கட்டுரை – ஆறாவடு – சிபிச்செல்வன்

ஆறா வடு

சிபிச்செல்வன்

இந்த நாவலை இதுவரை யாரும்  எழுத்தில்,எழுதிய விமர்சனங்கள் வழியாக அல்லது மதிப்புரை வழியாக நல்ல நாவல் படியுங்கள் எனப் பரிந்துரைக்கவில்லை. இந்த நாவல் ஆசிரியரின் பெயரும் ( சயந்தன் ) தமிழ் இலக்கிய உலகத்தில் பரிச்சயமானதும் இல்லை. ஆனால் கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டு புத்தகச் சந்தைக்கு இந்தப் புத்தகம் வந்தபோதே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த நாவலைப் பற்றிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாள நண்பர்களிடையே ஒரு நல்ல நாவல் வந்திருப்பதாக மெல்லிய குரலில் கிசுகிசுப்புகள் ஒலிக்க ஆரம்பித்திருந்தன.

இப்போது அது உண்மைதான் என்பதை இந்த நாவலை வாசித்தபின் உறுதியாகிருக்கிறது.

.

மோசமான எத்தனையோ புத்தகங்களுக்கு எவ்வளவோ விளம்பரங்கள். வேண்டியவர்களின் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் மூலம் விமர்சனங்கள் , மதிப்புரைகள், ஊர் ஊராக வெளியிட்டு விழாக்கள், அறிமுக கூட்டங்கள்,வெற்றி விழாக்கள். ஆகியவற்றை எவ்வளவோ திட்டுமிட்டு நடத்தினாலும் அந்தப் புத்தகங்கள் கொஞ்சம் நாள் கழித்து தன் உயிரை விட்டு விடும். வாசகர்களிடம் போலி என்பதைத் தன் பல்லை இளித்துக் கொண்டு பரிதாபமாக நிற்கும். இவை எல்லாம் கடந்த காலங்களில் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக எழுத்தாளர்களும் வாசகர்களும் கண்டுணர்ந்த காட்சிகள்தான்.

ஆறா வடு என்ற இந்த நாவல் இலங்கை தமிழர்களின் சமீப கால நிஜமான வரலாறு. நீங்கள் தொடர்ச்சியாகச் செய்தித்தாள் தொலைக்காட்சி ஊடகங்களைக் கவனித்து வருபவர் என்றால் இந்த நாவலில் வருகிற பல சம்பவங்களை அதில் வாசித்தும், தொலைக்காட்சி என்றால் காட்சிகளாகப் பார்த்தும் இருக்கலாம். கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி அவ்வாறு நான் இலங்கை விவகாரங்களைச் செய்தி தாள்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும், பின்னால் இணையத்தின் வழியாகவும் அறிந்துகொண்ட விஷயங்களும், இலங்கை நண்பர்கள் நேரில் சொன்ன பல விஷயங்களும்தான் இந்த நாவலின் பல சம்பவங்களை நினைவூட்டுகின்றன.

நாவல் 1987 இல் தொடங்குவதாக இருந்தாலும் உண்மையில் இலங்கையில் இனப் போர் தொடங்கும் போதே இந்த நாவலின் பக்கங்கள், சம்பவங்கள் தொடங்கிவிட்டன. அதேபோல இந்த நாவலின் இறுதி சம்பவங்கள் 2003ஆம் ஆண்டுகளின் இறுதியில் முடிந்துவிட்டதாக நிறைவு பெற்றிருந்தாலும் இன்றுவரை இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் இந்த நாவலை முற்றும் போட்டு நிறைவுபெற்றதாகக் கருத முடியாத சூழலையே ஞாபகப்படுத்துகிறது. ( 87 தொடங்கி 2003 வரையான இரண்டு அமைதி காலங்களுக்கு  இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது என்கிறார் நாவலாசிரியர் சயந்தன் தன் முன்னுரையில் ).

இலங்கையின் நாவல் என்கிறபோது போர்ச்சூழல் இல்லாமல் இருந்தால் அது வெறும் புனைவாகத்தானே இருக்கும். இந்த நாவல் வெறும் புனைவு அல்ல. அது வாழும் வரலாறு என்று பதியப்பட்டிருக்கிறது இந்த நாவலில். உண்மையின் தகிப்பினை நாவலின் எல்லாப் பக்கங்களிலும் சுடுகின்றன.

நாவலின் மைய ஓட்டத்தில் ஒரு கதாபாத்திரம் அதன் வாழ்வின் போராட்டங்கள் என்று வழக்கம்போல இருந்தாலும், உண்மையில் அப்படியில்லாமல் நாவலின் எல்லாப் பக்கங்களிலும் போரின் குரூர முகங்களில் வழியும் இரத்தங்களின் சாட்சி படிப்போர் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது.

இந்திய அமைதிப் படை இலங்கையில் இறங்கியபோது அவர்கள் தங்களுக்கு அமைதி கிடைத்து விட்டதாக நம்பினார்கள் எனவும்  அதன்பின் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியும் குறைந்தும் இருந்தாலும் நாவலின் கடைசிப் பக்கங்கள் வரை சுபம்போட முடியாததற்குக் காரணம் இது உண்மை வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதால்தான்.

