சிறுகதை – பா.ராஜா – கேளா இசைச்சொல்

பா.ராஜா

 

 

 

 

 

 

 

கேளா இசைச்சொல்

ஓசைகளற்ற வெளியென விடிந்திருக்கிறதவன் உலகம். நிசப்தங்களின் மையத்தில் நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஒரு குண்டூசி கீழே விழுதல் போலான சத்தத்தை அந்த ஊசியைக்கொண்டே பாதத்தில் குத்திக்குத்தி உணருகிறான். சிறு சிறு ஒலிகளெல்லாம் எவர் அனுமதியுமின்றி அவனுலகத்தினுள்ளிருந்து கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சங் கொஞ்சமாய் வெளியேறிச்சென்றிருக்கிறது. பேரோசைகள் யாவும் தன்னையொரு சிறுவனென காண்பிக்கும் விதமாய் மெலிந்து போயிருக்கிறது.

கடிகாரத்தின் நடுமுகத்தில் உள்ளங்கை பதித்துத்தான் நொடி முள்ளோசையை உணருகிறான். குழாயிலிருந்து கசிந்தொழுகும் நீர்ச்சொட்டுகள் ஒவ்வொன்றையும் ஓர் எழுத்தென கையிலேந்தி தனக்குப்பிடித்த வாக்கியமொன்றாய் அதனையமைத்து உலகதிர உக்கிரமாய் உரக்கக்கத்துகிறான்.

பேரமைதியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வனாந்தரம் வழக்கமாய் அவன் சுற்றித்திரிவதுதான் என்றாலும் இன்றவனுக்கு அது பெரும் அலுப்பையூட்டின. சிறகடிக்கும் ஓசைகளையும், கீச்சுக்குரல்களையும் ஊதாரித்தனமாய் வேறெங்கோ செலவளித்துவிட்டு ஓய்வெடுக்க மட்டுமே இங்கு வந்து குவியும் பறவைகளை கொன்று குவிக்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதும் தவத்திலிருப்பதைப்போல் இந்த மரங்களிடம் அமைதி அமைதி மகா அமைதி, அதிலுமிந்த கொன்றை மரம் சரியான கல்லுனி மங்கனாய் இருக்கிறது. எத்தனை நேரம் அவன் பேசினாலும் ஒரு உம் கொட்டுவதில்லை. ஒரு பதில் வார்த்தை பேசுவதில்லை. மௌனங்களையே விரும்பியணிந்துக் கொள்ளும் இந்த மரங்களை வெட்டிவீழ்த்த வேண்டுமென்ற வெறி சூழ்கிறது அவனுக்கு.

புலிகளின் உறுமலில்லை, யானையின் பிளிறல்களில்லை, சிங்கத்தின் கர்ஜனையில்லை, சர்ப்பத்தின் சீற்றலில்லை, ஓநாயின் ஊளையில்லை, இதென்ன வனாந்தரம். ஒலிகளை, ஓசைகளை, துறவிலேற்றிவிட்டு நிர்வாணம் தரித்து நிற்கும் இதென்ன அடர்ந்தக்காடு. கூடாது இனி இங்கே வரவேக்கூடாது. போயும் போயும் என் பெரும்பாலான பொழுதைக்கழிக்க இந்த இடத்தையா நான் தேர்வு செய்திருக்க வேண்டும். தொலை தூரத்தில் தென்படும் அருவிகூட மௌனத்தின் மதகுருவிற்கு கட்டுப்பட்டதைப்போல, கைக்கட்டி உதட்டின் மேல் விரல் வைத்து, சின்னதாய் ஒரு முனகல் கூட இல்லாமல் வானத்தின் வாலென தலைகீழாய்தொங்கிக் கொண்டிருக்கிறது. இனி இங்கு வரக்கூடாது என்று நினைத்தான்.

