பதிப்பக அலமாரி – சந்தியா பதிப்பகம் – நர்மதைக் கரையில் நடைபெற்ற உடன்கட்டையேறும் நிகழ்ச்சி

பதிப்பக அலமாரி

சந்தியா பதிப்பகம் வெளியிடாக வெளி வர உள்ள இந்தப் புத்தகத்திலிருந்து முக்கியமான ஒரு பகுதியை மலைகள் இதழுக்காக இங்கே கொடுக்கப்படுகிறது. இந்த புத்தகம் வெளிவந்தபிறகு மீதியை அச்சில் வாசிக்கலாம்.

நன்றி

சந்தியா பதிப்பக நண்பர் நடராஜன்

 

எனது பயணங்களும் மீள் நினைவுகளும்

முதல் தொகுதி

வில்லியம் ஸ்லீமென்

தமிழில்

பேராசிரியர் சிவ.முருகேசன்

 

 

 

 

 

 

 

 

 

 

4

நர்மதைக் கரையில்  நடைபெற்ற உடன்கட்டையேறும் நிகழ்ச்சி

ஒரு நாள் மாலை நாங்கள் நர்மதையாற்றின் கரையில் அமைந்துள்ள கோபால்பூர் என்ற கிராமத்திற்குச் சென்றோம். இது பேடா காட்டிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. வழியில் திருவிழாவைக் காணச் சென்றுகொண்டிருக்கும் பெண்மணி களையும் சிறுமிகளையும் நாங்கள் சந்தித்தோம். அவர்களது ஆடை முழங்கால் வரைதான் இருந்தது; இன்னும் சொல்லப் போனால் தொடைப்பகுதி வரை கால்கள் வெளியே தெரிந்தன. நாங்கள் கடந்துசெல்வதைப் பார்த்துவிட்டு தங்களது முகங்களை மட்டும் அவர்கள் மேலாடைகளால் மூடிக் கொண்டனர். “கடவுளே! இவ்வளவு கேவலமாக இவர்களால் எப்படி நடந்துகொள்ள முடிகிறது” என்று, நாங்கள் அவர்களைப் பார்ப்பதைக் குறித்து வெட்கப்பட்டுக் கொண்டார்கள் அந்தப் பெண்மணிகள். அந்தப் பெண்கள் விவசாயம் செய்பவர்கள். புனித நீராட ஆற்றுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்.1

கோபால்பூரில் சில அழகான கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் உடன்கட்டையேறிய பெண்களுக்காக, அவர்கள் தங்களைத் தீக்கிரையாக்கிக்கொண்ட அதே இடங்களிலேயே கட்டப்பட்டவை. ஒரு கோயில் சமீபத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட, ஒரு மாறுபட்ட பெண்ணின் சாம்பலின் மீது கட்டப் பட்டிருந்தது. அந்தப் பெண் 1829-ஆம் ஆண்டு என் முன்னிலையிலேயே தன்னை எரித்துக்கொண்டவள். இத்தகைய கோயில்கள் கட்டப்படுவதை நான் தடைசெய்திருந்தேன்; ஆனால் நான் இல்லாத சமயத்தில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த மேஜர் லோ அனுமதியளித்துவிட்டார். உடன்கட்டை ஏறுதல் என்பது இப்போது முற்றிலும் நமது நிர்வாகப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றை எந்த ஐரோப்பியரும் பார்க்கவோ, விவரிக்கவோ முடியாது. ஆனால் மேலே சொல்லப் பட்ட நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதை இப்போது கூறுகிறேன்.

