூட்டும் பகுதிகள் வழியாகச் சென்று,  தன்னை  இன்னும்  நன்றாகப் புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கடினமான ஆத்ம சோதனை. அனுபவங்களின் அடிப்படையில், தன் மனம் விரும்பியதற்கு இணங்கிச் செய்யப்பட்ட முயற்சி.

நூறு கவிதைகள் கொண்ட முதல் பதிப்பில், ‘வாசகனிடம்’ என்ற தலைப்பில் முன்னுரையாக அமைந்த ஒரு கவிதையும் இருந்தது. (இந்தக் கவிதை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.) ஆக, 101 கவிதைகள் கொண்ட ‘தீமையின் மலர்கள்’  5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளும் அவற்றின் உள்ளடக்கமும், குறிப்பிட்ட நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டபடி போத்லெரால் கட்டமைக்கப்பட்டிருந்தன. எந்த ஒழுங்கு வரிசையை அவர் பின்பற்றினார்? இந்த வடிவமைப்பின் உட்பொருள் என்ன? இந்தத் தொகுப்பில் இழையோடும் பாவு எது?

அவருக்குப் பின் வந்த விமர்சகர்கள் இந்தப் புதிரை விடுவிக்க, இந்தக் கவிதைகளினூடே இழையோடும் உட்பொருளை அறிய முயன்றிருக்கிறார்கள். முதல் வாசிப்பில், மனித வாழ்க்கையின் ஒழுங்குமுறையையே இந்த வரிசை பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. அதைத்தான் கவிஞரும் சொல்கிறார்: “சாதாரண ஒரு தொகுப்பாக இல்லாமல், இதில் முறையான ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் இருக்கிறதென்பதை எல்லோரும் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விழையும் ஒரே ஒரு பாராட்டு.”  (போத்லெரின் கடிதம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.) வேறு விதமான வாசிப்பும் சாத்தியமே. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த விமர்சகர் ழூல் பார்பி தோரெவில்லி (Jules Barbey D’aurevilly) இந்தப் புத்தகத்தின் கட்டமைப்பில் “ஒருவித ரகசியக் கட்டடக் கலை அம்சம் இருப்பதுடன், ஆழ்ந்த சிந்தனை, சொந்த விருப்பம் இவற்றுடன் சீர்தூக்கிப்பார்த்து முடிவு செய்த திட்டம் ஒன்றும் இருக்கிறது”  என்கிறார். யோசித்துப்பார்த்தால் படைத்தலைப் பற்றியும், இருத்தலைப் பற்றியும், தத்துவார்த்தச் சிந்தனைக்கு ஒரு அறிமுகம் பற்றியும் பேசும் புத்தகமாகவும் இது தோன்றுகிறது.

ஆகவேதான் நீதிமன்றம் இதில் ஆறு கவிதைகளைத் தடை செய்த செயல் கவிஞருக்கு ஒரு அவமானமாக, மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இருந்தது. தன்னுடைய படைப்பு சிதைக்கப்பட்டுவிட்டதாக அவர் நினைத்தார். மேலும் அவருடைய தொகுப்பின் கட்டமைப்பு சிதையாமல் இருக்க, புதிதாக இன்னும் ஆறு கவிதைகளை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  தவிர, அவர் வாழ்ந்த காலத்தில் இதைவிட இன்னும் பச்சையாக எழுதப்பட்டிருந்த பல புத்தகங்கள் தப்பித்துவிட்டபோது தனக்கு மட்டும் ஏன் தண்டனை அளிக்கப்பட்டது என்பது அவருக்குப் புரியவில்லை.

