சிறுகதை – குமாரநந்தன் – பூமியெங்கும் பூரணியின் நிழல் .

சிறுகதை

குமாரநந்தன்

பூமியெங்கும் பூரணியின் நிழல்

 

 

 

 

 

 

 
தலையில் புத்தம் புதிய முல்லை சரம் சுற்றி குளிர்மையை
உருவகித்துக்கொண்டிருக்க வெய்யிலின் காட்டம் பெருகுவதற்கு முன்பிருந்தே
அவள் அங்கு நின்றிருந்தாள். சாலையில் காலை நேரப் பரபரப்பான சலனங்கள்.
சிலர் இவளைக் கேள்வியோடு திரும்பித் திரும்பிப் பார்ப்பதுபோல இருந்தாலும்
அது வெறும் மனப் பதிவுதான் ஏனென்றால் அங்கே பஸ்ஸ¤க்காக ஐம்பதிற்கும்
மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். நகத்தைக் கடிப்பதற்காக முயற்சித்தாள்
ஆனால் எல்லா நகங்களும் எஎஏற்கனவே சதை வரை கடித்து முடிக்கப்பட்டிருந்தது.
சாலைக்கு எதிர்ப்பக்கத்திலிருந்த சந்துக்குள் இருந்து அவன் வருவது
தூரத்தில் தெரிந்ததும் வெய்யில் இப்போது வைரமாய் ஜொலித்தது. அதற்குள் ஒரு
பஸ் வந்து எதிர்ப்பக்கச் சாலையை நாடகக் காட்சியில் ஒரு திரை வேகமாக வந்து
மறைப்பது போல் மறைத்து நின்றது. இரு சக்கர வாகனங்கள் ஏராளமாய் தேங்கிக்
கொண்டிருந்த சாலையைக் கடந்து விடலாமா என்று பார்த்தாள். அதற்குள் பஸ்ஸை
சுற்றிக்கொண்டு அவன் வருவதற்கும் பஸ் கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.
அவன் வழக்கம்போலவே இருந்தது அவளுக்கு ஆறுதலாயும் எரிச்சலாயும் இருந்தது.
இந்தக் கலவையான உணர்வுகளை புதைத்துக் கொள்ள முயற்சித்துக்
கொண்டிருக்கும்போதே சாப்டியா” என்றான். அவள் எதுவும் பேசவில்லை. விடாமல்
அவள் அருகில் வந்து குனிந்து ம் ம் என்றவனை ப்ச் என்று எரிச்சலாய்ப்
பார்த்தாள். நிறைய காலி சீட்களோடு வந்து நின்ற பஸ்ஸைப் பார்த்து. வா
என்று அவளிடம் சைகை காட்டிவிட்டு ஓடிப்போய் படியில் தொற்றினான். அவள்
கிடுகிடுவென நடந்து பஸ் ஏறி சுற்றும் முற்றும் பார்த்து அவனைத் தேடினாள்.
அவன் பஸ்ஸின் நடுவில் ஒரு சீட்டில் இருந்துகொண்டு கை காட்டினான்.
ஒயிலாகப் போய் அவன் அருகில் உட்கார்ந்து “இது எங்க போற பஸ்” என்றாள்.
அவன் “திருச்சி போறது போலாமா?” என்றான். “வேணாம் நாமக்கல்லுக்கு டிக்கெட்
எடு.” டிக்கெட் எடுக்கும் வரை அவள் எதுவும் பேசவில்லை. டிவி திரையில் ஏதோ
காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அவள் முன்புற சீட் கம்பியைப்
பிடித்துக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அவன் காமெடியில்
ஒன்றிக்கொண்டான். ஐந்து நிமிடத்திற்குள் அவள் அழுவதை அவன் கண்டுகொள்வான்
என்றிருந்தாள். ஆனால் அவன் தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான். எனவே
அவள் தன் அழுகையின் குரலை லேசாக எழுப்பினாள். இனி அவன் தெரியாத மாதிரி