1829-ஆம் ஆண்டு நவம்பர்  29-ஆம் நாள் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க  ஒரு வயோதிகப் பெண் தன்னை எரித்துக்கொண்டு, சாம்பலாகி தன் கணவனின் சாம்பலோடு கலந்துவிட்டாள். அவள் கணவன் நான்கு நாட்களுக்கு முன் இறந்துவிட்டான். அந்தப் பெண்மணி தீக்கிரையான அதே இடத்தில்தான் அவனது உடல் எரிக்கப்பட்டது. 1828-ஆம் ஆண்டு ஜபல்பூர் மாவட்டத்தின் சிவில் நிர்வாகப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டவுடன் உடன் கட்டை ஏறுவதைத் தடைசெய்தேன். அந்த நிகழ்ச்சிக்கு யாரும் உதவக் கூடாது என்றும் உத்தரவிட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு ஓர் அவுன்ஸ் விறகு கொடுத்தால்கூட அந்தச் செயல் தண்டனைக் குரியது என அறிவித்தேன். ஒரு பெண் உடன்கட்டை ஏறினால், இறந்த அவள் கணவனின் உடலை எரிக்க யார் விறகு கொண்டு வந்தாரோ அவர் தண்டிக்கப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தேன். அதனால் கொண்டு வரப்படும் விறகு இறந்துபோன மனிதனின் உடலை எரிப்பதற்குத்தான் போதுமானதாக இருக்கும். உடன்கட்டை ஏற, விருப்பப்படும் பெண் தானே விறகைக் கொண்டு வரவேண்டும். 1829-ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க் கிழமை ஒரு மதிப்புமிக்க பிராமணக் குடும்பத்திலிருந்து எனக்கு ஒரு விண்ணப்பக் கடிதம் வந்தது. உம்மத் சிங் உபாதியா என்பவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் எரியூட்டப்படும்போது, விதவையான அவரின் மனைவி உடன்கட்டையேற விரும்பு வதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. அனுமதியளிக்க நான் மறுத்துவிட்டேன். உடன்கட்டையேற யார் உதவினாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அப்படி எதுவும் நடந்து விடாமல் தடுக்க ஒரு காவலரையும் அனுப்பி வைத்தேன். அந்த விதவை நதிநீரின் விளிம்பில் அமர்ந்திருந்தாள்; சாப்பிடவுமில்லை, நீர் அருந்தவுமில்லை. மறுநாள் எட்டடி நீளம், எட்டடி அகலம், மூன்று அல்லது நான்கடி ஆழமுள்ள ஒரு சதுரமான குழியில், இறந்துபோன உம்மத் சிங் உபாதியாவின் உடல் தகனம் செய்யப் பட்டது. உடன்கட்டை ஏறுவதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். மாலைக்குள் உறவினரல்லாதோர் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். நான் உடன்கட்டை ஏறுவதற்கு அனுமதி கொடுப்பதாக இல்லை. ஒன்று அந்தப்பெண் உடன்கட்டை ஏற நான் அனுமதிக்கவேண்டும் அல்லது அவள் தங்களுடன் வீட்டிற்கு வரவேண்டும்; அதுவரை நாங்கள் சாப்பிடப்போவதில்லையென்று குடும்பத்தினர் உறுதியுடன் இருந்தனர். அப்பெண்ணின் மகன்களும் பேரப்பிள்ளைகளும் வேறு சில உறவினர்களும் அவள் அருகிலேயே தங்கியிருந்தனர். மற்ற உறவினர்கள் எனது இல்லத்தைச் சூழ்ந்துகொண்டனர். ஒரு சிலர் உடன்கட்டை ஏற அவளை அனுமதிக்குமாறு என்னிடம் வாதிட்டனர்; வேறுசிலர் அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு அப்பெண்ணை வற்புறுத்தினர். அந்தப் பெண்மணி நர்மதை நதிக்கரையில் ஒரு பாறையின்மீது அமர்ந்திருந்தார். பகல்நேர சூரியவெப்பத்தைப் பற்றியோ, இரவு நேரக் குளிரைப் பற்றியோ அவள் கவலைப்படவில்லை; உடலில் ஒரு மெல்லிய துணியை மட்டும் சுற்றியிருந்தாள். வியாழக்கிழமையன்று, தனது நிலையை உறுதிசெய்யும் வண்ணம் அப்பெண் தலையில் ஒரு செந்நிறத் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டு, தனது கை வளையல்கள் அனைத்தையும் உடைத்துவிட்டாள். இவ்வாறு செய்பவள் இறந்துபோனதாகக் கருதப்பட்டு, சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவாள். இதற்கு மேலும் உயிர் வாழ விரும்பினால், அவள் தனது குடும்பத்திற்குச் செல்ல முடியாது. அவளின் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் அவளுடனேயே இருந்தனர். இதற்கு மேலும் அவளுக்கு உடன்கட்டை ஏற அனுமதி கொடுக்காவிட்டால் அவள் பட்டினியால் இறந்துவிடுவாள் என உணர்ந்தேன். அதனால் அவளது குடும்பத்திற்கு அகௌரவம் ஏற்படும். எனது சதித்தடை உத்தரவுக்கு அதுவரை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நானும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

28ஆம் நாள் சனிக்கிழமை  என் குதிரையின்மீது பத்துமைல் சவாரி செய்து  அந்த விதவைப் பெண் இருக்கும் இடத்தை  அடைந்தேன். தலையில் செந்நிறத் தலைப்பாகையைச் சுற்றிக் கொண்டு (இதற்கு ‘தஜா’ என்று பெயர்) அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே வைக்கப்பட்டிருந்த பித்தளைத் தட்டில் அரிசியும் பூக்களும் இருந்தன. அவளுடைய கரங்களில் தேங்காயை வைத்திருந்தாள். தனது சாம்பல், தன் கணவனின் சாம்பலுடன் கலக்க வேண்டுமென்றும், அதற்காக எனது அனுமதியைப் பெறக் காத்துக்கொண்டிருப்பதாகவும், அனுமதி கிடைக்கும் வரை கடவுள் தனது உயிரைக் காப்பார் என்றும் மெல்லிய குரலில் பேசினாள். தனது ஆன்மா கடந்த ஐந்து நாட்களாக சூர்யபகவானது அருகிலுள்ள தன் கணவனுக்கு அருகிலிருப்ப தாகவும், எஞ்சிய உடல் மட்டுமே இங்கிருப்பதாகவும், நான் தன்னை இவ்வாறு நீண்ட நாட்கள் துயரமடையச் செய்யமாட்டேன் என்று நம்புவதாகவும் அந்தப் பெண் மேலும் குறிப்பிட்டாள்.

“உங்களைத் துயரமடையச் செய்வது எனது வேலையல்ல; மாறாக  உங்களைக் காப்பாற்றுவதே எனது கடமை. நீங்கள்  உங்களது முடிவை மாற்றிக்கொண்டு வாழவேண்டும். உங்களது குடும்பத்தார்களுக்குக் கொலைகாரர்கள் என்ற பழி வந்துவிடக் கூடாது” என்று நான் அப்பெண்ணிடம் கூறினேன். “அவர்களை யாரும் அவ்வாறு நினைக்கமாட்டார்கள். நல்ல குழந்தை களாகவே அவர்கள் இதுவரை என்னிடம் நடந்துகொண்டார்கள். நான் வாழவேண்டுமென அவர்கள் எவ்வளவோ என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். நான் வாழ்ந்தால் அவர்கள் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் எனக்கு அவர்களிடமுள்ள கடமைகள் யாவும் முடிந்துவிட்டன. நான் அவர்களை தங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். நான் என் கணவர் உம்மத்சிங் உபாதியா2 அவர்களிடம் சென்று சேரவேண்டும். நான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட சிதையில் இதுவரை மூன்று முறை உடன்கட்டை ஏறியுள்ளேன் என்று பதிலுரைத்தாள் அந்தப் பெண்மணி.

