மொழிபெயர்ப்பு சிறுகதை – போக்கிரி – ஸையத் முஹம்மத் அஷ்ரஃப் தமிழில் – ராகவன் தம்பி

போக்கிரி

உருது மூலம் – ஸையத் முஹம்மத் அஷ்ரஃப்

ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி

வெளிச்சம் சிறிது சிறிதாக அந்தப் பாதையில் இருந்து விலகத் துவங்கியிருந்தது. சூரியன் மறைந்து நீண்டநேரமாகி விட்டது போலத் தோன்றியது.    ஒருவேளை ஜீப் அந்தப் பாதையின்  செங்குத்தான வளைவைக் கடந்து,  வலப்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுப் பகுதியின் வாயிலில்  நுழைந்து விட்டதனாலும் அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.     இன்ஜின் உறுமிக் கொண்டே இருந்தது.    பாதையின் ஓரத்தில், ஓவர்கோட் அணிந்திருந்த பெண்மணி ஒருத்தி அவர்களை நோக்கி வண்டியை நிறுத்துமாறு ஒரு கையால்  ஜாடை காண்பித்தாள்.  இன்னொரு கையில்  சிறுவன் ஒருவனின் கையைப் பற்றிக்  கொண்டு நின்றிருந்தாள்.

பிரேக்கை வலுவாக அழுத்தி   குலுக்கலுடன் ஜீப்பை நிறுத்தினான் நதீம்.  சக்கரங்கள் கிளப்பிய புழுதி   பெண்மணியின்  கால்களுக்கு   அடியில் தஞ்சம் புகுந்து அடங்கின.  சிறுவனின் முழங்கால் வரை புழுதி படிந்திருந்தது.   .

டாக்டர் வாக்கர், பின் சீட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த  ரைஃபிளைக்  கையில் எடுத்துக் கொண்டு, ஏதோ அவசத்தில் இருப்பவர் போலப் பதறினார்.       வண்டியை ஏன் நிறுத்தினாய்?     டிஎஃப்ஓ சாஹிப்   இந்நேரம் கிளம்பி இருக்கலாம்.     நமக்காக அவர் எத்தனை நேரம்தான் காத்திருப்பார்?    ஏற்கனவே நேரம்   தள்ளிப் போய்விட்டது.  சீக்கிரம் வா” என்றார்.

ஆஸிஃப் வண்டியின் கண்ணாடி ஜன்னலை இறக்கி அந்தப் பெண்மணியையும்  சிறுவனையும் நன்கு உற்றுப் பார்த்தான்.  வண்டிக்குள் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்தான்.  “கிளம்பியது என்னவோ ஒரு மதம் பிடித்த யானையை வேட்டையாடுவதற்கு.   ஆனால் நம்ம ஆட்கள் ஒரு பெண்ணைக் கண்டதுமே  ஹீரோக்களாகி விடுகிறார்கள்.”

ரஷீத் யோசனையில் மூழ்கிப்போனான்.   ஏதோ அர்த்தமற்ற தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டவனைப் போல, “வண்டியை விட்டு இறங்கி அந்தப் பெண்மணி யார், அவளுக்கு என்ன வேண்டும் என்று கேள்” என்று எரிச்சலுடன் சொன்னான்.

கதவை வேகமாகத் திறந்து   இறங்கியதும்  டிசம்பர் காற்று முகத்தில் சில்லென்று வீசியது.  அவளை நோக்கி நடந்தான் நதீம்.

“சைத்தான், கதவை மூடாமல் போய்விட்டான்” டாக்டர் வாக்கர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.    “இந்த வருஷம் குளிர்   மிகவும் அதிகமாக இருக்கிறது.  கண்டிப்பாக எங்காவது பனி பெய்து கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

நதீம் மீண்டும் வண்டிக்குள் ஏறிக் கதவை மூடிக் கொண்டான்.     திரும்பி மற்றவர்களைப் பார்த்தான்.  ஏதோ நினைவுக்கு வந்தது போல, கதவை மீண்டும் திறந்தான்.   கதவை மூடியதும் அந்தப் பெண்ணின் முகம் வாடிப்போனதை ரஷீத் கவனித்தான்.  மீண்டும் கதவு திறந்ததும் அவளுடைய முகவாட்டம் மாறியது.

“விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்மணி  தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாளாம்” என்று சொல்லி விட்டு நதீம் அமைதியானான்.  தான் சொன்னது யாரிடமும் எந்த விளைவையும்  ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்து அமைதியானான்.

என்னது? பத்தாயிரமா? யாருடைய பணம்?   இவள் எதற்குத் தன்னிடம் இத்தனை பெரிய தொகையை வைத்திருக்க வேண்டும்?  இந்தக் காட்டுப் பாதையில் அவ்வளவு பெரிய தொகையை  வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாள்?”

டாக்டருடைய தொடர்ச்சியான கேள்விகளை இடை மறிப்பது போல   நதீம் சொன்னான், “பரவ்லி கிராமத்தின் லேவாதேவிக்காரர் அகர்வாலிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாளாம்.  கனடாவில் இருந்து இங்கு வந்திருக்கிறாள்.  லக்னோ சொந்த ஊராம்.  கனடாவில் இருந்தபோது இந்தப் பணத்தை அவள் அகர்வாலிடம் கொடுத்திருக்கிறாள்.  இந்தியா திரும்பிய பிறகு அந்தப் பணத்தை அவனிடம் இருந்து திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறாள்.  இன்று இரவே அவளுக்கு லக்னோ போகவேண்டுமாம்.  அந்தப் பையன் அவளுடைய மருமகன்.  பெயர் ராஜூவாம். இன்று ஏதோ கடை அடைப்பாம்.  பேருந்துகள் எல்லாம் ஓடாது.  கிராமத்தை விட்டுக் கிளம்பிய போது இதுபற்றி அவளுக்குத் தெரிந்து இருக்கவில்லையாம்.  அவளுக்குக் கிராமத்துக்குத் திரும்பிப் போகவேண்டாமாம்.  ஏனென்றால் அங்கு ஒரு வீட்டில் கூட…

வண்டியின் பின்சீட்டில் டாக்டரின் உதவியாளன் ரமேஷ் உட்கார்ந்திருப்பதும் கையில் அவன் ஒரு ரைபிள் துப்பாக்கியை வைத்திருப்பதும் திடீரென்று கவனத்துக்கு வந்ததால் தன் பேச்சை சடாரென்று நிறுத்தினான்.

“நாம் அவர்களை பஹ்ரைச்சில் உள்ள ரேஞ்ஜர் அலுவலகம் வரை அழைத்துச் சென்று டிஎஃப்ஓ சாஹிப்பிடம் ஒப்படைத்துவிடுவோம்.  அவர்களிடம் பஹ்ரைச் பஸ் ஸ்டாண்டில் இந்த இரண்டு பேரையும்  இறக்கி விடச் சொல்வோம்”    முடிவில்லாத ஏதோ ஒரு பிரச்னைக்குத் தீர்வு சொல்வது போல டாக்டர் வாக்கர் அவசர அவரமாகச் சொன்னார்.

அங்கு நிலவிய பதட்டமான சூழல் ஒருவழியாக சற்றுத் தணிந்தது போலத் தோன்றியது.  அனைவரும் சற்று இறுக்கம் தளர்ந்து காணப்பட்டார்கள்.

டாக்டர் வாக்கர்   ரைஃபிளை எடுத்துக் கொண்டு பின்பக்கம் சென்று ஆஸிஃப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

நதீம் ஸ்டியரிங்கை ஒரு கையிலும் கதவை ஒரு கையிலுமாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.  “அங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? வண்டியில் ஏறிக்கொள்.  ஜீப்பில் உனக்கு இடம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். வா ஏறிக்கொள்” என்றான்.

