மொழிபெயர்ப்பு சிறுகதை – கர்தார்சிங் துக்கல் – செஹர்ஜாத்

மொழிபெயர்ப்பு சிறுகதை – கர்தார்சிங் துக்கல் –

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செஹர்ஜாத்

தமிழில்: நாணற்காடன்
செஹர்ஜாத் நகரத்தில் பிறக்கவில்லை. அதன் அம்மாவும், அதன் அம்மாவின் அம்மாவும் பிறந்த காட்டில் தான் அதுவும் பிறந்தது. ஆனால் செஹர்ஜாத் பளி நகரத்தில் இருந்தது.

விஷயம் இதுதான். எங்களின் நண்பரொருவர் வேட்டையாட அழைத்திருந்தார். அப்போது அவர் பேட் பகுதியில் நியமிக்கப்பட்டிருந்தார். நானும், என் மனைவியும் மிகுந்த விருப்பத்தோடும், பலத்த ஏற்பாடுகளோடும் நூற்றைம்பது மைல்கள் பயணித்துச் சென்றோம். நாள் முழுதும் சுற்றியலைந்ததில் பல விலங்குகள் கண்ணில்பட்டன. இருந்தாலும், சில சின்னஞ்சிறு புறாக்களைத்தவிர கைக்கு வேறொன்றும் அகப்படவில்லை. நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். நகரத்தின் ஆரவாரத்திலிருந்து நீங்கி இரண்டு நாள்கள் ஆகிவிட்டிருந்தன. ஆனால், என் நண்பரான போலீஸ்காரரோ பெருத்த ஏமாற்றத்தோடு இருந்தார். நான்கு நாள்களுக்குப் பிறகு ஒரு சிப்பாய் வந்தான். அவனுடைய மடியில் மான்குட்டி ஒன்று இருந்தது. ”கேப்டன் ஐயா கொடுத்தனுப்பி இருக்கிறார்” என்று சொன்னான் அவன்.
என் மனைவி மான்குட்டியைப் பார்த்தும் மிகவும் மகிழ்ந்தாள்.
அதன் பிறகு குடும்பத்தில் அனைவரும் இந்தப் புதிய விருந்தாளியை உபசரிப்பதில் ஈடுபட்டனர். என் மனைவி எங்கிருந்தோ சலங்கையைக் கொண்டுவந்தாள். என் அம்மா அதற்கு சங்கிலி தேடத் தொடங்கினாள். நான் அதற்கு என்ன பெயர் வைக்கலாமென யோசித்துக்கொண்டிருந்தேன். பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் செஹர்ஜாத் என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது.
எங்கள் மகனின் பெயர் ஷெஹர்யார். மான்குட்டிக்கு நாங்கள் ஷெஹர்ஜாத் என பெயர் சூட்டிவிட்டோம்.ஷெஹர்யார்!செஹர்ஜாத்!
ஷெஹர்ஜாத் என் மகனை மிகவும் பிரியமாக்கிக் கொண்டது. தனது பெரிய கண்களால் மிகுந்த விருப்பத்துடன் மகனின் கன்னங்களை, முகத்தை, நெற்றியை என முழு அன்போடு பார்த்தது. அவன் முன்னால் ஆடியும் ஓடியும் சந்தோஷப்படுத்தியது. அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு அவனருகில் வந்து திரும்பிச்செல்லும். அவனோ அதன் முதுகில் சட்டென்று ஏறி அமர்ந்துகொள்வான்.
ஷெஹர்ஜாத்துக்குக் குறைவின்றி  உபசரிப்பு கிடைத்தது. ஒரு குழந்தையைப்போல் அதை நாங்கள் பார்த்துக்கொண்டோம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அகதிகள் நிறையபேர் வருவதுண்டு. அவர்கள் ஷெஹர்ஜாத்தைப் பார்த்து வியப்பில் பிரமித்துப்போவார்கள்.