தனது நீண்ட நாள் வாழ்க்கையில் அப்போதுதான் அவள் முதன்முறையாகத் தன் கணவனது பெயரைச் சொன்னாள். இந்தியாவில் பெண்கள் தங்கள் கணவர் பெயரைச் சொல்வதில்லை. அவ்வாறு சொல்வது கணவனுக்கு மரியாதைக் குறைவு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஓர் ஐரோப்பியர், ஒரு பெண்ணிடம் அவளின் கணவர் பெயரைக் கேட்டால், அவளது நிலைமை மிகவும் சங்கடத்திற்குள்ளாகிவிடும். பக்கத்திலுள்ளவர்கள் தனது உதவிக்கு வரமாட்டார்களா என எதிர்பார்ப்பார்கள். நீதி மன்றங்களுக்கோ, அல்லது கணவர் பெயரைச் சொல்ல வேண்டிய வேறு இடத்திற்கோ பெண்கள் சென்றால் அவர்கள் உதவிக்குத் தங்களது பிள்ளைகளையோ அல்லது வேறு நண்பர்களையோ அழைத்துச் செல்வார்கள். இப்படியிருக்கும்போது மேற்குறிப்பிட்ட அந்த விதவை தன் கணவனின் பெயரை அழுத்தமாகக் கூறியதைக் கேட்டு சுற்றியிருந்த அனைவரும், அவள் சாவதற்கு முடிவுசெய்து விட்டாள் என்று உறுதியாக நம்பினார்கள்.

“நான் அரசாங்கம் கொடுத்த அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டேன். எனது பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு இனாமாக அரசாங்கம் நிலம் வழங்கியுள்ளது. என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் இல்லை. நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் ஏதும் பாக்கியில்லை. எனது பிராணன் உத்தம்சிங் உபாதியாவிடம் உள்ளது. எனது சாம்பல் அவரது சாம்பலுடன் கலக்கவேண்டும்” என்று மீண்டும் கூறினாள் அப்பெண்.

சூரியனை நோக்கி அவள் கூறினாள்: “நான் இருவரையும் அங்கு பார்க்கிறேன். மணமேடையில் அவரைப் பார்க்கிறேன். நான் முடிவுசெய்துவிட்டேன் என் ஆன்மாவும், என் கணவனது ஆன்மாவும் சுவர்க்கத்தில் மணமேடையில் இருப்பதாக.’’

நான் அவளை சமாதானப்படுத்த மேலும் எவ்வளவோ கூறிப் பார்த்தேன். அவளது குடும்பத்திற்கு அதுவரை கிடைத்து வந்த சலுகைகள், அவள் வாழ்ந்தால் தொடர்ந்து கிடைத்து வரும் என உறுதியளித்தேன். அவளது முன்னோர்களுக்குக் கட்டிய நினைவுக் கோயில்கள் அனைத்தையும் இடித்து விடப்போவதாக அச்சுறுத்தினேன். ஏனெனில் அவையே மேலும் பல விதவைப் பெண்களை உடன்கட்டையேறத் தூண்டுகின்றன. அவள் உயிர் வாழ விருப்பம் தெரிவித்தால் அவள் நினைவாக அழகிய கோயி லொன்று எழுப்பப்படும் என்று அவளை ஊக்கப்படுத்திப் பார்த்தேன். அவள் புன்முறுவல் பூத்து என் கையைப் பிடித்துக் கொண்டு கூறினாள்: “எனது நாடித்துடிப்பு முன்பே நின்றுவிட்டது. எனது ஆன்மா என்னைவிட்டுப் போய்விட்டது. எஞ்சியிருப்பது இந்த உடல் மட்டுமே. நான் என் கணவரது சாம்பலோடு கலக்க ஆசைப்படுகிறேன். எரிவதால் எனது உடலுக்கு எந்த வேதனையும் ஏற்படாது. உங்களுக்கு நிரூபணம் தேவையென்றால், நெருப்பைக் கொண்டுவரச் சொல்லுங்கள். எனது கையை எரித்துக் காட்டுகிறேன்.” நான் அவளது நாடியைப் பிடித்துப் பார்க்கவில்லை. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு ‘நாடித்துடிப்பு இல்லை’ என்று தெரிவித்தனர். எரிக்கப்படுவதால் அவளுக்கு எந்த வலியும் தெரியாது என்று உள்ளூர்வாசிகள் அனைவரும் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணை இனிக் காப்பாற்ற முடியாது  என முடிவு செய்த நான், உடன்கட்டை ஏறுவதற்கு அனுமதியளித்து, அதற் கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு  உறவினர்களிடம் கூறினேன். குடும்பத்தில் வேறு யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யவேண்டுமென்று வலியுறுத்தினேன். குடும்பத்தினர் ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டு என்னிடம் கொடுத்தனர். எனது அனுமதியை அப்பெண்ணிடம் தெரிவித்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்த அவள் எனக்கு நன்றி தெரிவித்தாள். குளியல் போன்ற சடங்குகள் முடிந்தவுடன் எரிகுழியில் விறகு போன்ற எரிபொருள்கள் நிரப்பப்பட்டன. குளித்து முடித்தவுடன் அந்த வயதான பெண் தனக்குத் தாம்பூலம் தரும்படி கேட்டாள். அதை மென்று தின்றவுடன் எழுந்து தனது ஒரு கரத்தைத் தன் மகனின் தோள்மீது வைத்துக்கொண்டாள்; மற்றொரு கரத்தைத் தன் நெருங்கிய உறவினனின் தோள்மீது வைத்துக்கொண்டாள். ஐந்து தப்படி தூரத்திற்கு வேறு யாரும் அருகில் சென்றுவிடாதபடி நான் காவலர்களை நிறுத்தியிருந்தேன். அவள் எழுந்தவுடன் எரிகுழியில் தீ மூட்டப்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அவளுக்கும் நெருப்புக்கும் இடையே 150 கஜ தூரம் இருக்கும். அந்தப் பெண் அமைதியாகவும் மகிழ்ச்சியான தோற்றத்துடனும் இருந்தாள். சற்று நின்று வானத்தைப் பார்த்து “என் கணவரே, ஏன் உங்களை நெருங்கவிடாமல் என்னை ஐந்து நாட்கள் வைத்திருந்தனர்” எனக் கேட்டாள். அவள் காவலர்கள் நிற்குமிடம் வந்தவுடன், அவளைத் தாங்கி வந்தவர்கள் விலகிக்கொண்டனர். பின் அவள் தீக்குழியை ஒரு முறை வலம் வந்தாள்; வழிபாட்டு மந்திரங்களை முணுமுணுத்த வண்ணம் பூக்களைத் தீயில் போட்டாள். நிதானமாக நடந்து தீயின் விளம்பிற்கு வந்தாள்; பின் எரியும் தீயின் மையப்பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டாள். எந்தக் கூச்சலும் போடவில்லை; வலியின் அடையாளம் எதையும் காட்டவில்லை. தீ அவளை விழுங்கியது.

