கவிதை – சபரிநாதன் கவிதை

சபரிநாதன் கவிதை

பதினொரு காதல்கவிதைகளில் ஒன்று

உறங்கும் செவிமடலடிதனில் அசையுது கூந்தற்பிரிகள்

எனக்கே கேளாத குரலில் சொல்லிக்கொள்கிறேன்

காற்று இருக்கிறது அது

உள்நுழைந்து குளிர்ந்து உயிரெரித்து வெளிவருகுது மூச்சு

பிறையசைவில் மிளிருது கால்நகங்கள்

ஒளி இருக்கிறது

காலடியில் அமர்ந்திருக்கும் என் முன்னே இவ்வுடல்

எங்கோ ஓர் இடத்திற்கான பாலமென நீளுது

வேறொரு கண்டத்தில் விழித்த அலைமீது

மிதந்துவரும் எரிமுகடுகளென மௌனமான முலைகள்

வந்துகொண்டேயிருக்குது;நேரம் இருக்கிறது

அந்த ஓரிடமும் இருக்கிறது

அன்னை இடைவிட்டு இறக்கப்பட்ட கணந்தொட்டு நாம்

இழுத்துநடந்த நிலம் மணற்றுகளாய் சரியுது

குதிபாதத்திலிருந்து வெளிர்விரிப்பிற்கு

தூரம் இருக்கிறது

ஒருசிறு மூளைக்குள் ஏதென்றில்லாத நினைப்பு திடுமென்று

எம்பிப் பறக்குது மழைக்குருவி

திவலை சொட்டுது கற் சிலை மேலே போர்த்துவதற்காக நான்

தேடுகிறேன் என்னிடம் உள்ளதிலேயே கனங்குறைந்த கம்பளியை

எதுவுமில்லை உசுப்ப;காதல் இருக்கிறது

அவளும் விரும்பமாட்டாள் எழும்ப;கனவு இருக்கிறது

எல்லாக் கேள்விகளுக்கும் ஆம் சொல்லுந்தருணம் ஒன்றும்

விதி என்ற மற்றொன்றும் இருப்பதால்

காரணம் ஏதுமின்றி பெருவெடிப்பைப் போலே

எந்தக் காரணமுமின்றி விலகும் இமைகள் அப்பொழுது

எங்கள் வீட்டின் மேற்கூரை இருக்கும் உட்சுவரில்

வெள்ளை வண்ணம் பூசப்பட்ட எனது அறை இருக்கும் அங்கே

துயரமேயில்லாத மனிதனின் சட்டையை அணிந்துகொண்டு

வெறுந்தரையில் நானிருப்பேன் அன்பே நீ கண்டுகொள்வாய்

உன் தூக்கத்துள் விதையாக

இக்கவிதை இருந்ததை

விழித்துக்கொண்டே தூங்கிவிடும் கைக்குழந்தையாக

நம் வாழ்வு இருப்பதை

கையிரண்டையும் விரித்து நீ எனை நோக்கி வருகையில்

இனி திறப்பதற்கு ஜன்னல் இல்லாத இவ்விடத்தில்

மண்டியிட்டுக்கூவுவேன்

‘இது விடிகாலை;உலகம் இருக்கிறது;எப்போதும் இருக்கும்’

தாயறியாது தின்பதற்கென்று ரகசியமாகச் சர்க்கரையை அள்ளிச்செல்லும்

சிறுமியென நம்மைப் பொத்திவைத்துக்கொண்டுள்ளது ஆகாசம்

ஒன்றல்ல ரெண்டல்ல அத்தனை கரங்களிலும்

.

Advertisements