சமயவேல் கவிதைகள்

சமயவேல் கவிதைகள்

உலகின் இமை                                   

நடு நெற்றியை மறைத்து

விரிந்த கரும்  பரப்பில் ஒரு சிறிய மஞ்சள்  புள்ளி

அருகில் ஒரு  நீலத்திட்டு

இமைகள் மேலும் இறுக

நீலத்திட்டு ஒரு வளையமாகி மஞ்சள் புள்ளியை

வளைக்கிறது

மஞ்சள் புள்ளி சுழல்கிறது

நீல வளையம் எதிர்த்  திசையில் சுழல்கிறது.

இமைகள் மேலும் இறுக

மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு

பேராழத்துள் ஓடுகிறது

நீலவளையம் விரிந்து விரிந்து

அடர் கருப்பு  இருளாய்ப் போகிறது

இமை மேலும் மேலும் இறுகுகிறது

தெருவோர சோடியம்  கனியில்

இருள் பூக்கத்  தொடங்குகிறது

எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக

உலகின் இமையாக மாறுகிறது

எனினும் அது மூடியே இருக்கிறது

பார்த்தலின் பரவசத்தை

ஒத்தி வைத்தபடி

அது மூடியே இருக்கிறது.

2. இரவு மழை

இந்த இசை

வானத்திலிருந்து அல்லது

பெருவெளியிலிருந்து

இந்தத் துளி, துளிகள், சிறுதுளிகள்,

கோர்க்கப்பட்ட துளிகள்

கனத்த துளிகள்

உக்கிரத் துளிகள்

துளிகளின் மழை

இரவு மழை

முழு இரவும் மழை

முழு இரவும் குளிர்

முழு இரவும் மின்னல்

முழு இரவும் குமுறும் இடிகள்

முழு இரவும் கறுப்பிருட்டு

முழு இரவும் கோர்க்கப்படாத இசை

முழு இரவும் வெதுவெதுப்பு

முழு இரவும் கோதுமை நிறக் காதல்

3.

பயணம்

உட்கார்ந்த நிலையில் பயணிக்கும் உடலில்

குமிழியிடும் சித்தம்

ஜன்னலோரம் ஓடும் காட்சிகளில்

கைப்பு கூடியிருக்கிறது

விழுங்க விழுங்கத் தீராத சாலைக் கருப்பு

மயில்களும் தட்டுப்படாமல் இல்லை

காணாக் காட்சிகளின் வெற்றில்

வழுக்கி விழும் சித்தம்

ஆழ்கிணற்றில் ஓயா நீச்சல்

நீரில்லாக் கண்மாயின் கலுங்கல் கற்கள்

எதையோ பேசத் துடிக்கின்றன

பெரிய கண்மாய் கிழக்கு ஓடையில் நானும் அப்புச்சியும்

தூரி போட்டிருக்கிறோம்

ஒரு விசில் சப்தத்தோடு புழுதியெழுப்பி நிற்கிறது பேருந்து

ஓலைக் கொட்டானில் வெள்ளைக் கெண்டைகளின்

மரண சுவாசம்

அப்புச்சியின் முகத்தில் நிலைகொள்ளாமல் உருளும்

எப்பாவமும் அற்ற உயிர்விழிகள்

ஒரு இலுப்பை மரம் எல்லா இலைகளையும்

உதிர்த்துவிட்டு பச்சை அழகாய் அம்மணமாய் நிற்கிறது

உயர வளர்ந்த ரயில் கள்ளியின்

உயர்ந்த சிறகுகளில் சிவப்பு மலர்கள்

இறங்கியாச்சா இல்லையா

ரைட் ரைட்

துலாபார பூஞ்சிட்டுக் கன்னங்களின்

சிவப்பு உன்னதம் என்னவெல்லாமோ ஆகிப்போனது

மூத்த ஆசானின் உடல்

முரண்களின் அலைகளில் மிதக்கிறது

எழுதி வைத்த கடிதம்

அவர் முற்றிலும் வெறுத்த ஊடகத் திரைகளில் படபடக்கிறது

மயில்களும் தட்டுப்படாமல் இல்லை

நாற்கரச் சாலையில் ஏறிப் பறக்கத் தொடங்கும்

பேருந்து ஒரு திசையிலும்

நான் ஒரு திசையிலும்.

4.

எதற்கும் எதற்கும்

கட்டண வசூலிப்பகம் தாண்டி

ஒரு ஓரமாய்

வெள்ளை ஆமையாய்

நிற்கிறது ஒரு அம்பாஸிடர்

கொஞ்சம் தள்ளி

பெரும் பாரங்களோடு

வரிசையாய் 4 டிரக்குகள்;

வாகை மரங்களைத் தாண்டி

வாறுகாலில் ஒரு சுமோ

தலைகுப்புற நொறுங்கிக் கிடக்கிறது

கிழக்கே

ஒரு சிற்பமாய் அரிவாளோடு

நிற்கிறான்

வலையங்குளம் கருப்பசாமி

திரும்பி செம்மண் கரை ஏறியதும்

தலைக்கு மேலே

ஒரு வெள்ளை விமானம்

தாழப் பறந்து மேலேறுகிறது

எதற்கும்

எதற்கும்

எந்த சம்பந்தமும் இல்லை

போய்க்கொண்டே இருக்கிறது

என்

மகிழ்

வுந்து.

•••