இருக்க முடியாது. அவள் தோளைப் பற்றி மெதுவாக அழுத்தினான். “டேய் இது பஸ்
ப்ளீஸ்.” அவள் குரலை அடக்கிக்கொண்டாள். தோள் குலுங்கிக்கொண்டிருந்தது.
அவன் தொடர்ந்து காமெடியிலேயே ஆழ்ந்திருந்தான். திடீரென அவள் அழுகுரல்
வெடித்துக் கொண்டு கிளம்பியது. பஸ்ஸிலிருந்து ஒவ்வொரு தலையாக அவர்களைத்
திரும்பிப் பார்த்தது. தோளை அழுத்தியிருந்த அவன் கைகள் வெளிப்படையாக
நடுங்கியது. “பூரணி ப்ளீஸ்” என்றான். பத்து நிமிடம் அவள் தலை நிமிராமல்
அமைதியாய் இருந்தாள். கிட்டத்தட்ட தூங்கி இருக்கலாம். மீண்டும் அவள்
தோள்கள் குலுங்கியது. அழுகையின் சத்தம் மெல்லக் கிளம்பியபோது
சத்திரத்தில் பஸ் நின்றது. அவன் சட்டென்று எழுந்து அவள் கையைப் பற்றி
இழுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.
அழுத்தமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு மிகக் கண்டிப்பாக இயல்பு
நிலையை வருவித்துக்கொண்டு “ஏன் வண்டிய எடுத்துகிட்டு வரல” என்றாள். அவன்
சலிப்பாய் “அண்ணன் எடுத்துகிட்டுப் போயிட்டார்” என்றுவிட்டு ரோட்டைப்
பார்த்தான். ஏதோ பொறியில் சிக்கிக் கொண்டவனைப் போல இருந்தான். “என்னால
உனக்குத் தொல்ல” என்றாள். சட்டென்று அவன் நிஜமாகவே தலைவலியை உணர்ந்தான்.
தலையைப் பிடித்துவிட்டுக்கொண்டே “ஏம் பூரணி இப்பிடிப் பேசற” என்றான்.
அவனுடைய தலைவலி முத்திரையைப் பார்த்ததும் அவளுக்குக் கன்னத்தில் அறைந்த
மாதிரி கோபம் வந்தது. உதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக்கொண்டு
“நாமக்கல் போலாமா?” என்றாள் “எங்க போறது பஸ்ஸில ஏறினா நீ அழுவ
ஆரம்பிச்சிடற எல்லோரும் என்ன எப்பிடிப் பாக்கறாங்க தெரியுமா? எனக்கு
அப்பிடியே செத்துடலாம் போல இருக்குது.” அவன் உச்சரிப்பில் கசப்பின் நெடி.
அவள் அந்த நெடியில் ஒரு கணம் உறைந்து “நாம ரெண்டு பேருமே செத்துப்
போயிடலாமா?” என்றாள். அவன் அவளையே உற்றுப் பார்த்தான். “நீ அழாம வரதா
இருந்தா சொல்லு நாம நாமக்கல் போலாம். நீ அழுதியினா நாம் பாட்டுக்கு
அடுத்த ஸ்டாப்ல இறங்கி போயிட்டே இருப்பேன்.” அவளுக்கு மீண்டும் கண்
கலங்கியது “இல்லைன்னா என்ன கொன்னு போட்டுரு” என்றபோது ஒரு துளி கண்ணீர்
அவள் புடவை மடிப்புகளில் படாமல் வெய்யில் தரையில் பாய்ந்தது. அவன்
எரிச்சலின் ஆரம்பக் கட்டத்தை அடைந்தான். “இப்ப நீ வறியா நா இப்படியே
சேலம் பஸ் ஏறட்டா.” நாமக்கல் பஸ் தூரத்தே வந்தது. அவள் எதுவும் பேசாமல்
பஸ்ஸைக் கைகாட்டினாள்.
அவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை அவளைக்
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். இந்த
விருப்பமின்மை எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. அவளுக்கு நல்ல