ஷெஹர்ஜாத் என்னுடன் அலுவலகம் வரத் தொடங்கியது. அதை அலுவலகத்தில் யாரும் தடுக்கவில்லை. என் மனைவி  மருத்துவமனைக்கு தனது மோட்டார்காரில் புறப்பட்டுவிட்டால் போதும், வண்டியின் முன்னும் பின்னும் சென்று வட்டமிட்டு காரின் சீட்டில்போய் அமர்ந்துகொள்ளும். இதைப்பார்த்து அனைவரும் சிரித்துவிடுவர். என் மகன் தாதிப்பெண்ணுடன் வெளியில் ஊர்சுற்றக்கிளம்பும்போதும், ஷெஹர்ஜாத் முன்னால் போய் அவனின் கைகளையும், தோள்களையும் முழுதுமாக நக்கத்தொடங்கிவிடும்.
எந்த வயல் குதித்துவிளையாட ஏற்றது, எந்த வயல் ஏற்றதில்லை என்பதையும் ஷெஹர்ஜாத் நன்கு அறிந்திருந்தது. கிணற்றில் நீரிறைக்கும் எந்திரத்தின் மேல் எதுவரை போகவேண்டும், எதற்கும் மேல் போகக் கூடாது என்பதும் ஷெஹர்ஜாத்துக்கு தெரிந்திருந்தது. இரவில் முற்றத்தில் அதைக் கட்டிவைக்கும் இடத்தை, ஷெஹர்ஜாத் அசுத்தம் செய்ததேயில்லை.
என் மனைவியின் மருத்துவமனையில் எல்லா நோயாளிக்கும் பிடித்தமானதாயிருந்தது ஷெஹர்ஜாத். மேலும், அதற்குத் தன் டாக்டர் எஜமானியுடன் வார்டில் ஒவ்வொரு படுக்கையாக சுற்றிவருவது மிகவும் பிடித்தமானதாயிருந்தது. ஒவ்வொரு நோயாளியிடமும் தட்டிக்கொடுக்க முதுகைக்காட்டி அவர்களின் அன்பைப் பெற்றுக்கொள்ளும். தொடக்கத்தில் என்னுடன் அலுவலகம் வந்துகொண்டிருந்தது. பிறகு அலுவலகம் வருவதை நிறுத்திக்கொண்டது. ஒரு நாள் வெளியே அலுவலக ஊழியர்கள் சிலர் பேசுவதைக்கேட்டேன்.
”ஐயாவின் மான்குட்டி இப்போதெல்லாம் வருவதில்லையல்லவா?”
”அதுவும் நல்லதுதான்”
”ஏன்”
”மேனேஜருக்கு மான்குட்டி வருவது பிடிக்காமல்தான் இருந்தது.”
இதைக்கேட்டு நான் மிகவும் திகைத்துப்போனேன். உண்மையில் இத்தனை நாள்களாக ஷெஹர்ஜாத் அலுவலகம் வரவேண்டுமென அடம் பிடிக்கவேயில்லை.
யாரேனும் விருந்தாளிகள் வந்துவிட்டால், நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்துகொள்வோம். மெள்ள மெள்ள அடியெடுத்துவைத்து நாங்களிருக்கும் வட்டமான அறைக்கு ஷெஹர்ஜாத் வந்துவிடும். ஒவ்வொருவரையும் நேருக்கு நேராய் பார்க்கும். ஒவ்வொருவரின் கைகளையும் மோந்து பார்க்கும். ஒவ்வொருவரும் அதன் முதுகைத் தடவிவிடுவார்கள். அனைவரையும் மகிழவைத்து தானும் மகிழ்ச்சியடைந்த பின் இடத்தை காலி செய்துவிடும்.
