கவிதை – மயூரா ரத்தினசாமி கவிதைகள்

மயூரா ரத்தினசாமி கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

ஒவ்வொரு இரவிலும் அவன் பூஜ்யங்களை சுமந்து வீடு திரும்புகிறான். பூஜ்யங்கள் சக்கர வடிவிலும், காலில் பிணைக்கப்பட்ட இரும்புகுண்டு வடிவிலும், சிலவேளை சோப்புநுரைக்குமிழ் வடிவிலும் இருந்தாலும் வீடு எல்லாவற்றையும் பூஜ்யம் என்றே சொல்கிறது. பூஜ்யங்களை ஒருவரும் களவுகொள்ள விரும்பாததால் அவற்றை அவன் வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டு நுழைகிறான். சக்கர பூஜ்யங்கள் குழந்தைகளின் பெருவிருப்பமான விளையாட்டுப் பொருளாகவுள்ளது. பூஜ்யங்களால் தொடுக்கப்பட்ட சங்கிலியில் அவனை கட்டிப்போட முனைகிறது வீடு. ஒவ்வொருநாளும் வீடுதிரும்புதல் கட்டாயமாவென யோசித்தகாலையில் பூஜ்யங்களின்றி குழந்தைகள் விசனப்பட நேரிடுமென்று அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். பூஜ்யங்களுக்கு முன் நிலைநாட்டி நிமிர்வதற்கு அவனுக்கு சின்னஞ்சிறிய தீக்குச்சி வடிவில் ஒரே ஓர் எண் கிடைத்தால் போதும். அவன் தேடிக்கொண்டிருக்கிறான்.

——

புவியீர்ப்பு விசையை செயலிழக்கச் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. படிப்படியாக மக்கள் பீதியடையாதபடிக்கு மெல்லமெல்ல அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதல் நாள் அனைவரும் எடை குறைந்திருப்பதாக உணர்ந்தார்கள். உடல் இலகுவாக இருப்பதாகவும் உடலைச்சுமந்து  திரியவேண்டியதில்லையெனவும் வயிறு பெருத்த ஆசாமிகள் சொல்லிக்கொண்டனர். உடல் இலகுவாக இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறியென்று ஒருவர் எழுதிய கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டது. அரசாங்கம் அவரை இதுபோல் இன்னும்பல எழுதும்படி கேட்டுக்கொண்டதில் அதிகாரிகள் அவரிடம் மரியாதை கொண்டனர்.

மக்கள் நிலத்திலிருந்து இரண்டடி மேலே மிதக்கின்றனர். எப்போதும் மிதப்புதான்; கூடவே அவர்கள் கழித்த மலமும் மூத்திரமும்.  மிதப்பது ஆரம்பத்தில் சுகமாக இருக்கிறது. தேசம் மிதக்கிறது. யாரும் நிலத்தில் இல்லை. நிலத்தில் வசிக்காத மக்களுக்கு நிலமெதற்கு? ஒப்பந்தத்தின்படி மண் அகற்றப்பட்டது; மலைகள் அகற்றப்பட்டன; நதிகள் நிரவப்பட்டது. ஒப்பந்தம் வெற்றிபெற்றதாக உச்சிமாநாட்டுச் செய்தி கூறியது.

—-

ஒரு எல்.ஐ.சி. ஏஜென்ட் கவிதை எழுதுகிறான்

வேறொரு கவிஞன் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக இருக்கிறான்

சினிமா பாடலாசிரியன் கவிதை எழுதுகிறான்

வேறொரு கவிஞன் சினிமா பாடல் எழுதுகிறான்.

மட்டுமொரு கவிஞன் எண்ணைக்கடையில் வேலையிலிருக்கிறான்.

கவிஞர்கள் வேறுவேறு வேலை பார்க்கிறார்கள், சும்மாயுமிருக்கிறார்கள்

வேறுவேலைக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை.

—-

Advertisements