மொழிபெயர்ப்பு சிறுகதை -மரம் – ஹெச். பி. லவ்க்ராஃப்ட் – தமிழில்: ஜெயந்தி சங்கர்

மரம்

ஹெச். பி. லவ்க்ராஃப்ட்

தமிழில்: ஜெயந்தி சங்கர்

 

 

 

 

 

 

அர்காடியாவிலிருக்கும் மேனலஸ் மலையின் பசுமையான சரிவிலிருக்கும் பாழடைந்த மாளிகையினருகில் ஓர் பிரமாண்ட ஆலிவ் மரம் நின்றது. முன்னொரு காலத்தில் உன்னதச் சிற்பங்களுடன் அழகாக இருந்து இப்போது பல்லிளிக்கும் மலையோர மாளிகையைப் போலவே சீந்துவாரற்று அண்மையிலேயே இருந்தது ஒரு கல்லறை. முறுக்கிய முரட்டு வேர்கள் கல்லறையின் மூலையிலிருந்து கிளம்பி கிரேக்கப் பளிங்கினாலான தரையை வெடித்து வெளியே வந்தது போல அசாதாரணமாக வளர்ந்திருந்தது அது. அதன் உருவம் வெறுக்கத் தக்கதாக இருந்தது. கோணிக் கொண்டிருந்த கிளைகளூடே மங்கலாய் நிலாக் காயும் இரவுகளில், விலங்குமில்லாத மனிதனுமில்லாத விகார உருக்கொண்ட விலங்கைப் போலிருந்த அம்மரத்தைக் கடக்கும் எளிய அவ்வட்டாரவாசிகள் மிக அஞ்சினர். வறிய இடையர்கள் முதல் சீமான்கள் வரை மேனலஸ் மலையில் திரிவோர் ஏராளம். ஆனால், கிட்டத்தட்ட எல்லோருமே விந்தை மனிதர்கள். ஆனால், அண்மையிலிருந்து ஒரு குடிசையில் வாழ்ந்த வயதேறிய தேனிப் பண்ணையாள் என்னிடம் முற்றிலும் வேறொரு கதையைச் சொன்னார்.

பல வருடங்களுக்கு முன்பு அந்த மாளிகை புதியதாகவும் பொலிவுடனுமிருந்தது. அதில் காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் என்று இரண்டு சிற்பிகள் வாழ்ந்தனர். லிடியாவிலிருந்து ந்யாபோலிஸ் வரை அவர்களுடைய திறமையின் புகழ் பரவியிருந்தது. இருப்பினும், ஒருவர் கூட அதிக திறமையாளர் காலோஸை விட ம்யூஸைட்ஸ் என்றோ ம்யூஸைட்ஸை விட காலோஸ் என்றோ சொல்லத் துணிந்ததில்லை. காலோஸ்ஸின் சிலை கோரிந்த்தின் ஆலயத்தில் நின்றது. ம்யூஸைட்ஸ்ஸின் கற்சிலையோ பார்தெனன் அருகே இருக்கும் ஏதென்ஸ்ஸின் தூணில் இருந்தது.  மக்கள் திரண்டு சென்று காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ்ஸுக்கு தத்தமது மரியாதைச் செலுத்தினர். அவ்விருவரிடைய திறமைகளிடையே இருந்த போட்டிகள் எதுவும் பாதிக்காத அவர்களுடைய நட்பைக் கண்டு மிக வியந்தனர்.

காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் இதமான இணக்கத்துடன் வாழ்ந்திருந்தாலும் இருவருடைய இயல்பும் முற்றிலும் வெவ்வேறானது. பண்டை கிரேக்கத்தின் டேஜியா மாநகரில் நடப்பது போல இரவின் இருளைக் களியாடிக் கொண்டாடுபவர் ம்யூஸைட்ஸ். அதே வேளையில், காலோஸ் வீட்டிலேயே முடங்கியிருப்பார்  அல்லது அடிமைகளின் பார்வையிலிருந்து முற்றிலும் ஒளிந்து ஆலிவ் மரத்தினடியின் ஒதுக்கிடங்களில் தனித்திருப்பார். மனதிற்குள் மின்னும் காட்சிகளைக் கண்டவாறு அங்கே தியானத்திலிருப்பார். அவரது அந்த தியான மெய்ப்பாடு பின்னாளில் நிரந்தரத் துவத்துடனான பளிங்கு உருக்கொண்டது. காலோஸ் இறந்து மறைந்தோரிடம் உரையாடினார் என்று வேலையற்றோர் கூறினர். அவரது சிலைகள் எல்லாமே அவ்வனதேவதைகள் மற்றும் வனதெய்வங்கள் தாம் என்று நம்பினர். எந்தவொரு மனிதரையும் முன்மாதிரியாகக் கொண்டவரில்லை காலோஸ் என்றும் கூறினர்.

ம்யூஸைட்ஸ் காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ்ஸின் புகழ் மிகவும் பரந்து விரிந்திருந்தது. இல்லையென்றால்,  ஸைராக்யூஸ்ஸின் டைரண்ட் தன் நகருக்கென்று ஆசையாகத் திட்டமிட்டிருந்த டைசேயின் விலைமதிப்பற்ற சிலையைப் பற்றிப் பேசத் தனது அதிகாரிகளை அனுப்பியிருப்பாரா ? சிலைகள் மிகப்பெரிய அளவில் நிகரற்ற வேலைப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்றார். பயணிகளின் குறிக்கோளாகவும் தேசத்தின் அதிசயமாகவும் கூட இருக்க வேண்டும். யாருடைய வேலை பரந்த அங்கீகாரத்தைப் பெறுகிறதோ அவருக்கு சிந்தைக்கு அப்பாற்பட்ட உயர்வு உறுதியாகிறது. இதற்காக காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் இருவரும் அழைக்கப் பட்டனர். அவ்விருவரிடையேயான சகோதரத்துவம் நிறைந்த அன்பு பரவலாகியிருந்தது. குயுக்தி நிறைந்த டைரண்ட் தன் போக்கில் ஒரு முடிவெடுத்தார். ஒருவரிடமிருந்து இன்னொருவர் திறன்களை மறைத்துக் கொள்ளாமல் உதவியும் ஆலோசனையும் கொடுக்க வேண்டும்.  ஒப்பற்றதும் அரிதானதுமான இச்சேவையில் உருவாகும் அழகிய இச்சிலைகளில் சிறந்தது உலகக் கவிகளின் அனைத்துக் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். கவிஞர்களின் ஒப்புமையற்ற உயரிய கற்பனைகளை இருளுக்குள் தள்ளும் வல்லமை பெற்றதாக இருக்கும். இருவரும் டைரண்ட்யின் யோசனையை மகிழ்வுடன் ஏற்றனர். அடுத்து வந்த நாட்களில் அடிமைகள் உளிகளின் ஒலியைத் தொடர்ந்து கேட்க முடிந்தது. காலோஸ்ஸும் ம்யூஸைட்ஸ்ஸும் ஒருவர் மற்றவரிடம் தத்தமது சிற்பங்களை ஒளிக்கவில்லை. ஆனால், அவரவர் சிற்ப வேலையே அவர்கள் நேரத்தை முற்றிலும் விழுங்கித் தின்றது. அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை. உலகம் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்து சிறைப்படுத்தப்பட்ட முரட்டுப் பாறைக்குள்ளிருந்து இரண்டு புனித உருவங்களும் கைதேர்ந்த செதுக்குதல்கள் மூலம் வெளியேறியது போலிருந்தன. அதைக்காண அப்போது அங்கு யாருமில்லை.

