கவிதை- ஷாஅ 5 கவிதைகள்

கவிதை- ஷாஅ 5 கவிதைகள்

 

 

 

 

 

வரும்வரை ஏணி

ஏணி ஒன்று வேண்டும்
ஏன் எதற்கு எல்லாம் கேட்காதீர்கள்
கீழிறங்குவேன்
தள்ளி வைத்து இன்னும் மேலே போவேன்
சாய்வாகப் படுத்த சுவற்றுக்கு
வெள்ளை பூசுவேன்
உயரே முடுக்கி
இமயம் குளிரில்
சுத்தப் பனிக் கட்டி
கொண்டு தருவேன்
கண்புகா வெளியில்
கிடையாக நிறுத்தி
வானில் ஊஞ்சலாடுவேன்
மீண்டும் வரும்வரை ஏணி இதை
பிடித்திரு நீ

முக்கிய பாடம்

கால் வாசி
சூரியனுக்கும் சூரியனுக்கும்
மத்தியில்
படத்தில் குடிகொண்ட
பாம்பைக் காட்டி
கால் கால் கால் ம் நுழைத்து
உறவின் நீண்ட
புள்ளியை
வளைத்து நெளித்து
தட்டிக் கொண்டிருக்கும் தச்சனின்
ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

யுஷ்!
படிக்காத பாடம்

முயல் ஒன்று நுழைந்தது
ஒண்ணாங் கிளாசில்

கூடவே புகுந்து
நுனிப்புல்
அதையும் இதையும் மேய்ந்துகொண்டே
மெல்லப் படிஏறி
ஏகச் சுற்ற நெரிசலில்
தன் பாரமே தன் முதுகாக
நகர்கிறது
இந்த ஆமை
அவ்வப்போது திரும்பித் திரும்பி

லாங்பெல் எப்போது அடிக்கும்
பரபரக்கும் கால்களுடன்
வகுப்பறையில் முயல்கள்
பந்து

யார் வீசியது உள்ளே
இந்தப் பந்து

திரும்பிப் பார்க்காமல்
யாரோ ஒரு பையனாக
ஓடிக்கொண்டிருக்கும் என்
முழங்கால்வரைக்கும் ஒரே புழுதி

கிணற்றடியில் வாளி இறைத்து
கழுவிக்கொள்கிறேன்

நீரில் மண்ணும்
மண்ணில் நீரும்
நீண்டு செல்லும் தாரை
மிதித்து
மெல்ல நுழைந்து கொள்கிறேன்

உள்ளே
உருள்கிறது பந்து

 

உதடு படும் வானில்

உதடு படும் வானில் பல
முத்தம்

மிதந்து போகிற
ஒவ்வொன்றையும்
மலையின் முகடுகள் தடுக்கவில்லை
மரத்தின் கிளைகள் பிரிக்கவில்லை
மறித்து நீ
இடை நிற்காதே

தானாக வந்து தானாகத் தொடுவது
நீயாகவும் இருக்கலாம்
எப்போதும் பராமரித்துக்கொள்
மூடிய தருணத்தையும்
மெல்லத்
திறக்கும் அதிர்வையும்

முத்தங்கள் சூழ்ந்த
மலை
தொடும் வானமும்
மரம் தொடும் வானமும்
ஒன்றல்ல
ஒன்றும் அல்ல