பதிப்பக அலமாரி – காலச்சுவடு – அருந்ததி ராய் – சின்ன விஷயங்களின் கடவுள்

பதிப்பக அலமாரி

காலச்சுவடு  அருந்ததி ராய் சின்ன விஷயங்களின் கடவுள்

பதிப்பக அலமாரி பகுதியில் இடம்பெறும் இந்தப் புத்தகத்தை இம்மாத கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட உள்ளார்கள். நமது மலைகள் பதிப்பக அலமாரிக்காக நண்பர் காலச்சுவடு கண்ணன் அனுப்பி வைத்த அருந்ததி ராய் எழுதிய சின்ன விஷயங்களின் கடவுள் என்ற இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஜி.குப்புசாமி.

புத்தகம் வேண்டுவோர் இந்த மாத இறுதியில் காலச்சுவடு பதிப்பகத்தை தொடர்பு கொண்டால் அனுப்பி வைப்பார்கள்.

நன்றி

காலச்சுவடு கண்ணன்

மற்றும்

இந்தப் புத்தகத்தை வாசிக்க போகும் வாசகர்களுக்கு

சிபிச்செல்வன்

ஆசிரியர்

•••

விரைவில் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கும் அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலிலிருந்து ஒரு பகுதி.

மெட்ராஸ் மெயில்

எனவே, கொச்சி துறைமுக முனையத்தில், கம்பியிட்ட ரயில் ஜன்னலில் தனியான எஸ்தா அமர்ந்திருந்தான். தூதர் எ. பெல்விஸ். பஃப் வைத்த ஓர் அம்மிக்கல். பச்சையாக அலையடிக்கும், கெட்டியாக நீர்புரளும், அடையும், கடற்பாசிகள் நெளியும், மிதக்கும், அடியில் எதுவுமற்ற, அடியில் கனத்த ஓர் உணர்வு. அவன் பெயர் எழுதியிருந்த டிரங்க் பெட்டி அவன் இருக்கைக்கு அடியில் இருந்தது. அவனுக்கு முன்னாலிருந்த மடக்கு மேசை நீட்டலில் தக்காளி சாண்ட்விச் டிபன் பாக்ஸும் கழுகுப் படம் போட்ட ஈகிள் ஃபிளாஸ்க்கும் இருந்தன.

அவனுக்குப்  பக்கத்தில், பச்சை செந்நீலக் காஞ்சிபுரப் பட்டும் மூக்கில் பளபளக்கும் தேனீக்கள் போல வைரக் கொத்தும் அணிந்திருந்த பெண்மணி ஒருத்தி லட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். எஸ்தாவிடம் இனிப்புப் பெட்டியை நீட்டினாள். எஸ்தா தலையை அசைத்தான். நயமாகப் புன்னகைத்தாள். அவளுடைய கனிவான கண்கள் அவள் கண்ணாடிகளுக்குப் பின்னால் கோடாக இடுங்கின. வாயில் முத்தமிடுகிறாற் போல் சத்தமெழுப்பினாள்.

“சாப்பிட்டுப் பார். ரொம்ம்ம்பத் தித்திப்பாக இருக்கும்”, என்றாள் தமிழில். “ரொம்ப மதுரம்.”

எஸ்தாவின் வயதொத்த அவளுடைய மூத்த  மகள், ஆங்கிலத்தில் “ஸ்வீட்” என்றாள்.

எஸ்தா மீண்டும் தலையை அசைத்தான். அந்தப் பெண்மணி ஆசையுடன் அவன் தலையைக் கோதி அவனது பஃபைக் கலைத்தாள். அவள் குடும்பத்தினர் (கணவனும் மூன்று பிள்ளைகளும்) ஏற்கனவே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இருக்கையெங்கும் மஞ்சள் மஞ்சளாக லட்டுத் துணுக்குகள் இறைந்திருந்தன. காலுக்கடியில் ரயில் குப்பைத் துணுக்குகள் இறைந்திருந்தன. நீலநிற இரவு விளக்கு இன்னும் போடப்படவில்லை.

சாப்பிடும்  பெண்மணியின் இளைய மகன் அதைப் போட்டான். சாப்பிடும் பெண்மணி அதை அணைத்தாள். அச்சிறுவனிடம் அதைத் தூங்கப் போகும்போதுதான் போடவேண்டுமென்றும், விழித்திருக்கும் போதல்லவென்றும் விளக்கினாள்.