சில மங்கள வாத்தியங்கள் முழங்கின. இது வழக்கமானதுதான். இது அவள் கூச்சல் போட்டால் அது வெளியே கேட்காமல் இருப்பதற்காக அல்ல; மாறாக அவள் கடைசியாகச் சொல்வதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு. இந்தக் கடைசி வார்த்தைகள் மந்திர வார்த்தைகள். மற்றவர்கள் கேட்டால் அவர் களுக்கு அவை துயரத்தை உண்டாக்கலாம். அவளின் கணவன் இறந்தது செவ்வாய்க்கிழமை. புதன்கிழமை மாலை வரை அந்த விதவைப் பெண் தாம்பூலத்தைத் தவிர வேறு எதையும் சுவைக்க வில்லை. புதன்கிழமையிலிருந்து அதையும் நிறுத்திவிட்டாள். செவ்வாய்க்கிழமையிலிருந்து அவள் தண்ணீர்கூட அருந்தவில்லை. அவள் அணிந்திருந்த அதே ஆடையுடனேயே அவள் தீயில் இறங்கினாள். ஆனால் அந்த ஆடை தூய்மை கெட்டுவிடாமல் இருக்க அவ்வப்போது ஆற்று நீரில் நனைக்கப்பட்டது.

அவளது குடும்பத்தினர் அவளை உயிருடன்  வைத்திருக்க எவ்வளவோ முயற்சி செய்தனர். அவள் சம்மதித்திருந்தால் அவளைப் போற்றி அவளுக்கு முதல் மரியாதை கொடுக்கத் தவறியிருக்க மாட்டார்கள். பெற்றோர்களை வணங்கி, அவர்களிடம் அன்பு செலுத்துவதில் இந்துக்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. குடும்பத்தில் அன்னையைவிட பாட்டிக்கு எப்போதும் அதிக மரியாதை உண்டு. பட்டத்து இராணிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பைவிட, குடும்பத்தினர் ஒரு மூதாட்டிக்குக் கொடுக்கும் மதிப்பு மிக அதிகம்.

“நடைபெற்ற போரில் என் சகோதரன் வீரமரணம் அடைந்திருக்க வேண்டும்  என்று நான் விரும்புகிறேன்” என்று டிரஃபால்கர் (ஜிக்ஷீணீயீணீறீரீணீக்ஷீ) போர் முடிந்தவுடன் ஒரு பெண் கூறியதை நான் கேள்விப் பட்டுள்ளேன். இதைப்போல் உடன்கட்டை ஏறிய நிகழ்வு ஒரு குடும்பத்தில் நடைபெற்றிருந்தால், அந்தக் குடும்பம் பெருமையில் திளைக்கிறது. உதைப்பூர் அரசர் இறந்தவுடன் அவரின் நான்கு அல்லது ஐந்து மனைவியர் உடன்கட்டையேறினார்கள். அவர்களில் ரேவா அரசரின் சகோதரியும் ஒருத்தி. அந்த அரசர் தன் சகோதரி உடன்கட்டையேறியதை நினைத்து நினைத்துப் பெருமையடைந்தார். உதைப்பூர் அரசர் இராஜபுத்திர3 வம்சத்தின் தலைவர்.

நான் முன்பு குறிப்பிட்ட, என் முன்னால் தன்னைத் தீக் கிரையாக்கிக்கொண்ட மூதாட்டியைப் பார்த்து “நீங்கள் உடன் கட்டையேறும் முடிவை எப்போது எடுத்தீர்கள்” என்று வினவினேன். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே தான் அந்த முடிவை எடுத்துவிட்டதாக அப்பெண்மணி தெரிவித்தாள். ஒரு நாள் அவள் மற்ற பெண்களுடன் நர்மதையாற்றில் நீராடும் போது, கணவர் இறந்தபின் தங்களை மாய்த்துக்கொண்ட பெண் களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களைக் கண்ணுற்றாள். அவ்வாறு தங்களைத் தீக்கிரையாக்கிக்கொண்டவர்களில் அந்த மூதாட்டியின் குடும்பத்தினரும் இருந்தனர். இரண்டு பேர் அவளின் அத்தை; ஒருவர் அவளின் மாமியார். எழுப்பப்பட்டிருந்த கோயில்கள் மிகவும் அழகாக இருந்தன; நன்கு பராமரிக்கப்பட்டும் வந்தன. தான் தன் விருப்பத்தைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வில்லை என்றும், தக்க தருணம் வரும்வரை ஒரு வார்த்தைகூட அதைப்பற்றிப் பேசவில்லை என்றும் அந்த மூதாட்டி என்னிடம் தெரிவித்தாள். தன் மடிமீது தன் கணவன் உயிர்விட்ட பிறகே ‘சதி’, ‘சதி’, ‘சதி’ என்று மூன்றுமுறை கூவி, தன் விருப்பத்தை வெளியிட்டதாக அப்பெண் தெரிவித்தாள்.

