கலாப்ரியா கவிதைகள்

கலாப்ரியா கவிதைகள்

  

 

 

 

 

 

 

 

சற்றே விலகி இரும் பிள்ளாய்……பகுதி  2

5)

பலகையில் சாயச் சொல்லி

கண்ணைக் கட்டிக் கொண்டு

கத்தி வீசுகிறாய்

எதற்கும்

இன்னொரு சிகரெட்

புகைத்து வந்திருக்கலாமோ

ஏதும் ஆகி விட்டால் என்னும் என்

இயலாமையும் நியாயமானதுதானே

வாசனை தெரியாவண்ணம்

மூக்கையும் மறைக்குமாப்போல்

உன் முகமூடிகளைத்

திருத்திக் கொள்

அஃதொன்றும் அவ்வளவு

அதிகச் செலவு பிடிக்காது.

6)

நீ ஒன்றும் செய்ய

இயலாதிருக்கும் போது

உறக்கம் உன் உதவிக்கு

வருகிறது

தூக்கத்தில்

உடுக்கையிழக்கும் போது

அது

நிறைவேறாத கனவின்

பெண்ணால்

இழுத்து மூடப்படும்.

7)

இன்னும் கொஞ்சம்

காயட்டுமே ஞாயித்துக்கிழமை

கொடித்துணிகளெனச்

சற்றே தூங்கினோம்

கொட்டித் தீர்த்தது மழை

8)

சுமக்கிறேன் நீ

சொன்ன வார்த்தைகளைப்

பஞ்சுப்பொதி

சுமந்த கழுதையென

உன்னிலிருந்து தெறிப்பது

தண்ணீரென்றே கொள்கிறேன்

சொல்ல முடியாத

கனவு போல

வேறெதுவாகவும் கூட

இருக்கலாம்.

நனைத்துச் சுமக்கிறேன்.

நாம் யாரும் யார் தோளிலும்

தலையிலும் இல்லை

•••

Advertisements