ரயிலின் முதல் வகுப்பில் எல்லாமே பச்சையாக இருந்தன. இருக்கைகள் பச்சை. பெர்த்துகள் பச்சை. தரை பச்சை. சங்கிலிகள் பச்சை. கரும்பச்சை. இளம்பச்சை.

TO STOP TRAIN PULL CHAIN என்று பச்சையில் எழுதியிருந்தது.

OT POTS NIART LLUP NIAHC, எஸ்தா பச்சையில் நினைத்தான்.

ஜன்னல்  கம்பிகள் வழியாக அம்மு அவன் கையைப் பற்றினாள்.

“உன் டிக்கெட்டைப் பத்திரமாக வைத்துக்கொள்”, அம்முவின் வாய் சொன்னது. அம்முவின் – அழுகையை – அடக்கிக்கொண்டிருந்த – வாய். “வந்து சோதிப்பார்கள்.”

ரயில் ஜன்னலையொட்டியிருந்த  அம்முவின் முகத்தில் எஸ்தா  தலையை அசைத்தான். ராஹேல் ரயில்நிலைய அழுக்கெல்லாம்  சேர்ந்து குள்ளமாக நின்றுகொண்டிருந்தாள். அந்த மூவருக்கும் பொதுவான, ஆனால் தனித்தனியான ஓர் உணர்வு ஒன்றாகப் பிணைந்திருந்தது. ஒரு மனிதனை அன்பு செலுத்தியே கொன்றிருக்கிறோம்.

அது செய்தித்தாள்களில்  இல்லை.

 

நடந்த சம்பவங்களில் அம்முவின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்ள அந்த இரட்டையர்களுக்குச் சில வருடங்கள் பிடித்தன. ஸோஃபீ மோளின் சவ அடக்கத்தின்போதும், எஸ்தா அனுப்பப்பட்ட தினத்திற்கு முந்தைய நாட்களிலும் அவளுடைய வீங்கிய கண்களைப் பார்த்து, குழந்தைகளுக்கேயுரிய தன்முனைப்பான புரிதலில், அவளுடைய கஷ்டத்துக்குத் தாங்களே முழுக் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.

 

“ஸாண்ட்விச் கெட்டியாக இருக்கும்போதே சாப்பிட்டுவிடு” என்றாள் அம்மு. “கடிதம் எழுத மறந்துவிடாதே.”

அவள் பிடித்திருந்த  எஸ்தாவின் சிறிய கையின் நகங்களை ஆராய்ந்து கட்டைவிரல் நகத்தினடியிலிருந்து ஒரு  சிறிய கருப்பு அழுக்குச்  சிம்புவை அவள் நகத்தால் அகற்றினாள்.

“என் செல்லத்தை நன்றாகப் பார்த்துக்கொள். நான் வந்து அவனைக் கூட்டிச் செல்லும்வரை.”

“எப்போது அம்மு? அவனுக்காக எப்போது வருவாய்?”

“சீக்கிரமே.”

“ஆனால் எப்போது? சரியாகச் சொல்லு.”

“சீக்கிரமாகவே செல்லம். என்னால் முடிந்தளவு சீக்கிரமாக.”

“வரும் மாதத்திற்கு அடுத்தது? அம்மு?” அவ்வளவு நாட்கள் கழித்து அல்ல எஸ்தா. அதற்கு முன்பாகவே. நடைமுறைக்கு வா. உன் படிப்பு என்னாவது? என்று அம்மு சொல்வாள் என்பதற்காகவே வேண்டுமென்றே கேட்டான்.

“எனக்கு வேலை கிடைத்த உடனேயே. இங்கிருந்து சென்று ஒரு வேலை கிடைத்த உடனே.”

“ஆனால் அது நடக்கவே போவதில்லை. நெவர்!” ஒரு பீதி அலை. அடியில் எதுவுமற்ற, அடியில் கனத்த உணர்வு.

சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்மணி தவிர்க்க முடியாமல்  ஒட்டுக் கேட்டாள்.

“எவ்வளவு அழகாக அவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் பார்” என்றாள் தன் பிள்ளைகளிடம், தமிழில்.

“ஆனால் அது நடக்கப்போவதில்லை. நெவர்,” அவளது மூத்த மகள் விரோதத்துடன் பதிலளித்தாள். “N. . E. .V. . E. . R. . Never.”

