கவிதை – ஆத்மார்த்தி கவிதைகள்

ஆத்மார்த்தி கவிதைகள்

 


 

 

 

 

 

 

ஆகுக

பார்வையின் கனம்

பெயர்த்த  விழிகள்

சாலையில் வழிந்துகொண்டிருக்கின்றன.

கரங்களால் குழிகளை

வழித்தழுதபடி திரிகையில்

விசிறிச்சென்ற

நாணயங்கள் உடலெலாம் துளையிட

குருதியொடு பீய்ச்சுகிறது

நம்பிய சொற்கள்.

தாழப்பறந்து வட்டமிட்டு மீளும்

உன் பெயர்  இத்யாதிகளைச்

சீழ்முற்றட்டுமென்று சொல்லி

திருப்பி அனுப்புகிறது காற்று.

ஆணிகள் என்னவாயின

எனக் கேட்கவெண்ணிய கணத்தில்

நிகழ்கிறது உன் மரணம்.
கவிச்சியைப் பின் தொடரும்

நாயெனக் காத்திருக்கிறது காலம்.

நேசவதை

கிண்ணங்களில்

ஊற்றிவைத்த

நீர்மத்திலிருந்து

இன்னுமெழாத

பேரொலிகளின்

தொண்டைக்குழி

அறுக்கையில் கசிகிற

பழுப்புக்குருதியின்

முதல்துளிகளைச்

சேமிக்கிறாள் அவள்.

இதற்கு முன்பாக

நாளங்களில்

கிலுகிலுப்பை

செய்துகொண்டுமிருந்தாள்.

வால்

 

அடைப்புக்குறிகளுக்குள்

ஒளிந்துகொண்டு

வரமறுத்து

அடம்பிடிக்கும்

வார்த்தைகளின்

சடைபற்றி நடக்கிறான்

நிசப்தன்.

வீதிமுக்குச் சாக்கடை ஆழத்தில்

எறிகிறான்

திரும்புகிறான்.

எடுப்பாரின்றி

சாலையில் நடுவாந்திரம்
துணி போர்த்திய பிரேதம்.

சற்றுத் தள்ளிக்
கிடக்கிற வாகனத்தின்

பதிவெண்ணை சரிபார்க்கிறார்

போக்குவரத்துக் காவலர்

 

குழுமியவர்களின் பரிதாபம்

வீழ்ந்தவனோடு
சேர்த்து வீழ்த்தப்பட்ட

குடும்பத்தின் மீது இருக்கிறது.

 

கடந்து செல்கிறவர்கள்

போகிறபோக்கில்
தத்தமது அனுதாபத்தை

பதிவுசெய்து  விரைகின்றனர்.

 

ஒரு சேதியாய்
இதனை சொல்லமுயல்கையில்

சில வார்த்தைகளால்

தொண்டைக்குழியொன்று

அடைபட்டிருக்கக் கூடும்.

 

ஒரு விபத்தின்

வெவ்வேறு திசைகளிலிருந்து

வெவ்வேறு கண்ணீர்க்கு உரியவர்கள்.

கிளம்பிக் கொண்டிருக்கக் கூடும்

 

சிலர் சிலருக்குச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்.

சிலர் சில வரிசைகளில் நிற்கத்துவங்கியிருக்கக் கூடும்.

சிலர் சில வேலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கக் கூடும்.

சிலர் சில ஞாபகங்களைக் கோர்க்கத் தொடங்கியிருக்கக் கூடும்.

 

சுற்றி நிற்கிற கூட்டம்

தனக்கானதென்றோ

தனக்கில்லையென்றோ

எந்தக் கேள்வியுமின்றிக் கிடக்கிறான்

ப்ரேதமானவன்.

 

சட்டைப்பைக்குள்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

அவனது செல்ஃபோன்.

•••