இந்தக் கவிதைகளில் இழையோடும் கருத்தியலைச் சுருக்கமாகப் பார்ப்போம். கவிஞனின் பிறப்பிலிருந்து (‘ஆசீர்வாதம்’  என்ற நீண்ட கவிதை, இந்தக் கவிதை தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெறவில்லை) இந்தத் தொகுப்பு தொடங்குகிறது. அவருடைய தாயார் கவிஞனின் பிறப்பை ஒரு சாபமாகக் கருதுகிறார். ஆனால் கவிஞனின் தொடக்க வரிகள் இதோ:

“எங்களுடைய அசுத்தங்களுக்கு தெய்வீக மருந்தாகவும்-,

சக்திவாய்ந்தவர்களைக் கூடப் புனிதச் சிற்றின்பத்துக்குத் தயாராக்கும்,

மிகச் சிறந்த, மிகச் சுத்தமான சாரமாகவும்,

இன்னல்களைத் தரும் எங்கள் கடவுளே போற்றி!”

ஆகவே, இந்தக் கவிதைகளின் நாயகன் பன்முகத்தன்மை கொண்ட கவிஞனேதான். இவனுக்குக் காதலன், ஏழை, கலைஞன் என்று பல பரிமாணங்கள் உண்டு. கவிஞனின் இந்த மூன்று பரிமாணங்களின் மரணத்துடன் இந்தத் தொகுப்பு முடிவடைகிறது (கடைசிப் பகுதியின் மூன்று கவிதைகள்: காதலர்களின் மரணம், ஏழைகளின் மரணம், கலைஞர்களின் மரணம்). இந்த மரணம் தொகுப்பு முழுவதும் காலம் என்ற பணிவான சாரதியுடன் தோன்றிக்கொண்டிருக்கும் மரணம் என்ற படிமத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. இங்கே இது ஒரு ஆறுதலைப்போல, மீட்சிக்கான தேறுதலைப் போலத் தோன்றுகிறது. இதற்கு முந்தைய கவிதைகள் எதிர்பார்க்காத, தவிர்க்கப்பட முடியாத மரணத்தின் கலவரம் அளிக்கும் தோற்றங்களை முன்நிறுத்துகின்றன. (காண்க:  ‘அழுகிய சடலம்’) போத்லெர் பயன்படுத்திய சொற்களில் முக்கியமான ஒரு சொல்- spleen என்ற ஆங்கிலச் சொல்-இந்தப் பின்னணியில் அறிமுகமாகிறது. எல்லாவற்றையும் சீர்குலைத்து, வேகமாகக் கடந்து செல்லும் காலம் விளைவிக்கும் இன்னல்களினால் தாக்கப்படும் மனிதனின் மனநிலையை இந்தச் சொல் குறிக்கிறது. (இந்தச் சொல்லின் மூலத்தைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்வரும் பகுதியில் பார்க்கலாம்). மேலைநாட்டுக் கவிஞர்களிலேயே மரணத்தைக் குறியீட்டுப் படிமமாக மட்டுமே விவரிக்காமல், முதல்முறையாக மரணத்தையே தன் கவிதைகளுக்குச் சாரமாக எடுத்துக்கொண்ட கவிஞர் போத்லெர் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை,மரணம் என்பது அருவமான, சூட்சுமமான கருத்தாக்கம் அல்ல; அது எப்போதும் நம் கண் முன்னே ஒரு காட்சிப் பொருளாக இருந்துகொண்டு, மனிதனின் பிரக்ஞையின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.