இன்னொரு கதவை அவன் திறந்து விட்டான்.  பையனை முதலில் ஏற்றி விட்டுப் பிறகு படியில் கால்களை வைத்து எம்பி முரட்டுத்தனமாக ஜீப்பில் ஏறினாள் அந்தப் பெண்மணி.  குதிகால் உயர்ந்த பூட்டு அணிந்திருந்தாள்.  உள்ளே அவள் ஏறி உட்கார்ந்து தனக்கு வசதியான இடத்தை ஏற்படுத்திக் கொண்டதை எல்லோரும்  வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  சாலையின் விளிம்பில் அவள் நின்று கொண்டிருந்த போது இவர்களால்  சரியாகப் பார்க்க இயலவில்லை.  அருகில் பார்த்தால் இளமையுடன், கவர்ச்சியுடனும்  தன்னம்பிக்கை நிரம்பியவளாகவும் காட்சியளித்தாள்.  வெறும் பழங்களை மட்டுமே  விழுங்கி வளர்ந்தவளாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைப்பது போன்ற மிருதுவான கன்னங்கள் அவளுக்கு என்று நினைத்தான் நதீம்.  சொல்லப்போனால் மற்றவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.

அவள் தான் மறந்து விட்ட ஏதோ ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வது போல திடீரெனத் தன்னுடைய ஓவர்கோட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.  பிறகு   கோட்டைத் தன்னுடன் இறுக சேர்த்து அணைத்துக் கொண்டாள்.  பின்பக்கம்   திரும்பாமல் ஆங்கிலத்தில் மிகவும் மென்மையாகச் சொன்னாள், “மிக்க நன்றி”.  பிறகு ஏதோ சொல்ல மறந்தது போலவும் வலுவில் நினைவுபடுத்திக் கொள்வது போலவும் உருதுவில் தொடர்ந்தாள், “உங்கள் எல்லோருக்கும் நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்”.

சாலையின் இருபுறமும் வயல்கள் சூழ்ந்திருந்தன.  அங்கு கவிந்திருந்த கும்மிருட்டில்  அந்த வயல்களில் என்ன பயிர்கள் வளர்ந்திருக்கின்றன என்று அனுமானிக்க முடியவில்லை.  வனத்துறையின் செக் போஸ்டை அடைந்ததும் ஜீப்பின் வேகம் சற்றுத் தணிந்தது.

அங்கு வழியை மறித்தபடி வனக்காவல் சிப்பாய் நின்றிருந்தான்.  ஜீப் உமிழ்ந்த ஒளியில்  கண்கள் கூசின.   கண்களுக்கு மேல் கைகளை மறைகட்டி உள்ளே இருந்தவர்களைக் கூர்ந்து பார்க்க முயற்சித்தான்.     ஜீப்பை அடையாளம் கண்டு கொண்டு குறுக்குக்கம்பை உயரத் தூக்கினான். வாயிலைக் கடக்கும்போது ஆஸீஃப் சொன்னான்,     “வண்டியை நிறுத்து நதீம்”

“எப்போதும் இதேதான் உனக்கு.  இப்போதும் என்ன அதே வாசனையா?” என்றார் டாக்டர் வாக்கர்.

“ஆமாம்” என்றான் ஆஸீஃப் மென்மையான குரலில்.

ஜீப் நின்றதும் ஆஸீஃப் கீழே இறங்கினான். டாக்டர் வாக்கர் அவனைத் தொடர்ந்து இறங்கினார்.  திறந்திருந்த வாயிற்கதவு  வழியே வீசிய காற்று ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வீசுவது போலத் தோன்றியது.  இப்போது அவர்கள் உண்மையாகவே அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தார்கள்.

ஆஸீஃபும் டாக்டர் வாக்கரும் ஜீப்பில் சாய்ந்து கொண்டு அவசர அவசரமாக சிகரெட்டை ஊதினார்கள்.  நதீமும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.  இருள் அடர்ந்து சூழ்ந்திருந்த காட்டை உற்றுப் பார்த்தான்.  காற்றில் மிதக்கும் மென்மையான வாசத்தை உள்வாங்கிக் கொள்வதுபோல மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியில் விட்டான்.  யானையின் காதுகள் போலப் பெரிதாகப் படர்ந்து வளர்ந்த இலைகள், பலவிதமான புல்வகைகள் எல்லாம் இந்தக் காட்டில்  வசிக்கும் பல்லாயிரக்கணக்கான விலங்கினங்களின் வாசனைகளுடன் ஒன்றிணைந்து வீசும் கலவையான வாசத்தை இங்கு  நுகரலாம் என்று நினைத்தான்.

இருட்டில்  கண்களுக்கு அத்தனை வேலை இருப்பதில்லை.  காட்டின் இருப்பினை அதன் வாசத்தால் மட்டுமே நுகர முடிந்தது.  இருளைக் கவ்வியிருந்த அடர்த்தியான நிசப்தம் சில கணங்களில்   அர்த்தங்கள் ஏதுமற்று இருப்பது போலவும் அடுத்த கணம் ஏதோ மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது போலவும் மாறி மாறி ரூபம் கொண்டன.  அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் கனவுகள் ததும்பப் பறக்கும் பறவைகளின் மெல்லிய சிறகடிப்பு  அல்லது வனமிருகங்களின் மேய்ச்சல் ஒலி,  அல்லது, பறவைகள் ரீங்கரித்துப் பறக்கும் வெள்ளந்தியான   பறத்தலில் –   யாரும் எங்கும் எந்தவகையிலும்  காண இயலாத    ஒளிக்கீற்றுக்களைக்  காணமுடிந்தது.  சில நேரங்களில் ஒலிகள்   கூட பளீரென்ற  வெளிச்சப் புள்ளிகளாக மாறிவிடுகின்றன.

இவை அனைத்தையும் சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.  முதலில் எந்தவிதமான சுவாரசியம் இல்லாமல் இருந்தவன், சிறிது நேரம் கழித்து லேசாக ஆர்வம் காண்பிக்கத் துவங்கினான்.    பிறகு எல்லாவற்றையும்  முழுகவனத்துடன்  உற்றுப்பார்க்கத் துவங்கினான்.

சில நேரங்களில் ஒலியே ஒளியாக மாறிவிடுகிறது என்று நதீம் நினைத்தான்.  அப்போது ஒளி, ஒலியாக மாறுமோ?  இந்த தர்க்கத்தை அதன் இறுதிக்கட்டம்  வரை எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தான்.  இடையில், டாக்டர் வாக்கர் ஜீப்புக்குள் ஏறி உட்கார்ந்து “மிகவும் அழகான, அமைதியான காடு இது. இங்கே போய் அந்த மதம் பிடித்த காட்டு யானை எல்லோருக்கும் தொல்லை  கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

மதம் பிடித்த யானையைப் பற்றிச் சொன்னதுமே அந்தப் பெண்மணியும்  சிறுவனும் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பினார்கள்.  “வாக்கர் பாய், நீங்கள் எல்லோரும் எங்களுடன் இந்தக் காட்டில் பல நாட்கள் தங்கியிருந்தீர்கள்.  அப்போது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.  சென்ற சீஸன் போது நாம் ரேஞ்ஜர் அலுவலகத்தில் இருந்து கெர்வாண்டி வரை நிலவொளியில் நடந்தே சென்றோம்.     அப்போது இது போல வந்தவகையான  ஆபத்தும் இல்லாமல் இருந்தது. அங்கங்கு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த மான்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மணலில் படுத்திருப்போம். எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது இல்லையா?” என்றான் ரஷீத்

“திங்கட்கிழமைக்குப் பிறகு சூரியன் கூட இந்தக் காட்டுக்குள் நுழையமுடியாது” ரமேஷ் பின்பக்கத்தில் இருந்து திடீரெனக் கத்தினான்.