இப்போது ஷெஹர்ஜாத் மிகவும் வளர்ந்துவிட்டது. ஷெஹர்ஜாத் எங்களது வீட்டிற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எவ்வளவு உயரமாக வளர்ந்துவிட்டது! எத்தனை வேகமாக ஓடுகிறது! எவ்வளவு உயரமாக எம்பிக் குதிக்கிறது! மேலும், இப்போதெல்லாம் அது பல தவறுகளும் செய்யத் தொடங்கிவிட்டது.  அடுத்தவர்களின் வயல்களில் மேய்ந்துவிட்டு வருவது வாடிக்கையாகிப்போனது. உழவர்களும் ஷெஹர்ஜாத் செய்த குற்றத்தை தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வீட்டிலிருக்கும் தீவனங்கள் யாவற்றையும் தின்றுவிட்டு பக்கத்து வயலை நாசமாக்குவது, பழச்செடிகளையும், பூச்செடிகளையும் அழிப்பது என அதன் அழிச்சாட்டியத்திற்கு அளவேயில்லை. யாரேனும் அதைப் பற்றி குறை கூறும்போது ஷெஹர்ஜாத் அவமானத்தில் தலைகுனிந்து குற்றவாளியைப்போல் நின்றுகேட்டுக்கொண்டிருக்கும்.  அதன்பின் சில நாள்கள் எங்கள் வீட்டையும், தோட்டத்து எல்லையையும் தாண்டி எங்கும் போகாது. பிறகு பழையபடி ஏதேனும் செய்துவிட்டு பிரச்சினையைக் கொண்டுவரும். குற்றத்தை ஒப்புக்கொள்வதுபோல் தலைகுனிந்து நின்றுகொள்ளும். நான், என் மனைவி மற்றும் வீட்டிலிருக்கும் அனைவரும் அதற்குப் புரியவைக்க முயல்வோம்.
ஷெஹர்ஜாத் நாங்கள் வசித்த காலனியில் ஒவ்வொரு வீட்டிலும் தனது நட்பை  உருவாக்கிவைத்திருந்தது. ஒவ்வொரு வீடும் ஷெஹர்ஜாத்துக்காக காத்திருந்தது. எல்லா வீட்டிற்கும் அது போய்வரும். ஒவ்வொரு வீட்டிலும் ஷெஹர்ஜாத்துக்கென ஏதாவது மிச்சம் வைக்கப்பட்டிருக்கும். ஷெஹர்ஜாத்தும் அவர்களின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தும். எங்கள் வீடு நகரத்தை விட்டு வெளியே இருந்தது. அக்கம்பக்கத்தில் ஆறேழு வீடுகள்தாம் இருந்தன. அவற்றை விட்டுத் தாண்டினால் சாலை.சாலைக்குப் பக்கத்தில் நீதிமன்றங்களும் அதனருகில் தலைமைக் காவல் நிலையமும் இருந்தன. நகரமோ இன்னொரு பக்கமிருந்தது. இந்த ஐந்தாறு வீடுகளையொட்டியிருக்கும் வயல்களும், துப்பாக்கிப்பயிற்சி மைதானம் வரையிலுமாக ஷெஹர்ஜாத்துக்கு சுற்றித்திரிய இடமிருந்தது. இந்த சாலையையும், அந்த துப்பாக்கிப்பயிற்சி மைதானத்தையும் தாண்டி ஷெஹர்ஜாத் தனியாக சென்றதில்லை. இவற்றைத் தாண்டியிருக்கும் உலகம் பற்றி ஷெஹர்ஜாத்துக்கு கொஞ்சமும் தெரியாது.
வளர வளர அதன் போக்கிரித்தனமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. இது குறும்புதானா, இந்தக் குறும்பை ஏன் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டே அந்தக் குறும்பைச் செய்யும். குறும்பு செய்யும்போதெல்லாம், தலைகுனிந்து குறுகுறுத்து நிற்கும். செய்த தவறுக்கு வருத்தப்பட முகத்தில் ஒரு பாவனையை வைத்திருக்கும்.
இரவெல்லாம் ஷெஹர்ஜாத் ஓய்வெடுக்கும் அந்த முற்றம் எங்களின் படுக்கையறையை ஒட்டி இருந்தது.ஒரு நாள் இரவு அது அமைதியற்று இருப்பதைக் கண்டோம். உட்கார்வது, எழுவது, கதவில் போய் தலையை முட்டிக்கொள்வது, சங்கிலியை உடைக்க முயல்வது என அது அமைதியில்லாமல் இருந்தது.
ஷெஹர்ஜாத் அமைதியற்றுக் கிடந்த நாள்களில் அதை நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை.
