கவிதை – ரவிக்குமார் கவிதைகள்

ரவிக்குமார் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

அறைந்து சாத்தப்பட்ட கதவுக்கு வெளியே

நிற்பவனின் செவியில்

ஒலித்துக் கொண்டே  இருக்கிறது

கதவு சாத்தப்பட்ட சப்தம்

அது கதவின் சப்தம்தானா  இல்லை

அடைத்துக்கொண்ட  மனதின் ஓசையா ?

தெறித்து விழுந்த

கசப்பின் ஒலியா ?

வெடி சப்தத்தைக் கேட்டதும்

பறக்கும் பறவையென

பறந்துவிட்டது நம்பிக்கை

வீட்டின் கதவு சாத்தப்படும்போது

வீதியின் கதவும் மூடிக்கொள்கிறது

கதவுக்கு வெளியே நிற்பவனின்

நீர்த் திரையிட்ட பார்வையில்

கரைந்து ஒழுகுகிறது

காலம்

அது சொட்டுகிற இடத்திலெல்லாம்

காணாமல் போகிறது பூமி

*

கொட்டடிக்குத் திரும்பும் கைதியைப் போல

இரவை நோக்கித் திரும்புகிறது பகல்

தனது புன்னகையை

கடலில் வீசிவிட்டு

வறண்டுபோய் நிற்பவனைப் பார்த்து

கதறுகிறது

அலை

*

எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்காதே

எங்கு போக விரும்புகிறேன் என்று மட்டும்

கேள்

*

வாழ்க்கை என்பது

அழுகைக்கும் தேம்பலுக்கும்

இடைப்பட்ட காலம் தான்

*

மௌனத்தில் அடிக்கிறது

மரணத்தின் வாசனை

*

உனக்கும் எனக்குமான

இடைவெளியில்

பாம்பாகக்

காத்துக் கிடக்கிறது

வன்மம்

*

எனக்கு எந்த அர்த்தமும் இல்லை

நீ ஏன்

அகராதிகளைத் தேடுகிறாய் ?

*

நினைவை அறுக்கிறது நினைவு

பெருக்கெடுக்கிறது

ரத்தம்

***

ஏரியைப் போலத் தளும்புகிறது

அலைகளற்ற கடல்

அலைகள் கடலில் மூழ்கித்

தற்கொலைசெய்துகொண்டன

இல்லை தற்கொலைசெய்துகொண்ட எவனோ

அலைகளையும் தன்னோடு இழுத்துப்போய்விட்டான் ;

அலைகள் மீன்பிடிக்கப் போயிருக்கின்றன

இல்லையில்லை மீன்பிடி வலையில் தான்

அலைகள் சிக்கிக்கொன்டுவிட்டன

நாயாகிவிட்டது கடல்

நாய் தனது குட்டியைத் தின்பதுபோல

கடலே அலைகளைத் தின்றுவிட்டது

அலைகளற்ற கடலருகில் நிற்கும்போது

நினைவு நடுங்குகிறது

சூரியன் மங்குகிறது

ஒளியும் இருளுமாய் கடல் சிரிக்கிறது

அலைகளற்ற கடலில் இறங்க

கடல் காகங்கள் அஞ்சுகின்றன

நண்டுகள் பதுங்குகின்றன

கட்டுமரங்களைச் செலுத்த மீனவர்களும்

நீச்சல் பழக சிறுவர்களும் பயங்கொள்கிறார்கள்

அலைகளற்ற கடல்

எதற்கோ விரித்த வலைபோல் இருக்கிறது

அதிலிருந்து தப்பித்து

காற்று பறக்கிறது

அலைகளற்ற கடலுக்கு

இல்லை உனது சாயல்

பெயரிடமுடியா மகிழ்ச்சியில்

குதூகலிக்கும் உன்னோடு

ஒப்பிடமுடியாது அலைகளற்ற கடலை

ஆனால் அதன் அமைதி உனது

அது சுட்டிநிற்கும் ஆழம் உனது

அலைகளற்ற கடலிலிருந்து ஊற்றெடுக்கின்றன

நினைவின் நதிகள்

எங்கோ இருக்கும் உன் பாதங்களை நனைக்க

அவை

நிலம் நோக்கிப் பாய்கின்றன

***