கவிதை – சற்றே விலகி இரும் பிள்ளாய்…..- கலாப்ரியா

கலாப்ரியா கவிதைகள்

சற்றே விலகி இரும் பிள்ளாய்

 

 

 

 

 

 

1) முதல் வரிக்குச் சந்தேகம் தன்னை

இரண்டாம் வரி ஏற்றுக் கொள்ளுமா

மூன்றாவதிற்கோ முந்திய வரி கைவிட்ட கவலை

நான்காம் வரியின் தவிப்போ

ஐந்தாம் வரி

ஆறாவது வரி பற்றி என்ன நினைக்கிறதோ

கடைசீ வரிக்கு நிம்மதி

 காலடியில் கவிஞனின் முகவரி கண்டு

2) வார்த்தைகள்

உண்ணும் என்

பசு

அசை போட்டு

அமர்ந்தபடி

எழுப்பிச் சாணம் விலக்கி

பசு மடி கழுவி

பால் கறந்து போகிறாய்

நான்கு அறைகள்

கடந்தும்

சாணத்தில்

சரியாய்ச் செரிக்காத

கவிதைத் தும்புகள்

தொழுவம்

துப்புரவாக்குகிறேன்

   நாற்றம் சகித்தபடி

3)  ஐந்து நாள்த் தாடி

முகத்தில்

மூன்று நாள்

அவனுடன்

அவன் காரியமாக

முழுகித் திளைத்ததில்

மழிக்க மறந்து போனது

யோசனைகள் பிடித்திருந்தது

என் வாசனைகள் பிடிக்கவில்லை

புடமிட்ட தங்கத்தை என்

மூளைத் தண்ணீரில்

சூடு தணித்து

பத்திரப்படுத்தி எடுத்துப் போனான்

தண்ணீருக்கும்

சுடும்தானே

மீதி இரண்டு நாள்த் தாடி

ஆறாம் நாளை எதிர் பார்த்து

வளர்கிறது.

அவளையும் இரவில் சற்று

விலக்கி வைக்கிறது

4)  நெருதா…..,

பாடல் இல்லாத

காலமென்று ஒன்று உண்டா

ஆமாம்

யாரும் எதுவும் சுவாசிக்காத

      காலத்தில் பாடல் இல்லை

•••