கவிதைகள் – வ.ஐ.ச.ஜெயபாலன் – கவிதைகள்

”காலச்சுவடான ஒற்றையடிப்பாதை”

1968 – 2012

– வ.ஐ.ச.ஜெயபாலன் fகவிதைகள்

 

 

 

 

 

 

 

1

பாலி ஆறு நகர்கிறது

 

அங்கும் இங்குமாய்

இடையிடையே வயல் வெளியில்

உழவு நடக்கிறது

இயந்திரங்கள் ஆங்காங்கு

இயங்கு கின்ற ஓசை

இருந்தாலும்

எங்கும் ஒரே அமைதி

 

ஏது மொரு ஆர்ப்பாட்டம்

இல்லாமல் முன் நோக்கி

பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்

அடங்காமல் காற்றோடு

இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.

எண்ணற்ற வகைப் பறவை

எழுப்பும் சங்கீதங்கள்.

துள்ளி விழுந்து

‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

 

என்றாலும் அமைதியை

ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து

கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே

மணற் கரையில் ஒரு மருங்கம்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்

மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து

எழில் மிகுந்த சிறு பெண்கள்

அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்

ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து

கேலி செய்து

சினந்து

வாய்ச் சண்டை யிட்டு

துவைத்து

நீராடிக் களிக்கின்றார்.

 

ஆனாலும்

அமைதியாய்ப்

பாலி ஆறு நகர்கிறது

 

அந் நாளில்

பண்டார வன்னியனின்*

படை நடந்த அடிச் சுவடு

இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்

அவன்

தங்கி இளைப்பாறி

தானைத் தலைவருடன்

தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த

கால்கள் கழுவி

கைகளினால் நீரருந்தி

வெள்ளையர்கள் பின் வாங்கும்

வெற்றிகளின் நிம்மதியில்

சந்றே கண்ணயர்ந்த

தரை மீது அதே மருது

இன்றும் நிழல் பரப்பும்

அந்த வளைவுக்கு அப்பால்

அதே மறைப்பில்

இன்னும் குளிக்கின்றார்

எங்களது ஊர்ப் பெண்கள்

 

ஏது மொரு

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

பாலி ஆறு நகர்கிறது.

1968

* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.

 

 

 

 

2

 

இளவேனிலும் உழவனும்

 

 

காட்டை வகிடுபிரிக்கும்

காலச்சுவடான

ஒற்றையடிப்பாதை.

வீடுதிரும்ப

விழைகின்ற காளைகளை

ஏழை ஒருவன்

தோளில்

கலப்பை சுமந்து

தொடர்கிறான்.

 

தொட்டதெல்லாம் பொன்னாக

தேவதையின் வரம்பெற்ற

மாலைவெய்யில்

மஞ்சட்பொன் சரிகையிட்ட

நிலபாவாடை

நீளவிரிக்கிறது:

இதயத்தைக் கொள்ளையிட

வண்ணத்துப் பூச்சிகள்

வழிமறிக்கும்

காட்டுமல்லிகைகள்

காற்றையே தூதனப்பி

கண்சிமிட்டும்.

 

அழகில்

கால்கள் தரிக்கும்.

முன்நடக்கும் எருதுகளோ,

தரிக்கா.

 

ஏழையவன்

ஏகும்வழி நெடுந்தூரம்.

 

-1970

 

 

 

3

 

நெடுந்தீவு ஆச்சிக்கு

 

 

அலைகளின்மீது பனைக்கரம் உயர

எப்போதும் இருக்கிற

என்னுடைய ஆச்சி

 

காலம் காலமாய் உன்னைப் பிடித்த

பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின

போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்

தென்னம் தோப்பு

நானும் என் தோழரும்

செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.

 

தருணங்களை யார் வென்றாலும்

அவர்களுடைய புதை குழிகளின்மேல்

காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.

 

என்ன இது ஆச்சி

மீண்டும் உன் கரைகளில்

நாங்கள் என்றோ விரட்டி அடித்த

போத்துக்கீசரா ?

