கவிதைகள் – இளங்கோ கவிதைகள்

 இளங்கோ கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொங்கும்முகங்கள்..

 

உத்தரவு வரவில்லை
மீண்டும் தொடர்கிறது உன் தலைகுனிவு
நகரும் நொடிகளை வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது
உனது அறை மூலையில் ஒரு சிலந்தி

ஏதோவொரு புள்ளியில் துளிர்த்திருக்க வேண்டும்
அதிலிருந்து துள்ளி உடைந்திருக்க வேண்டும்
இந்தத் தர்க்கம்

எங்கே எடுத்துக் காட்டு அதன் ரகசிய சாவியை

உன் மௌனச் சுவரில் கணக்கற்று கிடக்கும்
ஏதாவது ஒரு பூட்டில் அது பொருந்த வேண்டும்

துருவேறிய பழமைக் கதவின் பின்னால்
ஏன் தொங்குகிறது உனது முகம்

கலாச்சாரக் கோடுகள் கொண்டு
சட்டம் அடித்து வைத்திருக்கும் வெளியில்
வரைந்துவிட முடியும் ஒரு பின்நவீனத்துவ முகத்தை

தொட முடியாத ஒரு சொல்லை நிரூபிக்க
உதிரக் கூடும் ஒவ்வொரு படிமமாய்
உன் அகாலத்தில்

ஆனால்
உத்தரவு வரவில்லை

*
விதைத்தூவும்அர்த்தங்கள்..

கடந்து போவதற்குரிய வழியாகிறாய்
நிற்பதையோ
அவதானிப்பதையோ குறியீடாகப் பதிய
நிர்ப்பந்திக்கிறாய்

மௌனச் சாயலில் கோர்த்துக் கொள்ளும் ஈரத் துளிகளை
தனிமைப் படிக்கட்டுகளில் வழியச் செய்கிறேன்

நினைவின் குளிரோடும் நடுக்கத்தில்
விதைத் தூவும் அர்த்தங்களின் முனைப் பிளந்து
வெளிப்படச் செய்கிறாய்
தளிர்ப் பச்சையாய்

*
தவிரவும்..

தவிரவும்
அது நிகழ்ந்து விட்டதாக
என்னால் நம்ப முடியவில்லை

நிற்பதற்குரிய ஸ்திரத்தை
காலடி நிலம் ஏன் நெகிழ்த்துகிறது
அர்த்தக் கூட்டங்கள் நீர்த்துவிட
எழுத்துக்கள்
மேலும் பரிதாபமாகக் காத்துக் கிடக்கின்றன

நான் ஏதேனும் சொல்லக் கூடுமென்றோ
மறுப்புகுரிய ஒரு சின்ன சைகையோ
அசைவையோ வெளிப்படுத்துவேனென்றோ

தவிரவும்
ஒத்துக் கொள்ளும்படியாகத் தான்
அது நிகழ்ந்துவிட்டது
நம்பும்படியாகவும்  இருக்கிறது.

மேலும்..

சத்தம் போடாதே..!
நீ என்ன சொல்கிறாய்
மேலும் மேலும் பணிந்து போ
சத்தம் போடாதே

மேலும்
நான் கேட்கிறேன்

அதெப்படி?

சத்தமில்லாமல் தான் கேட்கிறேன்

*