கவிதை – சந்திக்க வேண்டி இருந்தவர் – றியாஸ் குரானா

சந்திக்க வேண்டி இருந்தவர்
றியாஸ் குரானா
இரவு முடிவதற்குள்
வெளியில் சென்று
வானத்தைப் பார்த்துவிடுவதாக
தீர்மானித்துக் கொண்டோம்
ரயில் வண்டி வந்து நிற்பதாகவும்
எங்களைச் சந்திக்க வேண்டியிருந்தவன்
அதில் வந்திறங்கி,
களைப்போடு நடந்து வருவதாகவும்
எங்கள் பேச்சுத் தொடர்ந்தது
எமதூரிலுள்ள நாய்களை
சூய் சூய் எனச் சொல்லாமல்
வேறெப்படியும் விரட்ட முடியாது
கற்களைக் கையிலெடுத்தால்
முறைத்துப் பார்க்கும்
பதுங்கியபடி பின் தொடர்ந்து
ஏதாவதொரு சமயத்தில் பாய்ந்துவிடும்
எப்போதோ ஒரு முறை
இதை அவரிடம் சொன்னது ஞாபகமிருக்கிறது
ரயிலே இல்லாத ஊரில்
அதுபற்றிக் கதைப்பது வீண் என
பேச்சு வேறுபக்கம் திரும்பியது
கதைவைத் திறந்து வெளியில் வந்தோம்
நிலா, தனது வெளிச்சத்தை அனுப்பி
மரத்தின் நிழலை
மெல்ல மெல்ல
நகர்த்திக் கொண்டிருந்தது
நிலத்தில் விழுந்து கிடந்த நிழலை
தூக்கி நிறுத்த
விடிய விடிய
நாங்கள் முயற்சித்தோம்
அன்றிரவு வானத்தைப் பார்க்கவில்லை
எங்களைச் சந்திக்க வேண்டியிருந்தவன்
வேறொரு ஊருக்கு
திரும்பிச் சென்றுவிட்டான்
Advertisements