தோல் நிறம் பற்றியும்

கண் நிறம் பற்றியும்

ஒன்றும் பேசாதே

அவர்கள் போத்துக்கீசரே

 

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை

எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு

கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

 

ஆச்சி

என் இளமை நாள் பூராக

ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்

தேடிய வாழ்வெலாம்

ஆமை நான், உனது கரைகள் நீழ

புதைத்து வந்தேனே.

என்னுடன் இளநீர் திருட

தென்னையில் ஏறிய நிலவையும்

என்னுடன் நீர் விழையாட

மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்

உனது கரைகளில் விட்டுவந்தேனே

என் சந்ததிக்காக.

 

திசகாட்டியையும் சுக்கானையும்

பறிகொடுத்த மாலுமி நான்

நீர்ப் பாலைகளில்

கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

 

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர

எதனைக் கொண்டுநான்

மனம் ஆற என் ஆச்சி

 

*நெடுந்தீவு (Delft) எனது மூதாதையரின் தீவு. இன்று இரணுவத்தின்

பிடியில் சிக்கியுள்ளது. விட்டு விடுதலையாகி நின்ற இந்த தனித்த தீவு

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது.

 

5

பூவால் குருவி

 

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து

ஒரு சிற்றாறாய் ஊருகின்ற

என் முதல் காதல் பெட்டை

ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.

பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்

வன்னிக் கிராமத் தெருவொன்றில்

வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்

பொன் சருகை கலையா முகமும்

இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்

போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு

போட்டிச் சிறு நடையில்.

அது என்ன போட்டி.

 

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.

அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.

என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்

இன்று நீ அன்னை.

 

நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.

ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.

இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்

குளக்கரையின் மான் குட்டி.

 

நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.

இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற

திருட்டுச் சிறு பயலா.

அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று

உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து

நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்

மேனி இன்பத் துணுக்குறுதே.

 

எறிகுண்டாய் வானத்தியமன்

கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்

உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.

பின் ஒருநாள் ஊர் காண

காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து

கூந்தலிலே சூடி நடந்தாளாம்.

தெருவெல்லாம்

நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே

நிழலாய் திரிகிறியாம்.

இது பெருங்காவல்.

எல்லாம் அறிந்தேன்.

 

எங்கிருந்தோ வந்து

நம் தெருவோர மரக்கிளையில் குந்தி

தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த

அந்தக் குருவியைப் போல்

காணாமல் போனதடி காலங்கள்.

1996?

 

6

 

அம்மா

 

 

போர் நாட்களிலும் கதவடையா நம்

 

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

 

வாழிய அம்மா.

 

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

 

அன்றுநான் நாட்டிய விதைகள்

 

வானளாவத் தோகை விரித்த

 

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

 

தும்மினேன் அம்மா.

 

அன்றி என்னை வடதுருவத்தில்

 

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

 

 

 

அம்மா

 

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

 

நம் முற்றத்து மரங்களில்

 

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

 

தம்பி எழுதினான்.

 

வலியது அம்மா நம்மண்.

 

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

 

வானில் ஒலித்த போதெலாம்

 

உயிர் நடுங்கினையாம்.

 

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

 

 

 

இருளர் சிறுமிகள்

 

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

 

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

 

கன்னிமாங்கனி வாடையில் வந்த

 

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

 

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

 

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

 

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

 

 

 

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

 

உன்னை வந்து பார்க்கலையாமே.

 

போகட்டும் விடம்மா.

 

அவனும் அவனது

 

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

 

உன்னைக் காக்க

 

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

 

காடும் உளதே

 

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

 

 

7

 

நீலம்

 

 

தோழி

காலமாய் நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய

சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?

கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்

உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

 

ஆண்டு பலவாகினும்

நரையிலா மனசடா உனக்கென்றாய்.

தோழி

இளமை என்பது வாழும் ஆசை.

இளமை என்பது கற்றிடும் வேட்கை.