நதீம் கதவை மூடிக்கொண்டு இன்ஜின் சாவியைத் திருகினான்.     பெண்மணியுடன் மிகவும்  இறுக்கமாக நெருங்கி உட்கார்ந்திருந்தான் சிறுவன்.   அமைதியாக இருந்தாலும் அவன் உள்ளுக்குள் லேசாக அழுது கொண்டிருந்தது போலத் தோன்றியது.  ”என்ன ஆச்சு?” என்று சிறுவனிடம் கேட்டாலும் நதீமின் பார்வை  அவள்  மீதே பதிந்திருந்தது.

“யானையைப் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்டு பயந்து விட்டான்” என்றாள்.  அவனை மேலும் தன் பக்கத்தில் இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டாள்.  “ஏதாவது யானை இங்கே போக்கிரித்தனம் பண்ணுகிறதோ?” என்று கேட்டாள்.

“ஆமாம்.  யானைகள் கூட்டத்தில் ஒரு தனி யானைக்கு மதம் பிடித்து போக்கிரித் தனம் செய்து கொண்டிருக்கிறது.  அந்தப் போக்கிரியைத்தான் நாங்கள் வேட்டையாடக் கிளம்பி இருக்கிறோம்.

சிறுவன், ஒடுங்கிப் போய் அவளுடைய இடுப்பை   இறுகப் பற்றியவாறு  நதீம் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வண்டி, ரேஞ்ஜர் அலுவலகத்தை நெருங்கியதும்,  மதம் பிடித்த போக்கிரி யானை பற்றியும் அது பல அப்பாவிகளை   கொடூரமாகக் கொன்றதையும், அதன் உடைந்து போன ஒரு கொம்பு பற்றியும், கிராமத்துக்காரன் ஒருவனின்  துப்பாக்கிக் குண்டினால் தெறித்துக் கோரமாகிப் போன   அதன் முதுகினைப்  பற்றியும் அவளிடம் சொல்லத் துவங்கினான் நதீம்.  மாவட்ட வனக்காவல் அதிகாரி இந்த விஷயங்களைத் தன்னுடைய தலைமை அதிகாரியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அந்த யானையை மதம் பிடித்த போக்கிரியாக அறிவித்து அதனைக் கண்டதும் சுடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும், இப்போது அந்த யானையை சுட்டுக் கொல்வதற்கு டாக்டர் வாக்கருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் சொன்னான். முன்பெல்லாம் ஏதாவது அங்கங்கே ஓரிரண்டு சிறிய அளவில்தான்  சம்பவங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தன.   பிறகு  அந்தப் போக்கிரி யானை இந்தப் பகுதியில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது.  இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.  ஆனால், காடு மற்றும் அதில் வசிக்கும் மிருகங்கள் பற்றிய பிரச்னை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருவதால் இதுகுறித்த விவாதங்கள் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கும் பலமுறை மீண்டும் மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அந்த யானை ஏன் இன்னும் கொல்லப்படவில்லை என்று அவளுக்குப்   புரியவில்லை.  இந்தப் பிரச்னை துவங்கிய புதிதில், யானைகளின் கூட்டத்தில் இருந்து இந்தப் போக்கிரி  யானையைத் தனித்து அடையாளம் காணுவது சிரமமாக இருந்ததால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நதீம் விளக்கினான்.  பிறகு அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் எல்லாவற்றையும்  இழுத்தடிக்கும்    மந்தமான அணுகுமுறையும் ஒரு காரணம் என்றான்.  இந்த அளவுக்குப் பரந்த வனாந்திரத்தில் அந்த யானையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமத்தையும் சொன்னான்.

ரேஞ்ஜர் அலுவலகம் இன்னும் சற்று தூரத்தில் இருந்தது.  யானையை வேட்டையாடத் தேவையான நேரம் இருந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பெண்மணி மிகவும் அழகாக இருந்தாள்.  எனவே, இவை எல்லாவற்றையும் பின்னணியில் வைத்து பிரச்னையை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கிக் கொண்டிருந்தான் நதீம்.  அரசாங்கத்துக்கும் இது விஷயமாகத் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருந்தன. அதனால் சில வசதிகளுக்காக, தனியார் அமைப்புக்களிடமும் தனி மனிதர்களிடமும் இந்தக் காரியத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு,   யானை விஷயத்தையே எடுத்துக் கொண்டால், அந்தப் போக்கிரி யானையைக் கொல்லும் வேலையை முதலில் டிஎஃப்ஓ சாஹிப்புக்குத்தான் கொடுத்திருந்தார்கள்.  ஆனால் அரசு அதிகாரியாக இருப்பதால் இந்த வேலைக்கெல்லாம் அவர் தோதாக இருக்கமாட்டார் என்பதால் அவரை இதில் ஈடுபடுத்தவில்லை.  இந்தப் போக்கிரி யானையைக் கொல்லும் வேலை டிஎஃப்ஓ சாஹிப் பெயரில் இருந்தாலும்  மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருப்பது டாக்டர் வாக்கர் மற்றும் ஆஸீஃப் இருவருக்கும்தான் என்பது, அரசாங்கத்தில் உள்ள எல்லா பெரிய தலைகளுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

உரையாடலின் போக்கில் அவள்  தன்னைப் பற்றிய பல விஷயங்களை நதீமிடம்  சொன்னாலும் அதனை வண்டியில் உள்ள அனைவருக்கும் பொதுவாகச் சொல்வது போல இருந்தது.  தான் கடந்த பத்து வருடங்களாக கனடாவில் வசித்துக் கொண்டிருப்பதையும், அவளுடைய கணவர் அங்கு மருத்துவராக இருப்பதையும்     ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தாயாரைப் பார்க்கத் தான் லக்னோ வருவதையும் சொன்னாள்.  அவள் கனடாவுக்குச் சென்ற போது ராஜூ ஓராண்டுக் குழந்தையாக இருந்தான்.  இப்போது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான்.  பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரௌலி கிராமத்துக்கு தனியாகப் போயிருக்கலாம்.  ஆனால் அம்மா தனியாகப் போகவேண்டாம்.  யாரையாவது கண்டிப்பாகத் துணைக்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று சொன்னதால்  இந்த ஆண்பிள்ளையை உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டியதாகப் போயிற்று.  தன்னுடைய மருமகனை புன்சிரிப்புடன் பெருமையாகப் பார்த்தாள்   மதம் பிடித்த யானையைப் பற்றிய அச்சம் இருந்ததால் மிகவும் சோகையாகப் புன்னகைத்தான் ராஜூ.   வழியில் நிலைமை சரியாக இல்லாததால் மாலைக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று அம்மா கண்டிப்பாக சொல்லியிருப்பதாக சொன்னாள்.

டாக்டர் வாக்கர் அருகில் இருந்த ரமேஷிடம் திடீரென்று ஏதோ தேவையற்ற விஷயம் ஒன்றை உரக்கப் பேசத் துவங்கியதால் இந்த இடத்தில் அவள் தன் பேச்சை சற்று நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.  டெராய் பகுதியில் பிரச்னைகள் துவங்கியதால் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைப் பயணத்தைத் தவிர்த்து வருவதாக ரமேஷ் சொன்னான்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிபித் மற்றும் பூரண்பூரில் ஒரு பேருந்தை நிறுத்தி…

சிறுவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டு அவனுடைய கவனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.  அவளுக்கு வசதியாக இருக்கும் வகையில் அந்தப் பையனின் நம்பிக்கையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான் நதீம்.    ராஜூவின் நம்பிக்கையை வென்றது போலத் தோன்றியதும் அவள் சற்று இறுக்கம் தளர்ந்தாள்.  இது நதீமுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.  அவன் சிறுவனுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.