ஒருநாள் விடிந்ததும் நானும், என் மனைவியும் ஷெஹர்ஜாத்தைப் பார்க்கச் சென்றோம். ஷெஹர்ஜாத் தலை குனிந்து நின்றிருந்தது. முற்றத்துச் சுவரின் ஒரு பகுதி சிவப்புப்பொடி தெளித்து அசிங்கமாக இருந்தது. பார்ப்பதற்கு ஹோலி பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் பீச்சாங்குழலால் தெளிக்கப்பட்டதுபோல் இருந்தது. நான் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வந்துவிட்டேன். என் மனைவிதான் சிப்பாய் ஒருவனின் மனைவியை அழைத்து முற்றத்தைக் கழுவ வைத்தாள். ஷெஹர்ஜாத்தை அவிழ்த்துவிட்டோம். அது வெளியே தோட்டத்தின் ஒரு பக்கமாய், மிதமான அந்த வெயிலில் ஆரஞ்சு மரத்தின் கீழே போய் படுத்துக்கொண்டது.
சில நாள்களுக்குப் பிறகு நாங்கள் வேலைக்காரர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்துவிட்டு, அதை ஷெஹர்ஜாத்துக்காக ஒதுக்கினோம். ஷெஹர்ஜாத் இரவெல்லாம் அவ்வறையில் இருக்கும். மனம் விரும்பினால்,பகலிலும்  தனது அறைக்குச் சென்று இளைப்பாறிக் கொள்ளும்.
பல நாள்கள் கழிந்தன.


இப்போதெல்லாம் ஷெஹர்ஜாத் விசித்திரமான வேடிக்கையொன்றை செய்து வருகிறது. எங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து ஒப்பனை மேசையின் நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு மணிக்கணக்கில் தனது பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நின்று நின்று களைத்து விட்டால் அப்படியே நிலைக்கண்ணாடி முன்பு அமர்ந்து கொள்கிறது. ஷெஹர்ஜாத்தை வேறு எங்கும் காண முடியாவிட்டால், இந்த மேசையின முன்பு அமர்ந்திருக்கக் காணலாம். காதல் பித்து பிடித்தவனைப் போல் கண்சிமிட்டாமல் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருக்கும். மெள்ள மெள்ள அடியெடுத்து வைத்து கண்ணாடியின் பின்புறத்தில் எட்டிப் பார்க்கும். எதுவும் அங்கே தென்படாததால் மறுபடியும் திரும்பி வந்து கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு இமைக்க மறந்து கண்ணாடியையே பார்க்கத் தொடங்கிவிடும்.
இவ்வாறாக ஒரு நாள்  கண்ணாடி முன் அமர்ந்திருந்த ஷெஹர்ஜாத்தின் குரலை நாங்கள் கேட்டோம். முதன்முறையாக அது பேசியது. உள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து எழுமிய குரல் அது. அந்தக் குரலைக் கேட்டு எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கண்ணீரில் நனைந்த குரல்வளையிலிருந்து எதையோ பேசியது.
பிறகு நாங்கள் அக்கண்ணாடியின் மேல் திரையிட்டு மூட ஆரம்பித்தோம். ஓரிருமுறை ஷெஹர்ஜாத் தேடித்தேடி வந்தது. பிறகு கண்ணாடி பற்றிய எண்ணத்தை கைவிட்டது. எப்போதும் கண்ணாடியின் மேல் திரை தொங்கவிடப்பட்டே இருந்தது.
மேலும் சில நாள்கள் கழிந்தன.
எதையோ தொலைத்துவிட்டது போல் எதுவும் பேசாமல் தனிமையில் மணிக்கணக்கில் பொழுதுகழித்தது ஷெஹர்ஜாத். ஏதேனும் சிந்தனையில் மூழ்கியே இருக்கும். நாங்கள் அதைக் கூப்பிட்டாலோ, என் மகன் அதை ஏதேனும் தொந்தரவு செய்தாலோ அது “என்னைத் தனியாக விடுங்கள்” என்று சொல்லிவிடும். அது ஏதேனும் ஞாபகத்தில் மூழ்கியிருக்கும்.
