கவிதைகள் – வித்யாஷங்கர் கவிதைகள்

 

வித்யாஷங்கர் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

மரணத்தை நோக்கி

விருப்பு வெறுப்பு அற்று

காலம் என்னை இட்டு செல்கிறது

என் உடல் மீதான அக்கறை

குறைந்துகொண்டே வருகிறது

ஐந்துவயதுவரை குடித்த

தாய்ப்பால் பலம்

தாக்கு பிடிக்க வைக்கிறது

மூளை கொதிக்கும் அளவுக்கு

ஓயாத யோசனைகள்

எப்போதும் பற்றி படரும்

பதற்றம்

எதற்கும் லாயக்கு அற்றவன்

சுட்டி கடக்கும் நாட்கள்

மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ

சோறும் துணியும் தவிர

எதையும் சேர்த்து வைக்காத வருத்தம்

எவரோடும் எப்போதும்

பகைத்துவிடும் சுபாவம்

உங்களுக்கு வாழ்வதற்கான

பிடிமானம் ஏராளம் இருக்கலாம்

தினம் தினமும்

யாரோ எழதி வைத்த

நாடக பாத்திரமாய்

இயங்கி முடிக்கிறேன்

ஒப்பனையற்று

 

எனக்கில்லை

இலக்கு எதுவும்

 

**

 

தோணி மலை

 

ஏலம் கிராம்பு வாழை பலா

எல்லாம் இருக்கும்

மலையின் பச்சை

வேறு வேறு விதமானவை

ஓடி முடிந்த

அருவியின் ஈரம்

சில்லிப்பாய்

தேங்கி கிடக்கும்

பாறைகளிடையே முகம் பார்க்க

பாறைகளில் வேர் பிடித்து

பூக்கும் சிறு செடிகள்

வேதம் சொல்லும்

வண்ணமயமாய் பூத்து கிடக்கும்

மலை பூக்களுக்கு இல்லை

வாசம்

மலை வளம் காணவும்

மனசு வேண்டும்

ரசனை மிக்கவனை

மலை வணங்க செய்யும்

கும்பிட்டு வாழ்தல்

பலர் கும்பிடவாழ்தல்

கோடி பெறும்

*

இப்போதெல்லாம்

தவறாமல் பட்டுவிடுகிறது

யாரோ ஒருவரின் மறைவுக்கான

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

**