அவரைச் சூழ்ந்திருக்கும் மரணத்தின் கலவரமளிக்கும் இந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்கிறார்? இதற்கு விளக்கமாக இருக்கக் கூடிய சாத்தியக்கூறு ஒன்றை‘அழுகிய சடலம்’ என்ற கவிதையில் காணலாம். 12  பத்திகள் கொண்ட இந்தக் கவிதையில் முதல் 7 பத்திகள் அழுகிய சடலம் ஒன்றை, அதாவது இறந்த பிறகு சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பொருளை விவரிக்கின்றன. இயற்கையைவிட, உயிரோட்டமுள்ள உலகத்தைவிட ‘பன் மடங்கு தன்னைப் பெருக்கிக்கொண்டேபோகும் உலகமாக’ அவர் அதை விவரிக்கிறார். 8ஆவது பத்தியில் இந்த யதார்த்தக் காட்சி மறைகிறது; நேரடியாக விவரிக்கும் கவிதை வரிகள் முற்றுப்பெறுகின்றன. அந்தக் காட்சிக்கு முழுமை அளிக்க, கவிஞர் தன் ‘நினைவால் பூர்த்திசெய்கிறார்.’ ‘சடலத்திடம் விட்டுச் சென்ற துண்டை/மீண்டும் எடுக்கும் தருணத்திற்காக நோட்டமிடும்’ பெட்டை நாயைக் கற்பனை செய்து (பத்தி 9) பயங்கர படபடப்பை நுழைக்கிறார்… சாவில் உணவைத் தேடிக்கொள்ளும் வாழ்வு! பின்னர், ‘சிதைந்துபோன அவருடைய காதல்களையும்’ எண்ணிப்பார்த்த பிறகு, மரணத்தைப் பற்றிய அவரது கலவரம் கலந்த அச்சத்தைக் கவிதை கழுவிவிட்டதைப் போல ஆகிவிடுகிறது. ஏனென்றால், இறுதியில், மீட்சி அளிக்கும் அமைதியான, உண்மையான உருவத்தை மரணம் திரும்பப் பெறுகிறது. ‘தெய்வீகச் சாரத்தை’ தக்கவைத்துக்கொள்வதற்காகத் தேவையற்றவற்றைக் கரைத்துவிடுகிறது.

தன்னுடைய தொகுப்புக்குப் முன்னுரையாக போத்லெர் எழுதியிருந்தார்:

“எல்லாவற்றிலுமிருந்து அதன் சாரத்தைக் கறந்திருக்கிறேன்

……………………………………………………………………

எனக்கு நீ அளித்தது சேறு, நான் அதில் பெற்றது தங்கம்.”

காதலும் போரும் மட்டுமே முக்கியமான கருத்துகளாக  நிலவிவந்த மேற்கத்தியக்  கவிதை உலகத்திற்கு போத்லெர் மரணத்தையும் ஒரு பிரதானக் கருத்தாகச் சேர்த்தார்.

‘தீமையின் மலர்கள்’ புத்தகத்தின் முதல் பகுதிக்கு போத்லெர் கொடுத்த தலைப்பு ‘சோக மூட்டமும் லட்சியமும்’. ஏதோவொரு லட்சியத்தைத் தொலைத்துவிட்டதைப் போல உணரும் மனித மனதிற்கும், ஆன்மாவின் வதைகளுக்கெல்லாம் ஒரு களமாக விளங்கும் உடலுக்கும் இடையே நிலவும் இறுக்கமான போராட்டத்தைக் குறிப்பிடுகிறது இந்தத் தலைப்பு. இங்கு போத்லெர் spleen என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இதன் நேரடியான பொருள் ‘மண்ணீரல்’. இந்தச் சுரப்பி மனிதனுக்குள் சோக உணர்வை சுரக்கும் உள்ளுறுப்பாகக் கருதப்பட்டதால், தன்னுடைய பரிதாப நிலையைக் குறித்துப் பிரக்ஞைகொள்ளும் மனிதனுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான வலிகளை வெளிப்படுத்தும் ஒருவித ‘சோக மூட்டம்’ என்ற விரிவான பொருளில் இந்தச் சொல் கையாளப்பட்டிருக்கிறது.