தோட்டத்தில் வருத்தத்தோடும் அமைதியாகவும் அமர்ந்திருக்கும். திடீரென கழுத்தை மேலே தூக்கிப் பார்க்கும். காதுகளை விறைப்பாக்கிக்கொள்வது ஏதோவொரு குரலைக் கண்டுகொள்வதற்கான முயற்சி போல தோன்றும். உயரமான இடத்திற்குப் போய் நின்றுகொண்டு தனது நீண்ட முகத்தை காற்றில் துழாவுவது, நறுமணத்தைத் தேடுவதைப்போல தோன்றும். சஞ்சலத்தோடு அது தனது நெற்றியை நடைபாதையின் வெல்வெட் போன்ற மண்ணில் போட்டுத் தேய்த்துக்கொள்ளும். தனது உடலை அடிமரத்தில் தேய்த்துக்கொள்ளும்.
சில நாள்களுக்குப் பின் ஷெஹர்ஜாத் முற்றிலும் பேசுவதை நிறுத்திக்கொண்டது. எங்கே உட்காராதோ அங்கே போய் உட்காருவது, எங்கே நிற்காதோ அங்கே போய் நிற்பது, எத்திசையில் போகாதோ அத்திசையில் போவது என அதன் நடவடிக்கைகள் மாறிவிட்டிருந்தன. காதுகளை விறைப்பாக்கி ஏதேனும் கேட்க முயலும். அதன் காதுகளுக்கு ஏதேனும்கேட்டாலும் கேட்காவிட்டாலும், எந்த திசையில் முகத்தை வைத்திருக்கிறதோ அதே திசையில் ஓடத்தொடங்கிவிடும். எங்கெங்கோ ஓடித்திரிந்துவிட்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி திரும்பி வரும்.
ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நாங்கள் உலவிக்கொண்டிருந்தோம். ஷெஹர்ஜாத் ஆரஞ்சு மரத்தினடியில்காதுகளை விறைப்பாக்கி எதையோ கேட்பதற்காக வெகுநேரமாய் நின்று கொண்டிருந்தது. திடீரென அது நகரத்தின் பக்கமாய் ஓடத்தொடங்கியது. ஷெஹர்ஜாத் நகரத்துச் சாலையில் ஓடுவதைப்பார்த்த என் மனைவி செய்வதறியாமல் திகைத்துவிட்டாள்.
”ஷெஹர்ஜாத்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
”ஷெஹர்ஜாத்” நானும் குரல் கொடுத்தேன்.
”நகரத்தின் பக்கம் போனபின் அது திரும்பி வராது. நகரத்து நாய்கள் அதைக் கடித்துச் சதையைப் பிடுங்கிவிடும்” என் மனைவி மிகவும் கவலையடைந்தாள்.
என் மனைவியின் கூப்பாட்டையும் என்னையும் பொருட்படுத்தாமல் ஏதோவொரு குரலைத் தேடி, அந்தச் சாலை வழியாக நகரத்தை நோக்கி ஓடிவிட்டது.
நான்கு மணி நேரத்திற்குப்பிறகு  மூச்சிரைத்தவாறு இரத்தம் சொட்டச்சொட்ட திரும்பி வந்தது அது. கழுத்தில் காயங்கள். அதன் உடலில் பல இடங்களில் காயங்கள். கால்களிலும் இரத்தம் வழிந்தோடியது. “ சொன்னபடியே ஆகிவிட்டது…அந்த நகரத்து நாய்கள்தாம்…” என்று சொல்லியவாறு என் மனைவி அதை அணைத்துக்கொண்டாள். அதன் காயங்கள் கழுவப்பட்டன. காயங்களுக்குக் கட்டு போடப்பட்டது. குடிப்பதற்கு அதற்கு பால் கொடுத்தோம். களைத்தும் வெகுவாக தளர்ந்துமிருந்த ஷெஹர்ஜாத் மாலை தொடங்கி இரவு முழுக்க அப்படியே கிடந்தது.