இளமை என்பது முடிவிலா தேடல்;

இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.

இளமை என்பது வற்றாத ரசனை

இளமை என்பது நித்திய காதல்.

இளமை என்பது

அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

 

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

 

2011

 

 

8

 

 

 

சதுரங்கம்

 

 

சிருஸ்ட்டி வேட்கையில்

ஆனைமலைக் காடுகள் பாடுகிற

அந்தி மாலை.

அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்

உன்னையே சுற்றுதடி மனசு.

 

இது தீராத காதலடி

நீதான் கண்டு கொள்ளவில்லை.

அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்

தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்

யானைபோல

உண்மையில் என் காதலும் பெரியதடி.

 

காமத்தில் சூரியன்

பொன்சிந்த இறங்கி வர.

நாணிப் புவிமகள்

முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..

ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற

உனது நாடகம் அல்லவா இது.

 

ஆண் பெண்ணுக்கிடையில்

ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை

எப்போதும் விரிகிறது.

என்னோடு இன்னும் சிலரை

பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்

வித்தைக்காரியில்தான் காதலானேன்.

அதனால் என்ன.

கீழே காட்டில் .

ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த

யானையும் இல்லை

ஒரு யானை மட்டுமே மேய்ந்த

மூங்கில் புதரும் இல்லை.

.

எதுவும் செய்..

ஆனால்

இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.

நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.

 

2012

 

9

 

நெய்தல் பாடல்

 

வாழிய தோழி

கடலின்மேல் அடிவானில்

கரும்புள்ளியாய் எழுதப்படும்

புயற் சின்னம்போல

உன் முகத்தில் பொற்கோலமாய்

தாய்மை எழுதப்பட்டு விட்டது.

 

உனக்கு நான் இருக்கிறேனடி.

இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை

உப்புக் கடலாக்காதே.

புராதன பட்டினங்களையே மூடிய

மணல் மேடுதான் ஆனாலும்

தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட

இங்கு தன் முட்டைகள

நெடுநாள் மறைக்க முடியாதடி.

 

விரைவில் எல்லாம்

அறியபடா திருந்த திமிங்கிலம்

கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்

அதனால் என்னடி

இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.

 

அஞ்சாதே தோழி

முன்பு நாம் நொந்தழ

மணல் வீடுகளை  ச் சிதைத்த பயல்தான்.

ஆனாலும் காதல் அவனை

உன் காலில் விழ வைத்ததல்லவா.

ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்

முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்

குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்

கரிசனை இருந்ததல்லவா.

 

ஆறலைக் கள்வர்போல

சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்

நீர்ப் பறவைகள் எங்கே போவது.

 

இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல

அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்

உண்மைதான் தோழி.

ஆனாலும் அஞ்சாதே

அவன் நீருக்குள் நெருப்பையே

எடுத்துச் செல்லவல்ல பரதவன்.

 

அதோ மணல் வெளியில்

முள்ளம் பன்றிகளாய் உருழும்

இராவணன்மீசையை

சிங்களக் கடற்படையென்று

மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.

 

இனிக் கரைமாறும் கடல்மாறும்

காலங்களும் மாறுமடி.

 

2012

 

10

 

 

 

 

பாலைப் பாட்டு

 

வேட்டையாடும்

பின்பனி இரவு அகல

புலரும் காலையில்

உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன்.

 

அன்பே

மஞ்சத்தில் தனித்த என்மீதுன்

பஞ்சு விரல்களாய்

சன்னல் வேம்பின்

பொற் சருகுகள் புரள்கிறது.

இனி வசந்தம் உன்போல

பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும்.

 

 

கண்னே நீ பறை ஒலித்து

ஆட்டம் பயிலும் முன்றிலிலும்

வேம்பு உதிருதா?

உன் மனசிலும் நானா?

இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை

இனி இளவேனில் முதற் குயிலையும்

துயில் எழுப்புமடி.

 

 

இடியாய்ப் பறை அதிர

கொடி மின்னலாய் படருவாய் என்

முகில் வண்ணத் தேவதை.