சர். ஹார்டிஞ் வங்காள சிவில் நிர்வாகத்தில் நீதிமன்ற நடுவராகப் பணிபுரிந்தவர். காசியில் அவர் பணியாற்றிய சமயத்தில் 1806-ஆம் ஆண்டு ஒரு பிராமண விதவை தீக்குளிக்க முற்பட்டதை அவர் தடுத்துவிட்டார். தன் கணவன் இறந்து பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த விதவையைத் தீயில் மாய்த்துக் கொள்ளுமாறு அவளுடைய குடும்பத்தினர் வற்புறுத்திக் தொல்லை கொடுத்தனர். தன் கணவன் விட்டுச் சென்ற சில பொருட்களுடன் தீயில் விழுமாறு அவளைத் தூண்டினர். தீக்குளிப்பதற்காக, காசியிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள ராம்நகர் என்ற இடத்தில் கங்கையாற்றின் எதிர்க்கரையில் சிதை தயார் செய்யப்பட்டது. அந்தப் பெண்ணை சிதையில் வைத்து நன்றாகக் கட்டவில்லை. தீயின் சூட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த விதவைப்பெண், சிதையிலிருந்து துள்ளி எழுந்து கங்கை நதியில் விழுந்துவிட்டாள். ஆற்றுநீரில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டாள். மக்கள் கரையோரமாக ஓடினார்கள். ஆற்றுநீர் அவளைக் காசிவரை இழுத்துச்சென்றுவிட்டது. காவல்துறையைச் சேர்ந்த ஒரு படகு அவளைக் காப்பாற்றியது.

தண்ணீரில் இழுத்துவரப்பட்டதில் அப்பெண்ணுக்குப் பாதி உயிர் போய்விட்டது. அவர் ஹார்டிஞ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். காசி நகரத்து மக்கள் மிகவும் கொந்தளிப் படைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஹார்டிஞ் பிரபுவின் இல்லத்தைச் சூழ்ந்துகொண்டனர். விசாரணை மண்டபத்தில் நகரின் முக்கியமான மனிதர்கள் யாவரும் கூடிவிட்டனர். அந்தப் பெண்ணைத் தங்களிடம் விட்டுவிடும்படி கூச்சலிட்டனர். அவ்வாறு கூச்சலிட்டவர்களில் அந்தப் பெண்ணின் தந்தையும் இருந்தார். தன் மகளை வைத்துப் பராமரிக்க தன்னால் இயலாது என்றும், அவளின் கணவர் வீட்டில் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அவளைத் தீக்கிரையாக்க அனுமதிப்பதே மேல் என்றும் அவர் கூறினார். நடந்த சம்பவத்திற்குத் தனக்கும் பொறுப்பிருப்பதை ஹார்டிஞ் உணர்ந்தார். அந்தப் பெண்ணின் கணவர் இறந்து வெகுநாட்கள் கடந்துவிட்டன என்றும், தன்னை மாய்த்துக் கொள்வதில் அந்தப் பெண்ணுக்கும் விருப்பமில்லை என்றும் கூறிப் பலவாறு மக்களை சமாதானப்படுத்த முயன்றார் ஹார்டிஞ். கூட்டம் கேட்பதாக இல்லை. கடைசியாக அவரது மனதில் ஓர் எண்ணம் உதித்தது. “இவளது தியாகத்தை ஏற்றுக் கொள்ள இறைவன் தயாராக இல்லை. புனித நதியான கங்கையும் இவளை நிராகரித்துவிட்டது. நீந்தத் தெரியாத இவள் இரண்டு மைல் தூரம் ஆற்றில் மிதந்து வந்துள்ளாள். இதுவே கங்கை இவளை நிராகரித்ததற்கு நிரூபணம்” என்று கூட்டத்தைப் பார்த்துக் கூறினார். ஹார்டிஞ்சின் இந்த வாதத்தை மக்கள் கூட்டம் ஏற்றுக்கொண்டது. பதில் கூற முடியாத இந்த வாதத்தைக் கேட்ட அப்பெண்ணின் தந்தை தன் மகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டார். கூட்டம் கலைந்து சென்றது.

உடன்கட்டையேறுதல்  அரசாங்கத்தால் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுவிட்ட போது எனக்கும் ஜபல்பூர் வாசி ஒருவருக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைக் கீழே தருகிறேன்.

*

எந்தெந்த சாதிகளில் கணவன் இறந்தவுடன், விதவை திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது?

பிராமணர்கள், இராஜபுத்திரர்கள், பணியாக்கள் (வியாபாரிகள்), காயத்துகள் (எழுத்தாளர்கள்) ஆகியோரிடம் விதவை மறுமணம் என்பது அனுமதிக்கப்படுவதில்லை.

உடன்கட்டையேறுதல் தற்போது தடை செய்யப்பட்டு விட்டது. இப்போது ஏன் அவர்களை மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது?

தனது சாதியைவிட்டுக் கீழிறங்காமல் ஒரு பெண் இரண்டாவது கணவனோடு தன்னை இணைத்துக்கொள்ள இயலாது என்ற அழுத்தமான எண்ணமே ஒரு பெண்ணைத் தன் முதல் கணவ னுடன் உறுதியாகப் பிணைக்கிறது. மேலும் எல்லா விதவைகளையும் மறுமணம் செய்துகொள்ள அனுமதித்துவிட்டால் எங்களுக்கும் கீழ்சாதிக்காரர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது. நாங்கள் அனைவரும் எங்களது நிலையிலிருந்து மிகவும் தாழ்ந்து விடுவோம்–.

விதவைகளான அபலைப்பெண்களைவிட உங்களுடைய சாதியைத்தான் நீங்கள் பெரிதாக நினைக்கிறீர்களா?

இல்லை; விதவைப்பெண்களே, தாங்கள் அவ்வாறு இருப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

உடன்கட்டையேறுதல் திரும்பவும் அனுமதிக்கப்பட்டால் அப்பெண்கள் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா?

சிலர் அதனை ஏற்றுக்கொள்வார்கள்; சந்தேகமில்லை.

ஏன்?

