கவிதை – நான்கு கவிதைகள் – பாவண்ணன்

நான்கு கவிதைகள்

பாவண்ணன்

 

 

 

 

 

 

 

 

இன்று காலை

 

புறப்படும்  நேரம்

வழக்கமான  பேருந்தில்

எல்லாருமே இருந்தார்கள்

தாடிக்காரக் கிழவர்

திருநீறு  சுடர்விடும் மீசைக்காரர்

கண்ணாடியணிந்த கல்லூரிப்பெண்கள்

தலைமுடி கலைந்த ஜிப்பாக்காரன்

மண்வெட்டி இரும்புச்சட்டிகளுடன்

பின்னிருக்கை  பிடிக்கும் சகோதரர்கூட்டம்

மல்லிகைச்சரம் தொங்கும் பின்னலுடன்

கலகலப்பாகப் பேசும் இளம்பெண்

கழுத்தில் சுடர்விடும்

அட்டிகை காசுமாலையை

தொட்டுத்தொட்டுப்  பார்க்கும் அம்மா

நகம்கடித்து

தனக்குத்தானே  பேசுவதுபோல

தெருவோரம் பார்த்தபடி

கைப்பேசியில்

விவரம்  சொல்லும் விற்பனையாளன்

காலைப்  பத்திரிகையை விரித்து

குறுக்கெழுத்துப்புதிர்  விடுவிக்கும் நண்பர்

தொலைக்காட்சித்தொடர்களின்

கதைவிமர்சனம்  செய்யும் பெண்கள்

காதோரம் முளைத்தெழுந்து

மார்பின்மீது  பற்றிப்படரும்

ஒலிவாங்கிக்கம்பியை  உருட்டி

சிரித்தும்  சினந்தும் கிசுகிசுக்கும் பெண்

புத்தகப்பை  சுமந்த சிறுமிகள்

எல்லாருமே இருந்தார்கள்

புன்னகையும் நாணமும் படர

ஒவ்வொரு நாளும்

கடைசிநொடியில் வந்து

முதல் இருக்கையில்  சரிந்தமர்ந்து

ஜன்னல்வழியே

கணவனுக்குக் கையசைத்துச் சிரிக்கும்

கர்ப்பிணிப்பெண்ணைத் தவிர

***

அந்தரத்தில் மிதந்த ஓவியங்கள்

வட்டப்பாதையில்  நடந்துமுடித்து

கல்இருக்கையில்  அமர்ந்த அம்மா

ஆடிக்கொண்டிருந்த  சிறுமியை அழைத்தாள்

பூச்செடிகளுக்குப் பின்னாலிருந்து

தலைநீட்டி சிரித்த சிறுமி

கைவிரல் உயர்த்தி

என்னவென்று  கேட்டாள்

புன்னகை மாறாத அம்மா

விரல்களால்

காற்றில்  எழுதிக்காட்டினாள்

கண்சிமிட்டிய  சிறுமி

இடுப்பையும் தலையையும் வளைத்து

ஏராளமான பதில்சித்திரங்களை

மாற்றிமாற்றி  வரைந்தாள்

மீண்டும்  வேறொரு கேள்வியை

ஓவியம்போல தீட்டினாள் அம்மா

விரல்சலிக்காத சிறுமி

விழியுயர்த்தி

பதில்ஓவியங்களை  அவசரமாக எழுதினாள்

இருபக்கங்களிலிருந்தும்

தொடர்ச்சியாக  தீட்டப்பட்ட சித்திரங்கள்

எங்கெங்கும் மிதந்தலைந்தன

ஒரே கணத்தில்

பூங்கா  ஓவியக்கூடமானது

சில நிமிடங்களுக்குப்பிறகு

பூச்செடிகளைநோக்கி வந்த அம்மா

சிறுமியை  வாரியணைத்து முத்தமிட்டாள்

அவள் நெற்றியில் அரும்பியிருந்த

வியர்வை முத்துகளைத் துடைத்தாள்

அப்புறம்  இருவரும்

விரல்கோர்த்தபடி

பூங்காவைவிட்டு  வெளியேறினார்கள்

அவர்கள் தீட்டிய ஓவியங்களெல்லாம்

அந்தரத்தில் அலைந்துகொண்டே இருந்தன

***

முகம்

 

விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச்செல்லும்

அவசர ஊர்தி  கடந்துபோனது

வெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கிய

உடல்முழுதும்  ரத்தக்கோலம்

அவன் உயிர்பிழைத்துவிடவேண்டுமென

மனமுருக வேண்டிக்கொண்டேன்

என் பயணம்  முழுதும்

நிழலென  மிதந்துகொண்டிருந்தது

அவன் சிதைந்த  முகம்

அவன் காதலி  அவன் அலுவலகம்

அவனை நம்பியிருக்கும்  தம்பிதங்கைகள்

எல்லாரைப்பற்றியும்  நினைவுவந்தது

அவன் உயிர்

மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன்

ஆறுதலாக ஒரு சொல் மிதக்க

அஞ்சவைத்து  மிதந்தது மற்றொரு சொல்

பத்தாண்டுகளுக்கு  முன்பாக

விபத்தில் அடிபட்டு இறந்துபோன

நண்பனின்  முகம் நினைவில் படர்ந்தது

அரளiவிதையை அரைத்துக் குடித்து

தற்கொலை செய்துகொண்ட

பள்ளiத்தோழியின் முகமும் அசைந்தெழுந்தது

அகால மரணமடைந்தவர்கள்  ஒவ்வொருவராக

ஆழ்மனத்திலிந்து எழுந்து வந்தார்கள்

துயரம்  படர்ந்த முகங்களுடன்

என்னைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு  அழுதார்கள்

ஐயோ போதுமே என்று

காதுகளை மூடி நிமர்ந்தபோது

உதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்த

விபத்தில் சிதைந்த முகம்கண்டு உறைந்தேன்

***

வாசலில் விழுந்த பறவை

 

தற்செயலாக

வாசலில் விழுந்த ஒரு பறவை

காலூன்றி  நிற்க முயற்சித்து

தடுமாறித் தடுமாறி விழுகிறது

இடைவிடாமல்

சிறகுகளை  அடித்துக்கொள்கிறது

ஐயோ எனத் தாவி

அள்ளியெடுத்து

நீவித்தந்த  விரல்உதறி

நழுவிநழுவி  விழுகிறது

அதன் வேதனையோ  காணப் பொறுக்கவில்லை

நொண்டிநொண்டி

நடந்து  செல்வதிலும்

பறப்பதிலும்தான்

அதன் கவனம்  குவிந்திருக்கிறது

எப்படிப்  பெறுவதோ அதன் நம்பிக்கையை

விடையறியா வலியில் துவள்கிறது மனம்

சில கணங்களுக்கு  முன் பார்த்தேன்

பாடி முடித்த  ஆனந்தத்தில்

தாழ்வான மரக்கிளையில்

துள்ளித்துள்ளி  நடந்துகொண்டிருந்தது

அதன் சிறகின்  மஞ்சள் அழகால்

மாலைப்பொழுதே  வசீகரமானது

அதன் சின்னச்சின்ன நடை

அழகான ஒரு  சித்திரம்

எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்

எதிர்பாராமல்  அதை வீழ்த்திவிட்டது

எவ்வளவோ தடுமாற்றம்

எவ்வளவோ வேதனை

எப்படியோ  எழுந்து பறந்தோடிவிட்டது

•••

Advertisements