“அந்த மதம் பிடித்த யானையைக் கொல்ல நிறைய துப்பாக்கிகள் வேண்டும்”

“உங்க கிட்டே துப்பாக்கி இருக்கா?”

“இருக்கு,  இரண்டு துப்பாக்கிகள் இருக்கு.  துப்பாக்கியில் இருக்கும் புல்லட்டுகள் யானைகள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதற்கு பெரிய அளவில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தேவை”

“துப்பாக்கிகளில் வேறுவேறு ரகங்கள் உண்டா?” என்று சிறுவன் கேட்டான்.

“ஆமாம்.  குண்டுகளின் எடை மற்றும் அவை வெளிச்செல்லும் வேகத்தைப்  பொறுத்து துப்பாக்கிகள் வித்தியாசப்படுகின்றன.   30 ஸ்பிரிங் ஃபீல்டு, 315 கார்பைன் போல”

நதீம், சிறுவனிடம் பேசிக்கொண்டிருந்தாலும், அவனுடைய உரையாடல் முழுக்க அவளை நோக்கியே இருப்பதை ரஷீத் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக நதீம் மேற்கொண்ட  முயற்சிகளையும் கவனித்தான்.

நதீம் சொல்லிக் கொண்டிருந்தான்.  “யானையைக் கொல்ல நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி 375 மாக்ஸிம்.  இதன் புல்லட்டின் எடை மற்றும் அதன் வேகத்தின் விகிதத்துக்கு  இணையாக இந்த உலகில் வேறு எந்தத் துப்பாக்கியும் கிடையாது”

“விகிதம் என்றால்?” என்றான் சிறுவன்.

“விகிதம், விகிதம், அதாவது சரிசம விகித அளவில்…”

“ஆனால் விகிதம்னா கணக்கு இல்லையா?”

“கண்ணா, இதில் கிடைக்கிற அதே எடையும் வேகமும் மத்ததிலேயும் கிடைக்கணும் இல்லையா?” என்று சமாளித்தான் நதீம்.  சிறுவனின் கேள்வியில் அவன் சற்று தடுமாறிப் போயிருந்தது தெரிந்தது.

“யானையை சுடும்போது துப்பாக்கிக் குழாய் அடைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் சிறுவன்.

“தம்பி நல்ல விஷயமா  பேசுப்பா” என்று ஆஸிஃப் அவனை இடைமறித்தான்.

“அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எங்கள் துப்பாக்கியால் யானையை சுட்டு விரட்டி விடுவோம்” என்றான் நதீம்.

“அது ஓடிப்போகலைன்னா?”

“பெருசா தீயைக் கொளுத்தி அதை விரட்டி விடுவோம்”

“தீ என்றால் யானைக்கு பயமா?

“இரவில் வெளிச்சத்துக்கு யானை பயப்படும்.  நதீம் பதில் சொல்வதற்கு முன்பு குறுக்கிட்டான்  ரஷீத்.

தீயைக் கொளுத்த உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று சிறுவன் கேட்டான்.

“ஆமாம் ஜனாப்.  எங்க கிட்டே இருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் டாக்டர் வாக்கர்.   தீப்பெட்டியை எடுத்து சிறுவனிடம் ஆட்டிக் காண்பித்து,  சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார்.

ராஜு அந்தத் தீப்பெட்டியை நீண்ட நேரமாகக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

உரையாடல் மீண்டும் சூடுபிடித்தது   மாவட்டம் முழுக்க  திருடர்களும் கொள்ளைக்காரர்களும் நிரம்பி இருப்பதாக அம்மா சொன்னதாவும் அதனாலேயே தான் மாலை இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேரவேண்டும் என்றும் அவள்  சொன்னாள்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் தான் எப்போதோ படித்த கதைகளையெல்லாம் அந்தப் பெண்மணியுடன்  பகிர்ந்து கொள்ளும் நோக்கில் தன்னுடைய நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தான் நதீம்.  “இங்கிருந்து கனடாவில் குடியேறியவர்கள் படும் பாடு பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் வருகிறது.  அங்கு குடியேறிய  ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள முரட்டு தடியர்களால் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப் படுகிறார்கள் – வதைக்கப் படுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான்.

‘சிறுமைப்படுவது’ என்ற வார்த்தையை ஏனோ கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அழுத்தம் கொடுத்து அவன் சொன்னது போலத் தோன்றியது. அவன் கொஞ்சம் அத்துமீறுவது போலத் தோன்றியது அவளுக்கு. கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்ந்தாள்.  பிறகு நிதானமாகவும் விரிவாகவும் விளக்க முயற்சித்தாள்.  “இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக லண்டனில்தான் அதிகமாக நடக்கும்.  கனடாவில் வேறுவகையான பிரச்சினைகள் இருக்கின்றன” அந்தப் பிரச்னைகள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

ஒருமாதிரி தர்மசங்கடத்துக்கு ஆளான நதீம், பேச்சை மாற்ற முயற்சித்தான்.  மதம் பிடித்த யானை எப்படி எல்லாம் நாசம் விளைவிக்கும் என்று ஆரம்பித்தான்.  இப்படி யானைகளுக்கு மதம் பிடிக்கும்போது காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சாலைகளில் பணிபுரிகிறவர்கள், காடுகளில் புல் அறுக்கவும்,   சுள்ளி பொறுக்கி வாழ்க்கையை நடத்துகிற பெண்களுக்கும் பெரும் பிரச்சினை.  புல் அறுக்காமல் இருப்பதால் இந்தப் பகுதியில் புதர்கள் அடர்ந்து பெருகியிருக்கின்றன.  தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து இங்கு புல்லை அறுப்பதற்கு யார்தான் வருவார்கள்.   தேன் சேகரிப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  விறகு வெட்டிகள் ஆண்டு முழுதும் வேலையின்றி கஷ்டப்படுவார்கள்.  இவை எல்லாவற்றை விட எங்களால் இப்போது மிருக வேட்டைகளுக்கு சுத்தமாகப் போகமுடிவதில்லை.  எந்த மரத்தின் பின்பக்கத்தில் இருந்து அல்லது எந்தப் புதரில் இருந்து அந்தப் போக்கிரி யானை தன்னுடய தும்பிக்கைகளைத் தூக்கிக் கொண்டு எங்களைத் தூக்கி நசுக்கி எறியக் காத்திருக்குமோ என்று பயத்துடனே நாங்கள் காட்டுக்குள்ளே வரவேண்டியிருக்கிறது” என்றான்.

ரேஞ்ஜர் அலுவலகத்தை அடைவதற்கு முன்பு ஒரு மரத்தூணில் ஆணியடித்து வைக்கப்பட்டிருந்த உலோகப் பலகையின் மீது வண்டியின் வெளிச்சம் பட்டது.  ஹிந்தியில் “யானைகள் கடக்கும் பாதை – ஜாக்கிரதை” என்று அந்த போர்டில் எழுதியிருந்தது.

ராஜூவும் அதனைப் படித்து விட்டு அவளை இன்னும் நெருக்கி உட்கார்ந்தான்.  நதீம் வண்டியின் விளக்குகளை அணைத்து விட்டு திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.  என்ஜினை அணைத்தபிறகு  அந்தக் காட்டுப் பகுதியின் அடர்ந்த நிசப்தம் பிரத்யேகமாகத் தெரிந்தது.

