இலக்கியம்-கவிதை – சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

அண்ணா சாலையின் ஜெமினி மேம்பாலத்திற்கு மேற்குப் பகுதியில்
அந்தத் திரைப்பட அரங்கம்
ஒரு காலத்தில் இருந்தது

அதன் உள்ளும் புறமும் கூட்டம் ஏராளமாகத் திரளும்
அல்லது காற்று நிரம்பி வழியும்

அந்தயிடத்தில் திரைப்பட அரங்கம் உருவாவதற்கு முன்பு
அதுவொரு குதிரை லாயமாகயிருந்தது

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை
அவ்விடத்தில் காற்று ஊளையிடும் வெற்றிடமாகயிருந்தது
அச்சமயங்களில் அங்கே தெருவில் போவோர் ஒதுங்கி
இயற்கை உபாதைகளைத் தீர்த்துப் போவார்கள்.

அதேயிடத்தில்தான்
ஒரு தொண்டை மன்னனின் அரண்மனை அந்தப்புறம் இருந்தது.
சரித்திரப் புகழ்பெற்ற அவ்விடத்தில் பல ரகசிய திட்டங்கள்
செயல் ஊக்கம் பெற்றன
நூற்றாண்டுகளாக மன்னர்களின் வாரிசுகள் உற்பத்தியாளயிடம்

இந்தயிடத்திற்கு அவ்வக்காலங்களில் சூட்டப்பட்ட பெயர்கள்
கல்வெட்டுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இங்கே பலரின்
உடல்கள் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள்

திரைப்பட அரங்கை ஒரு புகழ்பெற்ற குடும்பம் விலை பேசி
தன் கட்சியின் செயலகமாக மாற்றியிருந்தது
அப்போதும் கூட்டம் பரபரப்பாக இருக்கும்.

சில நாட்களாக ஒரு பெரிய தடுப்பை உருவாக்கி
அக்கூட்டத்தை மறைத்திருந்தார்கள்
சாலையில் போவோர் ஒரு கணம் திகைத்து நின்றார்கள்

எவ்வளவு புகழ்பெற்ற இடம் அது
இவ்வளவு சரிந்து நிற்கிறதென அஞ்சலி செலுத்தினர்

கட்டடம் இருந்ததற்கான அடையாளமாகச் சிதறியிருந்த
செங்கல் குவியல்களுக்கிடையில்
மனித, மிருகக் கழிவுகளுடன்
உபயோகித்து எரித்த நாப்கின்களும், ஆணுறைகளும், பாலிதீன் பேப்பர்களும்,
செய்தித்தாள்களும் கிடங்குபோலக் குவிக்கப்பட்டிருந்தன.

அவ்விடத்திற்கு இன்னும் அத்திரையரங்கின் பெயரைச் சொல்லித்தான்
அடையாளம் காட்டுகிறார்கள்
பேருந்துகள் நின்று செல்கின்றன
இம்மாநகர மக்களின் நினைவுகளில் படிந்த
பெயர்களில் அத்திரையரங்கும் ஒன்றாகியது

சாலையைக் கடக்கும்போது
உங்களுக்கு வலப்புறம் அல்லது இடப்புறம் பாருங்கள்

புதர்கள் மண்டிய
இருள் சூழ்ந்த இந்த வெளியில்தான்
ஒளிவெள்ளம் இருந்தது என்பதை நம்புவது சிரமம்.

அந்த வெற்றிடம் காத்திருக்கிறது
இன்னுமொரு அடையாளத்திற்காக

அண்ணா சாலையின் பெயர்
முன்னாள்களில் மௌண்ட் ரோடு
மௌண்ட் ரோடின் முன்னாளில் பெயர்

Advertisements