உன் பறையின் சொற்படிக்கு

பிரபஞ்சத் தட்டாமாலையாய்

சிவ நடனம் தொடரும்.

 

 

காத்தவராயன் ஆரியமாலா

மதுரை வீரன் பொம்மியென்று

பிறபொக்கும் மானுடம் பாடி

காதலிலும் இருளிலும்

ஆண் பெண்ணன்றி

சாதி ஏதென மேடையை உதைத்து

அதிரும் பறையுடன்

ஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.

 

 

என் காதல் பாடினி

திராவிட அழகின் விஸ்வரூபியாய்

நீ ஆட்டம் பயிலுதல் காண

உன் உறவினர் வீடுகள்

சிறுத்தைக் குகைகளாய் நெரியும் தெருவில்

எப்படி வருவேன்?

 

 

வேம்பு உதிரட்டும் நீ உதிராதே

ஏனெனில் உதிராத மனிதர்களுக்கும்

உதிந்த வேம்புகளுக்குமே

தளிர்த்தலும் பூத்தலும்.

 

 

நாளை நான் கிளை பற்றி வளைக்க

உன்னோடு சேர்ந்து ஊரும் கொய்து

கூந்தல்களில் சூடும் அளவுக்கு

பூப்பூவாய் குலுக்குமடி அந்த மொட்டை வேம்பு.

 

 

தேன் சிந்துமே வாழ்வு.

 

2012

 

11

 

 

குறிஞ்சிப் பாடல்

 

 

கரும் திரை அசையும் தோற்பாவைகளாய்

நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல்

முலை சிந்தச் சிந்த நிலா

நட்சதிரக் கன்றுகளைத் தேடுது.

 

சொட்டும் நிலாப் பாலில்

கரையும் இருளில்

பேய்களே கால்வைக்க அஞ்சும்

வழுக்கு மலைப் பாதை

பாம்பொடு பாம்பாய் நெளிகிறது.

 

மின்மினிகள் துளை போடும்

இருள் போர்த்த காட்டின் வழி நீழ

கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு

கரடிகள் அலையும் இரவில்

பூத்துக் குலுங்குது முல்லை.

 

ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில்

வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும்

இந்தக் கொடிய நள்ளிரவில்

ஏன் பூத்தாய் காட்டு முல்லை.

 

நான் மண்ணுக்கு பழசு கவிஞா

பொறுத்திரு என்று நகைத்த

முது முல்லை சுட்டும் திசையில்

ஆளரவம் தெரிகிறது.

என்ன பிரமையா இல்லை ஆவியா

இருக்காது பின்னே குறிஞ்சி முருகனா

துணுக்குற்றேன்.

 

வேல் இல்லை

கானமயில் இல்லை

காற்ச்சட்டை சேட்டு

கையில் சிணுங்கி ஒளிருகிற செல்பேசி.

வருகிறது மனிதன்தான்.

 

அவன் மேகம் உறங்கும் மேலூரான்

பகலில் காட்டு யானைகள் நடுங்க

குமுக்கியில் பவனிவரும் பாகன்.

இரவெல்லாம் காதலன்.

 

கீழே சிறு குடியில்

தூங்காது விரகத்திலே புரண்டு

குறுஞ்சேதி தட்டுகிற ஒருத்திக்காய்

புலி விலகி கரடி ஒதுங்கி

பாம்புகள் கடந்து வருகின்ற இருளன்

போகும் வழியில்

பூ பறிப்பான் குழலிக்கு’

 

கொட்டும் பனியிலும்

பெருமூச்சில் கனன்றபடி

வாடா வந்திரென ஓயாமல்

குறும்சேதி தட்டுகிற பாதகத்தி

பகலில்கூட இப்பாதை வரத் துணிவாளோ

 

கபிலன் இல்லையே இன்று

உயிரினும் காதல் இனிதென்னும்

இந்தக் காமுகனைப் பாடுதற்கு.

2012

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements