கவிதைகள் – கதிர்பாரதி கவிதைகள்

கதிர்பாரதி கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூற்றாண்டின் தூசி

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்

மாளிகைக்குள்  நுழைகிறீர்கள் எனில்

அந்தந்த நூற்றாண்டுகளுக்குள் நுழைகிறீர்கள்.

ஒவ்வொரு படியும் உங்களை ஒவ்வொரு வடருமாக

மேல்தூக்கி அழைத்துப் போகிறது.

முன்னிருக்கும் முதல் நூற்றாண்டைக் கடந்துபோகும்போது

ஊஞ்சலாடும் சிறுமிக்கு உதவுகிறீர்கள்.

பாடம் செய்யப்பட்டு அருகருகே மாட்டப்பட்டிருக்கும்

சிங்கத்துக்கும் மானுக்கும் இடையில்

அந்த ஊஞ்சல் மிக லாகவாமாக முன்-பின் போய் வருகிறது.

அடுத்த நூற்றாண்டின் உத்தியாவனத்தில் இறங்குகிற நிலவொளியில்

தனிமை ஒரு ராஜகுமாரியாக உலவித் திரிய

அதன் இடது அறையில் தளும்பும் ரகசிய சிணுங்கலொன்றில்

உங்கள் குரல் கேட்டுத் துணுக்குற்று நிற்கிறீர்கள்.

மூன்றாம் அடுக்கிலிருக்கும் நூற்றாண்டின் சன்னல் வழியாக

உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப

நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று.

நான்காம் அடுக்கின் நுழைவாயிலில் மாட்டப்பட்டிருக்கும்

வாளிலிருந்து சொட்டும் ரத்தத்துளிகளைப் பார்த்துவிட்டு

சடசடவெனக் கீழிறங்கி வந்துவிடும் நீங்கள்,

செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான்.

தலையில் ஒட்டியிருக்கும் காலாதிகாலத்தின் தூசியை

உடனடியாகத் தட்டிவிட்டு விடுங்கள்.

**

தாபங்களின் சாபம்

 

விசிறி எறியப்பட்ட விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து

வேர்ச் செழித்தெழுந்த ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற ஏவாளை

பின்தொடர்கிறது ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்.

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில் திரண்டுருளும்

துக்கத்தையொத்த அவளின் பருவக்கனவுகளை

ஊடறுத்துக் கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி.

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி கீழ்விழும் ஏவாளின் சொற்கள்

பெருந்தனிமையின் கால்களில் மிதிபட

தரையை மெழுகித் திரும்புகிறது சொற்களின் ரத்தம்.

அந்தரத்தில் அலையும் பறவைகளின் சிறகில் அறைவாங்கி

பள்ளத்தாக்கில் வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்.

முன்பொரு காலத்தில் புசித்த கனிக்கென

ஆதாமைப் பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா

ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்.

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்

சபிக்கிறது கடவுளை

ஏவாளாகக் கடவாய் சாத்தானே.

**

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

 

மகிமைசால் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்பதும்

மச்சங்களுக்கு ஒன்றென காதலிகள் மூன்று என்பதும்

சமீபமாகத் தெரிய வந்திருக்கும் செய்தி.

கடனட்டைகளை அதிகமாக விநியோகிக்கும் வங்கியொன்றில்

முதல் காதலிக்கு கஸ்டமர் கேர் அதிகாரி பணி.

ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்

போலியோ சொட்டுகளை வழங்கும் இரண்டாமவளிடம்

மெசியா குறித்த புகார்கள் நிரம்ப உள்ளனவாம்.

பெண்களின் உள்ளாடை நிறுவனத்தில் பொதுமேளாராகப்

பணி உயர்வு பெற்றிருக்கும் மூன்றாமவள் மீது

உள்ளபடியே மெசியாவுக்கு அதிமோகம் இப்போது.

மூன்று காதலிகள் கிடைத்ததற்குக் காரணமே

தம் மூன்று மச்சங்கள்தான் என்பது அவர் கொள்ளும் கித்தாப்பு.

