கவிதைகள் – மகள் நேயா கவிதைகள்

மகள் நேயா கவிதைகள்

 

 

 

 

ஒரு நூலகத்தை எரிக்கும்போது

மிக கவனம்

நூலகம் எரிக்கப்படுகிறது

இதை கவனமாக இன்னும் நேர்த்தியாகச் செய்யவேண்டும்

லட்சக்கணக்கான பூதங்களை எரிப்பது அவ்வளவு சுலபமல்ல

புத்தகங்களை நிராகரிப்பதென்பது சாவை நிராகரிப்பதற்குச் சமம்

புத்தகங்களின் வழியாக சாவைக் கடந்தவர்கள்

நூற்றாண்டுகளாய் தள்ளிப்போட்டவர்கள்

இருக்கிறார்கள்

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக

புத்தன் சாவை தள்ளிப் போட்டிருக்கிறான்

இது ஒரு உதாரணம்

கொலைக்களங்களை வரலாற்று மையால் பதிவிடும்போது

சார்பு

இனத்தை உற்பத்தி செய்கிறது

நூலகத்தை எரிக்கும் காட்சியை

எழுத்தாளர்களுக்கு கட்டாயம் காண்பிக்கவேண்டும்

எண்ணற்ற தற்கொலைகளூக்கு அது உதவக் கூடும்

நூலகத்தை எரிக்கும்போது

அரசியல்வாதியை

அப்பக்கம் நுழையவிடக்கூடாது

எரியும் வீட்டில்

பிடுங்கும் அந்நபர்

காரணமேயில்லாது சில பல நூல்களைப் பதுக்கக் கூடும்

துரதிருஷ்டமாக அது சிவப்பட்டையோடு இருந்தால்

களவு போகும்

செவ்வரளிப்பூக்கள்

பூக்கும்

மறுபடி பூக்கும்

குழந்தைகளை

நூலகத்தை எரிக்கும் மாவட்டத்திலிருந்தே

ஒதுக்கி வையுங்கள்

குழந்தைகள் கடவுளுக்கு நிகரானவர்கள்

அல்ல

கேள்விகளுக்கு இணையானவர்கள்

கேள்வி

கேள்விகள் கேட்டு

பதில்களை அவர்கள் தெரிந்துகொள்கையில்

இளையபருவத்தினராய் இருப்பர்

அது எரித்தவர்களுக்கு நல்லதல்ல

ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

புழுதியை எரிக்கும்

நூல்களும் அங்கு இருக்கத்தான் செய்யும்

இருந்தன…

வேகும் தீயில் சட்டென அழியாதவை

தீயை உண்டு வளர்பவை

என

வகை மாதிரி புத்தகங்களும் இருக்கலாம்

கவனம்

ஒரு நூலகத்தை எரிக்கும் முன்

தீர்மானத்தில் கையெழுத்திட்ட  விரல்களை

உப்புத் தண்ணீரில் கழுவுங்கள்

யாழிசையைக் கேட்டு மகிழுங்கள்

மறுபடியும் கவனம்

இதுவரை எரிக்கப்பட்ட நூல்களின் சாம்பலை கடலில் கலக்காதீர்கள்

அஃது

துயரம்

மீன்கள் கரைக்கு ஏறி வரும்

எரித்தவர்கள் விழிகளைத் தேடியுண்ணும்

சாம்பலை நிலத்தில் தூவாதீர்கள்

முளைத்தெழும்

உங்கள் உடலை மட்கச்செய்யாது நிணவாடையை காற்றெங்கும் ஏகும்

என்ன செய்யலாம்

புத்தகச் சாம்பலை

என்ன செய்யலாம்

( புத்தம் சரணம் கச்சாமி )

விபூதியாக்கி விற்றுவிடுங்கள்

நெற்றியில்

பூசிக்கொண்டலையட்டும் பிணங்கள்

( புத்தம் சரணம் கச்சாமி )

இறுதியாக அத்தனை சாம்பலையும் அள்ளித் தின்று

வயிறு ஊதி

நீங்கள் சாகலாம்

இது உகந்த முறை….

புத்தகங்களை

முழுமுற்றாக அழிப்பதென்பது

தற்கொலைக்குச் சமம்

மட்டுமல்ல…….

*

ஒரு முத்தம்

சாட்சிகளுக்கு என்னுடல்

ஏகாந்தங்கள் எப்பொழுதும்

தாழத் திறந்தே

காத்திருக்கிறது

அன்பின் மெழுகால்

காத்திருக்கும்

பெண்ணுக்கு

எதை ஈடு கட்டுவது

ரகசியங்களை முணுமுணுப்புகளை

ஈரம் காயத சொல்லை

எப்பொழுதும்

எழுதிப் பழகும்

ஒரு பழிகாரனுக்கு

முத்தங்களை வழங்குவதும்

வெள்ளிகாசுகளினால்

வானை அளப்பதற்குமா

இவ்

வாழ்….க்…..கை

சுடர் தலை கீழாக எரிகிறது

ஆமென்.

*

ஆமென்…இப்படியாக

ரகசியங்களை

விற்பனைக்கு வைக்கும்

மௌனத்தை

உடைத்துத் திறக்கும்

ததாக

வரலாற்றை பத்து முறையும்

காலத்தை ஒரு முறையும்

ஈவிரக்கமற்றுப் புணர்ந்திருக்கிறாய்

வழியும் துருவோட்டில் கசியும்

சொல்லை எப்படிக் கைப்பற்றினார்

அனதன்பே எனச் சொல்ல முயலும்

வரிஉதட்டுப் பள்ளத்தில்

தேங்கி நிற்கும்

சொல்லோ

புத்தம்

சரணம்

கச்சாமி

சாவிகளை ஒளித்து வைத்து பூட்டை நாவில் தொங்க விடுகிறாய்

குறி சுழலும் நாவாகி

தீர்த்துக் கட்டுறதென்னை.

*

ஒரு சிறகை பதுக்கி வைக்கும் பறவைக்கு….

பறவை தன்னுடல் விரியத் திறந்து

வரவேற்கிறது

காற்றை

பறவை பறக்கிறது

பறக்கும் பறவை

நடக்கும்பொழுது வேறு மாதிரி

மாதிரி

இரு

க்கிறது

பறவைகளைக் காணுகையில்

மரம் நினைவுக்கு வருகிறது

மரங்களை நினைக்கையில்

பறவைகளும்

முட்டைகளும் ஞாபகத்தில் இடறுகிறது

இடறுகையில்

தடுக்கி விழுந்த வேர்களை நினைத்துக்கொள்கிறேன்

மரங்கள்

காணச் சலிக்காதவை

பறவைகள் பறக்கச் சலியாதவை

பறவைகளும்

மரங்களும்

இருக்கும்

என்னுடலில்

சிறகும் வேர்களும் இல்லை

சொல்லும் நாவை

பறவைக்கும்

எழுதும் விரலை

ஒரு மரத்திற்கும் மனமுவந்து ஈகிறேன்…

சமாதியில் வந்தமரும்

பறவைக்கும்

கல்லறையைக் கிழித்து நுழையும்

வேரும்

மழைநாளில்

வரும்

என்

கனவுகளில் வருகிறது.

இறகை மறைத்துப்

பறக்கும்

பறவையை யாரேனும் கண்டதுண்டா

அன்பர்களே

கவிகளே….

Advertisements