இரவில், ம்யூஸைட்ஸ் ‘டேஜியா’ விருந்துக் கூடத்தை அடைந்த போது காலோஸ் தன்னந்தனியாக ஆலிவ் மரத் தோப்பில் திரிந்தார். காலம் கடந்த போது முன்பு பளீரென்று ஒளிர்ந்த ம்யூஸைட்ஸ்ஸில் ஒருவித தளர்ச்சியைக் கண்டனர் மக்கள். காண்பதற்கு விநோதமாக இருந்தது. கலையுலகின் ஆகப் பெரிய அங்கீகாரத்தைப் பெறக் கூடிய ஓர் அற்புதத் தருணத்தில் இப்படியும் ஒருவரை மனவழுத்தம் முழுக்க ஆட்கொள்ளுமா என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பல மாதங்கள் கடந்தோடின. இருந்தாலும், ம்யூஸைட்ஸ்ஸின் இருண்ட முகத்தில் சூழலின் பதட்டத்துக்குப் பொருத்தமாக எதுவுமே தோன்றவில்லை.

ஒருநாள், ம்யூஸைட்ஸ்ஸே காலோஸ்ஸின் நோய் குறித்துப் பேசினார். அதன் பிறகு, யாரும் அவரது சோகத்தைக் கண்டு வியக்கவில்லை. சிற்பிக்கு நண்பரிடமிருந்த நெருக்கம் மிக ஆழமாகவும் புனிதமாகவும் கொண்டது. அதைத் தொடர்ந்து எல்லோரும் காலோஸ்ஸின் சிற்பத்தைக் காணச் சென்றனர். அனைவரும் காலோஸ்ஸின் முகத்தில் விரவிருந்த வெளுப்பையும் காணத் தவறவில்லை. அவரைச் சுற்றி நிலவிய ஓர் ஆனந்த நிச்சலம் ஒருவித மாயவுணர்வை ஏற்படுத்தியது. அவ்வுணர்வு ம்யூஸைட்ஸ்ஸின் பார்வையை விட தீவிரமாக இருந்தது. அவரது மனப்பதட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. எல்லா அடிமைகளையும் ஒருபுறந்தள்ளிவிட்டுத் தானே சேவையாற்றும் நோக்கில் தன் நண்பர் முன் குனிந்து பணிந்தார். தடித்த திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தன முடிவடையாத டைச்சேயின் இரண்டு சிற்பங்கள். சமீபத்தில் அரிதாகவே நோயாளியாலும் அவரது விசுவாச சேவையாளராலும் தொடப்பட்ட  முற்றுப்பெறாத சிற்பங்கள்.

மருத்துவர்கள் மற்றும் உற்ற நண்பர்களின் மேற்பார்வையிருந்தும் விளக்க முடியாத புரிந்து கொள்ளவே முடியாத வகையில் காலோஸ் அப்பட்டமாகச் சோர்வடைந்தபடியே இருந்தார். அடிக்கடி தான் மிகக் காதலித்த ஆலிவ் தோப்புக்குத் தூக்கிக் கொண்டு போக வேண்டினார். அமானுஷ்யங்களுடன் உரையாட விரும்புவது போல அங்கே தன்னைத் தனியே விட்டுவிடவும் சொன்னார். தன்னைக் கண்டுகொள்ளாமல் அமானுஷ்யங்கள் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறாரே என்று கொடகொடவென்று கண்ணில் கண்ணீர் பெருகினாலும் அவர் சொன்னது போலவே ம்யூஸைட்ஸ் நடந்தார். இறுதியில், முடிவு நெருங்கியது. நிதர்சனத்தை மறந்து காலோஸ் பேச ஆரம்பித்தார். மௌஸோலஸ்ஸுடையதை விட மிக அழகான கல்லறைத் தோட்டம் உருவாக்குவதாக அழுதவாறே ம்யூஸைட்ஸ் உறுதியளித்தார். ஆனால், பளிங்குக் கற்களின் புகழ் போதுமே என்று காலோஸ் அவரைக் கடிந்து கொண்டார். இறக்கும் தருவாயிலிருந்தவருக்கு ஒரேயொரு எண்ணம் தான் மனதில் இருந்தது. அவரது அடக்க இடத்தில் ஆலிவ் மரச் சுள்ளிகளைத் தன்னுடைய தலைக்கு அருகில் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். ஓர் இரவில் ஆலிவ் தோப்பின் இருளில் தனித்து உட்கார்ந்திருந்தார்.  அப்போது தான் காலோஸ் இறந்தார். சொற்களுக்கப்பாற்பட்ட அழகில் அமைந்தது அவரது பளிங்குக் கல்லறை. ம்யூஸைட்ஸ் தன் அருமை நண்பருக்காகவே செதுக்கி உருவாக்கியிருந்தார். மறைந்த காலோஸ்ஸால் மட்டுமே எலிஸியம்மின் மேன்மைகளுக்கிணையான அது போன்ற நேர்த்திமிகு சுவர் சிற்பங்களைச் செதுக்க முடியும். மறக்காமல் காலோஸ்ஸின் தலைக்கருகில் தோப்பிலிருந்து ஆலிவ் மரச்சுள்ளிகளையும் புதைத்திருந்தார் ம்யூஸைட்ஸ்.

