கவிதை பைசால் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

வானத்தை எழுதுவதில் உள்ள சிரமம்

 

ஆயிரம் தாள்களை இணைத்து

அதில் வானம் என்றெழுதி

ஒரு கவிதையினூடாக வானத்தை சற்று அசைத்து

இடமாற்றம் செய்ய முயலுகிறேன்.

வானத்தை எழுதுவதில் உள்ள சிரமம் அதிகரிக்கிறது

 

இதில் ஒரு சிறப்பு இருக்கிறது

என்னவென்றால்

வானம் தாள்களில் தங்கிவிடும்போது

நட்சத்திரங்கள் தோன்றி மறைவது,

நட்சத்திரங்களை தொடுவதற்கு கைகளை நீட்டிக் கொண்டு சென்றால்

வானத்திற்குள் தலைகீழாக நான் விழுந்துவிடுவது,

இருட்டியிருக்கும் மழை மேகத்திற்குள்

விவசாயிகள் சுற்றித்திரிவது.

 

இன்று பகல் மழை பெய்யாதிருக்க

இருட்டிய மேகங்களை தாள்களின் வேறொரு மூலையில்

கொண்டுபோய் வைத்து எழுதிவிடுகிறேன்

தாள்களில் குறித்த மூலையில் குறித்த நேரத்தில்

அடை மழை பெய்யத் தொடங்கியது.

 

சில நிமிடங்களின் பின்

மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது

வெய்யிலைக் கொண்டுபோய் எழுத கொஞ்சமும் இடமில்லை.

தாள்கள் முழுவதும் ஈரமாகின

‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று

கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்

எனக்குள் இருந்த வாசகன்

 

*

தேனீர் இடைவேளை 

 

தேனீர் இடைவேளை

அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறேன்

வழமையாக என்னுடன் தேனீர்க் கடைவரை

நடந்து வரும் அவளும் இன்று வேலைக்கு வரவில்லை.

இருந்தாலும்

என்னுடன் அவள் நிழல் வீதியைக் கடக்கிறது.

 

எனக்கு முன்னரே

அவள் தேனீர்க் கோப்பையை நெருங்கிவிட்டாள்.

இங்கு நீங்கள் நிழலை அவள் என்று வாசியுங்கள்.

 

தேனீரிலிருந்து பறக்கும் ஆவியுடன் உலவும் பேய்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றாள்

கடைக்காரன் என் கவிதையை ஒரு நாளும் வாசிக்கவில்லை

அவளைப் பற்றி என்னிடம் விசாரிக்கின்றான்.

 

நான் அவளைக் காதலிக்கவில்லை

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்பவள்

என்று பதில் கூறிவிட்டுத் திரும்பும் போது

என் நிழலை மிதித்துக்கொண்டு போகிறது

ஒரு பெரிய லொறி.

 

,

 

புத்தகப் பைககுள் மரங்களைக் கொண்டுபோனவன்

 

என் மகன்

பாடசாலைப் புத்தகத்திற்குள் ஒழித்துவைத்த கவிதையில்

பெரிய வேர் ஊன்றிய மரங்கள் இருக்கின்றன.

 

காற்று பலமாக வீசத் தொடங்கியது

என் மகன் படிக்கும் முன்பள்ளிப் பாடசாலையை நோக்கி

வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்.

காற்று மரங்களை வீழ்த்திவிடுமோ என்ற பயம்

எனக்குள் அதிகரிக்கின்றது.

 

ஜன்னல் சீலை

படபடவென அடிக்கின்றது.

கதவடியில் விரித்துவைத்திருந்த குடை

குத்திக்கரணம் போடுகின்றது.

 

கவிதையை என் மகன் வாசிக்கின்றான் என்பது

அவன் ஆசிரியைக்குத் தெரியாது.

 

நான் வகுப்பறைக்குள் நுழைகின்றேன்

என்னைக் கண்டு

மகன் கவிதை வாசிப்பதை நிறுத்திவிடுகின்றான்

கவிதையில் இருந்த மரங்கள்

ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டன

அவசர அவசரமாக

ஜன்னல் சீலையை சரி செய்கின்றது

குடை இழுகிப்போய் மேசை அருகே நிற்கின்றது

அங்கிருந்த மின்விசிறியை பார்த்துக்கொண்டிருக்கின்றாள் அவள்

 

 

 

 

 

 

Advertisements