கட்டுரை – நவீன கன்னட சினிமா – பாவண்ணன்

கலைநயமும் சொல்நயமும்

விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா”

பாவண்ணன்

எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு புதிய அலைவீச்சைக் கொண்ட  கன்னட மொழித் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ளது. கிரீஷ் கார்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி என சுருக்கமான ஒரு பட்டியலை நமக்கு வழங்குகிறார் விட்டல்ராவ்.

நாற்பதாண்டுகால திரைப்பட வரலாற்றிலிருந்து இந்த எட்டு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்ததில் விட்டல்ராவின் துல்லியமான கலைப்பார்வையையும் சுவையுணர்வையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆளுமையைப்பற்றிய கட்டுரையையும் ஆர்வத்தோடும் சுவாரஸ்யத்தோடும் படிக்கிற அளவில் மிக விரிவான ஆய்வுரையாக எழுதியுள்ள விட்டல்ராவ் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு ஆளுமையையும், அந்தந்த காலகட்டத்து வரலாற்றுப் பின்னணியில் வைத்து அறிமுகப்படுத்தும் விதம் அருமையானது. விட்டல்ராவ் வெளிப்படுத்தும் விவரங்களின் துல்லியம் ஆச்சரியமளிக்கிறது. எந்தப் புத்தகத்தையும் அவர் குறிப்புக்காகத் தேடி அலையவில்லை. வேண்டிய தகவல்களை தன் நினைவற்றலிலிருந்து பகிர்ந்துகொள்ளும் தன் தமக்கையாரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருடைய தமக்கையாரான சாந்தம்மா குப்பி வீரண்ணாவின் பழைய நாடகக் கம்பெனியில்  நடிகையாகவும் பிறகு சில திரைப்படங்களில் சிறுசிறு வேடம் தாங்கி நடித்த நடிகையாகவும் வாழ்ந்தவர். தமக்கைமூலம்ம் தெரிந்துகொண்ட செவிவழிச் செய்திகள்தவிர தேவைப்பட்ட படங்களைத் தேடியெடுத்துப் பார்த்துச் சுவைத்த அனுபவமும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது.

நாற்பதாண்டுகால நவீன திரைப்படங்களைப்பற்றிய வரலாறென்ற போதிலும் அதற்கும் முந்தைய நாடக, திரைப்பட வரலாற்றையும் தேவைப்படும் அளவுக்கு எடுத்தாளுகிறார். குப்பி நாடகக்கம்பெனி, கன்னயா நாயுடு நாடகக்கம்பெனி கதைகளையெல்லாம் அவரது நினைவுச்சுரங்கம் எல்லாக் கட்டுரைகளிலும் தேவையேற்படும்போதெல்லாம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. விட்டல்ராவின் நினைவாற்றலையும் சுவையுணர்வையும் எண்ணி வியக்கும்படி எல்லாக் கட்டுரைகளும் உள்ளன. இந்த நூலின் வாசிப்பனுபவம் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கக்கூடியது.

ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொடர்ச்சியாக கிரீஷ் காசரவள்ளியின் இயக்கத்தில் வெளிவந்த ஐந்து முக்கிய படங்களைப்பற்றிய (கடஷ்ராத்த, தபரண கதெ, மனெ, த்வீபா, தாயி சாகிப்) ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இப்படி ஒரு புத்தகம் வேறு ஏதேனுமொரு இந்தியமொழியில் வந்திருக்குமா, வரக்கூடிய சாத்தியமுண்டா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அந்த அளவுக்கு விரிவும் ஆழமும் நுட்பமும் இந்த நூலில் ஒன்றிணைந்துள்ளன.

திரைப்படத்தைப்பற்றிய எந்தக் கட்டுரையிலும், கதையைமட்டுமே முக்கியமான அளவுகோலாகக் கொண்டு விட்டல்ராவ் எழுதவில்லை என்பது கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம். காட்சிப்பின்னணி, கேமிரா மொழியில் கதையை உணர்த்திவிட்டுக் கடந்துபோகும் வேகம், இயக்குநரும் கேமிரா கலைஞரும் இணைந்து கண்ட கனவின் வெளிப்பாடு,  இசையின் ஆளுமை, நடிகர்களின் நடிப்பாற்றல் என ஒரு திரைப்படத்தில் வெளிப்படும் எல்லா அம்சங்களையும் விட்டல்ராவ் கணக்கிலெடுத்துக்கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியில் வெளிப்படும் எல்லா அம்சங்களையும் தொகுத்துக்கொண்ட பிறகே தன் மதிப்பீட்டை நிகழ்த்துகிறார் விட்டல்ராவ்.

கிரீஷ் கார்னாட், பிவி,.காரந்த் ஆகிய இருவருடைய இயக்கத்தில் வெளிவந்த முக்கியமான படம் ’தப்பிலியு நீனாதி மகனே’  இந்தப்படத்தை ஒட்டி விட்டல்ராவ் நிகழ்த்தும் ஆய்வு ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் போன்றது. படத்தின் வெற்றிக்குத் துணையாக அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓர் இசைநாடகத்தின் பங்களிப்பைத்தான் முதலில் வியக்கிறார் விட்டல்ராவ்.