சோகத்தில் தவித்த ம்யூஸைட்ஸ்ஸின் முதல் ஆக்ரோஷ வெளிப்பாடாக டைசேயின் சிலையைச் செதுக்குவதில் தன் முழுமனதையும் செலுத்தினார். எல்லாப் புகழும் இனி அவருக்கானது.  ஆனால், யாருடைய திறனும் ஸைராக்யூஸ்ஸின் டைரண்ட்க்கு இனி வேண்டாம். காலோஸ்ஸுடையதும் வேண்டாம்; ம்யூஸைட்ஸ்ஸினுடையதும் வேண்டாம். ம்யூஸைட்ஸ்ஸின் உணர்ச்சிப் பிரவாகத்திற்கு ஒரு வடிகாலாகவே அமைந்தது அவரது அந்தக் கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் சீராக உழைத்தார். முன்பெல்லாம் மிகவும் ரசித்த தனது நிதானத்தைக் கூட மறந்திருந்தார். மாலைவேளைகளை நண்பரின் கல்லறைக்கருகில் செலவிட்டார். அங்கு உறங்கியவரின் தலைப்பக்கத்திலிருந்து சின்னஞ்சிறிய ஆலிவ் குறுத்து துளி விட்டிருந்தது. இதன் வளர்ச்சியும் உருவமும் மிகவும் விநோதமாக இருந்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். ம்யூஸைட்ஸ்ஸுக்கோ மிகுந்த சுவாரஸியமும் விரட்டப்பட்டது போன்றதுமான உணர்வேற்பட்டது.

காலோஸ்ஸின் மரணத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. டைரண்ட்க்கு ஒரு தூதுவரை அனுப்பினார் ம்யூஸைட்ஸ். டேஜியாவின் கூடுமிடத்தில் பிரமாண்ட சிலை முடிக்கப்பட்டதென்ற வதந்தி உலவியது.  கல்லறைக்கருகில் வளர்ந்த மரம் உலகின் அனைத்து ஆலிவ் மரங்களையும் விஞ்சும்படியான அதிசயிக்கத் தக்க பிரமாண்டங்களைத் தொட்டபோது ஒன்றை கவனித்தனர். ஒரேயொரு கிளை மட்டும் அலாதியான வழக்கத்திற்கும் அதிகமான எடையில் முறுக்கிக் கொண்டு,  ம்யூஸைட்ஸ் பணியாற்றிய மேல்மாடியைத் தொட்டது. ம்யூஸைட்ஸ்ஸின் சிற்பத்தைக் காண வந்த அதே அளவில் இந்த பெரிய மரத்தைக் காணவும் மக்கள் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் ம்யூஸைட்ஸ் தனியாக இருக்க வேண்டியிருக்கவில்லை. அவர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு போன பார்வையாளர்களைப் பொருட்படுத்தவில்லை. சொல்லப்போனால், சிற்பப் பணி முடிந்திருக்கும் இவ்வேளையில் தனித்திருக்கவே அவர் மிக அஞ்சினார். மெல்லிய மலைக் காற்று தோப்பில் நின்ற மரங்களூடே, கல்லறை மரத்தைத் தழுவியவாறே பெருமூச்சு விட்டபடி வீசியது. விவரிக்க முடியாத தெளிவற்ற அதன் ஓசைகள் விசித்திரமாக இருந்தது.