அவள் ‘நெவர்’ என்று சொன்னது, வெகுகாலம் பிடிக்கப் போகிறது என்ற அர்த்தத்தில்தான். இப்போது இல்லை, சீக்கிரத்திலும் இல்லை.

எப்போதுமே நடக்கப்போவதில்லை என்ற அர்த்தத்தில் இல்லை. Not Ever அல்ல.

ஆனால் அப்படித்தான் வார்த்தைகள் வெளிவந்தன.

ஆனால் அது  நடக்கப்போவதில்லை!

Not Ever இலிருந்து Oவையும் Tயையும் அவர்கள் எடுத்துவிட்டனர்.

அவர்கள்?

அரசாங்கம்.

ஒழுங்காக  நடந்துகொள்ள அனுப்பப்படும்  இடம்.

அப்படித்தான்  அனைத்தும் நிகழ்ந்தன.

நெவர். நாட் எவர்.

அம்முவின் நெஞ்சுக்குள்ளிருந்த தூரத்து  மனிதன் இரைச்சலிடுவதை நிறுத்தியது  அவனுடைய தவறு. ஒரு லாட்ஜில், அவளுக்கருகில் யாரும் இல்லாமல், பேசுவதற்கு ஒருத்தருமில்லாமல் தனியாக அவள் இறந்து போனது அவனுடைய தவறு.

ஏனென்றால் அதைச் சொன்ன ஒருவன் அவன்தான். ஆனால் அம்மு, அது நடக்கப்போவதில்லை! நெவர்!

“டோன்ட் பி ஸில்லி, எஸ்தா. சீக்கிரம் வந்துவிடுவேன்” அம்முவின் வாய் சொன்னது. “நான் டீச்சராகிவிடுவேன். ஒரு பள்ளியைத் தொடங்குவேன். நீயும் ராஹேலும் அதில் இருப்பீர்கள்.”

“அந்தப் பள்ளியில் படிப்பதற்கு நமக்குச் செலவாகாது, ஏனென்றால் அது நம்முடையது!” அவனுடைய நிரந்தரப் பிடிவாதத்துடன் எஸ்தா கூறினான். முக்கியமான வாய்ப்புகளில் அவன் கவனம் நகர்ந்தது.

இலவச பஸ்  பயணம். இலவச சவ அடக்கம். இலவசக் கல்வி. சின்ன மனிதன். He lived in a cara-van. டம் டம்.

“நமக்கென்று சொந்த வீடு இருக்கும்” என்றாள் அம்மு.

“ஒரு சின்ன வீடு” என்றாள் ராஹேல்.

“நம்முடைய பள்ளியில் நமக்கு வகுப்பறைகளும் கரும்பலகைகளும் இருக்கும்” என்றான் எஸ்தா.

“அப்புறம் சாக்பீஸ்.”

“அப்புறம் உண்மையான டீச்சர்கள் பாடம் நடத்துவார்கள்.”

“அப்புறம் உரிய தண்டனைகளும்” என்றாள் ராஹேல்.

அவர்களுடைய  கனவுகள் உருவாக்கப்பட்டிருந்தது இத்தகைய பொருட்களால்தான். எஸ்தா திரும்ப அனுப்பப்பட்ட தினத்தன்று. சாக்பீஸ். கரும்பலகைகள். உரிய தண்டனைகள்.

தங்களைத்  தண்டிக்காமல் விடச்சொல்லி அவர்கள் கோரவேயில்லை. அவர்களுடைய தவறுகளுக்குப் பொருத்தமான தண்டனைகளைத்தான் கேட்டனர். பெட்ரூம்கள் இணைக்கப்பட்டுவரும் அலமாரிகள் போன்றவற்றையல்ல. அலமாரித் தட்டுகளுக்கிடையே வாழ்நாள் முழுக்க அலைந்துகொண்டிருக்க வேண்டியிருப்பதைப் போலல்ல.

எச்சரிப்பின்றி  ரயில் நகரத் தொடங்கியது. மிக மெதுவாக.

எஸ்தாவின் கண் பாவைகள் விரிந்தன. அம்மு பிளாட்பாரத்தில்  தொடர்ந்து நடந்துவர, அவன் நகங்கள் அவள் கைகளில் ஆழமாகப் பதிந்தன. மெட்ராஸ் மெயில் வேகம் பிடிக்க அவளது நடை ஓட்டமாக அதிகரித்தது.

