கவிதை கணேசகுமாரன் கவிதைகள்

கணேசகுமாரன்  கவிதைகள்

 

 


 

 

 

 

சர்ப்பச்சொல்

சரசரவென நெளியும் 
கருநிற நாகம் 
இடையின் இடையில் கொத்திக் கொத்தி 
செத்துப்போகிறது 
விஷம் தின்று பிழைக்கும் 
ரசவாதியின் கனவில் 

ராத்திரி தூதென அனுப்பிய மகுடிச் சொற்கள் 
வந்து சேர்ந்ததா உன்னிடம் 

திறவாத இமைகளுக்குள் 
தேங்கிய இந்திரியம் துடைக்க 
நகங்களில் முளைக்கிறது 
பிளவுண்ட நாவின் முள் 
கருக்கலில் தினமும்

*

 

பறவை 

இசை உண்டு வாழும் பறவையின் 
சாகசம் கைகூடவில்லை 
தண்ணீரையும் பாலையும் பிரித்தருந்தும் 
சாமர்த்தியம் வசப்படவில்லை 
துணையின் பிரிவினைத் தகிக்கமுடியாமல் 
சிறு பாறை விழுங்கி விழுந்து சிதறும் 
மனோதிடம் வாய்க்கவில்லை
பறந்து அலைந்து திரிந்தாலும் 
வளர்ந்த இடம் திரும்பும் 
விசுவாசம் நிலையாயில்லை 
ஒரு கூண்டில் அடைபட்டு கொஞ்சம் சொற்கள் 
கொஞ்சிப் பேசி பழகவில்லை 
இருப்பதும் பறப்பதும் வானமென்று தெரிகிறது 
எத்தனை முறை எரிந்தாலும் 
மீண்டும் எழுந்து பறக்கும் 
சாம்பல் சாபம் மட்டும் 
அளிக்கப்பட்டிருக்கிறது விமோசனமின்றி

*

பிரச்சனை 

வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்த வனத்துக்கு 
என்னை இடம்பெயரச் செய்யுங்கள் 
கருகிய புல்லாங்குழல் என் கண்ணுக்கு காணக் கிடைக்கும் 
நிறைநிலா இரவுகளைப் பரிசளியுங்கள் 
இமை திறவா நாய்க்குட்டியின் மார்கழிச் சடங்கில் 
பங்கேற்பேன் நான் 
பூக்களின் வாசனை பொதிந்த ஒலி நாடாவினை 
எனதறையில் சுழலவிடும்போது 
நேற்றிரவு பிறந்து இறந்த ஈசல்களுக்காக 
கண்ணீர் அஞ்சலி வாசித்துக் கொண்டிருப்பேன் 
மூன்றாம் நாளில் உயிர்ப்பித்த கதையை 
ஆனாந்தம் பொங்க அறிவிக்கும் போதெல்லாம் 
முள்முடியும் ஆணியும் சிலுவையும் களையாத
பிதாவின் உறைந்த கண்களில் நான்
என்னதான் உன் பிரச்சனை என்கிறீர்கள் 
ஆமையின் ஆயுளினை
வரம்பெறாத ஈசல்கள் வாழும் உலகில் 
சிலுவையை விரும்புவனின் வாதையை
பிரச்சனையென்கிறீர்கள்.

***

Advertisements