வானம் இருண்டிருந்தது. டைரண்ட்டின் தூதுவர்கள் டேஜியாவுக்கு வந்தனர். அவர்கள் வந்தது டைசேயின் பிம்பத்தைச் ரசிக்கவும் ம்யூஸைட்ஸ்ஸுக்கு அழியாத கௌரவத்தைக் கொணரவும் என்று எல்லோரும் அறிந்திருந்தனர். ஆகவே, அவர்களுக்கு ப்ரோசெனோய்யால் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு கடந்த போது மேனலஸ் மேட்டின் மீது அட்டாகாசப் புயலொன்று அடித்தது. நல்லவேளை ஊருக்குள் வந்து சேர்ந்தோம் என்று தூதுவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அரசர் டைரண்ட்டின் உழைப்பையும், ஏற்பாட்டையும், அவரது தலைநகரின் ஜொலிப்பையும், ம்யூஸைட்ஸ் அரசருக்காக வடித்திருந்த சிலையையும் கண்டு களித்தபடியே அவை குறித்து அளவளாவினர். ம்யூஸைட்ஸ்ஸின் நல்லியல்புகளையும் டேஜியா மக்கள் பேசினர். மறந்த நண்பர் மீது அவருக்கிருந்த மறையாத அன்பைப்பற்றியும் கலைக்காக அவருக்குக் கிடைத்த அனைத்து அங்கீகாரங்களும் எப்படி அவரைச் சமாதானப் படுத்தத் தவறின என்றெல்லாம் கதைத்தனர். அவரிடத்தில் காலோஸ் இருந்திருந்தால், கண்டிப்பாக அவ்வங்கீகாரங்களை பெருமிதத்தோட எடுத்து அலங்காரமாகப் பூண்டிருப்பார். காலோஸுக்கருகில் வளர்ந்து நின்ற மரத்தைப் பற்றியும் அவர்கள் பேசினர். புயல் காற்று விகார ஒலியெழுப்பிக் கத்திய போது ஸைராக்யூஸ் மற்றும் அர்காடியா மக்கள் எல்லோரும் ஐயோலோஸ்ஸைத் தொழுது வேண்டினர்.

சூரியக் கிரணங்கள் ஒளிர்ந்த காலையில் டைரண்ட்டின் தூதுவர்களை மலைச் சரிவில் இருந்த சிலையில் இருப்பிடத்துக்கு ப்ரோசெனோய் அழைத்துச் சென்றார். ஆனால், இரவுக் காற்று அங்கே பல விநோதங்களை நிகழ்த்தியிருந்தது. உயிரற்ற அக்காட்சியில் அடிமைகள் அழுதபடி நின்றனர். ம்யூஸைட்ஸ் மிக ஆசையாசையாக கனவு கண்டு உழைத்து உருவாக்க ஆரம்பித்திருந்த பளிங்குக் கூடத்தை அங்கே காணோம்.  மிக அழகாக உருவாகவிருந்த ஆடம்பரக் கூடத்தின் எளிய தாழ்வார அடித்தளத்தையும் சிதைவுகளையும் கண்டபடியே செய்வதறியாதிருந்தனர். புதிய மரத்தின் பெரிய கிளையின் கீழே பளிங்கில் உருவாகியிருந்த கவிதை காணச்சகிக்காத இடிபாடுகளாகக் குவிந்திருந்தது. சிதைந்து கிடந்த பிரமாண்டத்தின் முன்னால் டேஜியாவின் மக்களும் வெளியூர் மக்களும் அதிர்ந்து சமைந்தனர். மானுடத்தின் விநோத மனத்தைப் பிரதிபலித்த அந்த மரம் வஞ்சம் தீர்த்த நிம்மதியுடன் நின்றது. அதன் முறுக்கிய பருமனான வேர்கள் செதுக்குருவங்கள் கொண்ட காலோஸ்ஸின் கல்லறையை நோக்கி நெளிந்து வளைந்து அடியாழம் சென்றது.