அடுத்த நாள் காலை நாங்கள் அதைப் பார்க்கச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் ஷெஹர்ஜாத் தனது அறையிலிருந்து குதித்தோடி வந்தது. மஞ்சள் வெயில் பரவியிருந்தது. மீண்டும் ஷெஹர்ஜாத்தின் காதுகள் விறைத்துக் கொண்டன.  மீண்டும் தனது நீண்ட முகத்தை தூக்கி நறுமணத்தைத் தேடி காற்றில் துழாவியது. அதன் உடம்பில் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது.
அது நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் கழுத்தைத் திருப்பிக்கொண்டு நகரத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. என் மனைவி மிகவும் துடித்துப்போனாள்.
”ஷெஹர்ஜாத்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
ஷெஹர்ஜாத் காதில் வாங்கியதா இல்லையா தெரியவில்லை.
”ஷெஹர்ஜாத் நகரத்து நாய்கள் உன்னைக் கடித்து சதையைப் பிடுங்கிவிடும்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
ஷெஹர்ஜாத் குன்றுமணியளவுகூட பொருட்படுத்தவில்லை. ஓடிகொண்டேயிருந்தது.
”ஷெஹர்ஜாத் திரும்பி வந்துவிடு. அந்த நாய்களால் உனக்கு ஏற்பட்ட நிலை தெரியவில்லையா ?”
ஷெஹர்ஜாத் சாலையைக் கடந்து ஓடிவிட்டது.
என் மனைவியின் இமைகளை மீறி இரு கண்ணீர் முத்துகள் அவளது கன்னங்களில் உருண்டோடின.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஷெஹர்ஜாத் மீண்டும் மூச்சிரைத்தவாறு, இரத்தம் சொட்டச்சொட்ட ஓடி வந்தது. கொஞ்சமும் இரக்கமில்லாத நாய்கள் மறுபடியும் கடித்துவிட்டன. அங்கங்கே இரத்தம் வழிந்தது. அங்கங்கே சதை கிழிந்து தொங்கின.
நேராக ஓடிவந்து என் மனைவியிடம் அடைக்கலமானது. அதன் நிலையைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். இது இனி தப்பிக்காது என நினைத்தோம். மருந்திட்டு கட்டு போடப்பட்டது. பால் புகட்டப்பட்டது. என் மனைவி அதை வாரி அணைத்துக்கொண்டாள். நான் அதை முத்தமிட்டுக் கொஞ்சினேன்.
ஷெஹர்ஜாத்தின் கண்களில் குற்றவுணர்வும், திகைப்பும், திக்கற்ற நிலையும் தென்பட்டன.
நாங்கள் அதை அதனறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தோம்.
மதிய உணவுக்குப்பின் நாங்கள் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம். வசந்த காலமது. எங்கள் தோட்டம் முழுக்க முழுக்கப் பூக்களைச் சுமந்திருந்தது. ஒவ்வொரு மரமும் துளிர்த்திருந்தது. சிறு கிளைகள் யாவும் பூத்திருந்தன.
நாங்கள் உலாவத் தொடங்கி வெகு நேரமாகிவிடவில்லை. ஷெஹர்ஜாத் தனது அறையை விட்டு வெளியேறி சாலையை நோக்கி போய்க்கொண்டிருந்தது. காதுகளை விறைத்தபடி, நீண்ட முகத்தை காற்றில் துழாவியபடி நறுமணத்தை தேடிச் சென்று கொண்டிருந்தது.
”இது மறுபடியும் நகரத்தை நோக்கிப் போகிறதே” என் மனைவி அரற்றத்தொடங்கினாள்.
”ஷெஹர்ஜாத்” அவளால் அமைதியாக இருக்கவும் முடியவில்லை. ஆயினும் பயனேதுமில்லை.
”ஷெஹர்ஜாத்” நானும்  திரும்பி வரச்சொல்லிக் கூப்பிட்டேன்.
ஷெஹர்ஜாத்துக்கு எங்கள் குரல் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை. அது முன்பு போலவே ஓடி விட்டிருந்தது. நீதிமன்றங்கள், காவல் நிலையம் மற்றும் எங்கள் கண்களை விட்டும் மறைந்தது.