சிகையலங்காரத்துக்கு நிகராய் மச்சலங்காரத்தில்

மிகுந்த கிளர்ச்சி அடையும் மெசியாவுக்கு

நான்காவதாய் ஒரு மச்சம் அரும்பும் அடையாளம் தெரிகிறது

சந்தோஷப்படுங்கள் அல்லது ஜாக்கிரதையாய் இருங்கள்

நான்காவது காதலி நீங்களாகவும் இருக்கலாம்.

 

**

அதுவாக இருக்கும் அது

 

 

மூதாதையரடி மூதாதையராக அது

அவனிடம் \ அவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

புற்றுக்குள் நுழைந்துவிட்ட எலி பாம்பு கண்டதும் பதறித் திரும்புமே

அந்தப் பதட்டத்தோடே வைத்திருக்கிறது எப்போதும்.

காய்ந்தெரிக்கும் மாநகரக் கோடையின் கானலெனப் பிசுப்பிசுக்கிறது.

நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பையில் சிலுசிலுவெனக் கசியும் ஈரமாகிறது.

மேனியை யாழ்க்கம்பியாக்கி மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது.

அந்த இசையில் உலாத்துகையில் அவன்\அவள் பறவையாவது நிச்சயம்.

அல்லது சிறகளாவது முளைக்கும்.

கிளையிலிருந்து கழன்றுவிட்டப் பழமாக

உதடுகளுக்கு எட்டாத முத்தமாக

நடுநிசியில் இளம்விதவை தலைக்கு ஊற்றும் நீராக

சீறும் நாகம் கக்கும் முதல் துளி விஷமாக

யாவுமாகவும் இருக்கிறது.

இல்லை யாவுமற்று

அதுவாகவே இருக்கிறது அது.

*

 

யானையோடு நேசம்கொள்ளும் முறை

 

 

யானையோடு நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்

முதலில் தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

துதிக்கைக்கு முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை

அதுவும் நேசத்தின் கணக்கில் சேரும்.

தேக்குமரத் தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்

இரும்பு சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.

மத்தகத்தைப் பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு

எறிந்துவிட்டால் போதும்

யானை நம்மை ஒரு குழந்தைப் போல தூக்கிக்கொண்டு

ஓடிக் களிக்க ஆரம்பிக்கும்.

இப்போது அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்

சப்பாத்திக் கள்ளி முள்ளை எடுத்துவிட்டு

ஏற்பட்டிருக்கும் சிறுகாயத்தின் மீது

நம் கவலையைப் பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்

நேசத்தின் ஆழத்தை. பிறகு,

அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.

கவனம் நண்பர்களே,

ஆசீர்வாதம் வாங்குவது இப்போது யானைக்குப் பிடித்திருக்கிறது.

 

*

 

வீட்டை எட்டிப் பார்த்தல்

 

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்

ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது

உங்கள் இதயத்தால் உற்றுப் பார்க்கிறீர்கள்.

வசீகரமிக்கதாகத் தோன்றுகிறதா

சுடர்கிற ஒளி கண்களைக் கூசப் பண்ணுகிறதா

இப்போது அந்த வீட்டிலிருந்து

ஒரு புறா பறந்து போவதாகத் தோன்றுமே உங்களுக்கு.

அந்தப் புறாவைத் தொடர்ந்து

ஓர் இறகு போல வீடும் மேலெழும்பி

மிதப்பதையும் காண்கிறீர்கள் எனில்

அந்த வீட்டிலிருந்து கொலுசொலி லயத்தோடு

கசிந்து வருவதும் உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டும்.

ஆர்வத்தின் நிமித்தம் சுற்றுச்சுவர் ஏறிப் பார்க்கையில்

கொல்லைப்புறத் துளசி காய்ந்து காற்றிலாடுவது

உங்களைப் பெருமூச்சிட வைக்கிறது.

அதனால்தான் புறாக்கள் இரையுண்ட

அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.

ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல

ஒரு பெண்ணின் கேவல்கள் என்று

உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.

இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து

உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.

***