போத்லெரைப் பொறுத்தவரை, மனிதனிடம் இருக்கும் எல்லாக் களங்கங்களும் இயற்கையிடமும் இருக்கின்றன.  இயற்கையின் இருண்ட ஒவ்வொரு அம்சமும்-இரவு, பனிமூட்டம், புயல்,கடல் கொந்தளிப்பு, அழுகும் சடலம்-மனச்சோர்வுடன் இருக்கும் மனிதனின் வெவ்வேறு நிலைகளுக்கு ஒப்பாக இருக்கின்றன. இந்த ‘மரணக் கழிவுகளில்’ மூழ்கும் மனிதன்,கைவிடப்பட்டுச் சபிக்கப்பட்டுவிட்டோம் என்ற மனச்சோர்வு விளைவிக்கும் வெறுமையில் மாட்டிக்கொள்கிறான். கவிஞனுக்கும் வாசகனுக்கும் பொதுவாக இருக்கும் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதென்ற ஒரு ஒப்பந்தத்துடன் (கவிதை: வாசகனிடம்) ‘தீமையின் மலர்கள்’ தொடங்குகிறது.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளவே தீர்க்கதரிசனம் கொண்ட கவிஞர் பூமியில் தோன்றுகிறார்: “மகா சக்திகள் விதித்த கட்டளையின்படி/விரக்தியுற்ற இவ்வுலகில் கவிஞன் தோன்றுகையில்/…”(‘ஆசீர்வாதம்’ என்ற கவிதையிலிருந்து)- ‘சூரிய ஒளியில் போதை அடைந்து, காற்றுடன் விளையாடி,மேகங்களுடன் உரையாடும்’ (கவிதை: ஆசீர்வாதம்) இந்த ஜீவனால்தான் இயற்கையில் தோன்றும் லட்சிய உலகின் பிரதிபலிப்புகளை, நமக்கு எட்டாமல் புதிராக இருக்கும் இந்தத் தொடர்புகளை இனம்கண்டுகொள்ள முடியும். ஆகவே,இயற்கைக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம், வெறுப்பை ஏற்படுத்தும், சாவை நினைவூட்டும் காட்சிகளைக் கவிஞனுக்கு அளிக்கிறது இயற்கை. மறுபக்கம் குறியீடுகள் நிறைந்த பெரிய காடாக அது இருக்கிறது. ஓசைகளாலும், மணங்களாலும், வண்ணங்களாலும் ஆனது அதன் மொழி. புதிய மலர்களை வரவேற்க அது தயாராக இருக்கிறது.

சோக மூட்டத்துக்கும் லட்சிய உலகுக்கும் இடையே உள்ள இந்தப் போராட்டம், இந்த இறுக்கம் மனித மனதில் மற்றொரு போராட்டத்தைத் தோற்றுவிக்கிறது: நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள நிரந்தரப் போராட்டம். இதன் வரலாறு மூலத் தீவினையில் தொடங்கி மனிதனின் வீழ்ச்சியில் முடிகிறது.

ஆகவே, இந்த மனச்சோர்வுக்குப் பிறகு, வெல்லப்பட வேண்டிய தீமைக்குப் பிறகு, கடற்பறவை அல்பாத்ரோஸைப் போல (கவிதை-2) மனிதக் கூட்டத் திற்கு மேலே பறந்து வட்டமிடும் கவிஞனின் தோற்றத்திற்குப் பிறகு நிகழ்கிறது

