கவிதை கதவுகளுக்காக பாட்டெழுதுதல் – பைசால்

 

கதவுகளுக்காக பாட்டெழுதுதல்
  
 பைசால்
பகல் சரியாக பன்னிரெண்டு மணியும்
சொல்ல முடியவில்லை சில நிமிடங்களும் இருக்கும்
வீடு திரும்பியிருந்தேன்
என் வீடு தன் முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்டுடிருந்தது
எல்லாக் கதவுகளும்
ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்ததைக் கண்டு
என்னைச் சந்திக்க வந்த நண்பன்
திரும்பிச் சென்றதாகவும்
தொலை பேசியில் இப்போதுதான் சொன்னான்
என் வீட்டுக் கதவுகளுக்கு
பாடல் என்றால் நல்ல விருப்பம்
பாடிக் கொண்டு துவிச்சக்கரவண்டியின் சாவியால்
திறந்தால் அமைதியாக திறந்து கொள்ளும்
இன்று என்ன நடந்திருக்கும்
கதவுகளெல்லாம் மூடப்பட்ட நிலையில்
புறமுதுகு காட்டி நிற்கிறது என் வீடு
நேற்று மனைவி என்னோடு சண்டை பிடித்தாள்
‘உன்னை எனக்கு யார் காட்டித் தந்தது
அவர்களை இப்போது கண்டு நாலு வார்த்தை கேட்கணும்’
அந்த நாலு வார்த்தைகளுடன்
அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கலாம் அவள்
என் வீட்டையும், வாசலையும் தனியாக்கிவிட்டு
நான் சோகப் பாடல் பாடினேன்
காதல் பாடல் பாடினேன்
கதவு திறந்த பாடில்லை
வீதிகளில் பேய் உலாவுகிற பாடலைப் பாடினேன்
நாய் ஒன்று தறுணத்தில் குரைத்தது
கதவைக் கைகளால் தொட்டேன்
வெட்கத்தில் பின்னே நகர்ந்தது என் காதலி போல
வீட்டினுள்ளே மனைவி.
உறங்கிக் கிடக்கிறாள்
என நினைத்து அவளை நெருங்கினேன்
இல்லை
அவள் மரணித்துக் கிடக்கிறாள்
 *