Godbless my baby. My sweetheart. சீக்கிரம் வந்துவிடுவேன்.

அவள் கைகள்  அவனிடமிருந்து பிரிய, எஸ்தா உரக்க அழைத்தான். “அம்மு!”

“அம்மு! வாந்தி வருகிறாற் போலிருக்கிறது!”

எஸ்தாவின் குரல் அழுகையாக உயர்ந்தது.

வெளியூர்  பிரயாணத்திற்கென்றே விசேஷமாக வாரப்பட்டு, கலைந்து போயிருந்த பஃப்புடன் ஒரு சின்ன எல்விஸ் பெல்விஸ். கம்பளிச் சட்டையும் கூர் ஷுக்களும். அவனுக்குப் பின்னால் அவன் குரல் விட்டு விலகியது.

ரயில் நிலைய  நடைபாதையில் ராஹேல் இரண்டாக  மடிந்து வீறிட்டாள். விடாமல்  வீறிட்டாள்.

ரயில் போய்விட்டது. விளக்குப் போடப்பட்டது.

இருபத்தி  மூன்று வருடங்கள் கழித்து, ஒரு மஞ்சள் டி – ஷர்ட்டிலிருந்த கருப்பு ராஹேல் எஸ்தாவிடம் திரும்புகிறாள்.

“எஸ்தப்பாப்பிச்சாச்சன் குட்டப்பென் பீட்டர் மோன்,” அவள்  கூறுகிறாள்.

அவள் கிசுகிசுக்கிறாள்.

அவள் தன்  வாயை அசைக்கிறாள்.

அவர்களுடைய  அழகான அம்மாவின் வாய்.

நேராக நிமிர்ந்து அமர்ந்து, கைதுசெய்யப்படக் காத்துக்கொண்டிருந்த எஸ்தா தன்னுடைய விரல்களை அதற்குக் கொண்டுசெல்கிறான். அது உருவாக்கும் வார்த்தைகளைத் தொடுவதற்கு. கிசுகிசுப்பைப் பிடிக்க. அதன் வடிவத்தை அவன் விரல்கள் தொடர்கின்றன. பற்களின் தொடுகை. அவன் கை பற்றப்பட்டு முத்தமிடப்படுகிறது.

மழைச்சாரல்  தெறித்திருந்த கன்னங்களின்  குளிர்ச்சியின் மீது அந்தக் கை வைத்து அழுத்தப்பட்டது.

 

அவள் நிமிர்ந்து அமர்ந்து அவனைச் சுற்றித் தன் கைகளையிட்டு வளைத்துக்கொண்டாள். தனக்கருகில் அவனை இழுத்துக்கொண்டாள்.

வெகுநேரத்திற்கு அவர்கள் அப்படியே இருந்தனர். இருட்டில் விழித்துக்கொண்டு நிசப்தமும் வெறுமையும் சூழ்ந்திருக்க.

முதுமையல்ல. இளமையல்ல.

ஆனால் ஒரு  வாழவும் சாகவும் கூடிய  வயது.

 

யதேச்சையான  சந்திப்பில் எதிர்கொண்ட இரு அந்நியர்கள் அவர்கள்.

உயிர் தொடங்குமுன்பே  ஒருவரையொருவர் அறிந்திருந்தவர்கள்.

 

அடுத்து நடந்ததென்னவென்று யாரும் சொல்லித் தெளிவுபடுத்த அதிக மில்லை. செக்ஸைக் காதலிலிருந்து  பிரிக்கும்படி (மம்மாச்சியின் புத்தகத்தில்) எதுவுமில்லை. அல்லது உணர்ச்சிகளிலிருந்து தேவைகளை.

கவனித்தவர் யாரும் ராஹேலின் கண்களுக்குள் கவனித்ததில்லையென்பதைத் தவிர. சன்னலுக்கு வெளியே கடலை யாரும் உற்றுப் பார்த்ததில்லை. அல்லது ஆற்றில் ஒரு படகை. அல்லது  மூடுபனியில் தொப்பியணிந்து செல்லும் ஒருவரை.

கொஞ்சம் குளிராக இருக்கிறது என்பதைத் தவிர. கொஞ்சம் ஈரம். ஆனால்  மிக நிசப்தம். காற்று.

சொல்வதற்கு  என்ன இருக்கிறது?