இடத்தில் வரன் அமைந்துவிடும்போல இருந்தது இவன் வீட்டில் இவளைக் கல்யாணம்
செய்துகொண்டால் அப்பாவின் காசில் ஒரு பைசா கூட தேராது. அப்பா காசு
தனக்குக் கிடைக்காது என்பது அவளை அனுபவித்தபின்தான் அவன் புத்தியில்
வந்தது. அவன் மட்டுமல்ல அவளும்தான் அவனை அனுபவித்துவிட்டாள் இந்த
விலக்கம் முதலில் அவளிடம் இருந்துகூட தோன்றி இருக்கலாம். அவள் இவன்
கைவிட்டுக் கையறு நிலையில் நிற்பதில்தான் சந்தோசம் அடைபவளைப் போன்ற
தோற்றத்தில் இருந்தாள். அல்லது அவனைக் காதலிக்கும்போதே இவன் நிச்சயம்
தன்னைக் கை விட்டுவிடுவான் என்ற சிந்தனை வடுவின் மீதுதான் தன்னுடைய
காதலைத் தளிர்க்கச் செய்திருந்தாள். அதில் விளைந்த கனியின் புளிப்புச்
சுவையை இப்போது இருவரும் முகத்தைச் சுழித்தபடி சுவைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இதைப் போன்று கண்டுபிடிக்க நிச்சயிக்க முடியாத
காரணமென்று சொல்ல முடியாத காரணங்கள் இருவரையும் தடுமாறச்
செய்துகொண்டிருந்தன. அளவுக்கு மீறினால் ஒரு வேளை அவன் கல்யாண முடிவுக்கு
வந்துவிடக்கூடும் என்பதில் அவள் கவனமாக இருந்தாள். ஆனால் அவளின் அழுகை
அவனைப் பயங்கரமாய் அசைத்துக் கொண்டிருந்தது. அற்ப சொத்தை மனதில் வைத்துக்
கொண்டு ஒரு பெண்ணைக் கைவிடுவதன் குரூரத்தை இப்போது அவன் சிந்திக்க
ஆரம்பித்திருந்தான் என்றாலும் அவளின் நாடகத் தனத்தையும் அவன் உள்ளூரப்
பின்பற்றிக் கொண்டிருந்தான். அவள் முழுமையான நிஜத் தன்மையை
எட்டிவிடும்போது அவனை அறியாமலேயே அவள் தோள்களைப் பற்றிக் கொண்டு கவலைப்
படாதே என்றுவிடுவான். அந்த நிலையை நோக்கி மெல்ல மெல்ல அவன் மனம் உருண்டு
கொண்டிருந்தது. அவன் மன அசைவை அழுகையின் ஊடே துல்லியமாகக் கணக்கிட்டுக்
கொண்டு இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் தான் இவனைத்தான் கல்யாணம் செய்து
கொள்ள நேரும் என்ற இடம் வந்தபின் அவள் இரக்கத்தை எதிர்பார்க்கும்
பாவனையைக் கைவிட்டு வெறி கொண்ட வன மிருகமாய்ப் பார்த்தாள். இதை அவன்
எதிர்பார்க்கவில்லை அல்லது எதிர்பார்த்திருந்தான். இந்தப் பார்வையில்
அவனின் இணக்கமான மன நிலை வெடித்துத் எதிர்ப்பு நிலை கொதித்துக்
கிளம்பியது. அவள் தான் நினைத்த திசையில் சரியாக தன்னுடைய வாழ்க்கையைத்
திருப்பிவிட்டாள். பஸ்ஸில் இருந்தவர்கள் இந்த நிஜ நாடகத்தைத் திரும்பிப்
பார்க்காமல் பிடரியின் கண்கள் வழியே ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
பிரம்மாண்டமான கல்லின் மீது நளினமாக கோட்டைச் சுவரின் ஒற்றை நெளி
கருங்கல் அலை போலத் தெரிந்தது. நாமக்கல் வந்துவிட்டது. பஸ் ஸ்டேண்டில்
இறங்கி இரண்டு பேரும் வேறு வேறு திசையைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