தானிருக்கும் இடத்தில் ஒரு குட்டிப்பிரளயம் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும், ஆலைச்சங்கொலி அலறிக்கொண்டேயிருக்க வேண்டும். அவசர ஊர்திகள் பேரொலியுமிழ்ந்து பிற வாகனங்களை விலக்கிக்கொண்டு விரைந்தோட வேண்டும். ஒரு குட்டி ஹெலிக்காப்டா; மிகவும் தாழப்பறக்க வேண்டும். தன்னோடுப்பேசும் யாவரும் கை ஜாடையே பயன்படுத்தக்கூடாது என்றும். ஒலிகளுக்கும் தனக்குமான இடைவெளிகள் தீரவேண்டும் என்றும் விரும்பினான்.

அவனோடுப்பேசுவதற்கும், அவன் பேசுவதற்கும் ஒருவருமற்றதான உலகமும், வாழ்வும், அடிக்கடியவனை அந்த வனம் நோக்கிச்செல்லுத்தி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த விளையாட்டும் இன்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது அவனை தோற்கடித்தபடி. அங்கிருந்து வரும்போது, விஞ்ஞான வளர்ச்சி அந்த நடுக்காட்டில் செல்போன் கோபுரமொன்றை நட்டு வைத்திருப்பதைப்பார்த்து அங்கேயே ஒரு கணம் நின்றான். ஏற்கனவே பார்த்துதான் என்றாலும்கூட இன்றவனுக்கு அது வேறொரு முகத்தைக்காட்டியது. வனத்தை வெறுத்த அவனை அது ஈர்த்தது. கையசைத்து அழைத்தது. அருகில் சென்று பார்த்தவனுக்கு அதன் மீது ஏறவேண்டுமென்ற ஆசையெழுந்தது. தன் செவிதீண்டாமல் புறக்கணிக்கும் ஓசைகளும் சொற்களும், தனக்கெட்டாமல்ப் போகும் சத்தங்களும், வெகு உயரத்தில் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். வானத்தைதொடும் கூர்மையோடு நிற்கும் இக்கோபுரத்தின் உச்சிப்பகுதிக்குச் சென்றால், நம்மை விட்டுவிலகிப்போன அவைகள் நம் வசப்படலாம் என நினைத்ததும், மேலே ஏறவேண்டுமென்ற ஆசை மேலும் வலுப்பெற்றது.

அண்ணாந்து மேலேப்பார்த்தான். அதன் உயரமவனுக்கு அச்சமூட்டுவதாயிருந்தது. அச்சமயம் அவனைத்தடுக்க யாருமிருக்கவில்லை அங்கு. மனதை திடப்படுத்திக்கொண்டு, அதன் ஒவ்வொரு வளைவுகளையும் படிக்கட்டுகளெனப்பயன்படுத்தி, ஒரு மந்தியைப் போல் ஏறி அதன் பாதி உயரத்தை அடைந்து, அங்கிருந்து கீழே பார்த்தான். அச்சத்தின் அசலை பல நகல்கள் எடுத்ததாய் அதிகரித்திருந்தது.