கண்ணீர் மட்டும்தான் இருந்தது. சேர்த்து அடுக்கப்பட்ட கரண்டிகளைப் போல நிசப்தமும் வெறுமையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திக் கொண்டன என்பதைத்தான். ஒரு கடினமான, தேன்நிறத் தோளில் அரைவட்டப் பற்குறி இருந்தது என்பதைத்தான். முடிந்த பிறகு வெகுநேரத்திற்கு அவர்கள் இறுக்கமாக ஒருவரையொருவர் பற்றியிருந்தனர் என்பதைத்தான். அந்த இரவில் அவர்கள் பரிமாறிக்கொண்டது மகிழ்ச்சியையல்ல, பயங்கர சோகத்தை என்பதைத்தான்.

மீண்டும்  அவர்கள் அன்பின் விதிகளை  உடைத்திருக்கின்றனர் என்பதைத்தான். யார் நேசிக்கப்பட வேண்டுமென்று நிறுவும் விதிகளை. எவ்வாறு  நேசிக்க வேண்டும், எந்தளவிற்கு நேசிக்க வேண்டுமென்று நிறுவும் விதிகளை.

கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் கூரையில் அந்தத் தனியான டிரம்மர் மழைச்சாரலில் மேளமடித்துக் கொண்டிருந்தான். கம்பி வலைக் கதவு அறைந்தது. தொழிற்சாலைத் தரைக்குக்  குறுக்கே ஓர் எலி ஓடியது. பழைய ஊறுகாய் தொட்டிகளில்  நூலாம்படைகள் மூடியிருந்தன. ஒன்றைத் தவிர எல்லாத் தொட்டிகளும்  காலியாக இருந்தன. ஒன்றில்  மட்டும் கொஞ்சம் வெள்ளைப் புழுதி இறுகியிருந்தது. அந்த பார் நாந்தையின் எலும்புப் புழுதி. வெகுகாலத்திற்கு முன்பு இறந்தது. ஊறுகாயிடப்பட்ட ஆந்தை.

அந்த ஸோஃபீ  மோளின் கேள்விக்கான பதில் : சாக்கோ, வயதான பறவைகள் எங்கே சென்று இறக்கும்? ஏன் இறந்துபோன பறவைகள் வானத்திலிருந்து கற்களைப் போல விழுவதில்லை?

அவள் வந்த அன்று மாலை கேட்டாள். அவள் பேபி கொச்சம்மாவின் அலங்காரக் குளத்தின் விளிம்பில் நின்று கொண்டு, வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பருந்துகளைப் பார்த்தபடி கேட்டாள்.

ஸோஃபீ மோள். தொப்பியணிந்த, பெல்பாட்டம் அணிந்த, ஆரம்பத்திலிருந்தே நேசிக்கப்பட்டு வந்த பெண்.

மார்கரெட் கொச்சம்மா (இருட்டின் இதயத்துக்கு  நீங்கள் பயணம் செய்யும்போது (ஆ) யாருக்கும் எதுவும் நிகழலாம் என்று அவளுக்குத் தெரிந்திருந்தால்) ஸோஃபீ மோள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளுக்காக அவளைக் கூப்பிட்டாள். யானைக்கால், மலேரியா, பேதி. துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்காதிருக்க முற்காப்புப் பண்டுவம் ஏதும் அவளிடம் இல்லை.

டின்னருக்கான  நேரம்.

அவளை அழைக்க வந்த எஸ்தாவிடம், “டின்னர் இல்லை. இந்த நேரத்தில் சாப்பிடுவது Supper. ஸில்லி,” என்றாள்.

அந்த சப்பர் ஸில்லியில், சிறுவர்கள் தனியாக ஒரு குட்டை மேஜையில் அமர்ந்தனர். பெரியவர்களுக்கு முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்த ஸோஃபீ மோள் உணவு வகைகளைப் பார்த்து அருவருப் பான முகசேஷ்டைகள் செய்தாள். பாதி மென்ற, பாதி கடித்த விஷயங்களை நாக்கில் வைத்து, வாந்தியெடுத்ததைப் போலக் காட்டினாள். ஒவ்வொரு கவளத்திற்கும் அவள் செய்து காட்டிய சேஷ்டைகளை அவளுடைய மைத்துனியும் மைத்துனனும் வெகுவாக ரசித்தனர்.