சுவர்க்கத்தில் அப்பெண்கள் தங்கள் கணவர்களுடன் இணைந்துவிடுவார்கள்; இவ்வுலக வாழ்க்கையின் துன்பங் களிலிருந்து விடுபடுவார்கள்; மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால் விதவைகளான அவர்களுக்கு நீங்கள் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாது-.

அவர்கள் நன்றாக நடந்துகொண்டால், தங்கள் கணவர்களின் குடும்பத்தார்களால் மிகவும் மதிக்கப்படுவார்கள். அவர்களைத் கலந்தாலோசிக்காமல் குடும்பத்தில் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. மறைந்துபோன தகப்பனார், மகன், சகோதரன் ஆகிய அனைவரும் தங்கள் விதவைகளால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். ஆனால் பெண்கள் பலகீனமானவர்கள். சபலங்களுக் கிடையேயும் சந்தேகங்களுக்கிடையேயும் வாழ்வதைவிடத் தங்களை மாய்த்துக்கொள்வது மேலானது என நினைக்கிறார்கள்.

இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட ஆண்கள் ஏன் தங்களை மாய்த்துக்கொள்வதில்லை-?

ஏனென்றால், பெண்களைப்போன்று, ஆண்களுக்கு சுவர்க்கத் திலிருந்து அழைப்பு வருவதில்லை.

விதவைப்பெண்கள் தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டு மென்று இறைவன் விரும்புவதாக, நீங்கள் நினைக்கிறீர்களா?

சந்தேகமேயில்லை. நாங்கள் அவ்வாறுதான் நம்புகிறோம். இல்லாவிட்டால் பெண்களைப்போல் மென்மையான நபர்கள் தீயின் கொடுமையை எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? சிஹோரா என்ற ஊரைச் சேர்ந்த வட்டிக்கடைக்காரரின் தந்தை ‘துலி சுக்கூல்’ என்பவர் இறந்தவுடன் ‘லோதி’ என்ற தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மனைவி உடன்கட்டையேறப் போவதாக அறிவித்தாள். இதுவரை அவருக்காக ஆறு முறை அவள் தன்னைத் தீக்கிரையாக்கிக்கொண்டுள்ளதாகக் கூறினாள். அவளுக்கு ஐம்பதிலிருந்து அறுபது வயதிருக்கும். பேரக்குழந்தைகள் இருந்தனர். அவளது குடும்பத்தினர் என்ன சமாதானம் சொல்லியும் அவள் செவிமடுப்பதாக இல்லை. வட்டிக்கடைக்காரரின் தந்தை உடல் தகனம் செய்யப்பட்ட மறுதினம் அந்தப் பெண் தீயில் இறங்கித் தன்னை எரித்துக்கொண்டாள்.

துலி சுக்கூலின் குடும்பம் ஒரு பிராமணக் குடும்பமாக இருந்தும், ஒரு லோதி இனப்பெண் தன்னை அவருக்காக மாய்த்துக்கொள்வதை ஏன் தடுக்கவில்லை?

அவர்கள் தடுத்தார்கள்; பயனில்லை. எல்லாம் இறைவன் செயல். தீக்குளிப்பதற்கான அழைப்பு சுவர்க்கத்திலிருந்து வந்ததாக நம்பப்பட்டது.

துலி சுக்கூலின் விதவை மனைவி என்னவானாள்?

சுவர்க்கத்திலிருந்து தனக்கு அழைப்பு  வரவில்லை என்று கூறினாள். இது நடந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது அந்த வட்டிக்கடைக்காரருக்கும் முப்பது வயதுதானிருக்கும்.

அப்படியென்றால் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வயதான மனைவிதான் கிடைப்பாள்.

இல்லை ஐயா, தீயினால் தீண்டப்படுவதால்  இருவரும் சுவர்க்கத்தில் இளமையாகவே காணப்படுவார்கள்.

சில சமயங்களில், விதவைப்பெண்கள், தங்கள் கணவர்கள் விட்டுவிட்டுச் சென்ற சில பொருள்களோடு தங்களை எரித்துக்கொள்வார்கள் என்பது உண்மையா?

உண்மைதான் ஐயா. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மீனவன் வியாபார நிமித்தமாக ஜபல்பூரிலிருந்து காசிக்குச் சென்றான். ஆறுமாதங்கள் சென்றும் அவன் திரும்பிவரவில்லை; அவனைப் பற்றிய செய்தியும் இல்லை. அவன் இறந்துவிட்டதாக அவனின் மனைவி கனவு கண்டாள். நடுநிசியில் எழுந்து ‘சதி’, ‘சதி’, ‘சதி’ என்று மூன்று முறை கூவினாள். அவள் எடுத்த உடன் கட்டையேறும் முடிவை யாராலும் தடுக்கமுடியவில்லை. காலையில் ஹனுமான் கோயில் குளத்திற்கு முன்பாக ஒரு சிதை அமைக்கப்பட்டது. தன் கணவனின் தலைப்பாகையைத் தன் கரங்களில் வைத்துக்கொண்டு மீனவனின் மனைவி தீயில் இறங்கித் தன்னை மாய்த்துக்கொண்டுவிட்டாள். இது நடந்த பத்து நாட்களுக்குப் பிறகு அவள் கணவன் திரும்பி வந்துவிட்டான்!

தற்போது உடன்கட்டையேறுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது. மோசமான மனைவியாக இருந்தாலும், ஒருவன் அவளை எளிதில் தீர்த்துக்கட்டிவிட முடியாது.

அவளுக்காக சிதையை யார் ஏற்பாடு செய்தது?

அவளது குடும்பத்தைச் சேர்ந்த சிலராக இருக்கவேண்டும். எனக்கு நினைவில் இல்லை. சுவர்க்கத்திலிருந்து அவளுக்குக் கட்டளை வந்திருக்கும் என அவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு கனவுதான்.

நீங்கள் இராஜபுத்திர இனத்தவரா?

ஆம்.

இந்தியாவின் இப்பகுதியில் இராஜபுத்திரர்கள் பெண் குழந்தைகளைக் கொன்றுவிடுவது வழக்கமா?