விழுந்து கிடந்த கட்டத்தின் இடிபாடுகளைக் கலைத்துத் தேடிய மக்களுக்கு அச்சமும் அதிர்ச்சியும் மேலுமதிகரித்தது. ஏனெனில், மென்மையுள்ளம் கொண்ட ம்யூஸைட்ஸ்ஸையும் டைசேயின் பிரதிமையையும் காணோம். ஒரு சிறு அடையாளத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இடிபாடுகளில் வெறும் குழப்பமும் களேபரமும் தான் கிடந்தன. இரண்டு நகரின் பிரதிநிதிகளும் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தனர். இனி தன் ஊருக்குக் கொண்டு போக  சிலை இல்லை என்ற சிந்தனையை ஸைராக்யூஸ் மக்களால் சகிக்கவே முடியவில்லை. டேஜியா மக்களோ தமக்கென்று பெருமிதப்பட இனியொரு கலைஞன் இல்லை என்று வருந்தினர். ஆனால், ஸைராக்யூஸ் மக்களுக்கு ஏதன்ஸ்ஸில் கவர்ச்சிமிகு சிலை ஒன்று கிடைத்தது.  ம்யூஸைட்ஸ்ஸின் நல்லியல்புகள் மற்றும் நட்பைப் போற்றும் விதத்தில் டேஜியா மக்கள் கூடுமிடத்தில் பளிங்கு ஆலயத்தை எழுப்பி ஆறுதலடைந்தனர்.

இன்னமும் நிற்கிறது காலோஸின் கல்லறையிலிருந்து கிளம்பி வளர்ந்தோங்கிய ஆலிவ் மரம். சில இரவுகளில் காற்றடிக்கும் போது கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசி, “ஓய்டா, ஓய்டா, தெரியுண்டா, தெரியுண்டா”, என்று மீண்டும் மீண்டும் சொல்வதாக தேனிப் பண்ணையாள் சொன்னார்.