”இம்முறை இது திரும்பி வராது” சொல்லியபடி என் மனைவி கையிலிருந்த மலரைக் கீழே போட்டாள்.
மதிய உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் வெறுமனே படுத்திருந்தபோது வெளியே ஷெஹர்ஜாத்தின் சத்தம் கேட்டது.நாங்கள் எழுந்து வருவதற்குள் மூச்சிரைத்தவாறு ஷெஹர்ஜாத் படுக்கையறைக்குள்ளேயே வந்துவிட்டது. வேகமாக அடியெடுத்து அது என் மனைவியை நோக்கி வந்தது. அதன் பார்வை முன்னாலிருந்த நிலைக்கண்ணாடி மீது விழுந்தது. உடனே அதன் பாதங்கள் அப்படியே நிலைத்துவிட்டன. கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்ததும் அதன் முகம் மலரத் தொடங்கியது. ஏழு சொர்க்கங்களை அடைந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அதன் முகத்தில். ஷெஹர்ஜாத் தனது நீண்ட முகத்தை கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் நீண்ட முகத்தோடு பொருத்தி வைத்தது. ஷெஹர்ஜாத்தின் துடிக்கும் உதடுகளும், பிம்பத்தின் துடிக்கும் உதடுகளும் சில கணங்கள் ஒன்றோடொன்று பொருந்தி நிலைத்திருந்தன. என்னை மறந்து, என் மனைவியை மறந்து, தனது காயங்களை மறந்து ஷெஹர்ஜாத் கண்ணாடியில் பிம்பமாக இருந்த தனது உருவத்திற்கு அன்பு செலுத்தியது. அதன் கால்களில் வலிமை குறைந்ததும் அப்படியே கீழே விழுந்தது. சற்றைக்கெல்லாம் அதன் உடல் குளிர்ந்து போனது. அதன் நீண்ட முகம் பிம்பத்தைப் பார்த்தபடியே விழுந்து கிடந்தது. அதன் ஒளியற்ற கண்கள் பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

***
இந்தி மூலம்: கர்தார்சிங் துக்கல். KARTAR SINGH DHUGGAL
தமிழில்: நாணற்காடன்
இந்தி இலக்கிய உலகின் மிக முக்கியமான் ஆளுமையான திரு.கர்தார்சிங் துக்கல் அவர்கள் 1917 ல் பிறந்தவர். துக்கல் அவர்கள் ஆகாஷ்வாணி மற்றும் நேஷனல்புக் ட்ரஸ்ட் ஆகியவற்றின் இயக்குநராகப் பதவி வகித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் திட்டக்குழுவின் ஆலோசகராகச் செயல்பட்டார். இந்தி இலக்கியத்திற்குஆற்றிய சேவைக்காக நடுவணரசு இவருக்கு1989 ல் பத்மபூஷன் விருதளித்தது. இவர் எழுதிய பலப் படைப்புகள், இவருக்குப் பலப் பரிசுகளைப் பெற்றுத்தந்துள்ளன.கதைகளுக்காக சாகித்ய அகாடமி விருதும், நாவல்களுக்காக இந்திய மொழி அமைப்பின் விருதும்,நாடகத்திற்காக காலிஃப் விருதும் இலக்கியத்திற்கு ஆற்றியசேவைக்காக சோவியத் லேண்ட் நேரு(sovieth land nehru award) விருதும் பெற்றுள்ளார்.

1993 ல் பஞ்சாப் சாகித்திய அகாதமி சிறந்த இலக்கியவாதி விருதும், 1994 ல் பஞ்சாப் பல்கலைக்கழகம் Doctor of Literature விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தன.எழுத்துக்காகவும், இலக்கியத்திற்காகவும் தனது முழுநேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவர் இவர்.

கர்தார்சிங் துக்கல்  ராஜ்யசபை உற்ப்பினராக இருந்தவர்.1989 ல் பத்மபூஷன் விருது பெற்ற எழுத்தாளர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்

Advertisements