பதிப்பக அலமாரி அகநாழிகை பதிப்பகம் மதுவாகினி ந.பெரியசாமி

மதுவாகினி – ந.பெரியசாமி

 

அகநாழிகை பதிப்பகம் வெளியீடு

,

 

இருத்தலின்  பொருட்டு இடம் பெயர்ந்து  நகரத்தின் பொய்முகங்களில் வாழ்வாதாரத்தை தேடியலைய நேரிடுகின்ற அவலச்சூழல் அச்சுறுத்துகின்ற ஒன்று. பச்சைப்பசேலென புதர் மண்டிய கால்வாய்க்குள்ளாக தேங்காமல் ஓடும் அழுக்கு நீராக குற்ற உணர்ச்சி தருகிற துயரங்கள், அடைபட்டு வெளியேறும் நீரின் வேக வீச்சாய் எழுகின்ற நேசத்தின் உணர்வலைகள், நுரைத்து நுரைத்துப் பொங்கும் தீராக்காதலும், காமமும், தோத்தாங்கோழியாக்கி உக்கிர ஏளனத்தோடு பரிகசிக்கின்ற வாழ்க்கை குறித்த கேள்விகள் என அமிழ்ந்தமிழ்ந்து மேலெழும் பந்தாகி மிதந்து கொண்டிருக்கின்றன பெரியசாமியின் கவிதைகள்.

நிழல் விழக்கூட இடம்விடாமல் சுயம் பறிக்கும்  சூது கொண்ட வாழ்வின் அன்றாடங்களில்  பல்லியாகியும், ஏதிலியான கடவுளை நோக்கிக் கேள்வியெழுப்பியும், நினைவுகளைத் துழாவும் அன்றாட வாழ்வின் அபத்தங்களும் பெரியசாமியின் கவிதையின் உணர்வுகளாகின்றன. நகரமும், அதுகாட்டும் கோரமுகத்திற்குமிடையிலான நம் அக நினைவுகளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் செய்கின்றன இந்தக் கவிதைகள்.

 

  • பொன்.வாசுதேவன்

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

 

நதிகளைப்  பூட்டிக் கொண்டிருப்பவன்

 

 

விற்பவனோ பழுது  நீக்குபவனோ அல்ல

சதாகாலமும்  சடை சடையாய் 

உடலெங்கும்  தொங்கிக் கிடக்கும்

சாவிகளும் பூட்டுகளும்

பஸ் நிலையம்  மேம்பால அடியென

தினசரி கண்களை அறுத்துப்போவான்

எனது கருணையை

 

பாவம் பைத்தியமெனும்

வார்த்தையுள்  வைத்து கடந்திடுவேன்

ஒரு நாளும் கொடுத்ததில்லை

சோற்றுப் பொட்டலமோ ரொட்டித் துண்டுகளோ

 

பெரும் மழைநாளின்  அந்தியில்

எதையோ பாடிக்கொண்டிருந்தான்

ஒலி செவியடையும்  தூரத்தில்

எனதுடலை வைத்தேன்

எனதிருப்பை  சவமாக்கி

வேகமாய் பேசத்  துவங்கினான்

துச்சனுங்க  தொலைச்சிடுவானுங்க

பூட்டி வச்சிக்கிட்டேன்

நதி குளங்களின் பெயர்கூறி

எண்ணத் துவங்கினான்  சாவிகளை

அங்குமிங்குமாய் ராஜநடையிட்டு

நானோ…

நதி காப்பவன் குளம் காப்பவன்

கடல் காப்பவனென்றான்

 

அன்றைக்குப் பின் பேசிக்கொண்டார்கள்

தொலைந்து போனது  பூட்டு பைத்தியமென

அவனற்ற இடம்

வெறுமை சூழ்ந்தபோதும்

நம்பிக்கை இருக்கிறதெனக்கு

ஆற்றையோ குளத்தையோ

பூட்டிக்கொண்டிருப்பானென.

 

 

தவிப்பின் நிழல்கள்

 

உயிர் அறுந்து  அறுந்து 

உருமாறிக்கொண்டிருந்தது  மதுவாகினி

தன் பச்சையத்தை உதிர்த்தன தாவரங்கள்

பெரும் நதியால்  கைவிடப்பட்ட மணல்திட்டு

இரயில்கள் தொலைந்துபோக

வெறித்துக்  கிடக்கும் தண்டவாளங்கள்

தொடுப்பார்  இன்றிக் கிடந்த செருப்புகள்

பிடித்தவைகளை  களவுகொடுத்த ஏமாற்றம்

ஈயம் பூசப்படாத  பாத்திரமாய் வெறித்த சாலை

பிறரின் சுவாசம்படாது தொலைத்த எழுத்துக்கள்

வானம் பிதுக்கித் தள்ளிய நட்சத்திரங்கள்

ஈரம் துளிர்க்கும் துளைகள் தூர்ந்த பாறை

நாவின் ஈரம் தீண்டாத வைக்கோல் கன்று

கீறல்களின்  ரணம் வடிக்கும் கள்ளிச்செடி

கண்ணடிகளால் வர்ணம் ஒடிந்த திருஷ்டிபொம்மை

உருவம் தீய்த்துக் கரையும் கற்பூரம்

எச்சங்கள் வறண்டு பொடுகாய் படிந்த

என் குலசாமியென

தவிப்பின் நடுக்கத்தோடு

நம் விரல்களின் ஸ்பரிசம்

வெட்டுண்ட கணத்தில்.

 

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

அகநாழிகை பதிப்பகம்

33, மண்டபம் தெரு,

மதுராந்தகம் – 603306.

 

 

பொன்.வாசுதேவன்

அலைபேசி : 999 454 1010

 

விலை ரூ.70/-

 

 

 

Advertisements