“யானைகள் நம்மைக் கடக்கின்றன” என்று குசுகுசுவென்ற குரலில் கூறினான் நதீம்.

அடர்த்தியான   இருளில் யானைகள் கூட்டமாகப் பாதையைக் கடந்து சென்று கொண்டிருந்தன.  காட்டிலும் ஜீப்புக்கு உட்புறமும் எங்கும்  நிசப்தம் பரவியிருந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, என்ஜினை உயிர்ப்பித்து, நிஷான்கட் பகுதியின் ரேஞ்ஜர் அலுவலகத்தை அடையும் வரை வண்டியை மிகவும் வேகமாக ஓட்டினான் நதீம்.  ஜீப்பை நிறுத்தி விட்டு அவளையும் சிறுவனையும் உற்றுப் பார்த்தான்.  தங்களைக் கடந்து சென்ற யானைக்கூட்டத்தில் அந்தப் போக்கிரி யானை இல்லையென்றும் இந்த மந்தையின் யானைகள் அனைத்தும் மிகவும் சாதுவானவை என்றும் சொன்னான் நதீம்.  போக்கிரி யானை எப்போதுமே கூட்டத்தில் இருந்து தன்னைத் தனியாகவே வைத்திருக்கும்” என்றான்.

ரேஞ்ஜர் அலுவலகக் காம்பவுண்டில் குளிர்காயக் கொளுத்தியிருந்த தீயின் வெளிச்சத்தில் இவர்கள் அனைவரும் ஏதோ விசித்திரமான பிராணிகளைப் போலக் காட்சியளித்தார்கள்.  தீயின் ஜூவாலைகள் உயர்ந்து எரிந்த போது இவர்களின் நிழல்களும் கூடவே பெரிதாகின. ஜூவாலைகள் தணிந்துபோது நிழல்களும் சிறிதாயின.

ரேஞ்ஜர் அலுவலகத்தைக் காடு சூழ்ந்திருந்தது.  உயரமான மரங்களில் வெண்பனியும் நிசப்தமும் குடியிருந்தன.

ரேஞ்ஜர் அலுவலகத்தில் மூட்டப்பட்டிருந்த தீயைச் சுற்றிச் சிலர் குளிர் காய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த ராஜூவின் முகத்தில் பழைய களை திரும்பி வந்ததைப் போலிருந்தது.  ஜீப்பை விட்டு இறங்கியபடி, “போக்கிரி யானைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து   தங்களுக்காக ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்ள முடியாதா? என்று நதீமைக் கேட்டான்.

இந்தப் பையன் ஏன் இப்படி விசித்திரமாக எல்லாம் யோசிக்கிறான் என்று எண்ணியபடியே வண்டியை விட்டு இறங்கிக் கதவை மூடினான் நதீம்.

ரேஞ்ஜ் ஆபீசர் கம்பீரமாக சீருடை அணிந்து    எல்லோருடனும் கைலுக்கிக் கொண்டிருந்தார்.

“உன்னுடைய மகனா?” என்று நதீமைக் கேட்டார்.

“இல்லை.  வழியில் பரௌலியில் இவர்களைப் பார்த்தோம்” என்று மீதிக் கதையையும் ஆபீசரிடம் சொன்னான்.

“அப்படியா?  எனக்குக் கிளம்புவதற்கு ரொம்ப நேரம் பிடிக்குமே.  டிஎஃப்ஓ சாஹிப் மோதிப்பூர் ரோடு வழியாக நேபாளம் போயிருக்கிறார்.   கஸ்டம்ஸ் அதிகாரிகள் எங்கள் ஆள் ஒருத்தனை அங்கே பிடித்து வைத்திருக்கிறார்களாம்.

பெண்மணியின்  முகம் வாடிப்போனது.

“பயப்படவேண்டாம்.  லக்னோவுக்கு ஒரு வயர்லெஸ் செய்தி அனுப்புகிறேன்.  நீங்கள் எல்லோரும் இங்கே பத்திரமாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் உங்கள் வீட்டுக்கு சொல்லி விடுவார்கள்.

“ஆனால் இவர்களை  வீட்டுக்கு எப்படித் திருப்பி அனுப்புவது?” என்று டாக்டர் வாக்கர் கேட்டார்.

“நீ ரேஞ்ஜர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.  அவருடைய மனைவி மிகவும் நல்ல பெண்மணி.  எங்கள் எல்லோரையும் தன் சகோதரர்களைப் போல எப்போதும் நடத்துவாள்” என்று அவளிடம் சொன்னான் நதீம்.

அவள் சற்றுத் தயங்கி நின்றாள்.  போக்கிரி யானையின் அட்டகாசத்தால்   மனைவி மக்கள் எல்லோரும் தன் மாமியார் வீட்டுக்குப் போயிருப்பதாகவும்  மாமனார் வந்து   மகளையும் பேரன்களையும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் ரேஞ்ஜர் சொன்னார்.

ரேஞ்ஜர் அலுவலகத்தின் பழைய கட்டிடங்கள் முள்கம்பி வேலியால் சூழப்பட்டிருந்தது.  இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஜீப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  அவற்றில் காட்டு இலாகா ஊழியர்கள், வேட்டைக்காரர்கள், உடன்வந்த பெண்மணி மற்றும் சிறுவன் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள்.  அவள் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள்.  அழுவதற்குத் தயாராக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

“நேரமாகிறது” என்ற டாக்டர் வாக்கர், அங்கு சூழ்ந்திருந்த அமைதியைக் குலைத்தார்.  “சரி, இன்றைக்கு என்ன செய்தி?” என்று ரேஞ்ஜ் ஆபீசரைக் கேட்டார்.

“மோதிப்பூர் பிளாக்கில் பழைய கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் பிளாட் 1955ல்  இன்று புலித் தடங்கள் காணப்பட்டன” என்றார்.

“இன்று என்ன புலிவேட்டை ஆடப்போகிறீர்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ஆஸீஃப்.

“அதெல்லாம் இல்லை.  என்ன விஷயம் என்றால் எல்லோரும் ஒருவகையான பயத்தில் இருக்கிறார்கள்.  இன்னும் அதிகமாக பயப்படுத்தினால் செத்தே போய்விடுவார்கள் போலிருக்கிறது.  அந்தப் போக்கிரி யானை வாட்ச்மேனை இழுத்துச் சென்று அடித்துத் துவைத்ததில் இருந்தே பயங்கரமாக பீதி கிளம்பி இருக்கிறது,  இன்று இந்த இடத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு இந்தப் பீதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத்தான் போகவேண்டும்” என்றார் ரேஞ்ஜர்.

“அல்லாதான் எஜமானர்” என்றார் டாக்டர் வக்கர்.

“இப்போது என்னதான் தீர்மானித்து இருக்கிறீர்கள்?” என்று நதீமையும் பெண்மணியையும் கேட்டார் டாக்டர் வாக்கர்.

நதீம் பதில் ஒன்றும் சொல்லவில்லை.  ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி அதன் சிறிய ஜூவாலையை ராஜூவுக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவள்  மிகவும் நிதானமாக, அதே நேரத்தில் உறுதியாகச் சொன்னாள், “என்னுடைய வீட்டுக்கு வயர்லெஸ் மூலமாக செய்தியை அனுப்புங்கள். தயவு செய்து எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.  ரேஞ்ஜர் அலுவலகத்தில் எங்களைத் தனியாக விட்டுப் போகாதீர்கள்” என்றாள்.

