கட்டுரை – சம்பு – நதியில் மிதக்கும் நிலவை மீன்கள் மெல்லக் கொறிக்கின்றன…

நதியில் மிதக்கும் நிலவை மீன்கள் மெல்லக் கொறிக்கின்றன…
-சம்பு

 

 

 

 

 

 

 

கவிஞன் மேல் கவிந்து அழுத்திக்கொண்டிருக்கும் வாழ்வின் கடும் பாரங்களை அகம் சார்ந்து நோக்கும் கவிமனம் அந்தச் சுமைகளையும் மெல்ல அரவனைத்துக்கொண்டே தன் போக்கில் செல்கிறது. அவ்வப்போது மீளும் வழிக்கு மொழியைத் துணைக்கழைக்கும்போது சச்சதுரமாக நறுக்குத் தெறிக்கப்பட்ட சொற்களுக்குள் நின்றே மிகக் கவனமாக தன் துயரங்களைச் சொல்லவும், சில எளிமையான விஷயங்களைக் கொண்டாடவுமாக அது காலப்போக்கில் மாறிப்போகிறது.

ஓர் அனுபவம் அல்லது எதேச்சையான நிகழ்வு கூட தாம் உள்வாங்கும் கணத்தில் தோன்றுகிற அதற்கான பிரத்யேக மொழியுடனும், பிரத்யேக உந்துதலுடனும் வெளிப்படும்போது, கவிதையோ தன்னைப்போல பிரத்யேகப் பருண்மையுடன் வந்துவிடுகிறது. கவிதைக்கு கொஞ்சம் அருகிவரும் வாசகனோ அதனுடன் ஏதோவொன்றைப் பேசவும், மெல்லப் ஸ்பரிசித்து விடவும் சதா முயலும்படி தன் மீதான அவனது கவனத்தை கவிதை இயல்பிலேயே கட்டமைத்துக் கொள்கிறது.

ஏதோவொரு புள்ளியில் கவிதையின் பிஞ்சு விரல்களையும், பழுக்கக் காய்ச்சிய இரும்புக்குண்டினையொத்த அதன் இதயத்தையும், பரிசுத்தமான அதன் ஆன்மாவையும் மெல்ல உணர்ந்துவிடும்பட்சத்தில்  பின்பு அந்த வாசகன் அந்தரத்தில் மெல்ல மிதந்தபடி இவ்வுலகைப் பார்க்கத்துவங்குகிறான். இந்த உலகமும் கூட கொஞ்சம் தாறுமாறாகவும், தான்தோன்றித் தனமாகவும், சிறுசிறு எளிமையான அழகின் கூறுகளை வியப்பதாகவும், எல்லாவற்றுக்கும் சில பிரத்யேக சூத்திரங்களை வைத்திருப்பதாகவும்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மனநிலையுடனே சாகிப்கிரானின் ‘வண்ணச்சிதைவு’ தொகுப்பின் கவிதைகளை என்னால்  அணுகமுடிகிறது. அவற்றுக்குள் புகுந்து கொண்டு, அது முன்வைக்கும், பேசும், கொண்டாடும், எரிச்சலுறும், அயர்ந்துபோகும் உலகத்தை நெருங்கும்போது தனிமையின் மீதான, ஒரு வெறுமையின் மீதான பெருங்கவனத்தை அதன் மொழி, மெல்லிய குரலில் என்னிடம் கோருகிறது.

தனிமைத் துயலும்
வெறுமை கூட்டும் சுதந்திரமும்
அதனால் செயலின்மையும் ஒப்புவிக்கப்பட்டு
என்னை பால்வெளிகள் கடந்து
சொல்லிறங்கும் விதமாக
பல வண்ணங்களில் ஒளிர்விக்கிறது

ஒற்றைச்சொல்

கவிமனதை ஒளிர்விக்கும் அந்த ஒற்றைச்சொல்லைத் கொண்டுதான் யாவற்றையும் பின்பு இறுதி செய்கிறான் கவிதைசொல்லி.

சாகிப்பின் அந்த ஒற்றைச்சொல்லை மட்டும் உருட்டிக்கொண்டே மெதுவாக இந் நதியின் கரைக்கு நான் வந்துசேர்ந்தேன். கவனத்துத் தொங்கும் கறுத்த இரவின் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்நதி சலசலத்து ஓடுகிறது. வேறு வேறு ராகங்களில் அச்சொல்லை மனங்குவித்துப் பாடுகிறேன். அது நதியெங்கும் எதிரொலித்து மீண்டும் என்னிடமே திரும்புகிறது. உடன் அந்த ஒற்றைச் சொல்லை ஆகாசத்தில் சுழற்றி எறிகிறேன். சரேலெனக் கீழிறங்கும் அது நதியின் மேல் அலையும் ஒரு நிலவென மிதக்கிறது.

இப்பூமி ஒளிர்கிறது
சற்று நானும் ஒளிர்கிறேன்
நதியும் மினுங்கி
ஒளிர்ந்தபடியே நகர்கிறது

அந்த மெல்லொளியிலேயே பிறகு இந்நதியின் கழிவுகளை, நிசியில் உறக்கத்தில் புதைந்துவிட்ட இவ்வுலகை, கூடவே என் தனிமையை, விகசிப்புகளை நான் பார்க்கிறேன்.

இப்போது நதிக்கரை விருட்சத்தில் ஒற்றை இலை நிலவின் ஒளியால் ஜொலித்தபடி தானுமொரு ஒளியாகி விடுகிறது. சாகிப்பின் இலை சூரிய ஒளியொன்றால் எனக்கு நிலவே அதைச் சாத்தியப்படுத்துகிறது.

 
படைப்பின் மென்மையைத் தின்று கொண்டிருக்கும் நகரத்தின் மீது  அந்த ஒற்றை இலையை வீசுகிறேன். அது எழுதப்பட வேண்டிய கவிதையின் சொற்களாகப் பல்கிப் பெருகி இந் நதியின் மீதே விழுகிறது கணக்கற்ற மீன்களாக. பிறகே

மிதக்கும் நிலவை மொய்க்கத் துவங்கும்
மீன்கள்
அதை உரசியபடியோடுகின்றன
களிப்பில் அதன் மீது துள்ளிக் குதிக்கின்றன
விழுங்கத் துடித்து இயலாமல்
நதியின்
ஆழத்திற்கு சென்று இருளில் நீந்துகின்றன
பின் மீண்டும் நிலவை நோக்கித் திரும்புகின்றன
அந்நிலவே வாழ்தலின் துடிப்பாக
மொழியாக
பகிர்தலாக
இரையாகவும் மாறியவோர் கணத்தில் தான்
நதியில் மிதக்கும்
நிலவை
மீன்கள் மெல்லக் கொறிக்கத் துவங்குகின்றன…

வண்ணச் சிதைவு
விலை-ரூ,40
வெளியீடு- அனன்யா, 8/37 பி.ஏ.ஓய்.நகர், குழந்தை இயேசு கோவில் அருகில்,
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613505.