இல்லை. அந்தப்பழக்கம்  இப்பகுதியில் நின்றுபோய்விட்டது. புந்தேல்கண்ட் போன்ற இடங்களிலும் அப்பழக்கம் குறைந்து கொண்டுவருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க அப்பகுதி அரசர்கள் அப்பழக்கத்தைத் தடைசெய்து விட்டார்கள். இது ஒரு நல்ல நடவடிக்கை. கிராமங்களில் பெண் குழந்தைகள் இப்போது விளையாடி மகிழ்கிறார்கள்; முன்பு அவர்களின் முகங்களைக்கூடக் காண முடியாது; அவர்களின் குரலையும் கேட்க முடியாது.

பெண் குழந்தைகளைக் கொல்வதைத் தடை செய்த அரசாங்கம் அவர்களின் திருமணத்திற்கு வழி வகை செய்யவேண்டும் என்று மக்கள் முணுமுணுப்பது உண்மையா?

ஆரம்பத்தில்  அவர்கள் அப்படிக் குறைபட்டுக்கொண்டது  உண்மைதான். குழந்தைகள் வளர்ந்து பாசத்தைப் பொழிந்தவுடன் அந்தக் குறை தீர்ந்துவிட்டது-.4

***

இந்தப்  பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தவுடன் ஜபல்பூரில்  இருந்த ஒரு சிறிய கல்லூரியின் முதல்வர் குருசரண்பாபு என்னை வந்து சந்தித்தார். அவர் கல்கத்தா கல்லூரியில் படித்தவர். மிக நன்றாக ஆங்கிலம் பேசுவார், எழுதுவார்; ஆங்கில இலக்கியத்தை நன்றாகப் படித்தவர்; ஒரு நல்ல சிந்தனையாளர். லோதி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்னைத் தீயில் மாய்த்துக் கொண்டதைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அந்தப் பெண் சென்ற பிறவியில் இறந்துபோன துலி சுக்கூரின் மனைவியாக இருந்திருக்கவேண்டும் என்றும், மறுபிறவி எடுக்கும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தனது குடும்பத்திலும் நிகழ்ந்திருப்ப தாகவும் தெரிவித்தார்.

அக்கல்லூரி முதல்வரின் முப்பாட்டனாருக்கு  மூன்று மனைவிகள். அந்தப் பாட்டனார் இறந்தவுடன் அவரின் மூன்று மனைவிகளும் உடன்கட்டையேறிவிட்டார்கள். அவர்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தபோது, ஒரு பெரிய பாம்பு எங்கிருந்தோ வந்து சிதையின் மீதேறித் தானும் தீயில் விழுந்து மாண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொரு பாம்பும் அங்கே வந்து சிதையில் விழுந்து இறந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அந்த இரு பாம்புகளும் இறந்துபோன முதியவருக்கு சென்ற பிறவிகளில் மனைவிகளாக இருந்திருக்கவேண்டும் என்று கூறினர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிரார்த்தத்தில் அவரது குடும்பத்தில் நான்குபேர்களுக்கு பதிலாக ஆறு நபர்களுக்கு தானங்கள் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். அந்த நாள் முதல் அவரது குடும்பத்தாரும், அந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற ஒவ்வொரு இந்துவும், அந்த இரண்டு பாம்புகளும் சென்ற பிறவிகளில் அந்த முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்மாக்கள் என்றும் அவைகளுக்கு சிரார்த்தம் செய்து வழிபட வேண்டும் என்றும் நம்பினார்கள்.

ஜபல்பூர் கல்லூரி முதல்வரிடம் நான் பேசிக்கொண்டிருந்த பிறகு, சில நாட்கள் சென்று இறந்துபோன துலி சுக்கூரின் இளைய சகோதரர் போலி சுக்கூர் அவர்களைச் சந்தித்தேன். துலி சுக்கூருக்காக ஒரு லோதி இனப்பெண், அதுவும் வயதானவள் தன்னை மாய்த்துக்கொண்டது பற்றி, தனக்குத் தெரிந்தவற்றைக் கூறும்படி போலி சுக்கூலைக் கேட்டுக்கொண்டேன். அதற்கு அந்த இளைய சகோதரர் கூறிய பதில் இதுதான்.