“உண்மையாகவே யோசித்துத்தான் சொல்கிறாயா?  இந்த சின்னப் பையன் வேறு உன்னோடு இருக்கிறானே.  அந்த மதம் பிடித்த போக்கிரி யானையைப் பார்த்து நீங்கள் இருவரும் மிரண்டால் என்ன செய்வது?”

“என்ன நடக்குமோ அது நடந்துதான் தீரும்.  காட்டு மிருகங்களிடம் எனக்கு பயம் கிடையாது.  என்னுடைய கல்யாணம் ஆப்பிரிக்க மொழியில்தான் நடத்தி வைக்கப்பட்டது.  ஜிம்பாப்வே காட்டில் நானும் என் கணவரும் வேட்டையாடி இருக்கிறோம்.  அங்கே தான் தேனிலவுக்கும் போயிருந்தோம். பர்மிட் வாங்கி அங்கே போனோம். நானே ஒரு காட்டு எருமையை சுட்டுக் கொன்றிருக்கிறேன்”

இதைக் கேட்ட நதீம் சற்று மிரண்டு போனான்.

“அது சரி,  ராஜூ… என்று இழுத்தான்.

“அவன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வான்” என்றாள்.

வண்டியின் பெட்ரோல் டாங்க் நிரப்பப்பட்டது.  காம்பவுண்டில் மூட்டப்பட்ட    தணப்பைச் சுற்றி  அனைவரும் உட்கார்ந்து கொண்டார்கள். சாண்ட்விச் சாப்பிட்டார்கள்.  டீ குடித்தார்கள்.  சிகெரட்டுகள் கொளுத்தப்பட்டன.  அலுவலகத்தின் ஓய்வு அறையைப் பயன்படுத்தினார்கள். ரைபிள்கள் மற்றும் துப்பாக்கிகளை சரிபார்த்துக் கொண்டார்கள்.

“இப்போதும் அதே உபாயத்தைத்தான் நாம் கையாளப் போகிறோம்.  கிட்டே நெருங்கினால் மட்டுமே துப்பாக்கியை உபயோகிப்போம்.  தூரத்தில் இருந்தால் வானைத்தை நோக்கிச் சுட்டு விரட்டி விடுவோம்.  அதனை நாம் காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது.  காயப்பட்டால் அது என்ன செய்யும் என்று யாராலும் சொல்ல முடியாது” என்றார் டாக்டர் வாக்கர்.

ரமேஷூம் வனத்துறை ஊழியர்களும் ஜீப்பின் கண்ணாடியில் படிந்திருந்த பனியின் ஈரத்தை மும்முரத்துடன் துடைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் துடைக்கத் துடைக்க ஈரமாகும் அளவுக்குப் பனி அதிகமாக இருந்தது.

“சர்ச் லைட்டை சரிபார்த்தீர்களா?” டாக்டர் வக்கர் கேட்டார்.

“ஆச்சு” என்றான் ரமேஷ், துணியை உதறிக் கொண்டே.

“இந்தப் பனிதான் நிறையத் தொந்தரவு தரும்.  கண்ணாடியை மேலே ஏற்றினாலும் எப்படியாவது   உள்ளே நுழைந்துவிடுகிறது” என்றார் டாக்டர் வாக்கர்.

“வேறு வழியில்லை.    இன்று ஏன் இப்படிக் கொடூரமாகக் கொட்டுகிறது என்று தெரியவில்லை” என்று அலுத்துக் கொண்டான் நதீம்.

தூரத்தில் இருந்து ஒரு வெளிச்சப்புள்ளி இவர்களை நோக்கி வந்தது.  அருகில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து இருவர் இறங்கினார்கள்.  ஒருவனிடம் துப்பாக்கி இருந்தது.

துப்பாக்கி சுமக்காத இன்னொருவன் முன்னே நெருங்கி, “இங்கே ரேஞ்ஜர் சாஹிப் யார்?” என்று கேட்டான்.

நான்தான்” என்று சற்று பதட்டத்துடன் முன்வந்தார் ரேஞ்ஜர்.  நெருப்புக்கு அருகில் சற்று நெருங்கி நின்றிருந்ததால் அவருடைய நெற்றி வியர்வையால் நனைந்திருந்தது.  “போக்கிரி யானை ஏதாவது அசம்பாவிதமாக செய்துவிட்டதா?” என்று கேட்டார்.

“இல்லை சார்.  உங்கள் மாமனார் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டி பிஜ்னூர் அருகில் தாக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது” என்று அந்த ஆள் தடுமாறிக் கொண்டே சொன்னான்.

தன்னுடைய குழந்தகளின் பெயர்களை சொல்லி கிறீச்சிட்டு பெரிய குரலில் அலறி அழுத் துவங்கினார் ரேஞ்ஜர்.

டாக்டர் வாக்கர் அவசரமாகக் குறுக்கிட்டார்.  “முழு செய்தியையும் கேட்போமே.  ஏம்பா, யாருக்காவது உயிருக்கு ஏதாவது ஆபத்து உண்டா?” என்று அவனைக் கேட்டார்.

“டெலிபோனில் எல்லா விஷயங்களையும் எங்களால் சரியாகக் கேட்க முடியவில்லை.  அடிக்கடி தொடர்பு துண்டித்துப் போனது” என்றான் இன்னொருவன்.

“கொள்ளைக்காரர்கள் ஏதாவது தாக்கினார்களோ?” என்று கலவரமான குரலில் கேட்டாள் பெண்மணி-
“தெரியாது.  போன் லைன் பழுதாகியிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

“இப்போது இன்னொரு வகையான கஷ்டமும் சேர்ந்திருக்கிறது” என்றான் ஆஸீப்.

“டெராய் பிரச்னையாகவும் இருக்கலாம்” என்று சிறிது யோசனைக்குப் பிறகு ரஷீத் சொன்னான்.

பிஜ்னோரில் இருந்து டெராய் தூரம் அதிகம்.  ஆனால் உண்மையில் பிரச்னை இருக்கும் இடம் ரொம்ப அருகிலேயே இருக்கிறது” என்றான் நதீம்.

“எதையாவது யூகம் செய்து கொண்டிருப்பதில் என்ன பயன்?  நீங்கள் எல்லாம் ரொம்ப அதிகமாகப் பேசுகிறீர்கள்” என்று திடீர்க் கோபத்துடன் சீறினார் டாக்டர் வாக்கர்.  எல்லோரும் அவரையே பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு ரேஞ்ஜரிடம் போனார் டாக்டர் வாக்கர்.  “மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பஹ்ரைச் போய்விடுங்கள்.  அங்கிருந்து பிஜ்னோரில் யாரையாவது தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை விசாரியுங்கள். வனக்காவலர் யாரையாவது கூட அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்.  நீங்களே வண்டியை ஓட்ட வேண்டாம் என்றார் டாக்டர்.

ரேஞ்ஜர் அங்கிருந்து கிளம்பிய பிறகு அந்த இடத்தில் நீண்ட நேரம் அமைதி நிலவியது.  யாரும் ஒன்றும் பேசவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சடசடப்பு மட்டுமே தனித்துக் கேட்டது.    கைகளைத் தணப்புக்கு எதிரில் காட்டித் தேய்த்தவாறே சொன்னார் டாக்டர், “இப்போது எல்லாம், எங்கே பார்த்தாலும், அதாவது எல்லாப் பகுதிகளிலும்… எல்லா ஜனங்களிடையிலும்…” – ஓரிரு நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் சொன்னார், “ஆண்டவன் பெயரால் நாம் எந்த வேலையை செய்வதற்காக இங்கே வந்தோமோ அதைச் செய்ய ஆரம்பிக்கலாம் வாருங்கள்.  எல்லோரும் ஜீப்பில்   உட்காருங்கள்” என்றார்.