அத்தனை உயரத்தில் அமர்ந்திருந்தும் கூட அவனைச்சுற்றிலும் ஒரு மயான அமைதி. கோடிக்கணக்கானச் சொற்களையும், லட்சக்கணக்கானவர்களின் உரையாடல்களையும், உள்வாங்கி உரியவருக்குச் சேர்ப்பிக்கும் அலைபேசி கோபுரத்தில் அமர்ந்திருக்கிறான், ஒரு சின்ன சத்தம் கூட, ஒரு வார்த்தைகூட அவனுக்கெட்டவில்லை. இங்கிருந்து குதித்து விடலாம் என்று கூட ஒரு எண்ணம் தோன்றி மறைகிறது. ஒரு பறவை அந்த கோபுரத்தில் அமர்வதும் பின் பறப்பதுமாய் மிக உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவன் அங்கிருந்து குதித்துவிட தீர்மானித்திருந்தால்கூட, தடுத்து நிறுத்தும் படியான எவ்வித குறிப்பும், செய்கையிலோ அசைவுகளிலோ சிறிதும் வெளிப்படுத்தாதபடி அது விளையாடிக்கொண்டிருக்கிறது. ஏதோவொரு எதிர்பார்ப்பினில் மேலேறி வழக்கம் போலான ஏமாற்றத்தைச் சந்தித்துவிட்டதில் பொழுதும் சோர்வடைந்தவன் கீழிறங்க ஆயத்தமானான். ஒவ்வொரு அடியாய் மிகக்கவனமாய் சறுக்கிவிடாதபடியான ஜாக்கிரதை உணா;வுடன் கீழிறங்கிக் கொண்டிருக்கிறான். ஏறும்போது இத்தனை உயரமாகவா இருந்தது இந்த கோபுரம், என்ற கேள்வி அவனுள் குடைந்து கொண்டே அவனுடன் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது. உச்சத்திற்கு செல்ல முயன்று மேலேறி, பாதியிலேயே கீழிறங்கிக் கொண்டிருக்கும் அவனது உறுதியற்ற மனநிலையை, அப்பறவை பரிகாசித்து கும்மாளமிடுவது தெரிகிறதே தவிர அதன்குரல் அவனுக்கு அந்நியமாகவே இருக்கிறது.

முன் திட்டமிடலில்லாத அவனது நடை, இலக்கற்ற அவன் பயணம், அடர்ந்த வனாந்திரம், அலைபேசி கோபுரம் என மாறிமாறி இப்போது இந்த ரயில் தணடவாளத்தில் வந்து நிறுத்தியிருக்கிறது. ரயிலின் சத்தம் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பாம் என்று முழுங்கும் அதன் பேரோசை அவன் செவிக்கு மிக இதமாய் இருக்கிறது. சிறு வயதில் கேட்டுறங்கிய தாலாட்டுப்பாடலை அது நினைவிற்கு கொண்டு வருகிறது. உயிரை ஒரு உருண்ட வடிவமாக்கி தண்டவாளத்தின் நேர்க்கோட்டில் உருட்டி விளையாடுகிறது வாழ்க்கை. தொலைவில் ஒற்றைக்கண் மிளிர வந்துகொண்டிருக்கும் ரயில், நிரந்தரத்தூக்கமாம் மரணம் அதைக்கொண்டுவந்து தாராதா என ஏங்கினான்.

பின் அங்கிருந்து சாலையை நோக்கி வெகுதூரம் நடந்தவன் ஓரிடத்தில் நின்றான். அந்த இடத்தையே வெறித்தான். முன்பொருநாள் அவனது முகத்திற்கெதிராய் அவனைப்பார்த்து ‘செவுட்டுக்கூதி” என்று உரக்கக்கத்திய ஒருவனோடு சண்டையிட்டு கட்டிப்புரண்ட இடம் அது. பல்லிடுக்கினில் வலுவாய்ச்சிக்கிக்கொண்டு பொழுது முழுவதுமாய் இம்சிக்கும் இறைச்சித்துணுக்கென அச்சொல் அன்றைய தினம் முழுவதும் நினைவினில் மீண்டும் மீண்டும் எதிரொலித்து பெரும் வதையை உண்டாக்கியது. அச்சொல்லில் உறைந்திருந்த வன்மம் நஞ்சு தடவிய கூரியதொரு கத்தியென மாறி நீண்டு படுத்திருக்கும் அவனது நெற்றிப்பொட்டில் சுருக் சுருக்கென சொருகுகிறது. பெண்டுலமொன்றின் பனிரெண்டு மணிக்கானச்சத்தம் இரவின் கன்னத்தில் மாறி மாறி அறைவதைப்போல அச்சொல் அவனை உறங்கவிடாமல் இம்சிக்கிறது. இதுவரை அவனது முதுகு மாத்திரமே சந்தித்துவந்த அச்சொல் முதல்முறையாய் முகத்தில் அறைந்ததும்; அதிர்ந்துபோனவன், உலகத்தையும் உலகத்திலிருக்கும் யாவற்றையும் வெறுத்து ஒதுக்கத்தொடங்கினான்.