அதையே ராஹேல் செய்து காட்டியபோது அம்மு, அவளைப்  பார்த்துவிட்டுப் படுக்கையறைக்கு இழுத்துச் சென்றாள்.

 

அம்மு அவளுடைய  குறும்புப் பெண்ணைக் கட்டிலில் போட்டுவிட்டு விளக்கையணைத்தாள். அவளுடைய குட்நைட் முத்தம் ராஹேலின் கன்னத்தை ஈரமாக்கவில்லை. உண்மையில் அவள் கோபமாக இல்லையென்பதை ராஹேலால் சொல்ல முடியும்.

“நீ கோபமாக இல்லை, அம்மு.” ஒரு சந்தோஷக் கிசுகிசுப்பு. அவள் அம்மா அவளைக் கொஞ்சம் அதிகமாகவே விரும்புகிறாள்.

“இல்லை” அம்மு அவளை மீண்டும் முத்தமிட்டாள். “குட்நைட், ஸ்வீட் ஹார்ட். காட்ப்ளெஸ்.”

“குட்நைட் அம்மு. எஸ்தாவைச் சீக்கிரம் அனுப்பு.”

அம்மு கிளம்ப, அவளுடைய மகள் மீண்டும் ரகசியமாகக் கூப்பிடுவதைக் கேட்டாள்.

“அம்மு!”

“என்ன?”

“நாமிரண்டு பேரும் ஒரே ரத்தம். நீயும் நானும்.”

அந்த இருட்டில்  அம்மு, படுக்கையறைக் கதவில் சாய்ந்தாள். அந்த வெள்ளைக்காரச் சிறுமியும் அவளுடைய தாயும் மட்டும்தான் வெளிச்சத்தின் ஒரே ஆதாரம் போலப் பேச்சு சுற்றிக்கொண்டிருந்த உணவு மேஜைக்குத் திரும்ப அவளுக்கு ஆயாசமாக இருந்தது. இன்னும் ஒரேயொரு வார்த்தையைக் கேட்டால்கூடச் செத்துப்போய்விடுவோமென்று, பொல்லென்று உதிர்ந்துபோய்விடுவோமென்றிருந்தது. இன்னும் கூடுதலாக ஒரு நிமிடத்திற்குச் சாக்கோவின் பெருமிதமிக்க, டென்னிஸ் – கோப்பையை வென்ற பெருமிதச் சிரிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தால். அல்லது மம்மாச்சியிடமிருந்து வெளிவரும் செக்ஸுவல் பொறாமையை அல்லது பேபி கொச்சம்மாவின் பேச்சில் மிகக் கவனமாக அம்முவையும் அவள் பிள்ளைகளையும் ஒதுக்கி, அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கும் பாவனையை.

இருட்டில் கதவில் சாய்ந்துகொண்டிருக்கையில், அவளுடைய கனவு, பகல் துர்க்கனவு அவளுக்குள் சுழன்று, கடலிலிருந்து தண்ணீர் மடிப்பாக எழுந்து அலையாக உருவாவதைப் போல எழும்பியதை உணர்ந்தாள். அந்த இனிமையான உப்பான சருமமும் மலைப்பாங்கான கடற்கரையின் நிழலில் துருத்தியிருக்கும் முகடெனத் திடீரென்று முடிந்த தோள்களும் கொண்ட, ஒரே கரம் கொண்ட மனிதன் அவளை நோக்கி நடந்து வந்தான்.

யார் அவன்?

யாராக அவன் இருக்க முடியும்?

தோல்விகளின் கடவுள்.

சின்ன விஷயங்களின்  கடவுள்.

சிலிர்ப்பின்  கடவுள். திடீர் புன்னகைகளின் கடவுள்.

ஒரே நேரத்தில்  ஒரு விஷயத்தை மட்டுமே அவனால் செய்ய முடியும்.

அவளை அவன் தொட்டால், அவளிடம் அவனால் பேச முடியாது. அவளை அவன் காதலித்தால் அவனால் அவளை விட்டு விலக முடியாது. அவன் பேசினால் அவனால் கேட்க முடியாது. அவன் போராடினால் அவனால் ஜெயிக்க முடியாது.

அவனுக்காக அம்மு ஏங்கினாள். அவள் உடல் முழுக்க அவனுக்காக வலியெடுத்தாள்.

அவள் உணவு மேசைக்குத் திரும்பினாள்.