டாக்டர் வாக்கர் ஜீப்பின் முன்பக்கமாக ஏறி நதீம் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.  ஆஸீஃப், பெண்மணி, ராஜூ மற்றும் ரஷீத் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்கள்.  ரமேஷ் ஜீப்பின் கடைசியில் இருந்த ஒரு தனி இருக்கையில் உட்கார்ந்தான்.

.

ரமேஷையும் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பார்த்து அந்தப் பெண்மணி லேசாகப் புன்னகைத்ததை கவனித்தான் ரஷீத். இவன் தன்னைப் பார்த்ததை கவனித்ததும் புன்னகைப்பதை நிறுத்தி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.  துப்பாக்கியையும் அதை செங்குத்தாக ஏந்திக் கொண்டிருந்த ரமேஷையும் கள்ளத் தனமாகப் பார்த்துக் கொண்டான் ரஷீத்.

ரேஞ்ஜரின் மனைவியும் குழந்தைகளும் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும் ரமேஷின் முகம் வெளுத்தும் இறுகியும் போனதை நினைத்துக் கொண்டான் ஆஸீஃப்.  ரேஞ்ஜர் அலுவலகத்தின் ஊழியன் ஒருவன், பிஜ்னோர் பகுதியில் ‘அது போன்ற கலவரங்கள்’ உருவாகி வருவதைப் பற்றி முனகியதையும் நினைத்துக் கொண்டான்.  இதனை ரேஞ்ஜர் அலுவலகத்தின் ஊழியன் யாராவது சொன்னானா?  அல்லது நதீம் சொன்னானா?  அல்லது உடன் இருந்த ஆடுமாடு மேய்க்கிறவர்கள் யாராவது சொன்னார்களா?  அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.  எனக்குத்தான் அப்படித் தோன்றியிருக்கிறதோ?  ஒருவேளை நானே சொல்லியிருக்கலாமோ?  ஆஸீஃபின் மூளை செயலற்று உறைந்தது.  ஜீப் உயிர் பெற்று உறுமிக் கிளம்பியது.

டாக்டர் வாக்கர்  துப்பாக்கியின் தோட்டாக்களை சரி பார்த்துக் கொண்டார்.  ரைபிளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக உட்கார்ந்து கொண்டார்.  ரஷீத்   ரைபிள்களில் ஒன்றை லோடு செய்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே கவனத்துடன் பார்வையைப் பதித்து பின்னே சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

“யாரும் சத்தம் எழுப்பக் கூடாது.  யானையின் காதுகள் மிகவும் கூர்மையானவை” என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னார் டாக்டர் வாக்கர்.

“அந்த இடத்துக்கு இன்னும் கொஞ்சம் தூரம்  போகவேண்டும்” என்றான் நதீம்.

“இருக்கட்டுமே.  இப்போது கொஞ்சம் அமைதியாக இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

டாஷ்போர்டில் இருந்து ஒரு துணியை உடுத்து முன்பக்கக் கண்ணாடியைத் துடைத்தான் நதீம்.  ஆனால் கண்ணாடியின் வெளிப் பக்கம் பனி அடர்ந்திருந்தது.  வைப்பர் பரபரப்பாகக் கண்ணாடியைத் துடைத்தாலும் பனிமூட்டம் விலகவில்லை.  வண்டியின் ஹெட்லைட் துளைத்த இடங்களைத் தவிர வெளியில் அனைத்தும் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன.

“ஜன்னலைத் திறந்து வைத்தால் கண்ணாடிக்கு உள்ளே இருக்கும் பனி விலகிவிடும் என்றான் நதீம்.

“வேண்டாம்.  அப்படி செய்யக் கூடாது.  அது ஆபத்தானது என்றார் டாக்டர் வாக்கர், மிகவும் சிறிய குரலில்.

“பிறகு உள்ளே பனி சேர்ந்து பார்வையை சுத்தமாக மறைக்கும்.  நாம் வெளியில் எதையும் பார்க்க முடியாது” என்றான் ரஷீத்.

“நாம் இதை வைத்துக் கொண்டுதான் மேலே தொடரவேண்டும்” என்றார் டாக்டர் வாக்கர்.

”சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஆஸீஃப் சொன்னான், முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ கண்ணாடி வழியாகவோ எதையும் பார்க்க முடியவில்லையே…”

இந்தப் பக்கம் வெளிச்சம் இல்லை.  ஹெட்லைட் தகராறு பண்ணுகிறது.

“இன்னும் நாம் போகப்போக பனிமூட்டம் அதிமாகி விடும் என்று முணுமுணுத்தான் நதீம்.

“நதீம், வைப்பரைப் போடு” என்றார் டாக்டர்.

“அதெல்லாம் செய்தால் பேட்டரி காலியாகிவிடும்” என்று மறுத்தான் நதீம்.

மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டினான்.  ஹெட்லைட் வெளிச்சத்தில் அடர்ந்த பனிமூட்டம் புகை வளையங்களாக  சுருண்டு கொண்டிருந்தது.  பனியின் அடர்த்தியில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

“அங்கு திரும்பி நிற்பது   சிறுத்தைக் குட்டியா?” பாதையை உற்றுப் பார்த்துக் கொண்டே டாக்டரிடம் கேட்டான் நதீம்.

“அது முயல்.  இந்தப் பனிமூட்டத்தில் எல்லாமே அதன் அளவுக்குப் பெரியதாகவே தெரியும்” என்றார் டாக்டர்.

ஜீப்  நெருங்கும் ஒலியைக் கேட்டு முயல் நின்று திரும்பிப் பார்த்தது.  அதன் கண்களில் ஹெட்லைட் வெளிச்சம் தெறித்தபோது தலையில் இரண்டு நீல விண்ண விளக்குகள் ஒளிர்ந்ததுபோலத் தோன்றியது.

“ஹை…   கண்களைப் பாருங்க… எப்படி மின்னுது” என்று கூச்சலிட்டான் ராஜூ.

“சும்மா இரு.  சத்தம் போடாதே…” என்று அவனைக் கடுமையாகக் கடிந்துகொண்டார் டாக்டர்.  பிறகு பின்பக்கமாகத் திரும்பி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அந்தக் கணத்தில் ராஜூவைத் தவிர அந்த ஜீப்பில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்தான் ரமேஷ்.  ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக, மிகவும் கவனமாகப் பார்வைப் பதித்தான்.

ராஜூவைத் தவிர மற்ற அனைவரும், ரமேஷ் தங்களை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்தார்கள்.  ஜீப்புக்குள் இருட்டாக இருந்தாலும் அவனுடைய கண்கள் எவ்வித பிரயாசையும் இல்லாமல் அவர்களைத் துளைத்துக் கொண்டிருந்தது போல இருந்தது.  ராஜூவைத் தவிர மற்ற அனைவரும் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார்கள்.

ராஜூ தலையை உயர்த்தி மெல்லிய குரலில் கேட்டான், “ஆண்ட்டி, தரோகாஜியின் மனைவியையும் பிள்ளைகளையும் யார் கொன்றார்கள்?

நதீம் பிரேக்கை அழுத்தினான்.  ஜீப் குலுங்கி நின்றது.  விளக்கை அணைத்தான்.

“போக்கிரி நமக்கு நேர் எதிராக நிற்கிறது” அவனால் அடுத்த வார்த்தையைப் பேச முடியவில்லை.