பத்து நிமிடம் மட்டுமே படத்தில் நீடிக்கக்கூடிய அந்த இசைநாடகத்தின் கதையில் படிந்திருக்கும் படத்தின் சாயலைப் பிரித்து நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இசைநாடகத்தின் மையமும் திரைப்படத்தின் மையமும் இணைந்திருக்கும் கருத்துப்புள்ளியை ஒட்டி நம் கவனத்தை இழுக்கிறார்.

இறுதிக்காட்சியின் கவித்துவத்தை வியந்தபடி, அக்காட்சியில் நடிப்பாற்றலைத் திறமையோடு வெளிப்படுத்திய நடிகரைப்பற்றிய குறிப்பை தன்னிச்சையாக ஒருவித பாராட்டுணர்வோடு கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக அக்காட்சியை அழகுறப் படமெடுத்த காமிரா கலைஞனைப்பற்றிய குறிப்பையும் எழுதுகிறார்.

அவர் பங்கெடுத்த வேறு சில படங்களின் காட்சிகளையும் நினைத்துக்கொண்டு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்புறம் காட்சியின் கலைநுட்பத்தையும், காலத்தை நம் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் கலை இயக்குநரின் ஆற்றலையும் வியக்கிறார். இறுதியாக எல்லோரையும் இணைத்து, தன் கனவை நனவாக திரையில் வடித்துக்காட்டும் இயக்குநரின் ஆளுமையைப்பற்றிய குறிப்போடு கட்டுரையை முடித்துக்கொள்கிறார்.

ஒரு படத்தைப் பார்ப்பத்தும் சுவைப்பதும் எப்படி என்பதை ஒவ்வொரு காட்சியாக ஓடவிட்டு பாடமெடுப்பதுபோல சுவைபட சொல்லிக்கொண்டே செல்கிறார் விட்டல்ராவ். படத்தையொட்டி பகிர்ந்துகொள்ளத்தக்க பல தகவல்கள்  அவரிடமிருந்து வெளிப்பட்டபடி இருக்கின்றன. ஒரு தகவலை உலகத் திரைப்படத்திலிருந்து எடுத்துச் சொல்கிறார். இன்னொரு தகவலை இந்திய வரலாற்றின் பின்புலத்திலிருந்து எடுத்துச் சொல்கிறார்.

மற்றொரு தகவலை இசையுலகத்திலிருந்து கொண்டுவந்து இணைக்கிறார். பிறிதொரு தகவலை நாட்டுப்புறக்கதையிலிருந்து பிரித்தெடுத்துவந்து சேர்க்கிறார். தூரிகையை பல வண்ணங்களில் தோய்த்துத் தோய்த்து அங்குமிங்குமாக கித்தானில் தீட்டிக்கொண்டே வந்து, சட்டென்று அற்புதமான ஒரு கணத்தில் அழகான ஓர் ஓவியத்தைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் ஓர் ஓவியனுக்குரிய நுட்பத்தோடு செயல்படுகிறார் விட்டல்ராவ்.

ஒவ்வொரு கட்டுரையும் அந்த அளவுக்கு விரிவானதாகவும் பலதுறை தகவல்களை அளிப்பதாகவும் கலையின் பல நல்ல அம்சங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.

கிரீஷ் கார்னாடின் ‘ஒந்தானொந்து காலதல்லி’ திரைப்படத்தை ஆய்வு செய்யும் விட்டல்ராவ், அது அகிரா குரோசாவுக்கு கார்னாட் செலுத்திய அஞ்சலி என்று எழுதிச் செல்கிறார். ஆனால், அந்தச் சாயலை முழுக்கமுழுக்க கன்னடமயமானதாக மாற்ற கார்னாடுக்குத் துணையாக இருந்த கன்னட வரலாற்றின் தகவல்களை மிக விரிவானவகையில் நம்முடம் பகிர்ந்துகொள்கிறார்.

வீரம், ஆளைக் கவிழ்க்கும் நம்பிக்கைத்துரோகம், கொடூரமான இம்சை, கோழைத்தனம் எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இப்படத்தில் வெளிப்படுகின்றன. இந்தப் படத்தில் இடம்பெறும் கத்திச்சண்டைக்காட்சி மிக அரிதான காட்சி. அதை மறக்காமல் குறிப்பிடுகிறார் விட்டல்ராவ்.

ஓவியம், வரலாற்றுத்தகவல்கள், சிறுகதைகள், நாவல்கள் என பல தளங்களில் தன்னை ஏற்கனவே நிறுவிக்கொண்ட விட்டல்ராவ்,  திரைப்பட ரசனை என்னும் புதிய தளத்திலும் தன் தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

கன்னடத்திரைப்படங்களைப்பற்றிய அவருடைய தகவலறிவும், இந்திய அளவிலும் உலக அளவிலும் மிக முக்கியமான இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் எல்லோரைப்பற்றிய தகவலறிவும் அபாரமானதாக உள்ளன. விட்டல்ராவ்  அவர்களை ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் என்றே குறிப்பிடலாம். அந்தப் பெருமைக்கு அவர் முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சி. தமிழ்வாசகர்களுக்கு மட்டுமல்ல, கன்னடத் திரைப்பட உலகத்துக்கும் இந்த நூல் ஒரு முக்கியமான கொடை.

(நவீன கன்னட சினிமா- கட்டுரைகள். விட்டல்ராவ். நிழல் வெளியீடு, 31/48 இராணி அண்ணா நகர், சென்னை-78. விலை.ரூ.150)

Advertisements