மலைக்கோட்டைக் கல் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. சேலத்துக்குக்
கிளம்பிக் கொண்டிருந்த பஸ்ஸைக் குறி பார்த்துக் அவள் நின்றாள். அவன்
சினிமா பட போஸ்டர்களை ஒவ்வொன்றாய் மேய்ந்துகொண்டிருந்தான். சட்டென அவன்
சட்டையைப் பிடித்து ஆவேசமாய்த் திருப்பி “தேவிடியாப் பையா” என்று
கத்தினாள். அங்கிருந்த கூட்டத்துக்கு என்ன ஏதென்று புரியுமுன் ஓடிப்போய்
சேலம் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். அவனுக்கு கடுமையான அதிர்ச்சியில் முகம்
சிதைந்து விட்டதைப்போலக் கோணிக் கொண்டது என்றாலும் அத்தோடு அவள் போனது
குறித்து நிம்மதியடைந்தவனாய் அசுவாசத்தில் விழ ஆரம்பித்தான். ஒரு சிலர்
அவனை நெருங்கி வந்து என்ன விசயம் என்று விசாரிக்க நினைத்தபோது அவன்
ராசிபுரம் டவுன் பஸ்ஸில் ஏறிக்கொண்டான்.
அந்த வார்த்தை அவனுக்குள் வன்மத்தின் பெரும்புயலை மெளனமாக சுழற்றிக்
கொண்டிருந்தது. மேற்கொண்டு அவனாக எதுவும் செய்யவில்லை. காலத்தைத் தன்
கட்சிக்காக உருவகித்துக் கொண்டிருந்தான். காலம் சில காட்சிகளைத் தன்
கண்களுக்குக் காட்டும் என்று நம்பியிருந்தான். அவள் அவனைப்
பார்க்கும்போது துரோகி என்று சொல்வதைப் போலப் பார்த்தாலும் இவனைத்
தவறவிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தை ஆழமாக மறைத்துப் பார்ப்பாள். அவள் கணவன்
அவளுக்கு ஏற்றவனாக இல்லாமல் இருப்பான். அவள் குற்றவுணர்வின் கழு மரத்தில்
துடித்துக் கொண்டிருப்பாள் அப்படித் துடிக்கும்போதெல்லாம் தன்னை
நினைத்துக் கொள்வாள். நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று
சொல்லியது அவனாயிருந்தாலும் குற்றவாளி அவள்தான் என்று மனப் பூர்வமாக
நம்பினான். மேலும் அந்த சமயத்தில் அவள் போதுமான அறிவில்லாததால்
குற்றவாளியின் நிலைப்பாட்டை அடைந்தாள். வாழ்க்கை இப்போது அவளுக்குத்
தேவையான அறிவைக் கொடுத்திருக்கும். எனவே தன்னைக் குற்றம் சுமத்தியதின்
தவறை உணர்ந்திருப்பாள். இந்த ரீதியில் அவன் எண்ணிலடங்கா சித்திரங்களை
மனதுக்குள் குவித்து வைத்திருந்தான். இந்தச் சித்திரங்கள் இடைவிடாமல்
மாறி மாறித் தோன்றி அவனை எல்லையில்லாத ஆளுமையாளனாக அலங்கரிக்கத் தேவையான
மின் சக்தியை வழங்கிக் கொண்டிருந்தன. நாளாவட்டத்தில் குற்றத்தின் பெரும்
பகுதியை அல்லது முழுவதையும் அவளை நோக்கித் தள்ளிவிட்டிருந்தான். அவன்
கண்கள் ஆண் கருந்துளை போல அளவற்ற ஈர்ப்புடனிருந்தன.
ஆனால் உண்மை முற்றிலும் எதிர் திசையில் மிகவும் சாவகாசமாக நடந்து
செல்வதைப் பார்த்தபோது அவன் ஒரு பள்ளிக் கூட மாணவனைப் போல சுருங்கிப்
போனான். கடைவீதியில் அவளும் அவள் கணவனும் எதிர்ப்பட்டபோது இவன் தான்