அவனுக்கே கேட்டிருக்கிறது என்றால் எத்தனைச்சத்தமாய் திட்டியிருக்க வேண்டும். அந்த இடத்தையே வெறிந்தவன், திட்டியவன் அங்கிருப்பதாய் கற்பனை செய்து கொண்டு, அவனோடு கட்டிப்புரண்டு அன்று நிறைவேறாது போன மிச்சிமிருக்கும் இரண்டு குத்துக்களை அவனது முகத்தில் விட்டான்.

நீண்ட நேரமாய் அங்கேயே நின்று கொண்டிருந்தவனைப்பார்த்து சிரித்தபடி கடந்து போனாள் ஓர் சிறுமி. அது வெறும் சிரிப்பாய் மாத்திரம் அவனுக்குத்தோன்றவில்லை. அவனை ஆசுவாசப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் ஏதோவொன்றை அதில் கண்டவன், அவனையுமறியாமல் பின் தொடா;ந்து நடந்தான். அச்சிறுமி அருகிலிருந்த கோயிலொன்றினுள் நுழைந்தாள். மீண்டுமொருமுறை அந்தச் சிரிப்பை தனக்கு வழங்குவாளா ? வழங்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினான். அச்சிறுமி அவனுக்கோ, அம்மனாய்த்தோன்றினாள். மண்ணில் புரண்டு கொண்டிருந்தவனை எடுத்து நிறுத்தி, மேலெங்கும் படிந்திருந்த புழுதியை தட்டிவிட்டு, கலைந்த கேசத்தை கோதிவிடும் படியாய் அச்சிரிப்பை உணர்ந்தவன், மேலும் அத்தலைகோதலை எதிர் நோக்கினான். அச்சிறுமியின் நிழலில் தன் உயிரை கட்டி வைத்துவிடும் முனைப்புடன் தொடர்ந்தவன் தன்னைப்பாh;த்து மீண்டும் சிரிக்க வேண்டுமென வேண்டினான். அச்சிறுமியின் செயல்களையே கவனித்துக்கொண்டிருக்கிறான்.

கோயிலின் பிரகாரத்திலிருக்கும் வெண்கல மணியிலிருந்து இசைச் சொல்லொன்றை விடுவிக்க முயல்கிறாள் சிறுமி. அதில் கட்டப்பட்டிருக்கும் கயிறு கைக்கெட்டாமல்ப்போகவே, தனது எம்பல்களை அங்குலமங்குலமாய் அதிகரிக்கிறாள். கைக்கெட்டாத தூரத்திலும் உயரத்திலும் அவனுக்கானவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப்போல, அச்சிறுமிக்கு ஆலயமணி இருக்கிறது. இன்னும் சிலமுறை முயன்றால் பறத்தல் மறந்து போய் அவள் சட்டையிலேயே வசிக்கும் வண்ணத்துப்பூச்சி அதன் சிறையைத்தகர்த்து பறந்தாலும் பறந்துவிடும் என்று தோன்றியதவனுக்கு. மணியின் நாவில் மர்மங்களால் திரித்துக்கட்டப்பட்டிருக்கும் சரடு அவளுக்கான ஒலியை ஒழுகவிடாமல் தன்னை உள்ளிழுத்துக் கொண்டு அவளிடம் விளையாட்டுக் காட்டுகிறது. இங்கிருக்கும் யாவரும் ஆசிரிவதிக்கப்பட்டவர்கள் என்ற குறிப்பினை இசைச்சொல்லொன்றால் தன்னால் வழங்க முடியுமென்ற முனைப்பில் மேலும் மேலும் முயல்கிறாள் அவள்.

•••

Advertisements