“துலி சுக்கூர் உங்களது மாவட்டத்தில், உள்ளூரில் வரிவசூலிப் பவராக இருந்தார். சிஹோரா என்ற இடத்தில் இருபது ஆண்டு களுக்கு முன் இறந்துபோனார். சிஹோராவிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் கிட்டோலி என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ‘லோதி’ இனப்பெண் ஒருத்தி துலிசுக்கூரின் மறைவுக்காகத் தன்னைத் தீயில் மாய்த்துக்கொண்டாள். சென்ற மூன்று பிறவிகளில் அவள் துலிசுக்கூரின் மனைவியாக இருந்து, மூன்று முறை அவருக்காக உடன்கட்டையேறியுள்ளாள். அவள் இன்னும் நான்கு முறை அவருக்காக தான் தீயில் இறங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் கணவனும் இருந்தான். அவனுக்கும் அதே வயதிருக்கும். அவள் தனது முடிவைச் சொன்ன போது நாங்கள் யாவரும் அதிர்ந்துபோனோம். நாங்கள் பிராமணர்கள் என்றும், அவளோ தாழ்ந்த வகுப்பான லோதி இனத்தைச் சேர்ந்தவள் என்றும், அவள் தவறாக முடிவெடுத்துவிட்டதாகவும் அவளிடம் கூறினோம். அதற்கு அவள், தான் சென்ற பிறவியில் துலி சுக்கூரின் மனைவியாகக் காசியில் வசித்து வந்ததாகவும், வீட்டிற்கு யாசகம் கேட்க வந்த சன்யாசி ஒருவருக்கு சர்க்கரைக்குப் பதில் உப்பைக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் அந்த சன்யாசி அவள் அடுத்த பிறவியில் தன் கணவனைப் பிரிந்து, தாழ்ந்த குலத்தில் பிறப்பாள் என்று சாபம் கொடுத்துவிட்டதாகவும் கூறினாள். மேலும் அவள் தன் கடமைகளைச் சரிவர செய்துவந்தால் வரப் போகும் பிறவியில் தன் கணவனுடன் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று அந்த சன்யாசி கூறியதாகவும் குறிப்பிட்டாள். இவை அனைத்தும் வெறும் கனவுதான் என்று நாங்கள் அவளிடம் கூறினோம். என் சகோதரரின் விதவை மனைவி, தான் உடன்கட்டையேறாதபோது, வேறு ஒரு பெண்ணைத் தன் கணவருக்காக உடன்கட்டை ஏற அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டாள். இரண்டு ஆண்டுகள் கழித்து அவள் (என் அண்ணி) இறந்துவிட்டாள். என் சகோதரரின் உடல் ‘சிஹோரா’ என்ற ஊரில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த அந்த லோதி பெண்மணி என் சகோதரரின் சாம்பலில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு தனது ஊரான கிட்டோலிக்குச் சென்றுவிட்டாள். இறந்துபோன தன் முற்பிறவிக் கணவரான பிராமணனுக்காகத் தீக்குளிக்க உதவி செய்ய வேறு யாரும் உதவ முன்வரமாட்டார்கள் என்பதால் தன் கணவனையும் சகோதரனையும் தீக்குளிக்க உதவுமாறு வேண்டினாள். ஆனால் நாங்கள் ஊர்த்தலைவரின் துணையுடன் அச்செயலைத் தடுக்க முயற்சி செய்தோம். ஆனால், அப்பெண், அவளின் கணவன், சகோதரன் ஆகிய மூவரும் சேர்ந்து சிதையை உருவாக்கினார்கள். அப்பெண்ணின் கணவனும் சகோதரனும் தீ மூட்டினார்கள். அந்தப் பெண் அந்தத் தீயில் தன்னை மாய்த்துக்கொண்டாள்.”

இருபது ஆண்டுக்காலம் கழித்து நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவள் என் சகோதரரின்  மனைவியாக (சென்ற பிறவியில்) இருந்திருக்கிறாள். அவள் சிதையில்  அமர்ந்தபோது என் உறவினன் துலி என்ன ஆவான் என்று  ஆரூடம் கூறினாள். தன் தாத்தாவைப் போன்றே அவனும் உயர்  அதிகாரியாவான் என்று அவள் கூறினாள். அவள்  கூறியபடி நடந்தது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி உங்கள் தந்தை என்ன நினைக்கிறார்?

அந்தப்  பெண் தன் மூத்த மகனின் மனைவியாக சென்ற பிறவியில் இருந்தது குறித்து அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவளது ஈமச் சடங்குகளுக்கான செலவை அவரே ஏற்றுக்கொண்டார். ஈமச்சடங்குகள் அவரது குடும்பத்தாருக்கு நடப்பது போன்றே சிறப்பாக நடந்தது. அப்பெண்ணின் சமாதி (நினைவுக்கோயில்) இன்னும் கிட்டோலி கிராமத்தில் உள்ளது. என் சகோதரனின் சமாதி சிஹோராவில் உள்ளது.

போலி சுக்கூருடன் பேசி முடித்துவிட்டு, அவருடனேயே சென்று, அவர் சொன்ன இரு சமாதிகளையும் நானே பார்த்தேன். சிஹோராவிலும் கிட்டோலியிலும் உள்ள மக்கள் அந்த லோதி இனப்பெண் துலி சுக்கூரின் மனைவியாக சென்ற பிறவியில் இருந்ததை நம்புகிறார்கள். சிஹோராவில் தூலி சுக்கூரின் சமாதியும், கிட்டோலியில் அந்த லோதி இனப்பெண்மணியின் சமாதியும் உண்மையில் இருக்கின்றன.

*

1. புந்தேல்கண்ட், ஜபல்பூர் ஆகிய இடங்களில் பெண்கள் தங்களது  உடல் முழுவதையும் துணியால் மூடிக்கொள்வார்கள். யமுனை ஆற்றுக்கு வடக்கே பாவாடை மட்டும் அணிந்திருப்பார்கள்.

2. உபாத்யா என்பது பிராமணர்களிடையே ஒரு பட்டம். ஆன்மிக குரு என்று அதற்குப் பொருள். இராணுவத்தில் உள்ள பிராமணர்கள் சிங் என்ற பட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள்.

3. ரேவா சமஸ்தானம்  அலகாபாத், மிர்ஸாபூர் ஆகிய இடங்களுக்குத் தெற்கிலும், சாகருக்கு வடக்கிலும் உள்ளது. உதய்ப்பூர் அல்லது மேவார்-இன் தலைவருக்கு ராணா என்று பெயர்.

4. கடந்த நூறு ஆண்டுகளாக ஒவ்வொரு  அதிகாரியும் தனது முயற்சியால் பெண் சிசுக்கொலை  குறைந்துள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனாலும் அது இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளது. 1870ஆம் ஆண்டு ஆக்ரா பிரதேசத்தில் எடுக்கப் பட்ட கடுமையான நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுத்தன. 1889ஆம் ஆண்டு ரெய்பரேலி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை குறித்த வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. பல சமஸ்தானங்களில் இந்தக் கொடிய வழக்கம் இன்றும் தொடரலாம். ஆனால் இது இந்தியாவில் நாளடைவில் குறைந்துவிடும்.

**

 

தொடர்புக்கு

                                                                        Sandhya Publications

New No. 77, 53rd Street, 9th Avenue, Ashok Nagar,

Chennai – 600 083. Tamilnadu

Ph : 044 – 24896979

sandhyapublications@yahoo.com

                                                               www.sandhyapublications.com

 

 

Advertisements