இயக்கத்திற்குப் பொடியன்களை ஆள் சேர்க்கும் விதங்கள், அதன் கட்டாயங்கள்,அதாவது சூழலின் நிர்ப்பந்தங்கள், இராணுவத்தின் சோதனை முயற்சிகளின் போது பலரை எந்தக் கருணையும் இல்லாமல் டொப் டொப்பென்று சுட்டுத்தள்ளுவது, பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு கொள்வது,வேண்டாத இயக்கங்களின் ஆட்களோடு சண்டை  போடுவது,அவர்களைப் போட்டு தள்ளுவது,நிஜமான போரின் சூழலை விவரிக்கும் காட்சிகள். இப்படி நாவலின் எந்தப் பக்கத்திலும்  ஷெல்களின் வெடிச் சத்தம், பீரங்கிகளின் குண்டு முழக்கங்கள் என இரத்தம் நம் முகத்தில் தெறித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

நாவலின் எந்தப் பக்கத்தை வாசிக்கும்போதும் இரக்க குணம் கொண்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தபடியேதான்  இருக்கும். பல சமயங்களில் பல பக்கங்களை வாசிக்க முடியாத அளவிற்கு உண்மையின் குரூரம் முகத்திலும் இதயத்திலும் அறைந்துகொண்டேதான் உள்ளது. கொஞ்சம் இதயம் பலவீனமானவர்கள் இந்த நாவலை வாசிப்பதை நிச்சயம் தவிர்த்து விடலாம். இது இந்த நாவலைப் பற்றிய மோசமான விமர்சனமில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்..

இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அங்கே போய் செட்டிலாவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியயிருக்கிறது என்பதையும் இந்த நாவலின் தொடக்கத்தில் கதாநாயகன் இத்தாலிக்கு நீர்கொழும்பிலிருந்து தப்பி கள்ளத்தோணியில் புறப்படுவதாகத்தான் நாவல் தொடங்குகிறது. ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல என்பதைதான் இந்த நாவலின் சம்பவங்கள், தினசரி வாழ்வின் நடைமுறை சம்பவங்களின் வகைமாதிரிக்குச் சான்றாக விளங்குகிறது.

கள்ளத்தோணியில் பாஸ்போட் இல்லாமல், விசா இல்லாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் தப்பிப் போகிறார்கள். எவ்வளவோ பணம் செலவழித்து அங்கே போனாலும், போய்ச் சேர முடியாமல்கூட கடைசி நிமிடசோதனைகளின் போது மாட்டிக் கொண்டு சிறைபட்டவர்களும் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் சோகமான, துயரமான நிகழ்ச்சிகளும் ஏராளம்..

சேனல் 4இல் இலங்கை போரின் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டும், அதைப் பற்றிய பரபரப்பான பேச்சுகளும் , கட்டுரைகளும், விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்தச் சந்தர்பப்பத்தில் இந்த நாவலை வாசிக்கிறவர்களுக்கு எத்தனையோ இசைப்பிரியாக்களின் பாலியல் வல்லுறவுகள் தினசரி நிகழ்கிற துயரமான சூழல்தான் இலங்கையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும், மீண்டும் மீண்டும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் , . ஆட்களும் நிகழ்வுகளும், வருடங்களும்தான் வேறு வேறு. மற்றபடி அவற்றின் சாரம் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையே. இலங்கை தமிழர்களின் மொத்த துயரங்களின் அடையாளங்கள்தான் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் எதிரொலிக்கின்றது.

192 பக்கங்களிலும் சோகம்,போரின் ஏதாவது ஒரு வடிவம் என்பதாகத்தான் நிகழ்வுகள் அமைந்துள்ளன. எங்காவது ஒரு சிறு சந்தோஷம் என்பது கொஞ்சமும் நிகழவில்லை அல்லது அப்படிப்பட்ட காட்சிகள் மருந்துக்குக்கூடத் தென்படவில்லை. அப்படிதான் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை இருக்கிறது. அப்படியில்லாமல் போலியான புனைவைச் சாரமாக கொள்ளததால்தான் இந்த நாவல் தன் வீர்யத்தை வாசக நெஞ்சங்களில் பெரும் வன்முறை செலுத்தி தன் இடத்தைக்கோரி பெற்றுக் கொண்டிருக்கிறது

தமிழ் நாவல்களைத் தேடித் தேடி வாசிப்பவர்கள் இந்த ஆறா வடு நாவலை அவசியம் படிக்க வேண்டுகிறேன். இலக்கியத்தின் சாரமும் இருக்கிறது. இலங்கையின் சமீப கால வன்முறை வரலாறும் இருக்கிறது. இதனால்தான்  நல்ல நாவல்களின் வரிசையில் தனக்கான இடத்தை யாரின் சிபாரிசும் இல்லாமல் தானே தேடிக்கொண்டிருக்கிறது. எந்தக் கூச்சலுக்கு மத்தியிலும், எந்த வெடிச் சத்தங்களுக்கு மத்தியிலும் தன் இருப்பை நிறுவிக்கொண்டுள்ள இந்த ஆறாவடு நாவலை, இலக்கியத்தை நேசிக்கறவர்களும், இலங்கை தமிழர்களை நேசிக்கறவர்களும் அவசியம் படிக்க வேண்டுகிறேன். வாசித்து முடித்தபின் இந்த என் முடிவை யாரும் முன்தீர்மானமிக்கது எனச் சந்தேகம் கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதியாகவும் நிச்சயமாகவும் சொல்ல முடியும்.

.

( ஆறா வடு / சயந்தன் / நாவல் / தமிழினி பதிப்பகம் / பக்கங்கள் 192 / விலை ரூபாய் 120 )

••