ஹெச். பி. லவ்க்ராஃப்ட்

ஹெச். பி. லவ்க்ராஃப்ட் – (1890-1937) ஆகஸ்ட் 20 ஆம் தேதி அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தார். பிள்ளைப்பருவத்தில் பிஞ்சிலேயே பழுத்தவராக இருந்திருக்கிறார். இவரது ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருந்தது. பெற்றோர் மனநிலை பாதிக்கப்பட்டு இறந்திருந்தனர். உயர்நிலைக் கல்வியை முடிக்கவேயில்லை என்பதை நினைத்து தன் மரணம் வரை வருந்தினார். பதினைந்து வயது நிரம்புவதற்கு முன்பே இருமுறை நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட இவர் சிறுவயது முதலே ஆத்திகராக இருந்தவர். ஹார்மோனிகா போன்ற zobo என்ற இசைக்கருவியை இசைப்பார். நவீன திகில் மற்றும் பேய்க் கதைகளின் முன்னோடியாக உலகளவில் அறியப்பெறும் இவர் 16 வயது முதல் ‘Providence Tribune’ நாளிதழில் வானியல் துறை சார்ந்த பத்திகள் எழுதினார். 1908 முதல் 1923 வரை Weird Tales  போன்ற பல சிற்றிதழ்களில் கதைகள் எழுதிக் கிடைத்த சொற்ப வருவாயில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலங்களில் அவரது கதைகள் அப்படிப் பெரிதாய் ஒன்றும் பொருளீட்டி விடவில்லை. தன்னை விட 7 வயது மூத்த Sonia Haft Shifirkin Greeneயை மணம் முடித்தார். நிறைய பயணங்களை மேற்கொண்ட இவர் Robert E. Howard, Frank Belknap Long போன்ற பல எழுத்தாளர்களோடு நட்பு கொண்டிருந்தார். பேய்கள், மாந்திரிகங்கள், அமானுஷ்யங்கள், பேசவே முடியாத தீய சக்திகள், காலமும் வெளியும் சீரற்றுக் கண்டபடி இருக்கும் கற்பனையுலகங்கள் ஆகியவை இவரது எழுத்துக்களின் முக்கிய கூறுகள். கிறுக்குத் தனங்கள் மிகக் கொண்டவர். சிறிய சோர்வோ எரிச்சலோ இல்லாமல் தொடர்ந்து 36 மணிநேரம் விழித்திருப்பார். கெடுவுக்குள் எழுதி முடிக்கவென்று ஒரு முறை 60 மணிநேரம் உறங்காமல் விழித்திருந்தார். இரோவின்ஸில் மார்ச் 15ஆம் தேதி கடும் வறுமையில் இறந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, அவரது எழுத்துக்கள் தீவிர கவனத்தைப் பெற ஆரம்பித்தன. பின்னாளில் அலையென எழுந்த கற்பனாவாதம் மற்றும் அறிவியல் புனைவுகள் மீது இவரது எழுத்துக்கள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கதைகள் சேகரிக்கப்பட்டு The Outsider and Others (1939) and Haunter of the Dark and Other Tales (1951) உள்ளிட்ட பல தொகுப்புகளாக பிரசுரமாகின. இவரது கற்பனையான மிஸ்கடோனிக் பல்கலைக்கழகம் இவரது அனைத்துக் கதைகளிலும் வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நெக்ரோனோமிகோன் என்ற தீய கதாப்பாத்திரம் இருக்கிறது. இதே பாத்திரம் எட்டாம் நூற்றாண்டைக் களமாகக் கொண்ட ‘The Mad Arab’ உள்ளிட்ட நிறைய கதைகளில் வரும். நவீன புனைவாளர்களான Stephen King, John Carpenter, Robert Bloch, Clive Barker and Anne Rice போன்றவர்களுக்கு முன்மாந்திரியாக அமைந்தவர். தன் வாழ்நாளில் 40,000-100,000 கடிதங்கள் வரை எழுதி 20ஆம் நூற்றாண்டில் ஆக அதிக கடிதங்கள் எழுதியவர் என்றறியப் பெறுகிறார். “உலகிலேயே மிகவும் கருணை மிகுந்ததொரு விஷயம் என்று நான் நினைப்பது மனித மனத்தால் எல்லாவற்றையும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாதது தான். பரந்து விரிந்து கிடக்கும் முடிவின்மை எனும் கருங்கடலில் இருக்கும் சின்னஞ்சிறிய அறியாமைத் தீவில் வாழ்கிறோம் நாம். அதிக தூரம் பயணப்படக் கூடாதென்பது தான் நமக்கு விதிக்கப் பட்டது”, என்று இவர் கூறியது மிகப் பிரபல மேற்கோளாக இன்றைக்கும் சுட்டப்படுகிறது. ‘மரம்’ சிறுகதை இவரது துவக்ககாலங்களில் (1920) எழுதப்பட்டு அக்டோபர் 1921ல் முதன்முறையாகப் பிரசுரமானது.

ஜெயந்தி சங்கர்

 

 

Advertisements