அச்சம் சில்லென்ற குளிர்க்காற்றாய்   அவர்களின் முதுகுத் தண்டு வழியாக இறங்கியது.

“எந்தப் பக்கம் நிற்கிறது?” ரைபிளின் பாதுகாப்பு பட்டனை விடுவித்துக் கொண்டே மிகவும் கிசுகிசுப்பான குரலில் டாக்டர் கேட்டார்.  அவர் கேட்டது நதீமின் காதில் விழுந்திருக்குமா என்பதே சந்தேகம்தான் என்கிற வகையில் மிகவும் மெல்லிய குரலில் பதற்றத்துடன் கேட்டார்.

“வலதுமுனையில் இருந்து இடதுபுறமாக… அல்லது இடது மூலையில் இருந்தா… தெளிவாகத் தெரியவில்லை…”

“நதீம்… விளக்கைப் போடு.  வெளிச்சமே இல்லையே…  என்ன செய்வது இப்போது?”

விளக்கைப் போடுவதற்கு நதீம் முற்பட்டபோது ரமேஷ் பின்பக்கத்தில் இருந்து கிசுகிசுத்தான்.  “வண்டியின் பின்பக்கத்தை  ஒட்டி நிற்கிறது.

எல்லோரும் அச்சத்துடன் பின்புறம் திரும்பிப் பார்த்தனர்.  பெரிய கறுப்பு உருவம் ஒன்று வண்டியின் பின்பக்கமாக அசைவற்று நின்று கொண்டிருந்தது.

திடீரென்று ஆஸீஃப் டாக்டர் வாக்கரை நெருங்கி அவருடைய தோளை இறுகப் பற்றினான்.  “இதோ இங்கே இருக்கிறது. என்னுடைய ஜன்னலுக்கு அருகில்.  மிகவும் நெருக்கமாக”

எல்லோரும் அந்தக் கண்ணாடி ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்தார்கள். தெளிவற்ற கலங்கலான உருவம் ஒன்று அங்கு நின்றிருந்தது.  அவர்களுடைய இதயங்கள் படபடத்தன.

“தும்பிக்கையை இந்த ஜன்னல் மீது வைத்திருக்கிறது” ரஷீத் கிசுகிசுத்தான்.

எல்லோரும் ரஷீத் உட்கார்ந்திருந்த பக்கத்தை உற்றுப் பார்க்கத் துவங்கினார்கள்.

எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி நதீம் சைகை செய்தான்.  “என் பக்கமாக நின்றிருந்த போக்கிரி இப்போது அங்கே நிற்கிறது போலிருக்கிறது” என்று கிசுகிசுத்தான்.

“உன்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?  குறி பார்த்து சுட முடியுமா?” டாக்டர் வாக்கர் கேட்டார்.

“அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.  கண்ணாடியைப்  பனி மூடியிருக்கிறது.  இறக்கிப் பார்க்கட்டுமா?

“வேண்டாம்.  இறக்காதே.  கண்டிப்பாக இறக்காதே.  அப்படிச் செய்தால் நாம்   விடும் மூச்சுக் காற்றின் சத்தம் அதற்குக் கேட்கும்.

அவள், அச்சத்தால் வெளிறிப்போன     சிறுவனின் முகத்தைப் பார்த்தாள்.  அவன், அவளுடைய மடியில் முகத்தை இறுக்கப் புதைத்துக் கொண்டான்.  அவனை பதற்றத்துடன் பற்றியபடியே வண்டியில் இருந்த எல்லாக் கண்ணாடி ஜன்னல்களின் வழியாகவும் மிகவும் பிரயாசைப் பட்டு உற்று நோக்கினாள்.  கண்களை மூடி சில்லென்று முகத்தில் துளித்திருந்த வியர்வையைத் துடைத்தாள்.

“நம்மை நோக்கி மிகவும் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது” நடுக்கத்துடன் கூடிய குரலில் ரமேஷ் கிசுகிசுத்தான்.  தன்னுடைய மூக்கை கண்ணாடி ஜன்னலில் அழுத்திக் கொண்டு அப்படியே உறைந்திருந்தான்.  ஆஸீஃபும் ரமேஷூம் தங்கள் பக்கத்து ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் அச்சமும் குழப்பமும் நிறைந்த குரலில், “கூட்டத்தில் ஒற்றை  தந்தம் உடைந்து போன யானை இருக்கிறதா என்று பாருங்கள். உடைந்த தந்தத்துடன் சுற்றுவதுதான் போக்கிரி யானை.  அது ஒன்று மட்டுமே ஆபத்தானது”

அடர்ந்த இருளின் வழியாக வெளியே அனைவரும் மிகவும் சிரமத்துடன் உற்றுப் பார்த்தார்கள்.  தங்கள் பக்கம் இருக்கும் யானைக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பதாக ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

“நிறைய போக்கிரிகள் இருக்கின்றனவா என்ன?” என்று தனக்குள்   ஆழ்ந்து போன சிந்தனையில் மூழ்கியவர்   போல  டாக்டர் வாக்கர் கேட்டார்

இருளில் அந்த யானையின் வெறி பிடித்த கண்களையும் உடைந்து தொங்கிய ஒற்றைத் தந்தத்தையும்,  ஆங்காரத்துடன் மேல்நோக்கி உயர்ந்த அதன் தும்பிக்கையையும் கண்டனர்.

டாக்டர் வாக்கர் வற்றிப் போன போன குரலில் கிசுகிசுத்தார், “யாரும் சுடாதீர்கள். இத்தனை யானைகளை நம்மால் கொல்ல முடியாது.  நாம் இப்போது  மதம் பிடித்த யானைகளால்  சூழப்பட்டிருக்கிறோம்.    கண்ணாடி ஜன்னல் மூடியிருப்பதால் அவற்றுக்கு நம்முடைய சத்தங்கள் கேட்காது.  இல்லையென்றால்   ஒரு நொடியில் நம்மை அவை நசுக்கித் தள்ளிவிடும்.
“இப்போது என்ன செய்யலாம்?” நதீம் மிகவும் பலவீனமாக ஒடுங்கிய குரலில் கேட்டான்.

கூச்சத்துடன் கூடிய வகையற்ற அச்சத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.

“இரவு விடியும் வரை நாம் காத்திருக்கலாம்” என்று அழுகை கலந்த குரலில் பெண்மணி சொன்னாள்.

சிறுவன்  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து அதனை உள்ளங்கையில் வைத்து இறுக மூடிக் கொண்டு மயக்கம் அடைந்திராவிட்டால்… பெண்மணி சொன்ன வார்த்தை ஒருவேளை அவர்களுடைய  அச்சத்தைப் போக்கியிருக்கலாம்.

நதீம் மற்ற  யாரையும் பார்க்கவில்லை.  பின்புறமாகத் திரும்பி, கையை நீட்டி, அந்தச் சிறுவனின் மூடியிருந்த உள்ளங்கையைத் திறந்தான்.   அதனைப் பார்த்தான்.  ஒரு நிமிடம் யோசித்து விட்டு, சிறுவனின் உள்ளங்கையை மீண்டும் மூடிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.  மற்றவர்களைப் போலவே அவனும் தலையைக் குனிந்து கொண்டு அமைதியுடன், பொழுது விடிவதற்காகக் காத்திருந்தான்.

 

•••••••

சையத் முஹம்மத் அஷ்ரஃப் முன்னணி உருது படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்.  1992ல் நிகழ்ந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பினைத் தொடர்ந்த கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதை இது.  1993ல் எழுதப்பட்ட இந்தக் கதை இலக்கிய ஆர்வலர்களின் பரந்த கவனத்தை ஈர்த்தது.

•••

நன்றி- The Little Magazine.