கவிதைகள் – கார்த்திகைப்பாண்டியன கவிதைகள்

கார்த்திகைப்பாண்டியன் கவிதைகள்

மரணம்சில குறிப்புகள்

வெட்டுப்பட்ட மஞ்சள் நிறக் கிளையென
குளிர்ப்பெட்டியினுள் கிடத்தப்பட்ட
பதினெட்டே வயதானவளின் உடல்
கண்ணாடிப்பரப்பில் நகரும் மேகங்களில்
சிதறுண்ட ரோஜா இதழ்கள்
சூழ்ந்து நின்று அழும் குரல்களினூடாக
மாறியபடி இருக்கிறாள்
மகளாய் பேத்தியாய் மருமகளாய்
தோழியாய் காதலியாய்
மற்றும் சிலரின் நன்கறிந்த முகமாய்
கூன் விழுந்து சருமம் சுருங்கிய
தொல்மூதாட்டி கண்ணீர் பெருக்கி
வானம் பார்த்து அரற்றுகிறாள்
தாயோளி அவன் கிடையவே கிடையாது
தானும் உடன் வருவதான
முலைப்பால் தந்தவளின் கதறல்
தெருமுக்கோடு காற்றில் கரைந்திடும்
சுடலையில் வெந்து தணியும் உடல்
ஒரு புகைப்படம்
சில கண்ணீர்துளிகள்
அஞ்சலிக்குறிப்புகளோடு
மறந்து போகும் இந்த மரணமும்
வெளியில் எப்போதும் போல
இயங்கிக் கொண்டிருக்கும் உலகம்

(தீபாவுக்கு)

ஒரு நாளை உதிர்த்தவன்

ஒரு தினத்தை தன் வாழ்விலிருந்து
முற்றிலுமாய் உதிர்த்திட நினைப்பவன்
எல்லா முயற்சிகளும் செய்கிறான்
நாட்காட்டியின் அந்நாளை கிழித்து தூரே வீசுகிறான்
மின்னஞ்சலின் அத்தினத்துக்கான கடிதங்களை இல்லாமல் ஆக்குகிறான்
தினசரிகளைத் தீயிடுகிறான்
அந்நாளின் முந்தைய தினம் தான்
மரித்ததாகவும் அதன் மறுதினம்
உயிர்த்தெழுந்ததாகவும் அழுது புலம்புகிறான்
குறிப்பிட்ட நாளில் மட்டும்
தானொரு மனநோயாளி
தெருக்களில் அலைந்து திரிந்தவன்
கனவுகளில் தொலைந்தவனாய்
நோய் கொண்ட வேசைகளைப் புணர்ந்தவன்
தன்னைத் தானென அறியாதவன்
அறிவிக்கவும் செய்கிறான்
இருந்தும்
நினைவுகளில் நீலநதியெனப் பிரவாகிக்கும்
அத்தினத்தின் ரேகையினை
தன்னிடமிருந்து அகற்ற மாட்டாதவன்
அத்தினத்தையே தன்
கழுத்தில் இறுக்கி முடிச்சிட்டு
தற்கொலை செய்து கொள்கிறான்.

•••