மனிதனின் வீழ்ச்சி. வீழ்ச்சி, அதைத் தாண்டி உயரே செல்லும் வேட்கை- இந்த இரண்டு கருத்துகளும் இந்தப் பகுதியில் பல கவிதைகளில் காணப்படுகின்றன. இதையடுத்து மூன்று பகுதிகள் இருக்கின்றன: ‘தீமையின் மலர்கள்’ (12 கவிதைகள்), ‘புரட்சி’ (3 கவிதைகள்), ‘மது’ (5 கவிதைகள்) இறுதிப் பகுதியான ஐந்தாவது பகுதி ‘மரணம்’ என்ற தலைப்பில் 3கவிதைகளைக் கொண்டிருக்கிறது: காதலர்களின் மரணம், ஏழைகளின் மரணம், கலைஞர்களின் மரணம். முதல் ‘மரணம்’ ஆண்-பெண் இணையின் அரைகுறையான காதலை லட்சியக் காதலாக மாற்றி, அவர்களின் நிரந்தர ஐக்கியத்தைச் சாத்தியப்படுத்துகிறது. இரண்டாவது ‘மரணம்’, ஏழைகளுக்காக நல்ல, செழிப்பான ஒரு உலகத்தின் கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. படைப்பாற்றல் சக்திகளின் எல்லாத் தளைகளையும் அகற்றி, விடுதலை அளிக்கும் ‘மரணம்’ மூன்றா வதாகப் பேசப்படும் மரணம். இக்கவிதைகளை ஆய்வு செய்த விமர்சகர் ஜான் இ. ஜாக்ஸன் (John E. Jackson) சொல்கிறார்: “அறிவின் ஒளியாகவும், அதே சமயம் கண்ணாடிபோல ஒளிவுமறைவற்ற இதயங்களின் ஒளியாகவும் இருக்கும் பிரகாசத்தின் கதவுகளை மரணம் திறந்துவிடுகிறது.” மொத்தத்தில், மரணம் என்பது தப்பித்துச்செல்லும், மீட்சி பெறும் வழியாக அமைகிறது. போத்லெரின் கருத்துப்படி, கலைஞர்களுக்கு இருப்பது “ஒரே ஒரு நம்பிக்கை, விநோதமான  இருண்ட  பொது வெளி! அங்கே புதிய சூரியனைப் போல  மேலே  வட்டமிடும் மரணம்  கவிஞர்கள் மூளையில் பூக்களை மலரச் செய்கிறது.”

மேலும் இந்தப் பகுதியில் அவருடைய கவிதைகளில் வரும் பெண்கள் அவருடைய வாழ்வில் இடம்பெற்ற மூன்று காதலிகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், மூன்று வெவ்வேறு விதமான பெண்கள் போத்லெரின் உலகில் இடம்பெறுகின்றனர்: அரக்கத்தனமான பெண் (அதீத உடல்ரீதியான வேட்கையுடன், கொடுமைப்படுத்தி ஆளைக் கொல்லும் பெண்), லட்சியப் பெண் (அழகுணர்வுடன், ஆறுதலளித்து-, பாதுகாப்பளிக்கும் லட்சியக் கவிதைப் பெண்), சகோதரப் பெண் (சகோதரத்துவத்துடன் ஆணின் மறுபாதியாக இருந்து,சக்திகளின் சங்கமமாக விளங்கும் பெண்.)

மூன்றாவதாக அவர் குறிப்பிடும் பெண் அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்த மாரி த்யுப்ரன் (Marie Dubrun) என்ற நாடக நடிகை. அவளைத் தன் ‘ஆத்மாவின் உடன்பிறப்பு’  என்று அவர் கருதியதால், ‘என் சகோதரியே’ என்று பல கவிதைகளில் அவர் அழைக்கிறார். வாசகனுக்கு இது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம்; ஆனால் ‘என் சகோதரியே’ என்று விளிப்பதை‘கலையுலக உடன்பிறப்பே’ என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்; மரணத்தை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் புனித ஐக்கியத்தை உருவாக்கப் பெண்மைக்கு அவர் விடும் அழைப்பு இது. அதனால் போத்லெரின் கவிதையுலகில் ‘முறையற்ற உறவை’ நாம் காணத் தேவையில்லை.

மனிதன் ஒரு கைப்பாவை என்பதை போத்லெர் புரிந்துகொண்டிருந்தார். ஆகவே, இந்தக் கைப்பாவை இயக்கப்படுவதைப் பார்க்க விரும்பினார். கவிதை வாயிலாக (கவிதை: வாசகனிடம்) அவனுடைய உள்மனதுக்குள் இறங்கிச் சென்று, அங்கே நூலைப் பிடித்திழுக்கும் சாத்தானைக் கண்டுபிடித்து, தன்னை அடிமையாக்கும் செயல்பாட்டின் மூலத்தை ஆராய்ந்து, அதிலிருந்து விடுதலை பெறும் வழிகளைத் தேடினார். வெறுமை உணர்வை விடுத்து, அழகானவற்றின் உதவியுடன் மரணத்துக்கு அப்பால் செல்ல முயன்றார். அழகியலையும் மரணத்தையும் தங்களுக்குள்ளே கொண்டிருந்த பெண்கள் விடுதலையை நோக்கி அவரை அழைத்துச்செல்பவர்களாக இருந்தார்கள்.