வெளிறிப்போய் நின்றான். அவள் விடலைப் பருவ விளையாட்டாக அந்த உடலுறவையும்
நினைத்துக் கொண்டவளாக ஹாய் என்றாள். பின் ஏதோ ஒரு விசயத்தை மிகத்
தீவிரமாக விவாதித்தவர்களாகக் கணவனும் மனைவியும் கடையை விட்டு
வெளியேறினார்கள். அவன் அந்தக் காட்சியிலேயே உறைந்துபோய் வெகு நேரம் வரை
நின்றிருந்தான். இத்தனை நாளும் தான் தான் அவளை ஏமாற்றிவிட்டதாகவும் ஆனால்
அவள் ஏமாற்றிவிட்டதாக ஒரு குற்றவுணர்வை அவள் மீது வெற்றிகரமாக கற்பித்து
விட்டதாக நம்பியிருந்த தன்னுடைய அப்பாவித் தனத்தை இப்போதுதான் அவன்
புரிந்துகொண்டான். அவள் உண்மையிலேயே தன்னை ஏமாற்றி விட்டாள் என்கிற
எண்ணம் அவனின் போலி வேதனைகளையெல்லாம் அடித்துத் தள்ளியபடி சுழித்துக்
கொண்டு வந்தது. சே எதற்காக இப்படியெல்லாம் நடந்தது. ஒருவேளை தான் அவளைக்
கல்யாணம் செய்து கொள்ள எந்தத் தடையுமில்லை என்று நின்றிருந்தால் அவள்
தன்னுடைய கேவலமான மனநிலையை மறைக்க ஒரு வழியுமின்றி வெளுத்திருப்பாள்.
ஆமாம் அப்படித்தான் செய்திருக்க வேண்டும் அவள் நடிக்கிறாள் என்று உள்ளூர
உணர்ந்துகொண்டும்கூட தன் மீது பழியை ஏற்றுக் கொண்டு அவளை உத்தமியாகத்
தப்பித்துச் செல்ல விட்டிருக்கக் கூடாது. ஏன் இதெல்லாம் நடந்தது. மீறக்
கூடிய தன்னுடைய காரணங்களை மீறி அவளைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால்
ஒருவேளை அவளுக்குள் இந்தக் கேவலம் உருவாகாமல் கூட இருந்திருக்கலாம்.
உலகம் இன்னும் அழகானதாக இருந்திருக்கும்.
கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன்
வீட்டிலிருந்தவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின் வேலைக்குப்
போகும் பெண் வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டான். அவன் அம்மாவின்
ஆலோசனைப்படி இதுவரை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வேலைக்குப் போகும்
பெண்களின் பத்துக்கு மேற்பட்ட ஜாதகங்கள் தூக்கி எறியப்பட்டன. வேலைக்குப்
போகாத ஒரு ஜாதகத்தைத் தயார் செய்து கொண்டு அந்த வாரமே பெண் பார்க்கப்
போனார்கள். அவள் அடக்க ஒடுக்கத்தின் மொத்த வடிவமாக சேலையைச் சுற்றிக்
கொண்டு நின்றாள். இந்தப் பெண்ணைக் கேனையன் கூட வேணாம்னு சொல்ல மாட்டான்
என்று தரகர் அப்பாவின் காதில் குனிந்து ரகசியமாகச் சொன்னார். அவன் அவளைக்
கூர்ந்து பார்த்தான். அவன் கண்களுக்கு அவளிடம் ஏதோ ஒன்று பூரணியின்
சாயலில் இருந்தது. மெதுவாக அம்மாவிடம் திரும்பி எனக்கு வாந்தி வர்ற
மாதிரி இருக்குது என்று சொல்ல நினைத்தான் ஆனால் அப்போதுதான் அவன் அம்மாவை
உற்றுப் பார்த்தான். அவளிடம்  கூட ஏதோ ஒரு விதத்தில் பூரணியின் சாயல்
இருப்பதைப் போலத் தெரிந்தது.

**