மொழிபெயர்ப்பு கவிதை : போரில் நான் என்ன கற்றுக் கொண்டேன்? யெஹுடா அமிச்சாய் / இஸ்ரேல் தமிழில்: இந்திரன்

மொழிபெயர்ப்பு கவிதை :

போரில் நான் என்ன கற்றுக் கொண்டேன்?

யெஹுடா அமிச்சாய் / இஸ்ரேல்

தமிழில்: இந்திரன்

 

 

 

 

 

 

 

 

 

 

போரில் நான் எதையெல்லாம் கற்றுக் கொண்டேன்:

காலியான கிணற்றில் நீர் இறைக்க முயலும் இயந்திரங்களைப் போல்

கால்களையும் கைகளையும் வீசிக்கொண்டு

குறித்த காலத்திற்குள் அணி திரண்டு நடப்பதை.

 

வரிசையில் அணி திரண்டு நடந்து கொண்டு

நடுவில் தனிமையாக இருப்பதை,

தலையனைகளிலும்,இறகு மெத்தைகளிலும்,

பிடித்த பெண்களின் உடம்புகளிலும் புதைந்தபடி

அவள் காது கேளாதபோது “அம்மா” என்று கத்துவதை,

எனக்கு கடவுள் நம்பிகை இல்லாதபோது

“கடவுளே” என்று சத்தம் போடுவதையெல்லாம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாதபட்சத்தில்

நான் அவரிடம் போரைப் பற்றி சொல்லி இருக்க மாட்டேன்

வளர்ந்தவர்களின் பயங்கரங்களைக்

குழந்தைகளிடம் சொல்ல முயலாதது போல.

 

வேறு எதையெல்லாம் நான் கற்றுக் கொண்டேன்:

திரும்பிப் போவதற்கான ஒரு பாதையைத் முன்கூட்டி தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வதைக் கற்றுக் கொண்டேன்.

வெளிநாடுகளில்

விமான நிலையம் அல்லது ரயில் நிலயத்தின் அருகில்

ஹோட்டல் அறையை வாடகை எடுக்கவும்,

கல்யாண வீடாக இருந்தாலும் கூட

”வெளியே போகும் வழி” என்று சிகப்பு எழுத்து போட்ட

சிறிய கதவுகளைக் கவனித்து வைத்துக் கொள்ளக்

கற்றுக் கொண்டேன்.

 

நாட்டியத்துக்கான தாள லயத்தோடு கூடிய மேள வாத்தியம்

போலத்தான் போரும்  தொடங்குகிறது

“அதிகாலையில் பின்வாங்குங்கள்” என முடிகிறது.

கள்ளக் காதலும் போரும் சில சமயம் இப்படித்தான் முடிவடைகின்றன.

 

ஆனால் இவை எல்லவற்றையும் காட்டிலும்

பொருட்களை மறைக்க உதவும் சாதனமாகிய மெய்யறிவை

நான் கற்றுக் கொண்டேன்.

தனித்துத் தெரியக் கூடாதென்றும்,

அடையாளம் காணப் படக்கூடாதென்றும்

என்னைச் சுற்றி இருப்பவற்றிலிருந்தும்,

என் பிரியமானவர்களிடமிருந்தும்கூட பிரிந்துவிடக்கூடாதென்றும்

கற்றுக் கொண்டேன்.

 

அவர்கள் என்னை ஒரு புதர் என்றோ அல்லது ஒரு ஆடென்றோ

ஒரு மரமென்றோ, மரத்தின் நிழலென்றோ,

ஒரு சந்தேகமென்றோ,சந்தேகத்தின் நிழலென்றோ,

உயிருள்ள ஒரு வேலியென்றோ,செத்துப்போன ஒரு பாறையென்றோ

ஒரு வீடென்றோ, ஒரு வீட்டின் மூலையென்றோ

நினைத்துக் கொள்ளட்டும்.

 

நான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பேனானால்

நான் பார்வையை மங்கச் செய்து

எனது நம்பிக்கையை ஒரு கருப்புக் காகிதத்தால் இருட்டாக்கி

மந்திரத்தை வலையால் மூடியிருப்பேன்.

 

என் நேரம் வரும்போது எனது முடிவின் மறைத்து வைக்கும்

சாதன அங்கியை விலக்குவேன்:

மேகங்களின் வெண்மை, வானத்தின் நிறைய நீலம்

மேலும் முடிவில்லாத நட்சத்திரங்கள்.

 

***

Advertisements