‘தீமையின் மலர்கள்’ என்ற இரண்டாம் பகுதியில் (12 கவிதைகள் அடங்கியது), சிற்றின்பத்தில் ஈடுபட்டுச் சோக மூட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லும் வீண் முயற்சி பற்றியும், அதன் மூலம் தீமையை அறிந்துகொள்வது பற்றியும் (அதாவது, தன்னுடைய இன்பங்களுக்கு அடிமையாக இருப்பது) சொல்கிறார்.

இந்த அனுபவங்கள் அவரிடம் தோற்றுவிப்பதோ ஒரு புரட்சி; இதுதான் மூன்று கவிதைகள் கொண்ட மூன்றாம் பகுதியின் தலைப்பு. இது கடவுளை எதிர்க்கும் புரட்சி, சாத்தானைப் பாவைக்கூத்துக் கலைஞனாக ஏற்றுக்கொள்ளும் முடிவு.

ஐந்து கவிதைகள் அடங்கிய ‘மது’ என்ற நான்காவது பாகம், கவிஞனை மறதிக்கு இட்டுச்செல்கிறது. ஆனால் இவ்விதம் போதையில் சரணடைவது தப்பித்துச் செல்ல உதவுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் எதார்த்தத்திற்குத் திரும்பிவரும் பயணம் எளிதாக இருக்கவில்லை.

III

வசன கவிதைகள்

முதலில் மரபுக் கவிதையைப் பற்றி போத்லெர் சொல்வதைப் பார்ப்போம்: “செய்யுள் விதிகள், சந்தம் போன்றவை யாருடைய இஷ்டப்படியோ சுமத்தப்பட்ட கொடுமைகள் அல்ல; மாறாக,ஒழுங்காகச் சிந்திக்கும் மனித மனதுக்குத் தேவையான விதிகளின் தொகுப்பே அவை. அசலான கருத்துகளின் தெளிவான வெளிப்பாடுகளுக்கு இந்த மரபுக் கவிதைகளின் விதிகள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அசலான கருத்துகள் மலர்வதற்கு அவை துணையாக இருந்திருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.”

மரபுக் கவிதை வடிவிலேயே ‘தீமையின் மலர்கள்’ தொகுப்பில் புதுமையான, அழகியல் ரீதியிலான உலகை அவரால் தீர்மானிக்க முடிந்ததென்பதைப் பார்த்தோம். சில தடைகள் இருந்தும், அவருடைய படைப்பில் ஒரு பகுதியைக் கூட வெட்டிவிட முடியாத அளவுக்குத் தொடர்ந்து, சீரான ஒரு தொடக்கமும், ஒரு முடிவும் இருப்பதையும் பார்த்தோம்.

அவருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கக்கூடிய வசன நடையைப் பற்றி அவர் தன் பதிப்பாளருக்கு என்ன சொல்கிறார்? “என்னுடைய வசன கவிதைத் தொகுப்புக்குத் தலையும் கிடையாது,வாலும் கிடையாது. ஏனென்றால் அங்கே எல்லாமே மாறிமாறித் தலையாகவும் இருக்கும், வாலாகவும் இருக்கும். ஒன்றின் தலை மற்றதின் வாலாகவும் இருக்கும். நான் என்னுடைய கனவுப் பயணத்தையோ, நீங்கள் என்னுடைய கையெழுத்துப் பிரதியையோ, வாசகன் தன்னுடைய வாசிப்பையோ எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி, எந்த வரிசையிலும் அணுகலாம். இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருக்கும்; தனியாகவும் இருக்கும்.” அதாவது, தன்னுடைய செவ்விலக்கிய மரபுக் கவிதைகளைப் பற்றிச் சொன்னதற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்துகள்!

அவருடைய முதல் கவிதைப் படைப்பு, அதாவது சந்தம், செய்யுள் வடிவம் என்ற பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருவான கவிதைப் படைப்பு ஓங்கி உயர்ந்த கட்டடம் ஒன்றைப் போன்றது; பிரார்த்தனைகள், உச்சாடனங்கள் இவற்றின் தாள கதியுடன் எழுப்பப்பட்ட ஒரு ஆலயம் அது.

அடுத்து வந்த அவருடைய வசன கவிதைப் படைப்பு சிறு ரகசியங்கள், முணுமுணுப்புகளுக்கு ஒப்பானது. இந்தக் கவிதைகள் பரந்து காணப்படும், தனித்தனியாக இருக்கும் கட்டடங்கள். இவை ஒவ்வொன்றும் போத்லெர் கவனித்துப் பார்த்த ஒவ்வொன்றின் ஓவியங்கள். இந்த வசன கவிதைகளின் தொகுப்பை தன்னுடைய நண்பர் ஹுசாயுக்கு (Houssaye) அனுப்பும்போது போத்லெர் எழுதிய வரிகள் சுவாரஸ்யமானவை: “தாளமும் சந்தமும் இல்லாமலே  இசையைப் போல இருக்கும் வசன கவிதையின் அற்புதத்தை, ஓரளவு வளைந்து கொடுத்தும் ஓரளவு தனித்தனியாகவும் இருந்துகொண்டு, ஆன்மாவின் சங்கீத அசைவுகளுக்கும் கனவுலகின் ஊசலாடல்களுக்கும், மனசாட்சியின் துடிப்பு களுக்கும் இசைந்துபோகும் வசன கவிதையின் அற்புதத்தைத் தன் வாழ்க் கையின் பேராவல்களில் ஒன்றாகக் கனவு காணாதவன் இருக்க முடியுமா?”

புதிய வடிவில் எழுதப்பட்ட 50 வசன கவிதைகளும் நவீன வாழ்க்கையின் எதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றன. இதற்கு மாநகரம் ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இந்தத் தொகுப்பின் கட்டமைப்பே நகரம் ஒன்றைப்போலத் தோற்றமளிக்கிறது-உடைசல்கள், சிதறல்கள், பெருகிக்கொண்டே போவதைத் தவிர வேறு எவ்வித ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாத கட்டடக் கலை. நவீன, நகர்ப்புற கவிதைக்கு உகந்த வடிவமாக விளங்கக்கூடிய வசன கவிதைகளை எழுதுவதே அவருடைய எளிய குறிக்கோளாக இருந்தது.

‘தீமையின் மலர்கள்’ தொகுப்பிலிருந்து வசன கவிதைகள்வரை அவருடைய கருத்துகளிடையே ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது. ‘தீமையின் மலர்கள்’ தொகுப்பில் காணப்பட்ட பிரதான கருத்துகளை அதற்குப் பின் வந்த வசன கவிதைகளிலும் சந்திக்கலாம்: உலகாயத விஷயங்கள் மீதான வெறுப்பு, சோக மூட்டமென்ற தொற்றுநோய், விடுதலை அளிக்கும் இறுதியான மரணம், பெண்கள், போதை… கவிஞருக்குள்ளே பொதிந்திருக்கும் புரிபடாத உலகை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்தவல்ல வடிவமொன்றைத் தேர்ந்தெடுப்பதில் மரபுக் கவிதைகளின் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மறுத்து எழுதப்பட்ட இந்த வசன கவிதைகள் போத்லெருக்கு எந்த வகையிலும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

நேர்கோட்டு விவரணையைத் தவிர்க்கும் போத்லெரின் இந்தக் கவிதைகளில், சில உவமைகளும் விவரிப்புகளுமாக இவருடைய கவித்துவம் மிளிர்கிறது. சொற்களைக் கொண்டு ஓவியமாகத் தீட்டப்பட்ட படிமங்கள், கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், வழிதவறல்களாலும் சந்தேகங்களாலும் கேள்விகளாலும் எழுப்பப்பட்ட கட்டமைப்புகள் இவருடைய கவித்துவத்தின் முக்கிய அம்சங்கள். ஆன்மாவின் அதன் பொய்களுடன், அதன் ஏமாற்றங்களுடன் கானல்களைப் பிரதிபலிக்கும் அமைதியான கண்ணாடி மரபுக் கவிதை வடிவம் என்றால், அதே கண்ணாடியின் விரிசலைக் கற்பனை செய்யும் துணிவும் தன்னுடைய மறுபக்கத்திற்கும் உலகத்தினுடைய மறுபக்கத் திற்கும் பயணம் செய்யும் துணிவும் வசனத்திற்கு இருக்கிறது.

‘பயண அழைப்பு’ என்ற மரபுக் கவிதையின் அதே தலைப்பைக் கொண்ட வசன கவிதையில் போத்லெர் சொல்கிறார்: “கனவுகள்! ஓயாமல் கனவுகள்! ஆன்மா மென்மையானதாகவும் ஆசைகள் நிரம்பியதாகவும் ஆகஆக, கனவுகளும் சாத்தியக்கூறுகளிலிருந்து தூர விலகிப் போய்க்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விடாமல் சுரந்துகொண்டு, தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் போதைப் பொருள் ஒன்று இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட பிறகு, ஆக்கபூர்வமான மகிழ்ச்சி நிரம்பிய கணங்களை எந்த அளவுக்கு நாம் அறிந்திருக்கிறோம்? நான் தீட்டிய இந்த ஓவியத்துக்குள், உன்னைப் போலவே தோற்றமளிக்கும் இந்த ஓவியத்துக்குள் நாம் எப்போதாவது போவோமா, எப்போதாவது அதற்குள் வாழ்வோமா?”

சாத்தியமற்றவை, இழப்பு, தோல்வி இவற்றைக் குறித்த ஏக்கத்தையும், எதிர்ப்பையும் பற்றி வசன கவிதை துணிந்து பேசுகிறது.

IV

பல சிக்கல்களையும் நெருடல்களையும் தாண்டி, காலத்தினால் அழியாத சிறந்த பிரெஞ்சுப் படைப்பு ஒன்றைத் தமிழில் அளிக்க முடிந்ததென்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். என்னுடைய மொழிபெயர்ப்பைத் திரும்பத்திரும்பப் படித்து, திருத்தங்களைச் சொல்லி, நான் பிரெஞ்சில் எழுதிய பின்னுரையைத் தமிழில் மொழிபெயர்த்த வெ.ஸ்ரீராமுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் இந்த மொழிபெயர்ப்பைச் செய்ய நான் துணிந்திருக்க மாட்டேன். இந்த மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உதவிய ஆசைக்கும் ராமகிருஷ்ண னுக்கும் நன்றி. சந்தேகமில்லாமல், எந்தத் திறமையான மொழிபெயர்ப்பையும் போல் இந்த மொழிபெயர்ப்பும் ஒரு கூட்டு முயற்சியே.


[1] இங்கே  ‘சிற்றப்பா’ என்று குறிப்படப்படுவது தாயாரின் இரண்டாவது கணவர்.

[2] Le Salon de 1846. தெலாக்ர்வா, வெர்னெ, ஏங்க்ரே போன்ற ஓவியர்களைக் குறித்த விமர்சன ஆய்வு.

[3] La Fanfarlo, போத்லெர் எழுதிய ஒரே ஒரு சிறுகதை.

[4] ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. அமெரிக்க எழுத்தாளர் எட்கார் ஆலன்போவின் பல படைப்புகளை பிரெஞ்சு மொழியில் போத்லெர் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

••

 

 

நன்றி

 

க்ரியா

க்ரியா ராமகிருஷ்ணன்

 

குமரன் வளவன்

Advertisements